search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் குண்டு வெடிப்பு"

    • சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் அதிகாரியாக வந்தனா பணியாற்றியுள்ளார்.
    • ஐதராபாத், பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் அதிகாரி வந்தனாவுக்கு உள்ளது.

    கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. தென்மாநிலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா ஐ.பி.எஸ்., தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 2004-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியானார்.

    பயிற்சிக்கு பின்னர், ராஜஸ்தான் மாநில கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினார். அங்கு பல்வேறு இடங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இதேபோல், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் அதிகாரியாக வந்தனா பணியாற்றியுள்ளார்.

    தற்போது என்.ஐ.ஏ.வில் தென்மாநிலங்களுக்கான பிரிவில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இன்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு பயிற்சியையும் பெற்றுள்ளார். இது மிகவும் கடிமையான பயிற்சியாகும்.

    இவர் விசாரித்த வழக்குகளில் மிகவும் முக்கியமானது கேரள மாநிலத்தில் நடந்த தங்கக்கடத்தல் வழக்கு. அதுமட்டுமின்றி ஐதராபாத், பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் இவருக்கு உள்ளது.

    இதேபோல இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. கொச்சி கிளையில் சூப்பிரண்டாக உள்ள ஸ்ரீஜித் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அசாம் மாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரும் அடிப்படைவாத அமைப்பு தொடர்பான வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் பெற்றவர். திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கை இவரது தலைமையிலான குழுதான் விசாரணை நடத்தியது.

    • கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இறந்த முபின் உள்பட 7 பேர் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ளது.
    • டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த வழக்கை தமிழக அரசு, என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது.

    அதனை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதையடுத்து சென்னை என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இறந்த முபின் உள்பட 7 பேர் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) கூட்டுச்சதி, 153(ஏ) மத உணர்ச்சியை தூண்டி விட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, யு.ஏ.பி.ஏ.(உபா) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பிரிவு 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் தான் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. முதல் வழக்காக கோவை கார் வெடிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதும், சென்னை, கேரளாவில் இருந்து தென்மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோவை வந்தனர்.

    அவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து கார் வெடிப்பு சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து தகவல்களையும் கேட்டு பெற்றனர்.

    தொடர்ந்து டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது கைதானவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுடன் அவர்களின் போலீஸ் காவல் முடிவடைகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    போலீஸ் காவல் முடிந்ததும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளிலும் டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆயிரக்கணக்கான தீப்பெட்டிகளை வாங்கி அதில் உள்ள சிறிய அளவிலான வெடிமருந்தையும் வெடி பொருட்களுடன் முபின் கலந்து வைத்திருந்துள்ளான்.
    • எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை முபினினும் அவனது கூட்டாளிகளும் பார்த்து பார்த்து ரகசியமாக வாங்கி குவித்துள்ளனர்.

    கோவை:

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து குவியலை போலீசார் கார் வெடித்து சிதறிய சில மணி நேரங்களிலேயே கைப்பற்றினார்கள்.

    75 கிலோ மதிப்பிலான வெடி மருந்துகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கொரியர் வழியாக முபின் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வெடி மருந்துகளை வைத்து சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்க முபின் திட்டமிட்டதும் அம்பலமாகியுள்ளது.

    ஆயிரக்கணக்கான தீப்பெட்டிகளை வாங்கி அதில் உள்ள சிறிய அளவிலான வெடிமருந்தையும் வெடி பொருட்களுடன் முபின் கலந்து வைத்திருந்துள்ளான்.

    இந்த வெடி மருந்துகளுடன் தீக்குச்சிகளையும், முபின் கலந்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீக்குச்சிகள் லேசாக உரசினாலே தீப்பற்றி விடும் என்பதற்காகவே முபினும் அவனது கூட்டாளிகளும் தீக்குச்சிகளையும் வெடிபொருட்களாக மாற்றி உள்ளனர்.

