search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் குண்டு வெடிப்பு"

    • கோவையில் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ஆதரவில்லை.
    • கோவை நகரை பொறுத்த வரை அசம்பாவிதங்களைத் தடுப்பதே காவல் துறையின் பணி என்றார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

    கோவை:

    கோவையில் நடந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக வரும் 31-ம் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட கிளை சார்பாக அதன் தலைவர் எஸ்.எம் முருகன் தலைமையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை விரைவாக செயல்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளதாகவும், கோவை நகரை பொறுத்த வரை அசம்பாவிதங்களைத் தடுப்பதே காவல் துறையின் பணி எனவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.முருகன் பேசுகையில், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி கடைகள் அடைப்பு என சில அரசியல் கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து எங்களிடம் கலந்து பேசி போராட்டத்தை அறிவிக்கவில்லை என்பதால் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. எனவே கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் கீழ் வரும் சுமார் 30,000 கடைகளும் 31-ம் தேதி செயல்படும் என தெரிவித்தார்.

    • கைதானவர்கள் வீடுகளிலும் 2 முறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
    • சாரணையின் அறிக்கைகள், கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ.விடம் வழங்கும் பணி தொடங்கி விட்டது.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போலீசார் 7 தனிப்படை அமைத்து, இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோவையில் பயங்கர சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன.

    இந்த வழக்கில் கடந்த 7 நாட்களாக போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்ததும் அந்த இடத்திற்கு சென்ற போலீசார் காரில் இருந்து சிலிண்டர்கள், ஆணி, கோலி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதானவர்கள் வீடுகளிலும் 2 முறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கினை என்.ஐ.ஏ.வுக்கு தமிழக அரசு மாற்றியது. என்.ஐ.ஏ.வும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

    தென்மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, தமிழக போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதால் இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை மாநகர போலீசார் இன்றுடன் தங்களது விசாரணையை நிறைவு செய்தனர். இனி இந்த வழக்கினை என்.ஐ.ஏ. போலீசார் விசாரிக்க உள்ளனர்.

    வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கோப்புகள், வீடியோ காட்சிகள், பறிமுதல் செய்த பொருட்கள் அனைத்தையும் கோவை மாநகர போலீசார் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை கார் வெடிப்பு வழக்கு சம்பந்தமாக 6 பேரை கைது செய்துள்ளோம். வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு விட்டது. இனி இந்த வழக்கை அவர்கள் விசாரிப்பார்கள். இதுவரை நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ.விடம் வழங்கும் பணி தொடங்கி விட்டது. ஓரிரு நாளில் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.

    • ஐ.எஸ்.ஏ. பயங்கரவாத பயிற்சிக்கு திட்டமிட்ட 18 பேரில் முபின் மட்டும் உயிரிழந்து இருக்கிறார்.
    • முபினின் கூட்டாளிகள் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பற்றிய பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது. காரில் சிலிண்டர்கள், வெடி குண்டுகளை கடத்தி சென்று சதி வேலையில் ஈடுபட கோவை உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் முயற்சி செய்து இருந்தார்.

    கார் வெடிப்பில் அவர் உயிர் இழந்த நிலையில் இந்த நாசவேலை சதி திட்டம் தொடர்பாக அவனது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கோவை போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கோவை போலீசாரிடம் இருந்து கார் வெடிப்பு வழக்கு தொடர்பான தகவல்களையும் சேகரித்து வைத்து உள்ளனர். கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியான முபினும், அவனது கூட்டாளிகள் 17 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட ஏற்கனவே திட்டமிட்டு செயல்பட்ட திடுக்கிடும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முபினையும், அவனது கூட்டாளிகள் சிலரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தனர்.

    அப்போது முபின் மற்றும் கூட்டாளிகள் 17 பேரிடம் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்வதற்கான விசாக்களும் இருந்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் போர் பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு சென்று இவர்களும் போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்து இருந்துள்ளனர்.

