என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்பெயின்"
- இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும்.
- கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மாட்ரிட்:
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் பெல்ஜியத்துடன் இணைந்து இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி, டென்மார்க் கொடியுடன் மரியான் டானிகா என்ற கப்பல் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கப்பல் ஸ்பெயின் நாட்டு துறைமுகத்துக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் கூறும்போது, சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் இதைச் செய்வது இதுவே முதல் முறை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும். மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை, அதற்கு அதிக அமைதி தேவை என்றார்.
கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஏற்று மதிக்கு தடை செய்யப்படாத பொருட்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரெண்டே ஆகியோர் முதலமைச்சர் அவர்களை 31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாரா பெர்ஜானோ, சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (Guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் அலுவலர் திரு.வே.விஷ்ணு, ஆகியோர் உடனிருந்தனர்.
- ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
- முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29-ந்தேதியன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (30-ந்தேதி) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மேத்யோ, மேனூல் மன்ஜன் வில்டா (சி.இ.ஓ, வாட்டர் டிவிஷன்) ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக விளக்கினார். இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லஸ் விளாகியூஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.
இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார்.
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன் வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இச்சந்திப்புகளின்போது, கேய்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு உடனிருந்தார்.
இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டு ஆலோசனைகளை மேற் கொள்ள உள்ளார்.
- தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுவதாகவும், தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) January 30, 2024
எனது #UAE, ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய #GIM2024… pic.twitter.com/LgUBqCXwGp
இந்த நிலையில் இன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவருக்கு அதிகாரிகள் தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
- மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
- தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.
ஸ்பெயின்:
ஸ்பெயின் நாடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.
எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் மற்றும் 20 'பார்ச்சூன் 2000' நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.
கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கி டீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.
* மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
* 130க்கும் மேற்பட்ட "ஃபார்ச்சூன் 500" நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.
இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில் நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற் கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங் கள் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சரும், அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட முதலமைச்சர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
- முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
ஸ்பெயின்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்று உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் கே.பட்நாயக் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
- ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார்.
சென்னை:
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.
- மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
- அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் அரசு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டும் நோக்கில் 2024-ம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இதைத் தொடர்ந்து, எட்டு நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்."
"கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருந்தேன். அந்த பயணத்தின் போது 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல கடந்த வருடம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தின் போது 1,342 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது."
"ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதில் ஸ்பெயின் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.
- சீன பயணிகளுக்கு பிரான்ஸ் விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.
- சீன பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என ஸ்பெயின் அரசு அறிவிப்பு
உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 சீனாவில் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என்றார்.
- தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்க நடவடிக்கை
- கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி மீட்பு.
மேட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள லுகோ மற்றும் வீகோ நகரங்களுக்கு இடையே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
பாலத்தின் தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்திருப்பதைக் கவனித்த அந்த வழியே சென்றவர், பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது குறித்து அவசர சேவை பிரிவினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மீட்பு படையினர் தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆற்று நீரோட்டம் மற்றும் கனமழை காரணமாக உடல்களை மீட்கும் முயற்சி தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 2வது பாதியில் ஸ்பெயின் அணிக்காக கொலம்பிய வீராங்கனை கோல் அடித்தார்.
நவி மும்பை,
17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்று இருந்தன.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் கொலம்பியா அணி வீராங்கனை அனா மரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து அதை சரி செய்ய கொலம்பியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- ஸ்பெயின் நாட்டில் 2வது கட்டமாக வெப்ப அலை வீசி வருகிறது.
- சுவாச கோளாறு, இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களே அதிகம் உயிரிழப்பு.
மாட்ரிட் :
ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள். சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்