search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவர்மா"

    • சோதனையின்போது குறைகள் கண்டறியப்பட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • டைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின்படியும், மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து கோவை மாநகரில் கோவைபுதூர், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், வடவள்ளி, அவினாசி ரோடு, பீளமேடு, சூலூர், சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் நேற்று 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் 54 கடைகளில் 102 கிலோ பழைய இறைச்சியும், 2.5 கிலோ சவர்மா என மொத்தம் 104.5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.57,400 மற்றும் லேபிள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட மில்க் ஷேக் 15 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3000. மேலும் ஆய்வின்போது 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டது. சோதனையின்போது குறைகள் கண்டறியப்பட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

    சவர்மா கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் முறையான உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்கும் வணிகரிடமிருந்தே இறைச்சியை பில்லுடன் வாங்க வேண்டும். வாங்கிய பில்லை தினந்தோறும் முறையாக பராமரித்து வைத்திருத்தல் வேண்டும்.

    சவர்மா கம்பியின் உயரம் சூடுபடுத்தும் எந்திரத்தின் அளவுக்கு இருக்க வேண்டும். உயரமாக இருத்தல் கூடாது. சவர்மா தயார் செய்யும் இடம் பெரும்பாலும் கடையின் முகப்பில் அல்லது வெளியில் உள்ளது. தூசி மற்றும் அசுத்தம்படாமல் மறைக்கப்பட வேண்டும். தினந்தோறும் உபயோகத்திற்கேற்ப தினம் தினம் கொள்முதல் செய்ய வேண்டும். இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் 2 நாட்களுக்கு மேல் வைத்து உபயோகப்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

    மையோனைஸ் தயாரிக்கும் முன்னர் முட்டையை நன்றாக கழுவி நன்றாக உலர்த்தி, அதன் பின்னர் கையுறையுடன் தயாரிக்க வேண்டும். அதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை பூண்டு, எண்ணெய் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருத்தல் வேண்டும். 3 மணி நேரத்திற்கு மேல் அதனை உபயோகிக்காமல் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ள வேண்டும்.

    சவர்மா தயாரிக்கும்போது ஒவ்வொரு பகுதியும் வெந்திருத்தல் (70 டிகிரி செல்சியசுக்கு மேல்) அவசியம். தயார் செய்து கொடுக்கும் நபர் தன் சுத்தம், முகக்கவசம், தலைக்கவசம், கையுறை ஆகியவை அணிந்து இருக்க வேண்டும். அன்றைய இரவே குளீருட்டியில் சேமிக்காமல் தேவைக்கேற்ப தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    சவர்மாவை மடித்து கொடுக்க உதவும் குப்பூஸ் எனப்படும் ரொட்டி வகையை அந்தந்த பொருளினை முழுமையான லேபிளுடன் அச்சிடப்பட்டு வாங்க வேண்டும். அதாவது தயாரிப்பு தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி போன்றவையும் முழு முகவரியுடன் கூடிய லேபிள் இருத்தல் அவசியம்.

    அதனை வாங்கியவரின் முழு முகவரி, அவர் உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் பெற்றவாரா என அவரின் உரிமத்தை பார்த்து வாங்க வேண்டும். லேபிளில் உணவுப் பாதுகாப்பு உரிமம் இருத்தல் அவசியம்.

    குளிரூட்டியை உரிய வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். முழுமையாகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். வெப்பநிலையை எளிதில் அறியும் முறையில் தெளிவான முறையில் வைத்திருத்தல் அவசியம்.

    குளிரூட்டியை முறையாக பராமரிக்க வேண்டும் என சவர்மா கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றாத உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை சார்ந்த சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சவர்மா தயாரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது.
    • சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன.

    அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் 'சவர்மா' என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

    சிக்கன், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய்தூள் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கும் 'சவர்மா' வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாமல் இருந்தால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை.

    அதே நேரத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில நேரத்தில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'சவர்மா' சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.

    தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

    அவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர்.

    சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன. சில பாக்டீரியாக்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்கிறது. விஷமாகும் உணவு குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. பாதிப்பு தீவிரமடைந்த உடன் அது மற்ற உறுப்புகளை பாதிக்கிறது.

    'சவர்மா'வை பொறுத்தவரை பழைய உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியோ மற்றும் ஏற்கனவே தயாரித்த உணவை குளிர்ச்சி அடைய செய்து விட்டு மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தாமல் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை என்று உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×