search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக மாநாடு"

    • மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் மதுரையில் முகாமிட்டு இறுதி கட்டப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்கள், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ராஜ் சத்யன் உள்ளிட்டோர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். மாநாட்டு மைதானத்தில் இன்று காலை அதிமுக மாநாடு தொடர்பான பிரசார வாகனத்தையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு விழா மேடை டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கின் முகப்பு தோற்றத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செங்கோலுடன் இருப்பது போன்றும், எடப்பாடி பழனிசாமி படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புகைப்பட கண்காட்சியில் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்களும் இடம்பெறுகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் முக்கிய திட்டங்கள் மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களும் நவீன தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்பட கண்காட்சி அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர். மாநாட்டு மேடை மற்றும் பந்தல் மேற்பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. இது தவிர பந்தலின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக குவிந்து நிகழ்ச்சிகளை காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
    • நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாட்டின் முகப்பில் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. முகப்பு பகுதியில் சுமார் 51 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கம்பத்தில் தான் வருகிற 20-ந்தேதி காலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து மாநாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து மாநாட்டில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த மாநாட்டில் இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து சுமார் பத்து லட்சம் தொண்டர்கள் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    மாநாட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இப்போதே வந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மேடை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மாநாட்டு அரங்கில் அமைய உள்ள புகைப்பட கண்காட்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளன. இந்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சுட சுட உணவு வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்காக பத்தாயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இருந்து மதுரைக்கு ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படுகிறது.
    • ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் ஜோதி வழியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் ஊர்களுக்குள் எடுத்து செல்லப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. வீரவரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொது மக்களையும் திரட்ட அ.தி.மு.க.வினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இருந்து மதுரைக்கு ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படுகிறது. தலைமை கழகத்தில் இன்று காலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து ஜோதியை தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக்கிடம் வழங்கினார்.

    சீருடை அணிந்த 50 தொண்டர்கள் ஜோதியை ஏந்தியபடி ஓடினார்கள். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், டி.ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ராயப்பேட்டையில் இருந்து புறப்பட்டு, மந்தைவெளி, அடையாறு, எஸ்.ஆர்.பி.டூல்ஸ், விஜயநகர் வழியாக சென்னை புறநகர் மாவட்டத்தை அடைந்ததும் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜோதிக்கு வரவேற்பளித்து அங்கிருந்து ஜோதியை ஏந்தியபடி காமாட்சி மருத்துவமனை வழியாக மேடவாக்கம் சென்றனர். அங்கிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தை அடைந்ததும் அந்த மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் ஜோதி வழியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் ஊர்களுக்குள் எடுத்து செல்லப்படுகிறது.

    20-ந்தேதி காலையில் மதுரையை சென்றடைகிறது. அங்கு வளையங்குளத்தில் மாநாட்டு திடலில் ஜோதியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்குகிறார்கள்.

    • அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்.
    • மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    மதுரை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம், பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு, கூட்டணி கட்சிகளின் அணுகுமுறை மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்தது முதல் தொடர்ந்து அ.தி.மு.க. குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

    கடந்த வாரம் பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரதமர் மோடி எங்களை பற்றி புரிந்துகொண்ட அளவுக்கு கூட அண்ணாமலை புரிந்து கொள்ளவில்லை என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடைபயணம் தொடங்கி மதுரை வந்த அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பதில் கூறி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தைபோர் ஏற்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது.

    இதையடுத்து அண்ணாமலை திடீரென தனது பாதயாத்திரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் விருதுநகரில் நடைபயணத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    ஆனால் அவரது நெருங்கிய ஆதரவாளரும் மதுரை பா.ஜ.க. தலைவருமான மகா சுசீந்திரன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. அதன் பிறகு நடந்த, உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டபோது தோல்வியடைந்தது என்று கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.முக.வை மிரட்டும் வகையில் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த கடிதம் பகிரங்கமாக வெளியான பிறகும் மகா சுசீந்திரனின் இந்த கடித விவகாரத்தில் அண்ணாமலை எதுவும் கூறாததால், பா.ஜ.க. மாவட்டத் தலைவருக்கு அவர் ஆதரவாகவே இருப்பதாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.

    இதனிடையே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருந்தபோது, பா.ஜ.க. 19 சதவீத வாக்குகளை பெற்றது என்றும், அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட அண்ணாமலை ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், கூறப்படுகிறது.

    இந்த அணியில் அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் பிற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட அதிக வாக்குகளை பெறமுடியும். அதே கூட்டணி 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை வெல்லலாம் என்றும் பா.ஜ.க. கணக்கு போட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. தன் பங்கிற்கு, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது. அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்.

    தற்போது அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டது பா.ஜனதாவுக்கு எதிராக விமர்சனத்தை தொடர்வதற்காகவே என்று பா.ஜனதா மாநில தலைமை நினைக்கிறது.