    அலுமினிய பவுடர், சல்பர் பவுடர் உள்ளிட்டவைகளையும் முபின் வாங்கி வைத்திருந்தது ஏற்கனவே தெரிய வந்திருந்த நிலையில்தான் தற்போது தீக்குச்சிகளையும் முபின் கூட்டாளிகள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    முபினின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து பண்டல் பண்டலாக தீப்பெட்டிகள் மற்றும் தீக்குச்சிகளையும் கைப்பற்றி இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இப்படி எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை முபினினும் அவனது கூட்டாளிகளும் பார்த்து பார்த்து ரகசியமாக வாங்கி குவித்துள்ளனர்.

    தற்போது வரை கைதாகியுள்ள 6 பேருக்கும் முபினுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் விசாரணையில் உறுதியாகி இருக்கும் நிலையில் வெடிபொருட்களை சேகரிப்பதற்கும் இவர்கள் முபினுக்கு உதவிகரமாக இருந்ததும் அம்பலமாகி இருக்கிறது.

    • சிறப்பாக புலன் விசாரணை செய்த 19 பேருக்கு தமிழக டி.ஜி.பி. பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழக காவல்துறை செய்யும் என்றார்.

    கோவை:

    கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த 19 பேருக்கு சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது:

    கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கோவை மாநகர காவல் துறை துரிதமாக செயல்பட்டது. சம்பவ இடத்தை பாதுகாப்பாக வைத்து தடயங்களை சேகரித்தது. அதில் இறந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

    ஆறு குற்றவாளிகளை மிக துரிதமாக ஆதாரங்களைத் திரட்டி கைது செய்துள்ளனர். 5 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். இதில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி ஆதாரங்களை திரட்டி கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்வர் நேற்று பரிந்துரை செய்தார்.

    உள்துறை செயலகம் இன்று என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. என்.ஐ.ஏ. வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளை காவல்துறை செய்யும்.

    புலன் விசாரணை விபரங்களை சொல்ல முடியாது. காவல் துறையினருக்கு கிடைக்கும் ஆதாரங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்போம்.

    இவ்வழக்கில் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தியது தொடர்பாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்துள்ளோம். என்.ஐ.ஏ. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் கைது செய்வார்கள் என தெரிவித்தார்.

    • கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களைச் சந்தித்தார்.
    • அப்போது பேசிய அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல் என்றார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கோவையில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

    பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து.

    இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுகிறேன். கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும்.

    இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை முற்றிலும் ஆராய்ந்தது இதை போன்ற இடங்கள் எங்கும் இல்லை என்பதை தமிழக காவல் துறை உறுதிசெய்ய வேண்டும். கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும். இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குண்டு வெடித்து பா.ஜ.க. சொல்லிதான் மக்கள் பீதி அடைய வேண்டுமா?

    மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளைப் பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளனர். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது.

    ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை.

    எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

    தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

    • குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார்.
    • பிடிபட்ட ஆட்டோ டிரைவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூரில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார்.

    குன்னூர்:

    கார் வெடிப்பில் பலியான முபினுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார்.

    இவருடன், முபின் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குன்னூர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இவர் முபினுக்கு கார் வாங்கி கொடுத்ததில் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    பிடிபட்ட ஆட்டோ டிரைவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூரில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். முபினுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு அவர் குன்னூரில் தங்கியிருந்தாரா, மலைப்பிரதேசமான அங்கு ரகசிய கூட்டம் எதுவும் நடத்தப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    • 7 கார்களின் உரிமையாளர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு சென்று நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தனர்.
    • போலீசார் கேட்பாரின்றி நின்ற கார் உரிமையாளர்களுக்கும் கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்புடைய கும்பலும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பை தொடர்ந்து கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ரோந்து சென்றும், வாகன சோதனை நடத்தியும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நேற்று மாநகர போக்குவரத்து போலீசார் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு பகுதிகளில் சாலையோரங்களில் கேட்பாரின்றி நின்ற வாகனங்களை அதிரடியாக சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், கேட்பாரின்றியும் நின்று கொண்டு இருந்த 12 கார்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு எடுத்து சென்றனர்.

