search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார்
    • பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை (20-ந்தேதி) தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அலுவல் பணி ஏதும் நடைபெறாமல் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

    விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இன்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அமளியில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கும் பாராளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும்'' என்றார்.

    • தடையை மீறி ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார்.
    • அப்போது பேசிய அவர், இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே, டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் மணிப்பூருக்கு சென்று வரும் 30-ம் தேதி வரை அங்கேயே தங்கி இருந்து பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்துப் பேசப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்வாதி மாலிவாலுக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்திருந்தது.

    இந்நிலையில், தடையை மீறி ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங்கை நேரில் சந்திக்க உள்ளேன். வன்கொடுமைக்கு ஆளான பெண்களைச் சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவி மற்றும் நிவாரணம் கிடைக்கப் பெற்றதா என்பது குறித்து அறிய உள்ளேன்.

    இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரதமர் மோடி மற்றும் மத்திய பெண்கள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோர் மணிப்பூர் வர வேண்டும் என தெரிவித்தார்.

    • மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை "மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்" என எச்சரித்துள்ளது.
    • மணிப்பூர் அரசு, மிசோரம் மற்றும் மத்திய அரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

    மணிப்பூரின் பக்கத்து மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு, அரசின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையின்படி அமைதி வாழ்விற்கு திரும்பியது. இந்த அமைப்பை சேர்ந்தவர்களை கொண்டது மிசோரம் மாநிலத்தின் பாம்ரா சங்கம்.

    இந்த அமைப்பு, மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை "மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்" என எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அறிக்கையில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், 2 பெண்களை ஆடையின்றி அணிவகுத்து அழைத்து சென்ற சம்பவத்தை கேள்விப்பட்டதும் மிசோரம் இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் மிசோரத்திலுள்ள மைதேயி சமூகத்தினர் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். மணிப்பூரில் உள்ள குகி இன சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறையால் மிசோ உணர்வுகள் ஆழமாக புண்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள மைதேயி இனத்தவர்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால், அதற்கு அவர்களே பொறுப்பு. இவ்வாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த முறையீடு மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி மக்ககளுக்கு மட்டுமே என்றும், வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

    இதயடுத்து மிசோரமில் இருந்து மைதேயி சமூகத்தினர் வெளியேறுகின்றனர். மிசோரமின் ஐசால் நகரில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த 66 பேரில் 56 பேர் மைதேயில் சமூகத்தினர். மேலும் மைதேயிகள் 300-க்கும் மேற்பட்டோர் மிசோரத்தில் இருந்து அசாமின் பாரக் பள்ளத்தாக்கு சாலை வழியாக வெளியேற திட்டமிட்டு உள்ளனர்.

    இதனை தொடர்ந்து, மிசோரம் அரசு, தலைநகர் ஐசாலில் மைதேயி சமூகத்தினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மைதேயி இனத்தை சேர்ந்தவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மிசோரம் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மைதேயி இனத்தவரின் பாதுகாப்பு குறித்து மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கிடம் மிசோரம் முதல்-மந்திரி ஜோரம்தங்கா உறுதியளித்தார்.

    மணிப்பூர் அரசு, மிசோரம் மற்றும் மத்திய அரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. பெரும்பாலும் மணிப்பூர் மற்றும் அசாமைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மைதேயி சமூகத்தினர் மிசோரமில் வாழ்கின்றனர். மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 12000 குகி இனத்தவர்கள் மிசோரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இதனிடையே மிசோரம் தேசிய முன்னணி அமைப்பினருடன் மிசோரம் அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மைதேயிகளுக்கு அறிவுறுத்தியதாகவும், மைதேயிகளை வெளியேற தாங்கள் கட்டளையிடவில்லை என்று அந்த அமைப்பினர் விளக்கம் அளித்தநர். இதை தொடர்ந்து மிசோரமில் இருந்து மைதேயிகள் வெளியேறவேண்டாம் என்றும், அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் மிசோரம் அரசு கூறியுள்ளது.

    • மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது.
    • மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பாக வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வருடன் விவாதிக்க உள்ளதாக கடிதம்.
    • பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்.

    புதுடெல்லி:

    கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது. அவரது பயணத்தை தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டது. எனினும் ஸ்வாதி மாலிவால் திட்டமிட்டபடி இன்று மதியம் மணிப்பூருக்கு புறப்பட்டார்.

    மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரை இன்று சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான பிரச்சனையை விவாதிக்க உங்களை அவசரமாகச் சந்திக்க விரும்புகிறேன். மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் இருந்து தப்பிக்க பல மணிப்பூரி பெண்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களின் நலன் தொடர்பான பிரச்சனைகளையும் உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.
    • ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்று நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மகாலில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துக்களை பரப்பியே பின்பு மக்களை சந்திக்கின்றனர். ஆனால் தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.

    மேலும் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின் போது பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு ஏன் இது குறித்து பேசவில்லை. கிளிசரின் போட்டு மீடியாக்கள் முன் அழும் அவர் வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் ஏன் மவுனமாக இருக்கிறார்?

    இணையதள சேவையை முடக்கி, தேவாலயங்களை எரித்து மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டதே பா.ஜ.க. அரசுதான். ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பதை பொறுத்து கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது.
    • விவாதத்தில் இருந்து தப்பிக்க என்ன காரணம்? என எதிர்க்கட்சிகளுக்கு அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பினார்.

    மணிப்பூரில் மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின்போது நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியாவில் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மணிப்பூரின் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளும் பாஜக தரப்பில் தொடர்ந்து பதில் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது:

    காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய வேண்டும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஒரு வருடத்தில் 22% கற்பழிப்பு சம்பவங்கள் ராஜஸ்தானில் நடந்துள்ளன.

    பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றமும் குற்றம்தான். எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பதை பொறுத்து கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது போன்ற குற்றங்கள் சமீபத்தில் பதிவாகியுள்ள மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தங்கள் குழுவினரை அனுப்புவீர்களா?

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து ஒதுங்கி ஓடுகின்றன.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் இருந்தபோது மணிப்பூரில் 6 மாத கால வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன.

    ஆனால் நாங்கள் மணிப்பூரில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். உள்துறை மந்திரி 4 நாட்கள் அங்கு இருந்தார்.

    விவாதத்தில் இருந்து தப்பிக்க என்ன காரணம்? ஏனென்றால், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் (ராகுல் காந்தி) தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், பாராளுமன்றம் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை. முதலமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓட முடியாது.

    ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அமைச்சர் சாந்தி தரிவாலின் கருத்து தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? மேற்கு வங்காளத்தில் நடக்கும் வன்முறையைப் பார்த்து அவர்கள் ஏன் வாயை திறக்கவில்லை? ஹவுரா மற்றும் மால்டா ஆகிய இரு பகுதிகளிலும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மம்தா பானர்ஜியின் தாய் அன்பு எங்கே போனது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    திருப்பூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பழங்குடியின பெண்கள் 2பேரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இச்சம்பவத்திற்கு காரணமான மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள காந்தி சிலை முன் அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    • அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
    • மெழுகு வர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகிலுரித்து மானபங்கம் செய்தபோது நெட்டை மரங்களாக நின்று புலம்பியதை போல பிரதமர் மோடி புலம்பியிருக்கிறார். பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். அன்றைக்குப் பாரதப் போரில் கவுரவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் பா.ஜ.க.வுக்கும் விரைவில் ஏற்படப் போகிறது. மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது. மணிப்பூரில் நடந்த அவமானத்திற்குப் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிற பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தைப் புகட்டுவதற்கு ஜூலை 26-ந்தேதி நடைபெறுகிற மெழுகு வர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குகி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    • மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரை போலீசார் மணிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் (அதாவது மே 4-ந் தேதி) குகி இனத்தவர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

    அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    2 பெண்கள் மீதான பாலியல் கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் கடந்த புதன்கிழமை திடீரென வெளியானது. 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் 2 பெண்கள் ஆடைகள் இன்றி கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக இருந்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குகி சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அவரது வீட்டு வேலியில் சொருகி வைக்கப்பட்டுள்ள கொடூர சம்பவமும் அங்கு நடைபெற்று உள்ளது.

    இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த டேவிட்தீக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் கடந்த 2-ந்தேதி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் டேவிட்தீக்கை கொலை செய்து தலையை துண்டித்து அவரது வீட்டு வாசலில் உள்ள தடுப்பு வேலியில் சொருகி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

