search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேடை சரிவு"

    • மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன் ஒருபகுதியாக அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    அதன்படி நியூவோ லியோன் மாகாணம் சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    அப்போது அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தநிலையில் அங்கு திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது.

    இதன் காரணமாக அந்த பிரசார மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பலத்த காற்றால் மேடை சரிந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


    • மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர்.
    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற நல உதவிகள் வழங்க 2 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த விழாவில் எம்.பி. பார்த்திபன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து, டி.ஆர்.ஓ. மேனகா மற்றும் அதிகாரிகள் மேடையில் இருந்தனர்.

    மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர். இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. நிலைகுலைந்த கலெக்டர் கார்மேகம் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்.

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார். மேடை 2 அடி உயரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்த மேடையிலையே விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனை சஸ்பெண்டு செய்து சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், கலெக்டர் உத்தரவு படி கண்ணனை சஸ்பெண்டு செய்தது ஏற்புடையது அல்ல, வருகிற 30-ந் தேதிக்குள் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் கலெக்டரை சந்தித்து முறையிடுவோம், அதன்பிறகும் இசைவு தெரிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    ×