என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய விமான நிலையம்"
- 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு வெளியிட்டது. விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக டிட்கோ எனப்படும் தமிழக தொழில்வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புதிய விமான நிலையத்திற்கு 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்களை பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்த தலா 3 டி.ஆர்.ஓ.க்கள், துணை கலெக்டர்களின் கீழ் 24 தாசில்தார்கள் உள்பட மொத்தம் 326 வருவாய்த்துறை அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு உதவியாக பணியாற்ற டிட்கோ மூலம் 87 உதவியாளர்கள், 58 டைப்பிஸ்டுகள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், 12 அலுவலர்கள் உள்பட மொத்தம் 237 பேர் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
- விமான நிலையத்தில், மேலும் சில பணிகள் செய்யப்பட்டன.
- பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 2.30 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த புதிய முனையம் மூலம் 3 கோடி பயணிகள், பயணம் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில், மேலும் சில பணிகள் செய்யப்பட்டன.
அதன் பின்பு மே மாதம் 3-ந்தேதியில் இருந்து, சோதனை முறையில் சில விமானங்கள், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737 - 738 விமானங்கள் மட்டுமே, சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன. அதைத்தொடர்ந்து, நடுத்தர விமானங்களும் குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன.
ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்தபடி, சோதனை விமான ஓட்டங்கள், கடந்த மே மாதம் இறுதிக்குள் நிறைவடையவில்லை. சோதனை ஓட்டத்தின் போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மொபைல் போன் சிக்னல்களில் தடை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதோடு வேறு சிறு பிரச்சனைகளும், ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே தற்போது அந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வருகிற 12 -ந்தேதி முதல், 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு முதல்கட்டமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோஹா, டாக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று வரும் சர்வதேச விமானங்கள், இந்த புதிய முனைத்தில் இருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதேபோன்று ஜூன் மாதம் முழுவதும் இதே நிலைப்பாடு நீடிக்க இருக்கிறது. அதன் பின்பு வருகிற ஜூலை மாதத்தில் இருந்து சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், முழு அளவில் செயல்பட இருக்கிறது. இந்த முனையங்களில் சிறிய, நடுத்தர ரக மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து இயங்கத் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் சென்னை ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் முழு அளவில் செயல்படுவது, ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போய் உள்ளது. சோதனை ஓட்டம் முழுமையாக முடிவடையாததால், இந்த ஒரு மாத காலம் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
- பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
- விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 115-வது நாளாக நீடித்து வருகிறது.
பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவையை பரந்தூர் வரை நீடிப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய விமான நிலையம் வருகை காரணமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இதனை கணக்கிட்டு இப்போதே ரியல் எஸ்டேட் அதிபர்கள், பெரும் முதலாளிகள் கிராம மக்களிடம் நிலத்தை மொத்தமாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 லட்சமாக இருந்த 600 சதுர அடி நிலம் தற்போது ரூ.10 லட்சம் வரை விலை போகிறது. இந்த விலையை தாண்டியும் போகும் என்பதால் பலர் தங்களது நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் வருகையால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல இடங்களில் இப்போதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குடியிருப்பு பிளாட்டுகள் விற்பனை விளம்பரத்தை அதிகரித்து உள்ளனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை விற்பது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தடையில்லா சான்றிதழ் பெறாமல் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்யும்போது விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாத நிலப்பரப்பை தேர்வு செய்வது கடினம்.
- பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 22 மில்லியன் பயணிகளை கையாண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளுக்கு பிறகும், தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி 2028-ம் ஆண்டில் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையை இந்த விமான நிலையம் எட்டும். விமான பயணிகள் போக்குவரத்தில் 2008-ம் ஆண்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய அளவில் 3-வது இடத்தை வகித்தது.
2008-ம் ஆண்டில் பெங்களூரு விமான நிலையம் 5-வது இடத்தை வகித்தது. தற்போது அது, அதிக வளர்ச்சி அடைந்து 3-வது இடத்தை வகிக்கின்றது. 2008-2019 காலக்கட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை முறையே 14 சதவீதம் மற்றும் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதே வேளையில் சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 சதவீதம் மட்டுமே. 2008-19 காலக்கட்டத்தில் விமான சரக்கு போக்குவரத்தில் சென்னையுடன் ஒப்பிடுகையில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் புதிய விமான நிலையங்கள் 2 மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளன.
சென்னை நகர வாகன நெரிசல் காரணமாக தற்போதைய விமான நிலையத்தில் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நேரத்தில் (இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) மட்டுமே சரக்கு போக்குவரத்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றது. இதனால் சரக்குகள் கையாளுவதில் காலதாமதம் ஏற்பட்டு விமான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மாநிலத்தில் தொழில், வணிகம் மற்றும் சுற்றுலா துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் விமான போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்காலத்தில் தொடர்ந்து வளர்ச்சியை பெறவும், அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு தமிழகத்தின் விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பங்கை இழக்காமல் இருக்க வேண்டும். எனவே அதிக பயணிகளை மற்றும் சரக்குகளை கையாளுவதற்கு தேவையான அதிநவீன உள்கட்டமைப்புகளுடன் கூடிய புதிய விமான நிலையம், மாநிலத்துக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
சென்னையுடன் தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
2028-க்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை என்றால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கம் அடையும். மேலும் விமான போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும். அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்கான எதிர்கால விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டி உள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும், வருவாய் பெருகும்.
தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும், கட்டிடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும்.