    இதில் 7 கார்களின் உரிமையாளர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு சென்று நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் 7 கார்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மீதமுள்ள 5 கார்களை வாங்கி வராத உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கார்கள் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 7 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து போலீசார் கேட்பாரின்றி நின்ற கார் உரிமையாளர்களுக்கும் கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்புடைய கும்பலும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக கார் பறிமுதல் செய்யப்பட்ட உக்கடம் பகுதியில் விசாரணை நடக்கிறது.

    • முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு உள்ளது.
    • முபினால் வெடிக்கப்பட்ட காரும், பல நாட்களாக அப்சல்கான் வசித்த குடியிருப்பு முன்பு நின்றுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    கோவை:

    கார் வெடிப்பு வழக்கில் முபினின் நெருங்கிய உறவினரான அப்சல்கான் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    முபினின் பெரியம்மா மகன் தான் அப்சல்கான். இவரது வீட்டுக்கு முபின் அடிக்கடி சென்று வருவது வழக்கம். 2 பேரும் உறவினர்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

    முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு உள்ளது. பொட்டாசியம், நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர், கரி உள்ளிட்டவற்றை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி உள்ளனர். முபின் வெடிபொருள் வாங்க அப்சல்கான் அனைத்து வகையிலும் உதவி செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ள லேப்-டாப்பும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    முபினால் வெடிக்கப்பட்ட காரும், பல நாட்களாக அப்சல்கான் வசித்த குடியிருப்பு முன்பு நின்றுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கார் வெடிப்பு வழக்கில் அப்சல்கானுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீதும் உபா சட்டம் பாயும் என தெரிகிறது.

    • கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
    • கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். கோவை சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ளது.

    • வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களை பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் ஆகியவற்றை முபின் வாங்கி இருக்கிறார்.
    • முபினும் அவரது உறவினர்களான அசார், அப்துல் ஆகியோர் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரிக்கும் முதல் கட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    கார் வெடிப்பில் சிக்கி பலியான ஜமேசா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினார். இந்த வெடிபொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின் திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.

    இந்த வெடிபொருட்களை முபின் யார்-யாரிடமிருந்து எப்படி வாங்கினார் என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முபின் வெடிபொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களை பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் ஆகியவற்றை முபின் வாங்கி இருக்கிறார். இந்த பொருட்களை பயன்படுத்தி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க முபின் திட்டமிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    பிளிப்காட், அமேசான் போன்ற பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் வழியாகவும் இந்த பொருட்களை முபின் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முகவரிகளில் இந்த வெடிபொருட்களை முபின் வாங்கி இருப்பதும் உறுதியாகியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் மேலும் பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். எந்தெந்த முகவரிகளில் வெடிபொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்களை சேகரித்துள்ள போலீசார் அந்த முகவரிகளில் வசித்து வருபவர்களுக்கும் கார் வெடிப்பில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

    வெடிபொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் வழியாக முபின் பணம் செலுத்தி இருக்கும் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

    முபினும் அவரது உறவினர்களான அசார், அப்துல் ஆகியோர் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரிக்கும் முதல் கட்ட பயிற்சியில் ஈடுபட்டதும் வந்துள்ளது. இதற்காக இவர்கள் 3 பேரும் வெடிகுண்டுகளை தயாரிப்பது தொடர்பான 'யூடியூப்'களை பார்த்து பயிற்சி பெற்றிருக்கும் திடுக்கிடும் தகவல்களும் தெரிய வந்துள்ளன.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுபோன்று அதிர்ச்சியளிக்கும் வகையிலான பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளதால் போலீசார் விசாரணையின் வேகத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான அப்சர்கானை போலீசார் கைது செய்தனர்.
    • வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் ஜமேஷா முபின் வாங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி பலியானார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    அத்துடன் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் (பால்ராஸ்), ஆணிகள் உள்ளிட்டவை கிடந்தன. முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடம் முகமது தல்கா (வயது 25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான அப்சர்கானை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் ஜமேஷா முபின் வாங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதில் மொத்தம் 76.5 கிலோ பொட்டாசியம், நைட்ரேட் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    6வது நபராக கைது செய்யப்பட்டுள்ள அப்சர் கான் வெடி மருந்து சேகரிப்பில் உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அப்சல்கான் லேப்டாப்பை தனது குழந்தையின் படிப்புக்காக வாங்கி இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது குழந்தைக்கு இரண்டரை வயது தான் ஆகிறது.
    • அப்சல்கான் முபின் மட்டுமல்லாது வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என்பது பற்றி விசாரிக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார்.

