search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி நினைவு தினம்"

    • சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
    • மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

    மதுரை:

    தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மத நல்லிணக்க நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுவதுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மத நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்ற பெயரில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் "மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30" என்று ரத்தத்துளிகள் சிதறும் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம், மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும், தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பாக சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

    அதில் மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது.
    • மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திட, காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    30.1.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை எனும் அமைப்பின் சார்பில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய இடங்களில் "காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா?" எனும் தலைப்பில் ஒன்று கூடல் - கலை நிகழ்ச்சிகளை நடத்திட உள்ளதை அறிந்து பாராட்டுகிறேன்.

    முன்னாள் நீதியரசர் திரு து.அரிபரந்தாமன், முன்னாள் கலெக்டர் கோ.பாலச்சந்திரன் ஆகியோர் வள்ளுவர் கோட்டத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்த உள்ளதை அறிந்து மனநிறைவு அடைகிறேன்.

    மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச் சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • ராஜ்காட்டில் சர்வ தர்ம பிரார்த்தனை நடைபெற்றது.

    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதனையடுத்து ராஜ்காட்டில் சர்வ தர்ம பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்.

    சென்னை:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில்,

    மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்று உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

    சென்னை:

    காந்தியடிகள் நினைவு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க திமுக முடிவு செய்திருந்தது. அதன்படி, மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    தமிழகம் முழுவதுமே திமுக சார்பில் இன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தியும், மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

    ×