search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்குகள்"

    • அந்த நபர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
    • சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார், மேலும் அவரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என்று தெரிவித்தனர்.

    அவர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார்.

    பழைய கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த நபரின் பலாத்கார முயற்சியின்போது அந்த இடத்திற்கு கூட்டமாக வந்த குரங்குகள் தாக்குதல் நடத்தியது. குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார்.

    இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

    அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம், திருவாயர்பாடி, வேம்பட்டு, காந்திநகர், மெதுர், பொன்னேரி ரெயில் நிலையம், பொன்னேரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், தங்களின் குட்டிகளுடன் அட்டகாசம் செய்து வருகின்றன.

    பஜாரில் உள்ள கடைகளின் உள்ளே புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், பழக்கடைகளில் பழங்களை எடுத்துக் கொண்டும் செல்கின்றன. அந்த குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால் அவை அவர்களை கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலும் சிறுவர்கள் கையில் வைத்துள்ள தின்பண்டங்களையும் குரங்குகள் பறித்து கொண்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியு உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தின்பண்டங்களை தொங்கவிட முடிவதில்லை. வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும்' என்றனர்.

    • குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நந்திகொண்டாவில் குடிநீர் பயன்பாட்டிற்காக தொட்டியில் இருந்து திறக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தண்ணீர் தொட்டியில் இறங்கி பார்த்தபோது அழுகிய நிலையில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் செத்து மிதந்தன.

    குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் குடிக்க தொட்டிக்குள் இறங்கிய குரங்குகள் மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தண்ணீர் தொட்டியில் குரங்குகள் செத்து மிதந்ததன் பின்னணி குறித்து நந்திகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரிய கொரில்லா வருவதாக நினைத்து குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன.
    • பல குரங்குகள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தக்குடேம் மாவட்டத்தில் உள்ள மொரம்பள்ளி பஞ்சார் என்ற கிராமத்தில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன.

    இங்குள்ள விவசாயிகள் பயிரிடும் பருத்தி நெல், காய்கறிகளை குரங்குகள் கூட்டம் நாசம் செய்கிறது.

    மேலும் வீடுகளுக்குள் புகுந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்கின்றன. கிராம மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கு தொல்லையை ஒழிக்க அங்குள்ள ஊராட்சி நிர்வாகம் புதிய முறை ஒன்றை கையாண்டு வருகிறது. ஊராட்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொரில்லா உடை வாங்கப்பட்டுள்ளது.

    இதனை அணிந்து கொரில்லா வேடத்தில் வரும் ஊழியர்கள் குரங்குகள் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.

    பெரிய கொரில்லா வருவதாக நினைத்து குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கொரில்லா வேடத்தில் ஊழியர்கள் குரங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.

    இதனால் தற்போது இந்த கிராமத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் குரங்குகள் தொல்லை குறைந்துள்ளது. பல குரங்குகள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன.
    • குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னைக்கு கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர், திருவொற்றியூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினமும் 40-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்கள் வந்து செல்கின்றன. பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னேரி ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் குடும்பத்துடன் அங்கு அட்டகாசம் செய்து வருகின்றன. ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளை ரெயில் நிலையத்திற்கு நுழையும் போதே வாசல் அருகில் நின்று அச்சுறுத்துகின்றன. பயணிகள் பைகளில் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்களை பறித்து சென்று விடுகின்றன. இதனை தடுக்க முயன்றால் பயணிகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன.

    இதேபோல் பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே பொன்னேரி ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கூரையை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது
    • 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் திரிவதால் பொதுமக்கள் அச்சம்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை புது தோட்ட பகுதியில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய வகை 300-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இந்த சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் மற்றும் என்.சி.எப்., தன்னார்வலர் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சிங்கவால் குரங்குகள் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சுற்றி திரிந்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகள் வீட்டின் கூரை களை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.

    சிங்கவால் குரங்குகள் மெல்ல மெல்ல வால்பாறை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்தது. தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் துளசிங்க நகர், காமராஜ் நகர்,கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன், போன்ற இடங்களில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளில் நுழைந்து உணவு பொருள்களை சாப்பிட்டு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குரங்குகளை குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பனமங்கலம் பகுதியில் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
    • கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பனமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

    வீட்டு விலங்குகளான ஆடு,மாடுகளை கடித்தும் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடியும் பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கியது. குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி சீர்காழி நகராட்சியில் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை அடுத்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் சொந்த செலவில் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்தார்.

    தொடர்ந்து குரங்கு பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.குரங்குகள் பிடிக்கப்பட்டது குறித்து சீர்காழி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறை வனவரிடம் குரங்குகளை ஒப்படைத்தனர்.

    இதனை யடுத்து பிடிக்கப்பட்ட குரங்குகள் அனைத்தையும் வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர்.

    • புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார அரசு மருத்துவமனை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.

    புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கழிப்பறை மற்றும் பிற உபயோகத்துக்கு தனியாக ஒரு சின்டெக்ஸ் தொட்டியும், குடிநீருக்கு வேறொரு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கம்போல் நேற்று மருத்துவமனை ஊழியர்கள் குழாயில் தண்ணீரை பிடித்து முகம் கழுவியபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    பின்னர் அங்குள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டிட மாடியில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் பார்த்தபோது அதில் 2 குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டனர்.

    பின்னர் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் அந்த 2 குரங்குகள் உடல்களையும் மீட்டு மருத்துவமனை பகுதியில் அடக்கம் செய்தனர்.

    அதன் பின்னர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு கிருமிநாசினி தெளித்து தொட்டியை சுத்தம் செய்தனர்.

    குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.

    இதுகுறித்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருக்கும் பொதுமக்கள் கூறும்போது,

    விராலிமலை பகுதியில் அதிக அளவு குரங்குகள் மற்றும் மயில்களின் நடமாட்டம் உள்ளது. இருப்பினும் தொட்டியை சரியாக மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் தண்ணீர் தேடி வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து ஏற முடியாமல் இறந்துள்ளது.

    இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதுவே குடிநீர் தொட்டியாக இருந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும். இந்த தண்ணீரில் குளித்து பயன்படுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பழைய தண்ணீர் தொட்டியை முற்றிலுமாக அகற்றி விட்டு நல்ல முறையில் மூடி இருக்கும் புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும் என்றனர்.

    • வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
    • மாலைமலர் செய்தி எதிரொலி

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி மற்றும் தேவ சகாயம் மவுண்ட் தேவாலயம் பகுதிகளில் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குரங்குகள் தொல்லை அதிகரிப்பது குறித்தும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    வனத்துறையினர் அசோக், துரைராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் குரங்குகள் சிக்கியது. ஒரே நாளில் 46 குரங்குகள் சிக்கி உள்ளது. பிடிப்பட்ட குரங்குகளை அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • திருப்பத்தூரில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மின்கம்பங்களில் ஏறி விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கடந்த சில தினங்களாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டுள்ளன. குரங்குகளின் தொல்லை யால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, 4 ரோடு, கூகல் பெர்க் சாலை, காளியம்மன் கோவில் தெரு, அக்னி பஜார், சீதளி வடகரை, தேரோடும் வீதி, ஆறுமுகம் பிள்ளை தெரு, தென்மாட்டு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிகின்றன. வீட்டின் கதவுகள் திறந்திருந்தால் உள்ளே புகுந்து மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குரங்குகள் எடுத்து செல்கின்றன.

    மேலும் அருகாமையில் உள்ள கடைவீதி மற்றும் உழவர் சந்தையிலும் காய்கறி கள், பழங்கள், திண்பண்டங்களை தின்று சூறையாடி வருகின்றன. வீதிகளில் இருக்கும் மின்கம்பங்களில் ஏறி மின் வயர்களில் குரங்குகள் விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்க ளில் வருபவர்களையும் பொருட்களை கொண்டு செல்போர்களையும் குரங்குகள் அச்சுறுத்து கின்றன.

    இப்படி நாள்தோறும் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்கு களை பிடித்து வனபகுதியில் அதனை கொண்டு சென்று விட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
    • உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு, தளி உள்ளிட்ட பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் மான், குரங்கு, முயல், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    கோடைக் காலங்களில் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன.

    இவ்வாறு வரும் விலங்குகள் மின்வேலிகளில் சிக்கியும், வனப்பகுதியில் உள்ள விஷக்காய்களை சா ப்பிட்டும் உயிரிழக்கின்றன.

    இந்நிலையில், ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள சானமாவு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குரங்குகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி, சாலைகளில் சுற்றி வருகின்றன.

    மேலும், சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் குரங்கை வேடிக்கை பார்ப்பதோடு, தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களைக் குரங்குகளின் பசியைப் போக்க வழங்கி வருகின்றனர்.

    இந்த உணவுகளை எடுக்கக் குரங்குகள் போட்டிப் போட்டு சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறிய தாவது:-

    குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் இருப்பிடத்துக்கு ஏற்கெனவே நாம் ஆபத்தை உருவாக்கி விட்டோம். தற்போது, சாலைகளில் சுற்றும் குரங்குகளுக்கு உணவுகளை வழங்கி அவற்றுக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறோம்.

    சானமாவு வனப்பகுதி சாலையோரங்களில் வீசப்படும் உணவுகளை எடுக்க சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

    மேலும், தனது உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    எனவே, இதைத் தடுக்க சாலையோரங்களில் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவுகளை வீசிச் செல்ல வேண்டாம் என வனத்துறை மூலம் எச்சரிக்கை செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை.
    • வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன.

    இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து பழக்கியதால் உணவு கிடைக்காத சமயங்களில் இந்த குரங்குகள் சென்னிமலை நகரத்தில் உள்ள வீடுகளுக்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.

    அவ்வப்போது வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்து வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை. இதனால் குரங்குகள் சென்னி மலையில் உள்ள வீடுகளுக்கு வந்து புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றன.

    வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதி, அருணகிரிநாதர் வீதி, பொறையங்காடு, களத்துக்காடு பகுதிக்குள் புகுந்து குரங்குகள் அட்டூழியம் செய்து வருகின்றன. அங்குள்ள ஓட்டு வீடுகளின் மேல் குரங்குகள் ஏறி ஓடுகளை பிரிப்பதும், செல்போன் கோபுரங்களில் உள்ள ஒயர்களை பிடுங்கு வதும் போன்ற செயல்களை குரங்குகள் அரங்கேற்றி வருகின்றன.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது,

    'வீட்டு வாசல்களில் தனியாக குழந்தைகள் உணவு சாப்பிடும் போது குரங்குகள் கூட்டமாக வந்து உணவுக்காக குழந்தைகளை தாக்க முயற்சி செய்கின்றன.

    அதேபோல் ஓட்டு வீடுகளின் மேல் ஏறி குதிப்பதும், ஓடுகளை பிரிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் தான் வந்து விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    அதனால் குடியிருப்பு பகுதிக்குள் அட்டூழியம் செய்யும் குரங்குகளை முழுமையாக கூண்டு வைத்து பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    ×