search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
    • இந்திய அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும் அஸ்வின் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அகமதாபாத்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லபுஸ்சேன் 3 ரன்களில் அவுட்டானார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த கவாஜா - ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 65 ரன்களுடனும் கேப்டன் ஸ்மித் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ஸ்மித் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் முகமது சமி பந்து வீச்சில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து கவாஜா - கீரின் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. கவாஜா 104 ரன்னிலும் கீரின் 49 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்திய அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும் அஸ்வின் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது.
    • இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை இந்திய பிரதமரும் ஆஸ்திரேலிய பிரதமரும் தொடங்கி வைத்தனர்.

    டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதியும் நேரடி டிக்கெட் விற்பனை 18-ந் தேதி காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

    இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1200-ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.10000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார்.
    • 61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முகமது சிராஜுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த டெஸ்டில் ஆடிய வீரர்களே இடம் பெற்றனர்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். டிரெவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறக்கினார்கள்.

    முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடினார்கள். சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார். தொடர்ந்து ஆடிய ஹெட் தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. மார்னஸ் லாபுசேன் 3 எடுத்திருந்த நிலையில் முகமது சமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து கவாஜா - ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி வருகின்றனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், சமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

    • இரு அணிகளும் நாளை மோதுவது 106-வது டெஸ்டாகும்.
    • இதுவரை நடந்த 105 போட்டியில் இந்தியா 32 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா 44 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (9-ந் தேதி) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டை `டிரா' செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு இந்த டெஸ்டை வெல்வது கட்டாயமாகும்.

    தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இலங்கை-நியூசிலாந்து தொடரை பொறுத்து வாய்ப்பு அமையும். அதற்கு இடம் அளிக்காத வகையில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.

    இந்தூர் டெஸ்டில் இந்திய வீரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி 2 நாள் மற்றும் ஒரு செசனில் இந்தியாவை எளிதில் வீழ்த்தி இருந்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    விக்கெட் கீப்பர் ஸ்ரீதர் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 வயதான அவர் டெஸ்டில் அறிமுகமாகுகிறார். பரத் கடந்த 3 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இந்த தொடரில் அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இதனால் அவர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ரோகித்சர்மா, அக்ஷர் படேல் மட்டுமே நிலையாக ஆடி வருகிறார்கள். பந்துவீச்சில் ஜடேஜா (21 விக்கெட்), அஸ்வின் (18 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த டெஸ்டில் ஆடாத முகமது ஷமி நாளை இடம் பெறுவார். உமேஷ் யாதவ் கழற்றி விடப்படுவார்.

    ஆஸ்திரேலியா கடந்த போட்டியை போலவே இந்த டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். கேப்டன் கம்மின்ஸ் 4-வது டெஸ்டிலும் ஆடமாட்டார்.சொந்த பணி காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். இதனால் ஸ்டீவ் சுமித் இந்தப் போட்டியிலும் கேப்டனாக பணியாற்றுவார்.

    ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் லபுஷேன் (178 ரன்), உஸ்மான் கவாஜா (153), ஹேண்ட்ஸ் ஹோம் ஆகியோரும், பந்து வீச்சில் நாதன் லயன் (19 விக்கெட்), மர்பி (11), மேத்யூ குன்மேன் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 106-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 105 போட்டியில் இந்தியா 32 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா 44 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 28 போட்டி `டிரா' ஆனது. ஒரு டெஸ்ட் `டை' ஆனது. நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை இரு நாட்டு பிரதமரும் நேரில் பார்க்கவுள்ளனர்.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் கவர்னர் மாளிகையில் அவர் ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் நாளை அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்கவுள்ளனர். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அங்கிருந்து மும்பை புறப்பட்டு செல்கிறார்.


    இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார்.

    • இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர்.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோவை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.

    அதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கில், உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆகியோர் முகத்தில் வண்ணம் பூசி இருந்தது. பின்னணியில் ராங் பார்சே பாடல் ஒலிக்க, அனைத்து வீரர்களும் ஜாலி மனநிலையில் இருந்தனர்.

    • பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஒன்றாக ரசித்து பார்க்க இருக்கின்றனர்
    • இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான வலுவான இணைப்புக்கான அடையாளம் ஆகும்.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்த பயணத்தில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலா துறை மந்திரி டான் பர்ரெல், வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கான மந்திரி மேடலின் கிங் உள்ளிட்டோரும் மற்றும் உயர்மட்ட வர்த்தக குழு ஒன்றும் வருகை தர இருக்கிறது.

    இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி ஹோலி பண்டிகை தினத்தில் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தருகிறார். அதன்பின்னர் 9-ந்தேதி மும்பை நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    அதே நாளில் அவர் டெல்லிக்கும் செல்கிறார் என தெரிவித்து உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான விரிவான செயல்திட்டம் சார்ந்த நட்புறவின் கீழான ஒத்துழைப்பு பற்றிய வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதுதவிர, பரஸ்பர நலன் சார்ந்த, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அல்பானீஸ் சந்தித்து பேசுவார் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசின் இந்திய பயணம் பற்றி இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பர்ரெல் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ஹோலி பண்டிகை தினத்தன்று மாலை வேளையில் அகமதாபாத் நகருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வருகை தருவார். ஹோலி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறேன்.

