search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாவல் பழம்"

    • ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    • இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவை...

    * நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    * நாவல் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கும். குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கும் உதவிடும். நாவல் பழத்தின் விதைகள் மற்றும் பட்டைகள் பாரம் பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

    * நாவல் பழத்தில் அந்தோசயின்கள், பிளா வனாய்டுகள், பாலி பீனால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    * நாவல் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சி அபாயத்தை குறைக்கும்.

    * நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

    * நாவல் பழத்தில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடும், விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும்.

    * நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம். கலோரி குறைவு. அதனால் உடல் எடையை சீராக நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தேர்வாக அமையும். குறைவாக சாப்பிட்டாலே வயிற்றுக்கு திருப்தி அளிக்கும். அதனால் அதிக கலோரிகளை உட்கொள்ள தோன்றாது. ஒட்டுமொத்தமாகவே கலோரி உட்கொள்ளும் அளவை குறைக்கும்.

    * நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும். அதன் இலைகள் மற்றும் பட்டைகள் வாய் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

    குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை நாவல் பழத்தை உட்கொள்ளலாம். அதேவேளையில் அவர்களுக்கு ஒவ்வாமையோ, செரிமான பிரச்சினைகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானது.

    மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் உதவும்.

    இரைப்பை குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் நாவல் பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அதனை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    • குமரி மாவட்டத்தில் போட்டிபோட்டு வாங்கி செல்லும் மக்கள்
    • சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு தரும்

    நாகர்கோவில் :

    நாவல் பழம் என்றவுடன் தமிழ் ஆர்வலர்களுக்கு அவ்வை மூதாட்டியின் நினைவுதான் வரும்.

    அவ்வைக்கும், தமிழ் கடவுள் முருகனுக்கும் இடையே நாவல் பழத்தை மையமாக வைத்து ஒரு உரையாடல் இடம்பெற்றிருக்கும்.

    அதில் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என அவ்வையிடம், கேட்பார். அவரும் பழத்தில் சுட்ட பழம் இருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பியபடி, எனக்கு சுட்ட பழமே தா, எனக்கூறுவார்.

    உடனே முருகன், அருகில் இருந்த நாவல் மரத்தை அசைக்க அதில் இருந்து நாவல் பழங்கள் மண்ணில் விழும். அதனை அவ்வையிடம் முருகன் எடுத்து கொடுப்பார்.

    அந்த பழத்தில் மண் ஒட்டி இருக்கும். அந்த மண்ணை அப்புறப்படுத்த, ஒவ்ெவாரு பழமாக எடுத்து அவ்வை, அதனை ஊதி, ஊதி உண்பார். இதனை பார்த்த முருகன், அவ்வையே பழம் என்ன சூடாக இருக்கிறதா? என்று கேட்பார்.

    இப்படி நாவல் பழத்தை வைத்து முருகன் நடத்திய திருவிளையாடல் தமிழ் பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

    தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற நாவல் பழத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன என்பது பெரும்பாலோருக்கு தெரியாத விஷயம்.

    நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். தொடர்ந்து இதனை உண்டால் சர்க்கரை நோய் மட்டுப்படும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அதோடு மட்டுமின்றி சிறநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் சக்தியும் நாவல் பழத்திற்கு உள்ளது. நாவல் பழத்தின் விதைகளில் கால்சியம் மற்றும் புரத சத்து உள்ளது.

    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தின் சிறப்பை தெரிந்து கொண்ட கிராம மக்கள் அதனை வாங்கி உண்ண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    நாவல் மரங்கள் பெரும்பாலும் மலையோர கிராமங்களில் அதிகம் வளருகிறது. மதுரை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இதுபோல குமரி மாவட்டத்திலும் கன்னியாகுமரி, பொத்தையடி, குண்டல், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் இருந்து விழும் பழங்களை இப்பகுதி மக்கள் போட்டி போட்டு எடுத்து செல்கிறார்கள். சிலர் வீடுகளிலும் இந்த மரத்தை வளர்க்கிறார்கள்.

    இப்போது நாவல் பழத்தின் மகிமை கிராமங்களை தாண்டி நகர் பகுதிகளுக்கும் எட்டியுள்ளது.

    இதனால் நகர்புற மக்களும் நாவல் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கமான பழங்களை போல் இல்லாமல் இந்த பழம் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். நன்றாக பழுத்த பழத்தின் மீது சிலர் உப்பு தூவி உண்பார்கள்.

    அது இன்னும் டேஸ்டியாக இருக்கும். இந்த பழத்தை உண்டு முடித்தவுடன் நாக்கு, நாவல் பழ கலருக்கு மாறிவிடும். இதனால் குழந்ைதகளும் நாவல் பழத்தை ஆர்வமாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    நகர் பகுதிகளில் இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. கிராம புறங்களில் இந்த பழத்தை கூறுபோட்டு விற்கிறார்கள். ஒரு கூறு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

    நாகர்கோவில் பகுதியில் இப்போது தள்ளுவண்டிகளில் நாவல் பழம் விற்பனை ஜோராக நடக்கிறது. பெண்களும், மக்களும் இதனை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    ×