search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 276412"

    • கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    • பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் தரிசனம் இல்லை என்பதால் பக்தர்கள் வருகை குறைந்தது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகம் முடிந்ததாலும், தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதாலும் தற்போது பழனிக்கு மீண்டும் பக்தர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வந்தனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.

    அவ்வாறு வந்த பக்தர்களில் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக கிரிவீதி, வெளிப்பிரகாரத்தில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் சுவாமி வீதிஉலா நடக்கிறது.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, காலை 7.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை மோகன்பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று பின்னர் நிலையை வந்தடைகிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் தினமும் மண்டகப்படி திருவிழா நடக்கிறது.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

    பணகுடி ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழா நாட்களில் கும்பாபிஷேக பூஜை, சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 3-ந்தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ம் திருவிழா அன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

    • 3-ந்தேதி 5 திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று மகாலிங்க சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் உற்சவர்கள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோவிலின் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளினர்.

    பின்னர் ரிஷப வாகனம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்ப தேசிக தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 30-ந்தேதி சகோபர இடபக்காட்சியும், பிப்ரவரி 3-ந்தேதி 5 திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி உற்சவமும், வெள்ளிரத காட்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 4-ந்தேதி காவிரியில் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 5-ந்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    சுவாமிமலை முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினார்.

    கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந்தேதி இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ந்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தைப்பூச விழா நடைபெறும்.

    முருகப் பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக பூ மாலைகளால் தங்க கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வெளிபிரகாரத்தில் சுவாமி புறப்பாடாகி சென்று சஷ்டி மண்டபத்திற்கு போய் இருப்பிடம் சேர்ந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதி கல் மண்டபம் முழுவதும் வண்ண மாலைகளால் தோரணமாக கட்டப்பட்டிருந்தது. மாலையில் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது.

    விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் காலையிலிருந்து மாலை வரை நடைபெறும். இதில் மாலையில் அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். நாளை(சனிக்கிழமை)மாலையில் காமதேனு வாகனத்திலும், 29-ந் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 30-ந் தேதி பூச்சப்பரத்திலும், 31-ந் தேதி யானை வாகனத்திலும், பிப்ரவரி 1-ந் தேதி மாலையில் பல்லாக்கு புறப்பாடு, 2-ந் தேதி குதிரை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க தேரோட்டமும் 4-ந் தேதி தைப்பூச விழா நடைபெறும். இதில் தீர்த்தவாரி உள்பட பல நிகழ்வுகள் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • இந்த விழா பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா நாளை (வௌ்ளிக்கிழமை) தொடங்கி வருகிற பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வருகிறார்.

    இதைத் தொடர்ந்து 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார வழிபாடு தினந்தோறும் நடைபெறுகிறது. மேலும் காமதேனு, பூதம், அன்னம், கயிலாயம், யானை, சிம்மம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வருதல் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 4-ந் தேதி காலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு ரதத்தில் அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். பிப்ரவரி 5-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் கேடையத்தில் புறப்பட்டு காராளம்மன் கோவிலுக்கு சேர்தல், அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடும், மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி பூஜைகள் நடைபெற்று வெக்காளியம்மன் கோவில் வந்து சேரும் நிகழ்வும், இரவு 7 மணிக்கு அம்மன் கேடையத்தில் திருவீதி உலா வருதலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தாமிரபரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 6-ந்தேதி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

    வருகிற 4-ந் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விசேஷ தீபாராதனைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்கள்.

    5-ந் தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
    • முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலை வழிபடுவது நல்லது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. 

    தைப்பூச நன்னாளானது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.

    தைப்பூச நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த கலிவெண்பா போன்றவற்றை மாலை வரை படிக்கலாம். வேளைக்கு செல்வோர் கந்தனை காலையிலேயே பூஜித்து மனதார வணங்கிவிட்டு நாள் முழுவதும் கந்தனை நினைத்து "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே வேலைகளை செய்யலாம்.

    முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலை வழிபடுவது நல்லது. காலை மாலை என இருவேளையும் இந்நாளில் கோவிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.

    முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது.

    • 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி திருக்கல்யாணம், தேரோட்டம் நடக்கிறது.

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 29-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கோவில் முன்புறமுள்ள கொடி மரத்தில் கிருத்திகை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

    மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை தீபாரா தனை, மாலை 5 மணிக்கு அனந்த சயனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியவை நடை பெறுகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். தம்பதி சமேதராக சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வரு கிறார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    5-ந் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12மணிக்கு ஆடுமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். இரவு 7.30 மணிக்கு தெப்பத் திருவிழா, 6-ந் தேதி 12 மணிக்கு மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா, மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7- ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பிப்ரவரி 5-ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • பிப்ரவரி 9-ந்தேதி இரவு மகா தரிசனம் நடக்கிறது.

    சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந்தேதி தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி காலையில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மகா தரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். கடந்த 2 வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை.

    இதனால் இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கினார். சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தைப்பூச தேரோட்டம் நடைபெறும் நாளான வருகிற 5-ந் தேதி மற்றும் மறுநாள் 6-ந் தேதி ஆகிய 2 நாட்களும் மலைப்பாதை வழியாக முருகன் கோவிலுக்கு செல்ல கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை அனுமதிப்பதில்லை என்றும், அந்த சமயத்தில் கூடுதல் பஸ்கள் ஏற்பாடு செய்து அதில் பக்தர்களை அழைத்து செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் திருவிழா காலங்களில் மலைக்கோவில் மற்றும் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைப்பது என்றும், பக்தர்களின் வசதிக்காக காங்கேயம், பெருந்துறை, ஊத்துக்குளி, அறச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும், அதேபோல் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், பேரூராட்சி துணை தலைவர் சவுந்தர்ராஜன், தீயணைப்பு துறை அலுவலர் முத்துசாமி, புவனேஸ்வரி (குடிநீர் வாரியம்), வெள்ளியங்கிரி (நெடுஞ்சாலை துறை), நீலமேகம் (உணவு பாதுகாப்பு), குருமூர்த்தி (சுகாதாரம்) மற்றும் உள்ளாட்சி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×