search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்தி"

    • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    சேலம்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநிலச் செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை, விவசாயகளின் தோட்டத்திற்கு வேளாண் பணிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது.
    • சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    காகாபாளையம்:

    சேலம் அருகே இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பா–ளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் இடங்கண சாலை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ரும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இதையடுத்து சாத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சின்னம்பட்டி பிரதான சாலையில் உள்ள இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அங்கு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

    • சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
    • விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரக்கு வேன் மோதி கூலி தொழிலாளி பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    சேலம்:

    சேலம் திருவாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65), கூலி தொழிலாளி.

    இவரது மகன் வீடு பள்ளப்பட்டியில் உள்ளது. சம்பவத்தன்று, மகனை பார்ப்பதற்காக பழனிச்சாமி, பள்ளப்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர், பழனிச்சாமி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதில் பின்னால் வந்த அரசு விரைவு பஸ் சரக்கு வேன் மீது மோதியதில், வேன் நிற்காமல் சென்று பழனிச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் பழனிசாமி சம்பவ இடத்திலே பரிதாமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
    • தேர்வு துறையில்‌ வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின்‌ போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள்‌ மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.

    தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

    இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.

    முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர்.

    • சேலத்தில் உப்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
    • பொங்கல் தினத்தன்று உப்பு வாங்கி சாமிக்கு வைத்து பூஜை செய்து வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் உப்பு விற்பனை ஜோராக நடைபெற்றது.

    அன்னதானப்பட்டி,

     தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை மளிகைக் கடையில் வாங்கி வந்து, அவற்றை கோவில்களில் சாமிக்கு வைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

    தொடர்ந்து அவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வங்கள், பணம் பெருகும் என்பது மரபு வழி ஐதீகம் ஆகும். இதனால் நேற்று முன்தினம் சூரியப் பொங்கல் , நேற்று மாட்டுப்பொங்கல், இன்று கரி நாள் ஆகிய தினங்களில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள மளிகைக் கடைகளில் உப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சாலையோரங்களிலும் தற்காலிக உப்பு கடைகள் அதிகளவில் முளைத்து இருந்தன. சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகளில் உப்பு வாங்க பெண்கள் கூட்டம், கூட்டமாக அதிகளவில் குவித்தனர்.

    • பொங்கல் பண்டிகையைெயாட்டி சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனையானது.
    • வழக்கமாக மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.5 கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த முறை ரூ.15 கோடி வரை விற்பனையாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும் அதிக அளவில் மதுபாட்டில்களும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று கடை விடுமுறை என்பதால் அதற்கு முன்பாக 2 நாட்கள் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. இதில் 14-ந் தேதி ரூ.5.5 கோடிக்கும், 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று ரூ.10.25 கோடிக்கும் என ரூ.15 .25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    வழக்கமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை படைத்தார்.
    • டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    சேலம்:

    கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐஎம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும் தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் , வருகிற ஜூலை மாதம் சீனா செங்குடுவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    இவருக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதிகளில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.
    • சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியில் புலிகுத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சைமலை என மலைகள் சூழ்ந்த மாவட்டமாகும். இதில் கல்வராயன் மலையின் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ளது அருநூற்றுமலை. அருநூற்று மலையில் ஆலடிப்பட்டி, பெலாப்பாடி, சிறுமலை ஆகியவை உள்பட 8 கிராமங்கள் உள்ளன.

    பெரும்பாலான மலைக்கிராமங்களில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர்.பழமை மாறாமல் சில வழக்கங்களை இன்றளவும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.ஆங்காங்கே சில ஊர்களில் ஊருக்குப் பொதுவான இடங்களில் வழிபாட்டில் எண்ணற்ற பழங்கால நடுகற்களும், புதிய கற்கால கருவிகளும் உள்ளன.

    பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் சில இடங்களில் அடர்ந்த காடுகள் சில இடங்களில் காணப்படுகின்றன.அரியவகை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் புகலிடமாய் கல்வராயன் மலை உள்ளது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை, புலி போன்றவை அதிகளவில் காணப்பட்டுள்ளன என்று ஆங்கிலேயர் கால ஆவணமான "இந்தியன் கெசட்டியர்" சான்று கூறுகிறது.

    இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த ஏ.டி.மோகன், பெரியசாமி, ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், முத்தையன் , நித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த நடுகற்களைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை தெரிவித்தனர்.

    இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    16,17-ம் நூற்றாண்டுகளில் இங்கே விலங்கு- மனித மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.குறிப்பாக புலிகள் மக்களைத் தாக்க முயலும்போது, புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வீரத்துடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு இங்கே நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன.

    வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் மரபு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த வகையில் அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி கிராமங்களில் 16-ம் நூற்றாண்டு நடுகல்லொன்று காணப்படுகிறது. இதில் வீரனுக்கு வலது புறத்தில் நின்று கொண்டிருக்கும் ஆக்ரோஷமான புலி வீரனைத் தாக்குவது போலவும், அவ்வீரன் தனது இரு கைகளால் ஈட்டியைக் கொண்டு புலியைக் குத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலையில் அழகிய கொண்டையும், காதணி மற்றும் சரபலி, ஆரம், காப்பு மற்றும் காலில் வீரக்கழல் போன்ற அணிகலன்களை அணிந்துள்ளான்.

    இதனை மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மேலும் பெலாப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு நடுகல் காணப்படுகிறது. இந்நடுகல்லில் வீரனுக்கு இடதுபுறத்தில் புலி ஒன்று வீரனை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது.வீரன் தனது இடது கையில் கட்டாரியை கொண்டு புலியின் வாயில் குத்துவது போன்றும், வலது கையில் ஈட்டியை கொண்டு புலியின் வயிற்றில் குத்துவது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த வீரனின் தலையில் அழகிய கொண்டை கட்டப்பட்டுள்ளது. காதணிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும்.

    பொங்கல் பண்டிகையின் கரிநாளின்போது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் எண்ணற்ற இன்னும் பல வரலாற்றுச் சின்னங்களும், அவை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5.1 கோடி மட்டுமே அபராதம் வசூலானது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிரமாக டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர், முறைகேடாக பயணிப்போர், லக்கேஜ் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 69 சதவீதமாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

    மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    ×