ஏற்கனவே தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்தில் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு பின்னர் 35 மில்லியன் பயணிகளை மீனம்பாக்கம் விமான நிலையம் கையாள இயலும்.
விரிவாக்கம் செய்யப்பட்டாலும் அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2034-ல் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டும். 2034-க்கு பிறகு எப்படியும் புதிய விமான நிலையம் அமைக்கவேண்டியது மிகவும் அவசியம். புதிய விமான நிலையம் அமைக்க 8 வருடங்கள் தேவைப்படும். அதற்கான பணிகளை இப்போதே எடுப்பது இன்றியமையாதது.
புதிய விமான நிலையம் அமைக்க ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி மணலூர், மாமண்டூர் அருகே உள்ள செய்யார், மப்பேடு, செய்யூர், மதுரமங்கலம், வந்தவாசி தேதுரை, படாளம், திருப்போரூர், பன்னூர், பரந்தூர் ஆகிய 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் பரந்தூர் மட்டுமே அனைத்து விதத்திலும் மிக பொருத்தமாக உள்ளது.
பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் நில மதிப்பு ஆகிய காரணிகளை கருத்தில்கொண்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. சரியான வடிவம், அளவு மற்றும் திசையிலான நிலப்பகுதி பரந்தூரில் உள்ளது. 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்யும்போது விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாத நிலப்பரப்பை தேர்வு செய்வது கடினம்.
எனவே நில வடிவமைப்பு, விமான நிலையம் செயல்பாட்டுக்கான அனுமதிக்கப்பட்ட வான்வெளி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதி இல்லாதவை, குறைந்த அளவிலான மக்கள் இடம் பெயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்.
புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடத்தில் ஆழப்படுத்தப்படும். விமான நிலைய திட்டப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்படும். இந்த நீர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் முதலில் நிரம்பும் வகையிலும், பின்பு அதிகப்படியான நீர் கால்வாயில் வெளியேறும்படியும் தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.
புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும் உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.
இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும். இந்த புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். இதன்மூலம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
மேற்கண்ட தகவலை தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
- தி.மு.க. அரசின் வாக்குறுதிகளை பரந்தூர் விவசாயிகள் நம்ப தயாராக இல்லை என்றார் அண்ணாமலை.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. ஆட்சியின் கடந்த ஓர் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர்வாசிகள் பார்த்திருப்பார்கள். அதனால்தான் இன்றைக்கு தி.மு.க. அரசு நிலத்தை வழங்குகிறோம், இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க. அரசு பரந்தூர் மக்களுக்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?
அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக தி.மு.க. அரசு வழங்க வேண்டும். அவர்களுக்குச் சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேளுங்கள்.
2006-ம் ஆண்டு தி.மு.க. கொடுத்த 2 ஏக்கர் நிலம் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. தி.மு.க.வின் அந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றலாமே?.
தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளைக் கண்ட பிறகாவது இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக தி.மு.க. பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற-கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
நம் மாநிலத்திற்கு வருகை புரியும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.
சென்னை விமான நிலையத்தின் மென்மேலும் அதிகரித்து வரும் விமானப்பயணிகள் போக்கு வரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமானநிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடுஅரசு மேற் கொண்டது.
புதிய விமானநிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமானநிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள், விமானநிலைய முனையங்கள், இணைப்புப்பாதைகள், விமானங்கள் நிறுத்து மிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.
ஒன்றிய விமான போக்கு வரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழி காட்டுதலின்படி தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் பெற ஒன்றிய அரசின் விமான போக்கு வரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இடஅனு மதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தைக் காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினைக் காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
பரந்தூரில் அமைய விருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல் படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
- புதிய விமான நிலையத்தின் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள்.
புதுடெல்லி:
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் மற்றும் திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் சந்தித்தும் பேசினார்.
இந்தநிலையில் டெல்லி மாநிலங்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, 'சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பசுமை விமான நிலையம் சென்னையில் அமைய திட்டம் இருக்கிறதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?' என்ற கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் அளித்த பதில் வருமாறு:-
புதிதாக விமான நிலையங்களை அமைக்க விரும்பும் மாநில அரசோ, தனியார் நிறுவனமோ அதுதொடர்பான திட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்ப வேண்டும். அப்படி வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு, அந்த இடத்துக்கான அனுமதி, கொள்கை அளவிலான அனுமதி என 2 அனுமதிகளை அந்த அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டும். அந்த அனுமதிகளை பெற்ற பின்னர் விமான நிலையம் அமைப்பதற்கான நிதியை திரட்ட வேண்டியது அந்த நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொறுப்பாகும்.
அந்த வகையில் சென்னைக்கு அருகில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை கேட்டுக்கொண்டது. இதில் பரந்தூர் மற்றும் பன்னூர் என 2 இடங்களை ஆணையம் தேர்வு செய்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு தெரியப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து பரந்தூர் இறுதியாக முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இட அனுமதி வழங்கும்படி மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கும்.
மேலும் 'உடான்' திட்டத்தின் கீழ் மண்டலங்களை இணைக்கும் வகையில் தமிழகத்தில் நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய 4 விமான நிலையங்களை தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பரந்தூரில் 4,800 ஏக்கரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தின் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள்.
இந்தநிலையில் விளை நிலங்கள், தொழிற்சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், நிலத்தை கையகப்படுத்த ஆகும் செலவு என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய விமான நிலையம் அமைவதற்கு, பரந்தூர் தேர்வாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்