    இந்த சதி திட்டம் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், மாநில உளவு பிரிவு போலீசாரும் முபினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தான் அவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி இறந்து விட்டான். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கார் வெடிப்பு சம்பந்தமான அடுத்த கட்ட விசாரணையை அதிரடியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக தமிழகம் முழுவதும் பதுங்கி உள்ள முபினின் கூட்டாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுககு சென்றும் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    மாநில உளவு பிரிவு மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்திற்குள் சென்ற பிறகும் முபின் ரகசியமாக செயல்பட்டு கார் வெடிப்பு சம்பவத்தை மிகவும் துணிச்சலாக அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து முபினிடம் தற்போது தொடர்பில் உள்ளவர்கள் ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

    ஐ.எஸ்.ஏ. பயங்கரவாத பயிற்சிக்கு திட்டமிட்ட 18 பேரில் முபின் மட்டும் உயிர் இழந்து இருக்கிறார். மீதமுள்ள 17 பேர் யார்? யார் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கார் குண்டு வெடிப்பிலும் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தற்போது கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முபினின் கூட்டாளிகள் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோவை போலீசார் கைதான 6 பேரில் 5 பேரை மட்டுமே காவலில் எடுத்து விசாரித்து இருந்தனர். இந்த நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவர்களில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற உள்ளனர்.

    இந்த விசாரணைக்கு பிறகு முபினுடன் வெளிநாடு சென்று பயங்கரவாத போர் பயிற்சி பெற திட்டமிட்ட 17 பேரின் தொடர்பு பற்றி தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து இது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • 26-ந்தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஏற்கனவே 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு இருக்கிறார்.

    சென்னை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி கார் வெடித்து சிதறியதில் வாலிபர் பலியானார்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதன்படி என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளது.

    இந்தநிலையில் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேசினார்.

    அப்போது இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றும், வழக்கு விசாரணை தாமதமாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    தமிழக கவர்னரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழக கவர்னர் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பேசும்போது, வெளியிட்டிருக்கக்கூடிய கருத்து குறித்து அரசின் சார்பில், சில விளக்கங்களை குறிப்பிட விரும்புகிறேன். தீபாவளிக்கு முந்தைய நாள் காலையில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையில், இந்த சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகு தான் தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறித்து சில கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

    கோவை மாநகரத்துக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில், 23-ந்தேதி அதிகாலையில் ஒரு கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்ததை நன்றாக அறிவோம். அந்த சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று, ஆய்வு பணி மேற்கொண்டார்கள். அங்கு இருக்கக்கூடிய தடயங்களை அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அளித்த தகவலின்படி, கோவை போலீஸ் கமிஷனரும், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, அங்கே இருந்த சில தடயங்களை பார்த்துவிட்டு போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., உளவுத்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கில் இருக்கும் அதிகாரிகள் அனைவருக்கும் அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே உடனடியாக தகவல் தெரிவித்து, விசாரணை உடனடியாக தொடங்கப்பட்டது.

    இந்த சம்பவம் நடந்த அன்றைய தினமே இந்த வெடி விபத்தில் இறந்த ஜமேஷா முபின், உடனடியாக அடையாளம் காணப்பட்டு, 24 மணி நேரத்துக்கு உள்ளாக அவருடைய வீடும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் சோதனையிடப்பட்டதன் அடிப்படையில் இதுவரை சிலிண்டர் விபத்து அல்ல. இதற்கு பின்புலத்தில் பயங்கரவாத செயல்கள் இருக்கக்கூடும் என்பதை காவல்துறை உறுதி செய்யப்பட்டு, உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்டு அன்றைய தினமே ஜமேஷா முபினின் கூட்டாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்து, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது.