    கோவையில் பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்த நிலையில் கார் வெடித்து அந்த முயற்சி தோல்வியில் முடிந்த விவரம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதேபோல் வேறு எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வந்து விசாரணையை முடுக்கி விட்டார். அவரது கண்காணிப்பில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 6 தனிப்படை கள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    கார் வெடித்த இடம் மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்டபோது அவர் பதுக்கி வைத்து இருந்த 75 கிலோ வெடிபொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முபினின் தாக்குதல் திட்டத்துக்கு உதவி செய்த 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

    முபின் காரில் சிலிண்டர்களை நிரப்பி கோவையில் 5 இடங்களில் தாக்குதல் நடந்த திட்டமிட்டு இருந்ததால் தனி ஒரு நபரால் இந்த சதியை நிறைவேற்ற திட்டமிட்டு இருக்க முடியாது என்றும் எனவே அவரது பின்னணியில் தீவிரவாத எண்ணம் கொண்ட பலர் இருந்து இருக்கலாம், அவர்கள் பண உதவி உள்பட பல்வேறு வழிகளில் அவருக்கு உதவி செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதினர்.

    இதனால் முபினுடன் செல்போனில் அடிக்கடி பேசியவர்கள், வாட்ஸ்-அப், முக நூலில் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களில் ஒவ்வொருவராக பிடித்து விசாரித்து வருகிறார்கள். இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    முபினின் தம்பி முறை கொண்டவரும், அவரது நெருங்கிய உறவினருமான அப்சல் கான் (வயது 28) என்பவர் வீடு கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. அப்சல்கான் வீட்டுக்கு முபின் அடிக்கடி சென்று வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

    இதையடுத்து அப்சல்கானை போலீசார் பிடித்து கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். அவர் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்பேரில் நேற்று அப்சல்கான் வீட்டுக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் வீட்டில் இருந்த ஒரு லேப்டாப் சிக்கியது. அப்சல்கான் அந்த லேப்டாப்பை தனது குழந்தையின் படிப்புக்காக வாங்கி இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது குழந்தைக்கு இரண்டரை வயது தான் ஆகிறது. அந்த குழந்தைக்கு ஏன் லேப்டாப் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.

    அப்சல்கான் வீட்டுக்கு வந்து சென்ற முபின் அந்த லேப்டாப்பை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த லேப்டாப்பில் இருப்பது என்ன, முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் எதுவும் அதில் உள்ளதா, முபின் யாருக்காவது இமெயில் செய்துள்ளாரா? என போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதிலும் சில முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளது.

    இந்த ஆதாரங்களின் பேரிலும், முபினுடன் நெருங்கி பழகி அவரது சதி செயல்களுக்கு உதவிய தற்காகவும் அப்சல்கானை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அப்சல்கானுடன் சேர்ந்து மொத்தம் 6 பேர் கைதாகி உள்ளனர்.

    அப்சல்கான் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்துள்ளார். அவர் முபின் மட்டுமல்லாது வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது. தொடர்ந்து அப்சல்கானை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது கோவை மாநகரில் நேற்று மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவை அனைத்தும் உயிரிழந்த முபினின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களின் வீடுகள் ஆகும். அங்கு என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும். தற்போது அப்சல்கான் மட்டும் கைதாகி உள்ளார் என்றனர். விசாரணை நீண்டு கொண்டே செல்வதால் வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது.

    வெளிநாட்டினர் தொடர்பு மற்றும் கிலோ கணக்கில் வெடிபொருள் என வழக்கு நீண்டு கொண்டே சென்றதால் தமிழக அரசு இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் முறைப்படி வழக்கை ஏற்கும்போது அவர்களிடம் ஏற்கனவே கைதானவர்கள் மற்றும் இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை கோவை தனிப்படை போலீசார் ஒப்படைப்பார்கள்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கும்போது கார் வெடிப்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

    ×