    இதற்கிடையே மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்து, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. தலைவர்களின் பேச்சுக்கள் பாராளுமன்ற தேர்தல் வியூகத்தைக் குறிக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொடருமா என்ற கேள்விக்கு அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் விடை கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    • மாவட்ட செயலாளர் சு.ரவி.எம்.எல்.ஏ. பேச்சு
    • வருகிற 20-ந்தேதி மாநாடு நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் அ.தி.மு.க வின் நகர, ஒன்றிய, பேரூர் செயலாள ர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநா ட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 2ஆயிரத்து500 பேர் என மொத்தம் 10ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுப் பணிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கேற்ப சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பந்தல் அமைக்கப்படுகிறது.

    வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விரிவான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் முக்கிய பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

    வருகிற 16-ந்தேதிக்குள் மாநாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு வந்தார்.

    இதற்காக இன்று அதிகாலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஐ.டி. பிரிவு ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .

    இதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது மாநாட்டில் மேடை மற்றும் பந்தல் அமைப்பு, பார்க்கிங் வசதி, சமையல் கூடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான வரைபடத்தை முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்தனர்.

    அப்போது அவரும் அதை பார்த்து மாநாட்டு பந்தல் மற்றும் சமையல் கூடங்கள் அமைய உள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்தார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவும், மாநாட்டுக்கு வருபவர்கள் நெரிசலில்லாமல் செல்லவும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநாட்டு திடலில் இருந்த எடப்பாடி பழனிசாமி கப்பலூர் பகுதிக்கு சென்று காலை உணவு அருந்திய பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    • இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார்.
    • சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூரில் மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் ரவி, ஆவடிகுமார், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி,எஸ்.சங்கர், ஹேமேந்திரன், பிரகாஷ், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், வக்கீல் பார்த்தசாரதி, சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
    • இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 35 ஏக்கரில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் நாள்தோறும் எடப்பாடியாரின் தகுந்த வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெயிலில் வாடக்கூடாது என்று எடப்பாடியார் ஆணையின் படி கூடுதலாக வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் சதுரடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட 40 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாகவும்,

    சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும்,

    தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங்ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அதிசயம் ஏழாக இருந்தாலும் எடப்பாடியார் உரையாற்றும் போது, இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும்.

    பாராளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்சத் தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து, அவருக்கு நடந்த கொடுமையை, அவமானத்தை எடுத்துரைத்தார்.

    புரட்சித்தலைவி அம்மா அப்போது நான் மீண்டும் சட்டசபைக்கு முதலமைச்சராக வருவேன் என்று சபதம் போட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். பெண்கள் மீது பாசம் உள்ளது போல தி.மு.க. நாடகம் போடுகிறது. அம்மாவின் தைரியத்தை டெல்லியில் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார்.

    எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
    • மாநாட்டின் தொடக்க விழா பாடல் பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார்.

    இந்த மாநாட்டை மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு இந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தயாராகி வருகிறார்கள். இதற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் கட்சியினர் இடையே மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாகன பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டது. ரதம் போல தயார் செய்யப்பட்ட இந்த வாகனம் நேற்றிரவு சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த வாகனத்தின் பிரசார தொடக்க விழா நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் இன்று காலை நடந்தது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மதுரை பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநாட்டின் தொடக்க விழா பாடல் இந்த பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த பிரசார வாகனம் இன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பிரசார வாகனத்துடன் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட அ.தி.மு.க.வினர் 100 பேர் வாகனங்களில் செல்கிறார்கள்.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வருகின்ற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக இந்த வாகனம் இயக்கப்படவுள்ளது.

    இந்த பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், மண்டல துணைத் தலைவர் கவுரிசங்கர், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் கனகராஜ், மதுரை மாவட்ட இணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    • இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது.

    பழனி:

    மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    பொதுவாக அழைப்பிதழ் கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வெற்றிலை-பாக்கு மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது தான், நீண்ட நெடுங்காலமாக நம்முடைய மரபாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில், ஆனால் நேற்று அ.தி.மு.க.வினர் அழைப்பிதழ் கொடுத்தபோது தாம்பூலத்தட்டில் வெற்றிலை பாக்குடன் தக்காளி பழங்களை வைத்திருந்தனர். இது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

    இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு அழைப்பிதழுடன், ஒரு கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. எட்டாக்கனியாக இருந்த தக்காளியுடன் கொடுத்த அழைப்பிதழை பொதுமக்கள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கினர்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் மனுவில் கூறியிருந்தார்.
    • மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.

    எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார்.
    • மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்க வசதியாக மாநாட்டு திடல் அருகே 5 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்தவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தாமல் மாநாட்டை சிறப்பாக நடத்தவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாநாட்டில் பங்கேற்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் வழங்கப்படுகிறது இதற்காக 250 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார். 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை தொண்டர்கள் புடை சூழ ஏற்றி வைக்கிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார்.

    மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற பாடகர்களான செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மதுரை முத்துவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் பங்குபெறும் கவியரங்கம் மற்றும் அ.தி.மு.க. சாதனை விளக்க பேச்சரங்கம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதில் முதலாவதாக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுகிறார்கள். மதுரையில் நடைபெறும் இந்த அரசியல் மாநாடு அ.தி.மு.க.வின் வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் அமையும் மாபெரும் வெற்றி மாநாடாகவும் அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×