    24-ந்தேதியன்று காலையிலேயே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அத்தனை பேரும் மாநில காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து அங்கு இருக்கக்கூடிய தடயங்களை ஆய்வுகள் செய்தார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டில் பொதுவாக மாநில காவல்துறைக்கு தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய பயங்கரவாத செயல்கள், குற்ற பின்னணிகள், வெடிமருந்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எப்போதும் மத்திய அரசில் இருக்கக்கூடிய உளவு அமைப்புகளோடு இணைந்து செயல்படக்கூடிய நடைமுறையை தமிழக போலீஸ் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

    இந்த வழக்கு 25-ந்தேதி பயங்கரவாத செயல்கள் தடை சட்டத்துக்கு (உபா) கீழ் கொண்டுவரப்பட்டு, உடனடியாக வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. 25-ந்தேதியே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளான காவல்துறை துணைத்தலைவர், கண்காணிப்பாளர்கள், நம்முடைய காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலேயே பங்குபெற்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை நம்முடைய காவல்துறையினருடன் இணைந்தே மேற்கொண்டனர்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு 26-ந்தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பொதுவாக ஒரு மாநிலத்தில் இப்படி சம்பவம் நடந்தால், முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த மாநில காவல்துறையை சார்ந்ததாக இருக்கிறது.

    இந்த விசாரணையின் அடிப்படையில் இத்தகைய பயங்கரவாத தொடர்பு இருக்கிறது, வேறு ஏதோ மாநிலம் விட்டு மாநிலத்தில் இருக்கக்கூடிய பயங்கரவாத செயல் இருக்கிறது என்பது போன்ற நிலைகள் கண்டறியப்பட்டால், தேசிய புலனாய்வு முகமையே நேரடியாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது.

    இருந்தாலும் அவர்கள் முழுமையாக இந்த விசாரணையிலே நம்மோடு இணைந்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு கிடைத்திருக்கக்கூடிய தகவல்களையெல்லாம் ஒன்று திரட்டி இந்த வழக்கை அவர்களே (என்.ஐ.ஏ.) விசாரிக்கலாம் என்று மாற்றி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, 26-ந்தேதியன்றே இந்த புலன் விசாரணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

    எனவே, இந்த சம்பவம் நடந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்துக்கொள்வது வரை அனைத்து விவரங்களும் தமிழக காவல்துறையினரால் மத்திய உளவுத்துறைக்கும், தேசிய புலனாய்வு முகமைக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்து இருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

    இந்த சூழ்நிலையில் இன்னொன்றையும் நான் தெரிவிக்க வேண்டும். வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஏற்கனவே 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு இருக்கிறார். என்.ஐ.ஏ. விசாரணை வளையத்தில் கொண்டு வந்தவர், அதன் பிறகு ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அது குறித்த விவரங்கள் எங்களிடத்தில் இல்லை. அது அப்போது விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு தான் தெரியும்.

    தற்போது எந்தவொரு கட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் சொல்லப்படாமலோ, மத்திய உளவுப்பிரிவுக்கு செய்திகள் பகிர்ந்து கொள்ளபடாமலோ இல்லை. தொடர்ச்சியாக அவர்களும் நம்மோடு இணைந்து தான் பயணித்திருக்கிறார்கள். அவர்களும் விசாரணையில் பங்கு பெற்றிருக்கிறார்கள். அவர்களை விடுவித்துவிட்டு தமிழ்நாடு போலீஸ்துறை மட்டும் ஏதோ செய்துவிட்டது போலவும், இந்த விசாரணையை தாமதப்படுத்த முயற்சி நடப்பதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்க நினைப்பது சரி அல்ல.

    முதல்-அமைச்சர், இந்த சம்பவம் நடைபெற்ற 23-ந்தேதி அதிகாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் அவரே நேரடி கண்காணிப்பு, பார்வையில் இந்த விசாரணை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று முடுக்கிவிட்டார். தீபாவளி அன்று தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மக்களிடம் எந்தவிதமான பதற்றமான மனநிலை வந்துவிடாமல் இயல்பான நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வைத்திருப்பதற்கான நடவடிக்கையும் முதல்-அமைச்சர் மேற்கொண்டிருந்தார். அவருடைய சீரிய வழிகாட்டுதலின் கீழ் இயங்க கூடிய தமிழக அரசின் போலீஸ்துறை இந்த விஷயத்தை மிகத்திறமையாக கையாண்டு புலனாய்வில் ஈடுபட்டிருக்கிறது.

