search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் தற்கொலை முயற்சி"

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மாணவிகளின் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மிரட்டல் விடுத்த மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வந்த பஸ்சில் பள்ளிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்போது அதேபகுதியை சேர்ந்த ஒருசில மாணவிகள் அவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டி இருக்கையில் அமரவிடாமல் நின்றபடியே வருமாறு மிரட்டியுள்ளனர்.

    மேலும் அவர்கள் சமூகத்தை சொல்லியும் திட்டி வந்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்தபோதும் அந்த மாணவிகளுக்கும், மற்றொரு தரப்பு மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த 2 மாணவிகளும் நடந்த விபரங்களை தங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிகளையே வகுப்பு ஆசிரியர் கண்டித்து அமர வைத்துள்ளார்.

    இதனால் வேதனையடைந்த அந்த மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு மீண்டும் பஸ்சில் சென்றால் அதேமாணவிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவார்கள் என்று பயந்தனர். இதனால் மாலையில் பள்ளி முடிந்ததும் அந்த 2 மாணவிகளும் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து மயங்கி விழுந்தனர். இதைபார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்கு இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் தலைமையில் வத்தலக்குண்டு வட்டார கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மாணவிகளின் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மிரட்டல் விடுத்த மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதன் அறிக்கையை பள்ளிகல்வித்துறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அளிக்க உள்ளதாகவும், அதன்பிறகு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர், கிராம மக்கள் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பள்ளி மாணவிகளுக்கு தீண்டாமை கொடுமை விடுத்த மாணவிகள் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இச்சம்பவம் குறித்து மனிதஉரிமைகள் ஆணையம், எஸ்.இ.எஸ்.டி பிரிவு நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தனர்.

    தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகளுக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மற்றமாணவிகளின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளி முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • 4 மாணவிகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மறுநாள் தங்களது வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து நேற்று வீட்டிலிருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல், நேற்று இரவு விடுதியில் வைத்து எலி பேஸ்ட்டை தின்றுள்ளனர். இதனால் விஷம் உடல் முழுவதும் பரவியதை அடுத்து இன்று காலையில் வாந்தி எடுத்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி சமையலர் சத்தியம்மாள், மாணவிகள் 4 பேரையும் அழைத்துச் சென்று வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 மாணவிகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ‘சல்பைடு’ ஆசிட் என்ற திரவத்தை இரவு உணவில் கலந்து சாப்பிட்டதால் மாணவிகள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
    • மாணவிகள் இருவரும் நலமுடன் இருப்பதால் விடுதிக்கு விரைவில் திரும்புவதாக கல்லூரி தரப்பில் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. அதன் அருகே கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கி படிக்க தனித்தனியே விடுதி வசதியும் உள்ளன.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு தங்கி கால்நடை மருத்துவ படிப்புகளை படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் விடுதியில் நேற்று இரவு 2 மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்தில் உணவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.

    'சல்பைடு' ஆசிட் என்ற திரவத்தை இரவு உணவில் கலந்து சாப்பிட்டதால் அவர்கள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி பெரியமேடு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மாணவிகள் இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    தற்கொலைக்கு முயன்ற 2 மாணவிகளும் தோழிகள் அவர்கள் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்கள் என்ற விவரத்தை கூற விரும்பவில்லை. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர்களுக்கு எவ்வித தகவலையும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    மாணவிகள் இருவரும் நலமுடன் இருப்பதால் விடுதிக்கு விரைவில் திரும்புவதாக கல்லூரி தரப்பில் தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×