என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்"
- நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும்.
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும்.
நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும். குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுப காரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு நல்ல காரியம் தொடங்கும்போதும் குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் தொடங்கினால், அது வெற்றியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் குடும்பத்துடன் குலதெய்வத்தை வழிபடுவதால் வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி தங்கும்.
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். எனவே அன்றைய தினம் குலதெய்வ கோவிலுக்கு மக்கள் தவறாது சென்று வழிபடுகின்றனர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று பவுர்ணமி என்பதால், அந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவதற்கு மிகமிக உகந்ததாகும். அன்று குலதெய்வமான சாஸ்தா, அய்யனாரை மக்கள் தவறாது வழிபடுகிறார்கள்.
தென் மாவட்டங்களில் சொரிமுத்து அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார் கோவில், அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கைகொண்டார் சாஸ்தா, பூலுடையார் சாஸ்தா, சூட்சமுடையார் சாஸ்தா, பட்டமுடையார் சாஸ்தா என்று ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரத் திருநாளில், சாஸ்தாவை வழிபட்டு விட்டு, அவருடைய காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், கருப்பசாமி, சுடலை மாடசாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
காவல் தெய்வங்களில் மிகவும் முக்கியமானவராக சங்கிலி பூதத்தார் விளங்குகிறார். சங்கிலி பூதத்தார் அனைத்து சாஸ்தா கோவில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
பாற்கடலில் தோன்றினார்
ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதனை சிவபெருமான் உண்டு, உலகைக் காத்தார். அந்த கொடிய விஷத்திற்குப் பின்னர் கடலுக்குள் இருந்து பாரிஜாத மரம், காமதேனுப் பசு உள்பட பல அதிசய பொருட்களும், அற்புதம் மிகுந்த தேவதைகளும், தெய்வங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளி வரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும் வெளிப்பட்டன.
தொடர்ந்து அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார், தன் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடலின் மேல் கனத்த இரும்பு சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு, பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சத்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் தோன்றி வெளியே வந்தார். இதனைக்கண்ட தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி, ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர்.
அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு `அமிர்த பாலன்' என்ற பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் `தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்களையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராட்சச முத்து' என்றும் அழைக்கப்படுகிறார்.
அண்டமெல்லாம் நடுங்கச்செய்த அதிபயங்கர ஆலகால விஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய சிவபெருமான், பூதகணங்களையும், பூத கணங்களுக்கு எல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி, அவர்கள் அனைவரையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு தன்னுடனேயே கயிலாயத்தில் வைத்துக்கொண்டார்.
காவல் தெய்வம்
பின்னர் சிவபெருமான் `அனைத்து கோவில்களுக்கும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்' என்று கூறி சங்கிலி பூதத்தாரை, பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சங்கிலி பூதத்தார், சொரிமுத்து அய்யனார் கோவிலில் காவல் தெய்வமாக இருந்து அங்கு வரும் பக்தர்களை பாதுகாத்து வருகிறார். அவருக்கு வடை மாலை சாத்தி, சைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆக்ரோஷத்துடன் வீற்றிருந்த சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த பக்தர்கள், அதற்காக அகத்திய மாமுனிவரிடம் வேண்டினர். இதனை ஏற்ற அகத்திய முனிவர், சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்தினார்.
இதனால் அங்கு அகத்திய மாமுனிவருக்கும் சிலை உள்ளது. அவரை வழிபட்ட பின்னரே பக்தர்கள் சங்கிலி பூதத்தாரை வழிபடுகின்றனர். சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள் இரும்பு சங்கிலியால் தங்களுடைய மார்பில் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலின் கோபுர வாசலில் இந்த சங்கிலி பூதத்தார், காவல் தெய்வமாக இருந்து மக்களை காத்து வருகிறார்.
இதேபோன்று நெல்லையப்பர் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இவர் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பாதுகாத்து வருகிறார்.
பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாக விளங்கும் சங்கிலி பூதத்தார் சுவாமியை, `பூதராஜா' என்றும் அழைப்பார்கள். இந்த சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிகளுக்கு `பூதராஜா', `பூதராசு', `பூதத்தான்', `பூதப்பாண்டி' என்றும், பெண் பிள்ளைகளுக்கு 'பூதம்மாள்' என்றும், தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் 'பூதராஜா'வை சுருக்கி 'பூஜா' என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.
இந்த சங்கிலி பூதத்தாரை பங்குனி உத்திரம் நாளில், படையல் போட்டு வழிபட்டு வரும் மக்களை, அவர் என்றும் பாதுகாத்து அருள்செய்வார். குலதெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, சங்கிலி பூதத்தார் வழிபாடாகும். பங்குனி உத்திரத்தன்று சாஸ்தாவை வழிபட்ட பின், சங்கிலி பூதத்தாரையும் வழிபட்ட பின்னர் மற்ற காவல் தெய்வங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். ஒவ்வொரு கோவிலிலும் சங்கிலி பூதத்தார், வெவ்வேறு பெயர்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகும்.
- அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும்
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் உள்ள சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகு வதாகவும், அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்றும், எந்த துயரில் இருந்தும் நீங்கலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் வரலாறு
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் இருந்த தடாகத்தில் உள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இதில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றபோது கல்லால் கால் தவறி விழுந்தார்.
அவர் கொண்டு சென்ற குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கொட்டியது. ஆத்திரமடைந்த அவர், அந்த பெண் கையால் நீர் வாங்குபவர் இறப்பார் என்றும், அந்த பெண் இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும் என்றும், மரணத்திற்கு பிறகு அவர் சொர்க்கம் செல்வார் என்றும் சாபமிட்டார்.
அவ்வூரில் தினமும் ஒரு கனி காய்க்கும் மரத்தில் இருந்து கனியை எடுத்து மன்னன் உண்டு வந்தான். இதனால் அம்மரத்திற்குக் காவல் போடப்பட்டிருந்தது. ஒரு முறை முனிவரிடம் சாபம் பெற்ற பெண் தண்ணீர் எடுத்துவரும் போது குடத்திற்குள் அந்த மரத்தில் இருந்த கனி விழுந்து விட்டது. அவர் வரும் வழியில் 21 தேவாதி தேவதைகள் எதிரில் தண்ணீர் கேட்க, அந்த பெண் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது மரத்தில் இருந்த கனி திருடப்பட்டதாக எண்ணினர்.
மேலும் அந்த கனியை சாபம் பெற்ற பெண் எடுத்து சென்றதாக கருதினர். இதைத்தொடந்து கனகமணி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மரத்தில் இருந்து விழுந்த கனி இருந்தது. இதனால் மன்னரின் காவலர்கள் அந்த பெண்ணை அழைத்து சென்று மன்னன் முன் நிறுத்தினர். அப்போது கனகமணியின் குடத்தில் இருந்த நீருக்குள் கனி இருந்தது என காவலர்கள் கூறினர்.
தேவதைகளும் தாங்கள் தண்ணீர் கேட்ட போது கனி வைத்திருந்ததால் தண்ணீர் தர மறுத்தார் என கூறினர். எனவே கனகமணி தான் கனியை திருடியிருக்க வேண்டும் என கூறினர்.
இதைத்தொடர்ந்து கனகமணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவர் இறக்கும் தருவாயில் தன் தெய்வமான அரிகரபுத்திரனை அழைக்க, அவர் உயிர்ப்பிக்க முயலும் போது அவள் இனி எவரும் தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்று கூறி அவ்விடத்தில் சுனையாக மாறி இருக்க விரும்புவதாகக் கூறினார். அப்போது அருமையான சுனையாக மாறும் அவளைக் காத்தருளுவதாக என்று அய்யன் சாஸ்தா கூறினார்.
இதனால் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார். பின்னர் உண்மையறிந்த மன்னன் தான் தவறிழைத்ததாக கருதி உயிரை மாய்த்துக்கொண்டான். இதேபோல் தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோர, அவர்களைத் தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார்.
- மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
- 10-ம் நாளான ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
குரும்பூர்:
குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதனை யொட்டி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. காலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான வருகிற 31-ந் தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 10-ம் நாளான ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை நிர்வா கிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதய குமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், சுப்பிரமணியன் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்