    இந்த வெடிவிபத்து சம்பவத்தை பொறுத்தமட்டில் முழுமையாக என்.ஐ.ஏ. மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணையில் பங்கெடுத்து உள்ளனர். என்.ஐ.ஏ.யின் டி.ஐ.ஜி., சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் யார், யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், கூட்டாளிகள் யார்?, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது போன்ற முழு தகவல்களையும் முதல்-அமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் விசாரணை அதிகாரிகள் முழுமையாக திரட்டி அதனை என்.ஐ.ஏ.க்கு அளித்துள்ளனர்.

    தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும், எந்த சூழலிலும் தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அதில், முதல்-அமைச்சர் மிக உறுதியாக உள்ளார். இதுபோன்ற தீவிரவாத செயல்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழகத்தில் அதற்கு அனுமதியில்லை. இதுபோன்ற செயல்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடிக்கக்கூடிய உறுதிபடைத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் தெரிவித்துள்ள கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்தது.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் வரும் 31-ம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடையடைப்பு அன்று அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்கக் கோரி வற்புறுத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைய தினம் அனைத்துப் பொருட்களும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், அனைத்து ஜமாத், அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உடன் பேச்சு நடத்தினர். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறியதாவது:

    பா.ஜ.க. அறிவித்த பந்த் என்பது கோவை மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    பந்த் சமயத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என காவல்துறையிடம் கேட்டுள்ளோம். வருங்காலத்தில் காவல் துறைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். மத கண்ணோட்டத்தில் இந்தச் சம்பவத்தைப் பார்க்க வேண்டாம்.

    எல்லாம் மதத்திலும், மதத்தை நம்பாதவர்களும் தவறு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் தவறு செய்யும்போது அதை பல கோணத்தில் தொடர்பு படுத்தி பேசுகிறார்கள்.

    இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாங்கள் உண்மை கண்டறியும் சோதனை குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழு விசாரித்ததில் கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவர் கார் வியாபரம் செய்பவர். அவர் வெறும் கார் வியாபரம் செய்பவர் மட்டுமே, அவர் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற சூழலில் உள்ளது. இப்படி இருக்க அவர்மீது எந்த தவறுமில்லை என மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

    தேவையில்லாமல் கோவையில் மத பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்தனர்.

    • கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
    • பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    சென்னை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் முழு அடைப்பு போராட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முழு அடைப்பு போராட்டம் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை. அதை ஆதரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்.31-ல் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    • உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், கேட்பாரற்றும் நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரோந்து சென்றும், வாகன சோதனை நடத்தியும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மாநகர போக்குவரத்து போலீசார் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் கேட்பாரற்று நின்ற 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    இதில் 7 கார்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை பெற்று கொண்டனர். மற்ற 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இன்று காலை போக்குவரத்து போலீசார் உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், கேட்பாரற்றும் நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ஆட்டோவில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து கோவையில் பிரதான சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை என முக்கிய சாலைகளிலும் சாலையோரங்களில் நிற்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

    • வெடி பொருட்களை சப்ளை செய்தவர்களில் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
    • மாவு மில் அதிபரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    கோவை:

    கோவை கார் வெடிப்பில் பலியான முபினுக்கு வெடி பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார்-யார்? என்பதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி வைத்துள்ள போலீசார் அதனை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இனி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்துவார்கள். அப்போது வெடி பொருட்களை சப்ளை செய்தவர்களில் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

    இதற்கிடையே வெடி மருந்துகள் மற்றும் கரித்துகள்களை கோவையில் உள்ள மாவு மில் ஒன்றில் முபினும் அவனது கூட்டாளிகளும் அரைத்து வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த மாவு மில் அதிபரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    • இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
    • முபினின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் காவலில் எடுத்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.

