search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • அதிகமான எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை அமைத்ததாக பா.ஜனதா அரசு சொல்லிக் கொள்கிறது.
    • ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் ஊழல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொள்ளைகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டை ஆரோக்கியமற்றதாகி விட்டன. பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையிலும் பொய்தான் இடம்பெற்றுள்ளது.

    அதிகமான எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை அமைத்ததாக பா.ஜனதா அரசு சொல்லிக் கொள்கிறது. அதே சமயத்தில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 19 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

    கொரோனா சமயத்தில் அக்கறையின்மை காணப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் ஊழல் நடக்கிறது. நாட்டின் சுகாதார கட்டமைப்பை நோயாளியாக மோடி அரசு ஆக்கி விட்டது.

    தற்போது, மக்கள் விழிப்படைந்து விட்டனர். உங்கள் வஞ்சகத்தை புரிந்து கொண்டனர். உங்கள் ஆட்சியை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், கார்கே கருத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் நோக்கம் புனிதமானது, தெளிவானது. காங்கிரசின் 50 ஆண்டுகால ஆட்சியில், ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே திறக்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டன. ஆனால், மோடி ஆட்சியில் 15 புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய துறைகள் தொடங்கப்படும்போது, எய்ம்சின் தேவைக்கேற்ப பல கட்டங்களாக ஆள்தேர்வு நடக்கிறது.

    'வேலைவாய்ப்பு மேளா' மூலம், 5 லட்சம் பணிநியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதார துறையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எந்த சாதனையாவது சொல்ல முடியுமா? அந்த ஆட்சியின் தோல்விகளை நாடு நன்றாக புரிந்து கொண்டுள்ளது.

    மோடி அரசு புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை திறக்கிறது. ஆள்தேர்வு நடக்கிறது. நீங்கள் அதை பார்த்துக் கொண்டிருங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.
    • மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    புதுடெல்லி:

    சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்கின்றன. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக அமையும் என கருதப்படுவதால் இதில் பலத்தை நிரூபிப்பதோடு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பாக 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது தொடர்பாக முத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 5 மாநில தேர்தல் பிரசாரத்தை சத்தீஷ்கரில் இருந்து தொடங்குகிறார். சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.

    அதை தொடர்ந்து 18-ந்தேதி தெலுங்கானாவிலும், 22-ந்தேதி மத்திய பிரதேசத்தின் போபாலிலும், 23-ந்தேதி ராஜஸ்தானின் ஜெய்பூரிலும் நடைபெறும் பேரணிகளில் அவர் கலந்துகொள்கிறார். சுற்றுப் பயணத்தின்போது மல்லிகார்ஜூன கார்கே அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி கையாண்ட யுக்தியை 5 மாநில தேர்தலிலும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    • சமூகங்களுக்கு இடையேயான பிளவு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    • ரெயில் திறப்பு விழாக்கள் மற்றும் பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் பிரதமருக்கு இருக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எங்களது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற போது அங்குள்ள மக்களிடம் இருந்து வலியின் இதயத்தை பிளக்கும் வேதனையான கதைகளை கேட்டனர்.

    10 ஆயிரம் அப்பாவி குழந்தைகள் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம் களில் உள்ளனர். பெண்கள் போதிய வசதி இல்லாமல் மருந்துகள், உணவு பற்றாக் குறையை எதிர்கொண்டு உள்ளனர். பொருளாதார நடவடிகைகள் முடங்கியுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. விவசாயத்தை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். மக்களுக்கு அதிகமான நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உளவியல் ரீதியான கஷ்டங்களில் அவர்கள் போராடுகின்றனர். சமூகங்களுக்கு இடையேயான பிளவு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தல் கூட்டங்கள், ரெயில் திறப்பு விழாக்கள் மற்றும் பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் பிரதமருக்கு இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்களின் வேதனைகள், துன்பங்களை பற்றி பேசவோ அல்லது சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்ப்பதில் பணியாற்றவோ பிரதமர் மோடிக்கு நேரமில்லை.

    மணிப்பூர் மக்களின் வலி, வேதனைகள் குறித்து மோடி அரசு அலட்சியமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் தனது பதிவில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

    • 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார்
    • பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை (20-ந்தேதி) தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அலுவல் பணி ஏதும் நடைபெறாமல் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

    விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இன்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அமளியில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கும் பாராளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும்'' என்றார்.

    • எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்பது கிடையாது
    • மெஜாரிட்டி கிடைத்த போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் அரசு அமைத்தது

    எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் நடைபெற்றது. 2-வது கூட்டத்தில் ஓரளவிற்கு மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்றே கூறலாம். நேற்றைய கூட்டத்திற்குப்பிறகு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதற்கிடையே பா.ஜனதா நேற்று டெல்லியில தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. இதில் 39 கட்சிகள் இடம் பிடித்திருந்தன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான கட்சிகளை பற்றி கேள்விப்பட்டதே இல்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கிண்டல் செய்திருந்தார்.

    அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. பங்களிப்பால் ஏற்பட்ட கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த கட்சியும் பெரிதோ, சிறிதோ அல்ல. பா.ஜனதா 2014 மற்றும் 2019-ல் மெஜாரிட்டி பெற்றிருந்தது. இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைத்தது'' என்றார்.

    • கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்திற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, எனனுடைய 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இவ்வளவு யாரும் செய்து பார்த்ததில்லை என்றார்.

    • ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் நேற்று இரண்டாவது கூட்டம் தொடங்கியது. இன்றும் கூட்டம் நடைபெறுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. கூட்டணியின் பெயர், கூட்டணிக்கான தலைமை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். இதேபோல் மற்ற தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார்.
    • இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை கடந்து பா.ஜ.க.வை தோற்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் எதிர்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட பிரதான பெரிய கட்சிகள் தவிர முதல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத பல சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    குறிப்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட கட்சிகளுக்கு புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், சிறிய கட்சிகள், பாஜ.க. பக்கம் தாவி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து எதிர்கட்சிகள் தங்களது கூட்டணியை விரிவுபடுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகமூபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஜி.பிரைன் உள்பட 26 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார். இதில் சைவ, அசைவ உணவுகள் மற்றும் கர்நாடக மாநில பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிரும், புதிருமாக உள்ள கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை ஒதுக்கிவிட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

    இன்று 2-வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? என்பது குறித்தும் பேசப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். அவர் மேலும் பேசியதாவது:-

    மாநில அளவில் நம்மிடையே உள்ள கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தவை அல்ல. ஆனால் அவை மக்கள் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. நாம் 26 கட்சிகள் இருக்கிறோம். 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்து 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்று பின்னர் அவற்றை நிராகரித்தது. இப்போது பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பழைய கூட்டாளிகளுடன் ஒட்டிக்கொள்வதற்காக மாநிலம் விட்டு மாநிலம் வருகின்றனர்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் காரணமாக பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
    • நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

    உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில்  ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.

    ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருப்பததாக கார்கே தெரிவித்துள்ளார்.
    • 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி 6.87% குறைந்துள்ளது.

    இந்தியாவின் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகளுக்கு இந்த நிதியாண்டுக்கான நிதியை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:

    நாட்டில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. தாங்கள் கடினமாக சம்பாதித்து கிடைத்த சேமிப்பை கொண்டு ஆராய்ச்சியைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உள்ளனர். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை அமைப்பதன் மூலம் அதிக நிதியுதவி வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் ஆராய்ச்சிகளுக்கான கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. திட்ட ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தனியார் நிதி வரவேற்கத்தக்கதுதான்; ஆனால் அரசு நிதி நிறுத்தப்படக்கூடாது.

    2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி 6.87% குறைந்துள்ளது.

    2017ல் விஞ்ஞான சமூகம், ஆராய்ச்சிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த நிதி, நிதி வெட்டுக்கள் மற்றும் போலி அறிவியல் சித்தாந்தங்கள் குறித்த தங்கள் கவலைகளை பதிவு செய்ய நாட்டின் 27 நகரங்களில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    2015ல் மோடி அரசாங்கம் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை 'சுய நிதி' திட்டங்களைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டது. அதாவது அவர்கள் ஆராய்ச்சிக்காக அவர்களே தங்கள் சொந்த நிதியை திரட்ட வேண்டும் என்று பொருள்.

    விஞ்ஞான மனோபாவத்தை ஊக்குவிப்பதற்கு எதிராக மோடி அரசு மீண்டும் மீண்டும் தனது முழு அலட்சியத்தையும் அவமதிப்பையும் வெளிப்படுத்தி வருகிறது.

