search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண பணிகள்"

    • கேரளா மாநிலத்தில் நலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

    கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

    நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள கோவை, மார்ட்டின் நிறுவனம், இந்த சவாலான நேரத்தில் அம்மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம், அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.

    ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

    • சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதலமைச்சர் அறிவித்தபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 17 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி பை, 1 லட்சத்து 88 ஆயிரத்து 650 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

    வெள்ள பாதிப்பால் மொத்தம் 7,762 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும், 2,794 குடிசை வீடுகள் முழுமையாகவும், 472 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 84 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்த வகைக்கு 3,981 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 153132.38.5 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 32592.02.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. 688.81.7 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,282 உற்பத்தி நிறுவனங்களும், 30,297 சேவை நிறுவனங்களும், 2,583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் என மொத்தம் 43,162 நிறுவனங்கள் உதயம் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வட்டங்களில், 5 வட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உதயம் பதிவு மேற்கொண்டு, காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் வியாபாரம் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே உத்யம் பதிவு மற்றும் காப்பீடு மேற்கொள்கின்றனர். நிவாரணத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் வரையான சிறப்பு கடன் திட்டம் குறித்து வணிகர் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 2,000 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள் 347-க்கு ரூ.161.415 லட்சம், முழு சேதமடைந்த 4 நாட்டுப்படகுகளுக்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த 402 நாட்டுப்படகுகளுக்கு ரூ.119.07 லட்சம், சேதமடைந்த மீன்பிடி வலைகள் 3,515-க்கு ரூ.527.25 லட்சம், சேதமடைந்த மீன்பிடி எந்திரங்கள் 3,902-க்கு ரூ.292.65 லட்சம், சேதமடைந்த மீன் பண்ணைகள் உள்ள 24.75 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.2.475 லட்சம், சேதமடைந்த உள்நாட்டு மீனவர்களின் வலைகள் 850-க்கு ரூ.85 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.1191.86 லட்சம் சேதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது. இதில் 3,285 பசுக்களும், 1,343 கன்றுகளும், 26,469 ஆடுகளும், 85,632 கோழிகளும், 524 பன்றிகளும், 49 கழுதைகளும், 60 எருமைகளும், 109 காளைகளும் அடங்கும். புதிதாக கால்நடைகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு தலா ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படுகிறது. இதுவரை 534 இனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்களுக்கு 2 நாட்களில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக உப்பளத் தொழில் செய்யும் 2023-ம் ஆண்டு பதிவு பெற்ற மற்றும் புதுப்பித்தல் செய்த உப்பளத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணம் வழங்கும் பொருட்டு 5300 பதிவு பெற்ற உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 வீதம் ரூ.2,65,00,000 தொகை கடந்த மாதம் 22-ந்தேதி ஆர்இசிஎஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

    மேலும், அதி கனமழையினால் உயிரிழந்த 44 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமானது பெரும்பான்மை பகுதிகளில் சுமார் 110 மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. மீதமுள்ள 36 குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4,127 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது 123 கிராம ஊராட்சிகளில் உள்ள 727 குக்கிராமங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதீத கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 112 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் 109 பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளுக்குட்பட்ட சாலைகளில் 39 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 33 சாலைகளின் பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை மூலம் சேதமடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்துத் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 302 வழித்தடங்களில் 270 வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையங்களில் 6 நிலையங்கள் பகுதியாகவும், 7 நிலையங்கள் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் சேதமடைந்த 42 சாலைகளும், 112 உடைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×