என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடையடைப்பு போராட்டம்"
- கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது.
- சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தின் மூலவைகை ஆற்றங்கரை ஓரத்தில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது. இந்த பாதையை பல நூற்றாண்டு காலமாக கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடமலைக்குண்டுவை சேர்ந்த தனிநபர் கோவிலுக்கு செல்லும் பாதையை முள்வேலி மூலம் அடைத்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் சம்பந்தப்பட்ட தனிநபரிடம் கேட்டபோது அந்தப்பாதை தன்னுடைய பட்டா நிலத்தில் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் முள்வேலியை அகற்ற முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது தொடர்பாக கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்திலும், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளித்தனர். ஆனால் முள்வேலியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் சம்பந்தப்பட்ட தனிநபர் மற்றும் கிராம கமிட்டியினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து கோவில் பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தினர் கடையடைப்பு அறவழி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி காலை 8 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. முள்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடையடைப்பு போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 152 கடைகள் உள்ளன.
இந்த கடைகளானது பல வருடங்களாக குறிப்பிட்ட சில நபர்களிடம் உள்ள நிலையில், அவர்கள் மாதம் தோறும் கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு சில வியாபாரிகள் கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் இல்லாத நிலையில் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனால் வாடகை பாக்கி நிலுவையில் வைத்துள்ள கடை வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கி செலுத்த வேண்டும் எனவும், கடையின் சாவியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குற்றாலநாதர் கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப் படுகிறது.
இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து இன்று குற்றாலம் பகுதியில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடகை பாக்கி முழுவதையும் செலுத்தி விட்டாலும், கடை சுவாதீன உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும், வாரிசு தாரர்களையும், வாடகை தாரர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடையடைப்பு போராட் டத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கோவில் நிர்வாகம் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டாமல் இருந்தால் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
- விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
- நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் கடைகள் மூடப்பட்டன.
- கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் தேனி பிரதான சாலையில் அமைந்துள்ள முக்கியமான ஊராக உசிலம்பட்டி விளங்கி வருகிறது. உசிலம்பட்டியை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்களுக்கு இந்த ஊரே பிரதான வர்த்தக மையமாக இருந்து வருகிறது.
மேலும் பல ஆண்டுகளாக உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளை நம்பி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் உள்ளது.
உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும், உசிலம்பட்டி வழியாக வந்து செல்லும் பயணிகளும், கிராம மக்களும் இந்த கடைகளையே நம்பியுள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையொட்டி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் சந்தை பகுதியில் அமைந்துள்ள 140 கடைகளின் கட்டிடங்களை இடித்து விட்டு அப்பகுதியில் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நம்பி வாழ்ந்து வரும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு வேலை நிறுத்தத்திற்கு வர்த்தக சங்கத்தினரும், வியாபாரிகளும், அனைத்து கட்சியினரும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இதைத்தொடர்ந்து இன்று பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக கடைகளின் கட்டிடங்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் கடைகள் மூடப்பட்டன.
இந்த போராட்டத்திற்கு உசிலம்பட்டி வட்டார வர்த்தக சங்க தலைவர் ஜவகர், தேனி ரோடு பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் இலைக்கடை ரமேஷ், செயலாளர் ராம ராஜ், பொருளாளர் சசி, ஆனந்தகுமார், பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் வர்த்தக சங்கத்தினர் வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கடையடைப்பு போராட்டம் காரணமாக தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்ட சூழலில் உசிலம்பட்டி பரபரப்பாக காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசியல் கட்சியினர் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்ய இயலாமல் போனதால் அங்கும் மக்கள் நடமாட்டம் குறைந்து அமைதியாக காணப்பட்டது. மார்க்கெட் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது மதுரை தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 33 கண்மாய்களும் 110 கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பினால் தான் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீரும் உயர்வதுடன் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படும். எனவே, இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக இன்று உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. 58 கிராம கால்வாய் பாசனத்திட்ட விவசாய சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உசிலம்பட்டி விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வர்த்தக சங்கம், நகைக்கடை வியாபாரி சங்கம், ஆட்டோ சங்கம், வியாபாரி சங்கம், பூக்கடை சங்கம், தினசரி மார்க்கெட் சங்கம், 54 தினசரி நவதானியம் பலசரக்கு சிறு வணிக வியாபாரிகள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி நகர் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ரோடு, பேரையூர் ரோடு, வத்தலகுண்டு சாலை, தேனி சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. உசிலம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பூ கமிஷன் கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகளும் அனைத்து கடைகளையும் அடைத்திருந்தனர்.