    கோவை:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் சர்வதேச அளவிலான வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பது ஏற்கனவே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இப்படி சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்துக்காகவே கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் உள்ளான்.

    முபினும் அவனது கூட்டாளிகளும் இந்த அசாருதீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட தகவல்கள் தற்போது உறுதியாகி உள்ளன.

    போலீஸ் காவலின்போது முபினின் கூட்டாளிகளில் ஒருவனான பெரோஸ் இது தொடர்பாக திடுக்கிட வைக்கும் வகையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனால் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விசாரணை மாநிலங்களை தாண்டி விரிவடையும் என்பதாலேயே என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கேரள சிறையில் உள்ள 6 பேரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே முபினின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் காவலில் எடுத்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். இன்று அவர்களின் 3 நாள் காவல் முடிவடைகிறது.

    இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ள 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் தனியாக மனுதாக்கலும் செய்ய உள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தும் இந்த விசாரணையின் முடிவில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருந்தால் அதுவும் அம்பலமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    • காரில் வெடி மருந்து மற்றும் 2 சிலிண்டர்களுடன் பயணம் செய்த முபின் புதிய முறையில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
    • எல்.பி.ஜி. சிலிண்டருடன் வெடிக்காத ஒரு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

    சென்னை:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை சென்று விசாரணை நடத்தினார்.

    கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நட வடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    கார் வெடித்து சிதறியபோது அதில் பயணம் செய்த முபினும் கருகி உயிரிழந்து விட்டார். காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவே முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடி பொருட்களும் சிக்கின. இதனால் வெடி மருந்துடன் சேர்ந்து சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

    சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆணிகள், கோலி குண்டுகள் ஆகியவை காரில் வெடி பொருட்கள் இருந்ததற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தின. இருப்பினும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

    இந்த நிலையில் காரில் வெடி மருந்து மற்றும் 2 சிலிண்டர்களுடன் பயணம் செய்த முபின் புதிய முறையில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    2 சிலிண்டர்கள், வெடி பொருட்கள் ஆகியவற்றுடன் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றையும் முபின் எடுத்துச் சென்றுள்ளார். எல்.பி.ஜி. சிலிண்டரில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டால் தீப்பொறி உருவாகி வெடித்து சிதறி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் தடயவியல் நிபுணர்கள்.

    இந்த மாதிரியான முயற்சியில் ஈடுபட்டு முபின் சிலிண்டரை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் கூறும்போது, எல்.பி.ஜி. சிலிண்டருடன் வெடிக்காத ஒரு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

    அதை சென்னை தடயவியல் துறை நிபுணர்கள் நன்கு அலசி ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றி அவர்கள் அறிக்கை கொடுத்த பிறகு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி? என்பதற்கான விடை கிடைத்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஓய்வு பெற்ற தடயவியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எல்.பி.ஜி. சிலிண்டரில் புரோப்பேன், யூட்டேன் என்கிற 2 திரவங்களே அடங்கி இருக்கும். இதுதான் கியாசாக வெளிவரும். கியாஸ் கசிவு ஏற்பட்டால் நாம் உணர்ந்து கொள்வதற்கு வசதியாக மெர்சேப்டன் என்கிற வாசனை திரவமும் சேர்க்கப்பட்டிருக்கும்.

    அதுதான் கியாஸ் கசிவு ஏற்பட்டால் வாசனையை ஏற்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் சிறிய அளவிலான 'ஸ்பார்க்' ஏற்பட்டாலே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு விடும். நமது வீடுகளில் கியாஸ் கசிவை கவனிக்காமல் விட்டால் சமையல் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து ஏற்படும் கண்ணுக்கு தெரியாத வகையிலான ஸ்பார்க் கூட சிலிண்டரை வெடிக்க செய்து விடும்.