    பிரதமர் மோடி, ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் (அறிவியல் வெல்க, ஆராய்ச்சி வெல்க) போன்ற கோஷங்களை எழுப்புகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரது அரசாங்கம் "பரஜய் விக்யான், பரஜய் அனுசந்தன்" (அறிவியலை தோற்கடி, ஆராய்ச்சியை தோற்கடி) என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கிறது.

    இவ்வாறு கார்கே கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தாக்கி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    மூத்த விஞ்ஞானி எஸ்.சி.லகோட்டியா தனது ஊழியர்களுக்கு தனது சொந்த பாக்கெட்டிலிருந்து ஊதியம் வழங்குவதாக கூறியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், உயிரி தொழில்நுட்ப துறையும் இவ்விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? 'குறைந்தபட்ச நிதி, அதிகபட்ச ஆராய்ச்சி' என்று இந்த வாரம் மோடி அரசாங்கம் ஒரு புதிய முழக்கத்தை உருவாக்கும்.

    இவ்வாறு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

    • புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
    • சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விட கார்கே திட்டமிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பிரதிநிதிகளை அழைத்து ராகுல், கார்கே இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி விரைவில் புதிய அறிவிப்புகளை வெளியிட காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்கே 8 மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவி ஏற்றதும் காங்கிரஸ் செயற்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்தார். இளைஞர்கள், பெண்களுக்கு செயற்குழுவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

    அடுத்த வாரம் செயற்குழு மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் கடும் அதிருப்தியுடன் இருக்கிறார். எனவே அருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பிரியங்காவுக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆனால் சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விடவும் கார்கே திட்டமிட்டுள்ளார். அது போல சில மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர். எனவே அடுத்த வாரம் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    • அழகிரியின் பதவிக்காலத்தில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.
    • ஜோதிமணியை தலைவராக்கலாம் என்பது ராகுலின் விருப்பமாக உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.

    டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

    அழகிரி ஆதரவாளர்கள் கூறும்போது, 'அழகிரியின் பதவிக்காலத்தில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மேலிடத்தில் தெரிவித்துள்ளார். மேலிடமும் தேர்தல் முடியும் வரை தலைவர் மாற்றத்தை செயல்படுத்த விரும்பாது என்கிறார்கள்.

    கடந்த 1½ ஆண்டுகளாகவே தலைவர் மாற்றம் என்று பேச்சு அடிபடுவதும் பின்னர் அப்படியே அமுங்கி விடுவதுமாக இருக்கிறது.

    இதுதொடர்பாக கட்சி மூத்த தலைவர்கள் கூறும்போது, 'தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது. ஜோதிமணியை தலைவராக்கலாம் என்பது ராகுலின் விருப்பமாக உள்ளது.

    ஆனால் திடீரென்று ஒரு பெண் தலைவரை நியமித்து 'சக்சஸ்' பண்ண முடியுமா? என்ற எண்ணம் டெல்லி தலைவர்களிடம் உள்ளது. எனவே அவர்களுக்கு விருப்பம் இல்லை. மேலும் கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் அவருக்கு நல்லுறவு இல்லை என்பதும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

    எனவே யாரை தலைவராக தேர்வு செய்வது என்பதில் டெல்லி மேலிடமும் முடிவெடுக்க முடியாமல் உள்ளது. இன்றும் இதுதொடர்பாக ராகுல்-கார்கே ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    தலைவர் பதவிக்கு குறி வைத்து டெல்லியில் முகாமிட்டுள்ள அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விசுவநாதன் கூறியதாவது:-

    நானும் தலைவர் பதவிக்கு முயற்சிப்பது உண்மைதான். இதுதொடர்பாக எனது விருப்பத்தை கார்கேவிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 1982-க்கு பிறகு தமிழக காங்கிரசுக்கு தலித்துகள் தலைவராகவில்லை. எனவே இந்த முறை அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். இதற்கு தமிழக தலைவர்களும் வலுசேர்க்க வேண்டும்.

    மேலும் தலைவர் பதவி விவகாரத்தில் குழப்பம் நீடிப்பது சரியல்ல. புதிய தலைவரா? அல்லது தற்போதைய தலைவருக்கு பதவி நீட்டிப்பா? எதுவாக இருந்தாலும் உடனே முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்ற எனது கருத்தை தெரிவித்துள்ளேன்' என்றார்.

    கார்கே, ராகுல் இருவரும் டெல்லியில் கட்சி விவகாரங்கள் பற்றி ஆலோசித்து வருவதால் இந்த வார இறுதிக்குள் தங்கள் முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×