    இதற்கிடையில் குகி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் இதுவரை வன்முறையால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    அதோடு இம்பால் நகரில் கடந்த மே 4-ந்தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது லாங்கோ மற்றும் நகாரியன் மலைப்பகுதிகளில் உள்ள நர்சிங் மாணவிகள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இது தவிர மே 7-ந்தேதி அன்று 45 வயதான 2 குழந்தைகளின் தாய் ஒருவரையும் கும்பல் படுகொலை செய்தது உள்பட 4 சம்பவங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதற்கிடைய மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரையும் போலீசார் மணிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 11 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்துள்ளது. இந்த விசாரணையின்போது யார்?யார்? இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரியவரும். அதன் பேரில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் நுங்சி தோய் மேட்டேய் (வயது 19 ) இவரையும் சேர்த்து இதுவரை போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    மணிப்பூரில் சற்று கலவரம் ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் சூழ்நிலை உருவாகிய நிலையில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி மேலும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. மீண்டும் மணிப்பூரில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சம்பத்தில் கைதான முக்கிய குற்றவாளி குய்ராம் ஹெராதாஸ் உள்ளிட்ட 2 பேரின் வீடுகளை கிராம பெண்கள் சூறையாடினார்கள். அந்த வீடுகளை தீ வைத்தும் எரித்தனர். இதன் தொடர்ச்சியாக தலைநகர் இம்பாலில் உள்ள காரி பகுதியில் இன்று பெண்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுபற்றி அறிந்ததும் மணிப்பூர் ஆயுதபடை போலீசார், ராணுவ வீரர்கள், அதிவிரைவு படை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தீயில் எரிந்து கொண்டிருந்த டயர்களில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் மணிப்பூரின் முக்கிய நகரங்களில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    • ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தை காட்டிலும் குறைவாகத்தான் மணிப்பூரில் நடந்துள்ளது
    • ஒட்டுமொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இந்த வீடியோ சம்பவம் குறித்து முன்னதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த வீடியோ பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதில் ஒரு அரசியல் விஷயம் உள்ளடங்கியுள்ளது.

    வீடியோ தேதியை பொருட்படுத்தாமல் இந்த சம்பவம் கட்டாயம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஒட்டு மொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது.

    மணிப்பூரில் நடந்தது வருத்தமான சம்பவம்தான். ஆனால் இது தினந்தோறும் மணிப்பூரில் நடப்பதுபோல் ஒரு எண்ணம் கொடுக்கப்படுகிறது.

    மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு எதிராக மணிப்பூரை எடுத்துக் கொண்டால், மணிப்பூரில் மிகவும் குறைவான சம்பவங்கள்தான் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரனையும் அந்த கும்பல் கொலை செய்துள்ளது
    • வீடுகள் எரிக்கப்பட்டு கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் எம்.டி. டி.வி.க்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில் எனது கணவர் மற்றும் இளைய மகனையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டனர். தற்போது உதவியற்றவளாக நிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    பேச்சு வராத நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு கண்ணீருடன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகளை நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்துச் செல்வதற்கு முன், என்னுடைய கணவர் மற்றும் இளைய மகனை அந்த கும்பல் கொலை செய்தது. ஒட்டுமொத்தமாக என்னுடைய நம்பிக்கையாக இருந்த எனது இளைய மகனை இழந்து விட்டேன். அவன் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன், கஷ்டப்பட்டாவது அவனை மேற்கொண்டு நல்லபடியாக படிக்க வைக்க நினைத்தேன். தற்போது அவனுடைய தந்தையும் இல்லை. என்னுடைய மூத்த மகனுக்கு வேலை இல்லை. ஆகவே, என்னுடைய குடும்பம் பற்றி நினைக்கும்போது, எந்த நம்பிக்கையும் இல்லாததுபோன்று உணர்கிறேன். நான் நம்பிக்கையற்றவளாக, உதவியற்றவளாக உணர்கிறேன் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    என்னுடைய கிராமத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த எண்ணம் எனது மனதில் தோன்றவில்லை. திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்களுடைய வீடு எரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளி அழிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக திரும்பிச் செல்வேன். எனது கிராமம் சூறையாடப்பட்டு விட்டது. என்னுடைய மற்றும் என்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு திரும்பி செல்ல முடியாது.

    அரசை நினைக்கும்போது கோபமாக வருகிறது. எனது கணவர் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவளுக்கு எதிராக அவகரமான செயலை செய்துள்ளனர். நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். மணிப்பூர் அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் தாய், தந்தையர்களே, நாங்கள் அனைத்தையும் இழந்து, ஒரு சமூகமாக என்ன செய்ய போகிறோம் என்று சிந்திக்க முடியாமல் இருக்கிறோம்.

    கடவுளின் ஆசியால், நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் இரவும் பகலும் அதைப்பற்றி சிந்திக்கிறேன். சமீப காலமாக நான் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவரை அணுகினேன்.

    இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    ×