    ஆக்சிஜனும் இதுபோன்ற சிலிண்டர் விபத்தை ஏற்படுத்தும் 'ஸ்பார்க்' திறன் கொண்டதுதான். ஒரு வேளை கோவை சம்பவத்திலும் இதுபோன்ற சிலிண்டர் விபத்தை உயிரிழந்த முபின் ஏற்படுத்தி இருக்கலாம். எல்.பி.ஜி. சிலிண்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டால் உடனடியாக வெடித்து சிதறி விடும்.

    இவ்வாறு தடயவியல் அதிகாரி தெரிவித்தார்.

    போலீஸ் வாகன சோதனையின்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் முபின் சிலிண்டரை திட்டமிட்டே வெடிக்க செய்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கும் விடை காணும் முயற்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் தங்களது ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • கைதான 5 பேருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    • 6-வது நபராக கைதான அப்சர்கானை காவலில் எடுத்து விசாரிக்கலாமா என்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் கார் சிலிண்டர் வெடித்ததில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் (வயது 29) என்பவர் பலியானார்.

    தீபாவளி பண்டிகையின்போது மக்கள் கூட்டத்தில் காரை நிறுத்தி வெடிக்கச்செய்து கோவையில் பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் முபின் வீட்டில் மூட்டை மூட்டையாக வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    முபினுடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டவர்கள் யார் என்று விசாரித்தபோது முபின் வீட்டு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது. அந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவர்கள் அனைவரையும் பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கோவை கோர்ட்டில் கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதிபதி, முபின் கூட்டாளிகள் 5 பேரையும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரையும் போலீசார் நேற்றுமுன்தினம் காவலில் எடுத்தனர்.

    கடந்த 2 நாட்களாக அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது யார், பண உதவி செய்தது யார், யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். 5 பேரும் தனித்தனி இடங்களில் விசாரிக்கப்பட்டதால் ஒருவர் கூறும் பதில்கள் மற்றவருக்கு தெரியாது. இதனால் 5 பேரும் வெவ்வேறு தகவல்களை கொடுத்துள்ளனர்.

    இதில் ஒரே மாதிரியாக அவர்கள் அளித்த பதில்கள் மூலம் குண்டு வெடிப்பு சதிக்கான பல்வேறு முக்கிய ஆதாரங்களை போலீசார் வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

    கைதான 5 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தி போலீசார் சில ஆதாரங்களை திரட்ட முடிவு செய்தனர். அதன்படி 5 பேரையும் உக்கடம் மற்றும் ஜி.எம். நகரில் உள்ள அவர்கள் வீட்டுக்கு தனித்தனி வாகனங்களில் நேரில் அழைத்துச் சென்றனர். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    15 பேரை கொண்ட 5 தனிப்படை போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆதாரங்களை திரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் ரகசியமாக கூடி சதி திட்டம் தீட்டிய இடங்கள், வெடிபொருட்கள் பதுக்கிய இடங்கள் ஆகியவற்றையும் 5 பேரும் அடையாளம் காட்டி உள்ளனர். அந்த இடங்களுக்கு யார் எல்லாம் வந்து சென்றனர்? என்பது பற்றி தனிப்படை போலீசார் கேட்டு பதிவு செய்து கொண்டனர்.

    இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 5 பேர் வீடுகளிலும் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. தற்போது 2-வது முறையாக சோதனை நடத்தி உள்ளோம். அங்கு கைப்பற்றப்பட்ட விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றனர்.

    இந்த சோதனையையொட்டி உக்கடம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கைதான 5 பேருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று மாலை 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அடுத்தகட்டமாக இந்த வழக்கில் 6-வது நபராக கைதான அப்சர்கானை காவலில் எடுத்து விசாரிக்கலாமா என்பது பற்றியும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கும்போது இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் அவர்களிடம் அளிக்கவும் போலீசார் ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×