    இந்த பயணத்தில், அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஒன்றாக ரசித்து பார்க்க இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான வலுவான இணைப்புக்கான அடையாளம் ஆகும். ஆனால், இரு நாட்டு பிரதமர்களும் பரஸ்பர சுற்றுப்பயணம் மேற்கொள்வதனால், கிடைக்கும் உண்மையான பலனானது. இரு நாடுகளும் வெற்றி பெறும் என்பதே ஆகும் என குடிமக்களிடம் என்னால் கூற முடியும் என்று அவர் பேசியுள்ளார்.

    • முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று நாம் பார்க்க வேண்டும்.
    • ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

    இந்தூர்:

    பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் அடைந்த மூன்றாவது தோல்வி இதுவாகும்.

    கேப்டனாக ரோகித் சர்மா சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார்.

    தோல்வி அடைந்ததற்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:-

    முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதலில் பேட்டிங்கில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் மோசமாக விளையாடினோம். முதல் இன்னிங்சில் அதிக ரன்களை அடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியா எங்களை விட 80, 90 ரன்கள் முன்னிலை பெற்றபோது நாங்கள் மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

    ஆனால் எங்களால் அதுவும் முடியவில்லை. நாங்கள் வெறும் 75 ரன்கள் தான் இலக்காக நிர்ணயித்திருந்தோம். நாங்கள் முதல் இன்னிங்சில் மட்டும் நன்றாக விளையாடி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வித்தியாசமாக மாறி இருக்கலாம். இன்னும் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து யோசிக்கவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது எங்களுடைய குறிக்கோளெல்லாம் அகமதாபாத் டெஸ்டில் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.

    நாங்கள் ஒரு அணியாக மீண்டும் இணைந்து என்ன தவறு செய்தோம் என்பதை புரிந்து விளையாட வேண்டும். ஆடுகளத்தை குறை கூறவே கூடாது. ஆடுகளம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நீங்கள் உங்களுடைய பணியை சரியாக வந்து செய்ய வேண்டும். சவாலான ஆடுகளத்தில் விளையாடும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக விளையாட வேண்டும்.

    நாங்கள் ஆஸ்திரேலிய வீரர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதி அளித்து விட்டோம். அவர்கள் ஒரே இடத்தில் பந்தை செலுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதற்காக ஆஸ்திரேலியா வீரர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அதுவும் லயான் எங்களுக்கு தொடர்ந்து சரியான லென்தில் பந்து வீசி சவால்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு பந்துவீச்சாளர் அப்படி செயல்படும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக விளையாடி இருக்க வேண்டும்.ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.

    முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று நாம் பார்க்க வேண்டும். ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். எங்கள் அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு கை கொடுக்க வேண்டும். நாம் வகுத்த திட்டத்தை பின்பற்றவில்லை. அதுதான் தற்போது நடந்திருக்கிறது. ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு விளையாடவில்லை.

    என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    • இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார்.
    • இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளீதரனையும் லயன் முந்தினார்.

    இந்தூர் டெஸ்டில் இந்தியாவின் சரிவுக்கு நாதன் லயன் காரணமாக இருந்தார்.

    35 வயது சுழற்பந்து வீரரான அவர் 23.3 ஓவர்கள் வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் லயன் புதிய வரலாறு படைத்தார். உமேஷ் யாதவ் விக்கெட்டை கைப்பற்றியபோது அவர் கும்ப்ளேயை முந்தினார்.

    இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார். அவரை முந்தி புதிய சாதனை புரிந்தார். லயன் 25 டெஸ்டில் 113 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். கும்ப்ளே 111 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் அஸ்வின் 106 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    மேலும் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளீதரனையும் லயன் முந்தினார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
    • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தூர்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 197 ரன் எடுத்தது. உஸ்மான் கவஜா 60 ரன்னும் , லபுஷேன் 31 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும் , அஸ்வின் , உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்னே இலக்காக இருந்தது.

    புஜாரா அதிகபட்சமாக 59 ரன்னும் , ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்னும் எடுத்தனர். நாதன் லயன் அபாரமாக பந்து வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் சாய்த்தார். ஸ்டார்க் , மேத்யூ குனமேன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 76 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. உஸ்மான் கவாஜாவும், டிரெவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே இந்தியா அதிர்ச்சி கொடுத்தது. அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 2-வது பந்திலேயே உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்ததால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். ஆனால் 2-வது விக்கெட்டான டிரெவிஸ் ஹெட்-லபுஷேன் ஜோடி சிறப்பாக விளையாடியது.

    இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை எளிதில் வெற்றி பெற வைத்தது. அந்த அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    டிரெவிஸ்ஹெட் 49 ரன்னும், லபுஷேன் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    முதல் 2 டெஸ்டில் அபார வெற்றியை பெற்ற ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டில் தோல்வியை தழுவியது. முதல் 2 டெஸ்டை போலவே இந்த டெஸ்டும் 3 நாட்களில் முடிந்துவிட்டது. இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 9-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

    • ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    • 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 85 ரன்களை இலக்காக நிர்ணயித்து.

    இந்தூர்:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 47 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 11 ரன்கள் இடைவெளியில், எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணி, 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று விளையாட உள்ளது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை 76 ரன்னுக்குள் இந்திய அணி மடக்கினால், 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சரித்திரத்தை இந்தியா படைக்கும்.

    இதற்கு முன்பு 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 85 ரன்களை இலக்காக நிர்ணயித்து. அதில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருக்கிறது.

    • முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சுப்மன் கில் 21 ரன்னிலும், விராட் கோலி 22 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆஸ்திரேலிய அணியின் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், மோர்பி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். லபுசாக்னே 31 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து, 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×