காலையில் திறந்திருந்த ஒருசில கடைகளும் பின்னர் அடைக்கப்பட்டன. பஜார் பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
- போதிய மழை இல்லாததால் தற்போது கண்மாய் வறண்டு காணப்படுகின்றன.
- தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு பகுதியில் கண்மாய் பாசனம் மூலம் முருங்கை, அவரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் 58 கிராம கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.
இங்கு போதிய மழை இல்லாததால் தற்போது கண்மாய் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தாங்கள் பயிரிட்ட முருங்கை, அவரை, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருவதாக வேதனை தெரிவித்தனர்.
எனவே கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் 58 கிராம கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் தேக்க வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விருவீட்டில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடையடைப்பு போராட்டம் குறித்து ஏற்கனவே விவசாயிகள் அறிவிப்பு செய்திருந்ததால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். மேலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த ஓராண்டாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி சென்னிமலை யூனியன் முருங்கதொழுவு ஊராட்சிக்குட்பட்ட குட்டக்காடு என்ற இடத்தில் விவசாயத் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவர்கள் வீட்டிலிருந்த பணம்-நகைகளை கொள்ளை அடித்தது.
இந்த தாக்குதலில் முதியவர் பலியானார். அவரது மனைவி கோமா நிலைக்கு சென்று பின்னர் உரிய சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் தாண்டிவிட்டது. ஆனால் தற்போது வரை இந்த கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை.
இதேபோல் கடந்த 9-ந் தேதி சென்னிமலை அடுத்த முருங்க தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட கரியங்காட்டு தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து அவர்கள் வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டது. எனினும் தற்போது வரை இந்த இரட்டை கொலையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக சென்னிமலை பகுதியில் திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடந்தது. இந்த தொடர் குற்ற சம்பவம் காரணமாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களை கண்டித்தும், குற்ற சம்பவங்களை தடுக்க வலியுறுத்தியும் சென்னிமலை நகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான நோட்டீசும் சென்னிமலை கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதனையேற்று இன்று சென்னிமலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சென்னிமலை பஸ் நிலையம், நான்கு ராஜ வீதிகள், முகாசி பிடாரியூர், ஓட்டப்பாறை, மேலப்பாளையம், முருங்கைத்தொழுவு, பசுவட்டி ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. பனியன் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் இன்று இயங்கவில்லை. ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பொருட்களான பால் கடைகள், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் இயங்கின.
இதுபோல் பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் நடந்தது. ஆனால் பயணிகள் குறைந்த அளவே பயணம் செய்தனர். முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலையில் உள்ள முக்கிய சந்திப்பு, கடைவீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மார்கட்டுக்கு பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருகிறார்கள்.
- பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட்டு அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பவானி:
பவானி பழைய வார சந்தை ரோட்டில் சுமார் 65 செண்ட் இடத்தில் பவானி காய், கனி தினசரி மார்கெட் அமைந்துள்ளது. இங்கு சுமார் 180-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த காய்கறிமார்க்கெட் நீண்ட ஆண்டுகளாக இந்த பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த வியாபரம் மற்றும் சில்லரை வியாபாரமும் நடந்து வருகிறது. மார்கட்டுக்கு பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருகிறார்கள். மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஊட்டி, மைசூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
அதே போல் கடை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்கிறார்கள்.
இந்த மார்க்கெட் அருகே ஆயிரக்கணக்கான வீடுகள் அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் பவானி சேர்ந்த பொது மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்குகிறார்கள். இதே போல் திருவிழா மற்றும் விஷேசங்களுக்கு தேவையான காய்கறி, வாழை இலைகள் என பல பொருட்கள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பகுதி ரூ.1.30 கோடி செலவில் புதிய தினசரி மார்க்கெட்டு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் புதிய காய்கறி சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பவானி நகராட்சி சார்பில் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கூட்டம் நடந்தது.
இதில் ஒரு தரப்பினர் பழைய இடத்தில் சந்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் புதிய பஸ் நிலையம் அருகே காய்கறி சந்தை அமைக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் பழைய பஸ் நிலையம் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதனால் புதிய காய்கறி சந்தை அமைப்பது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாமல் இது நாள் வரை இருந்து வந்தது.
இந்நிலையில் பவானி நகர்மன்ற கூட்ட அரங்கில் அவசர கூட்டம் நடைபெற்றது.
இதில் பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட்டு அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை கண்டித்தும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய காய்கறி மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) பவானி வட்டார காய், கனி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஒரு நாள் மார்க்கெட் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என வியாபாரிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டு வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் மார்க்கெட்டுக்கு செல்வதற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் என 3 வழிகள் அமைந்து உள்ளது. அந்த 3 வழி கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இது பற்றி தகவல் தெரியாமல் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்து இருந்தனர். மார்க்கெட்டு மூடப்பட்டு இருந்ததால் அவர்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனால் பவானி நகராட்சி பகுதியில் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் பழைய இடத்தில் இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா அல்லது புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்படுமா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
- நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர்.
- பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
களக்காடு:
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமலும், அதேபோல் நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள தாலுகா அலுவலக பகுதிகளில் நிற்காமலும் சென்று வருகிறது.
இதனால் நாங்குநேரி பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களை புறக்கணித்து பஸ் நிலையத்திற்கு செல்லாமலும், புறவழிச்சாலை வழியாக அரசு அனுமதி இன்றி இடைநில்லா சேவை என்ற பெயரில் சட்ட விரோதமாகவும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர். மேலும் இடைப்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களை அவர்கள் பஸ்சை நிறுத்தி ஏற்ற மறுக்கின்றனர் என்றும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விட்டு உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதால் அடிக்கடி டிரைவர் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் வருகின்றன. இதனால் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட சிறு நகரங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையை யொட்டி இருக்கும் பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பலமுறை புகார் அளித்தும் நீதிமன்ற உத்தரவுகள், வருவாய்த்துறையினருடனான சமாதான பேச்சுவார்த்தை முடிவுகள், மாவட்ட கலெக்டர் உத்தரவு ஆகிய அனைத்தும் இருந்தும், இவை எதையும் மதிக்காமல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயர்களில் அரசு பஸ்களை கூடுதல் கட்டணங்களுடன் இயக்கி வருகின்ற னர்.
இதனை கண்டித்தும், அரசு அனுமதி இன்றி இயங்கும் இடைநில்லா சேவை என்று இயங்கும் பஸ்களின் வழித்தடங்களை தடை செய்யவும், சட்ட விரோதமாக முறைகேட்டில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாங்குநேரியில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தரப்பில் இருந்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வணிக நிறுவனங்கள், உணவகங்கள், எலக்ட்ரானிக் அங்காடிகள், இரும்பு கடைகள், பெயிண்ட் அங்காடிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன.
- நகரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அங்கு பணி செய்யும் ஊழியர் இப்ராகிம் (வயது 45) கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நெஞ்சை உலுக்கும் வகையில் பரவியது.
விழுப்புரம் மேற்கு போலீசார் 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரியவந்தது.
மேலும், இந்த 2 வாலிபர்களின் தந்தை ஞானசேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை கேட்டபோது, அதை தடுத்த இப்ராகிமை கத்தியால் குத்தி கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த 2 வாலிபர்களும் கஞ்சா போதையில் கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் வாலிபர்கள் கஞ்சா போதையில் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் வணிகர் சங்கம் இன்று ஒரு நாள் கடையடைப்பு அழைப்பு விடுத்தது.
அதன்படி இன்று காலை விழுப்புரம் புதுவை சாலை, விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, விழுப்புரம் புதிய பஸ் நிலைய சாலை என அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
குறிப்பாக வணிக நிறுவனங்கள், உணவகங்கள், எலக்ட்ரானிக் அங்காடிகள், இரும்பு கடைகள், பெயிண்ட் அங்காடிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் நகரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் நகரில் ஒரு சில பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வணிகர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு அளித்தனர்.
- கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
- போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். கடையடைப்பு காரணமாக கடம்பூர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் நகரம் முக்கிய இடமாக உள்ளது. கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வியாபாரிகள் சங்க மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் தனசேகரன், துணைத்தலைவர்கள் ராஜபாண்டி, முருகன் மற்றும் புஷ்பகணேஷ், சந்திரசேகரன், ஆசிர், அய்யலுசாமி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். கடையடைப்பு காரணமாக கடம்பூர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
- இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சி க்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். இதற்கு கடை காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இதை கண்டித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் சங்கம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அனைத்து வியா பாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் நகர மன்ற தீர்மானத்தினை கண்டித்தும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடை களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி இன்று காலை பு.புளியம்பட்டி பகுதியில் தினசரி மார்க்கெட்டு கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
நகராட்சி கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்