search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்.
    • வால்பாறை, பொள்ளாச்சியில் மழைக்கு 3 பேர் பலி.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (வயது 57) மற்றும் தனப்பிரியா (வயது 15) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான ஓட்டுவீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று இரவு பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன்.
    • முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.

    சென்னை :

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.

    இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.

    • குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
    • விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது.

    குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வெள்ளத்தில் மூழ்கி இறந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    • நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.
    • ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.250ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

    நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.

    ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காண முடியும்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது,

    இந்தியாவின் பின் தங்கிய சமுதாயத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூகநீதியை நிலைநாட்டவும் நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.

    • தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.
    • எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்ற புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவுசார் மாநிலம் தான் தமிழ்நாடு. சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியில் தொடர்பு உடையவை. ஆனால் தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.

    அதிமுக தொடர்பான சம்பவம் என்று எடுத்துக் கொண்டால் அது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவினுடய கேம்ப் அலுவலகமாக இருந்தது. அங்கு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது ஆட்சியாளரினுடைய திறமையின்மையை காண்பிப்பதாக இருந்திருக்கிறது அல்லது ஏதோ சதி திட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.

    அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். 13 பேர் உயிரிழந்தது டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் கூறியிருந்தார். அன்று அதை ஒப்பு கொள்ளவில்லை.

    ஆனால் எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற சம்பவங்களில் ஒன்று புதுச்சேரியை சேர்ந்தது. அதையும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிறார்.

    மீதம் உள்ள 4 வன்முறை சம்பவங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு தொடர்புடையவை அல்ல. இந்த சம்பவங்கள் அனைத்து அவர்களுக்குள் முன்விரோதம், பகைமை அடிப்படையில் ஏற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறதே தவிர இதில் எதுவும் சட்டவிரோதம் சம்பவம்மும் இல்லை.

    ஒரு காலத்தில் 4 கோடி மக்களுக்கு தலைவர் என்று தலைவர் கலைஞரை சொல்லுவோம். இன்றைக்கு 8 கோடி மக்களுக்கு தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் தொகையும் உயர்ந்திருக்கிறது இதுபோன்ற சம்பவங்களும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும். ஆனால் அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.

    அதே வேளையில் யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ரவுடிகளின் பட்டியலை வைத்து அவர்களுக்குள் ஏதாவது விரோதம் இருக்கிறதா என்பதை குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு அப்படி ஏதாவது பிரச்சனை இருப்பின் அதை தீர்த்து வைக்க முன்நடவடிக்கை எடுப்பவதாக முதலமைச்சர் இருக்கிறார்.

    ஆகவே சட்டம் ஒழுங்கை நாங்கள் சிறப்பாக பேணி பாதுகாப்பதால் தான் இந்தியாவிலேயே முதன்மையாக மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது, மறுக்கவும் முடியாது

    அதனால்தான் நிறைய தொழிலதிபர்கள் நம்மை நாடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் இதை வேறு கோணத்திலே மாற்றிவிட்டு இந்த சமூகத்தை பின்நோக்கி தள்ளிவிட முடியுமா என கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒரு காலத்திலும் பலிக்காது. இவை அனைத்தையும் முதலமைச்சர் வென்று காட்டுவார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்கா என்பதை நிருப்பித்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிவகங்கை, தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 71 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 391 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர், தேனி மாவட்டம் தேனி மற்றும் கம்பம், கொரடாச்சேரி, தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம், மேலூர், ராமநாதபுரம், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, பெரணமல்லூர், போளூர், தக்கலை, வையம்பட்டி, காட்பாடி ஆகிய இடங்களில் 71 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் இதில் அடங்கும்.


    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், இ.பெரியசாமி, எ.வ. வேலு, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார். அவருக்கு ரூ. 1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் 10 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட 2 பால் பண்ணைகள், 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆய்வகக் கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, கடலூர் மாவட்டம், ம. பொடையூரில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதில் காக்களூர் பால் பண்ணையில் 3 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை, மாதவரத்தில் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நோய்க் கிருமிகளை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் அடங்கும்.

    • 143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.1.2024 வரை மூன்றாண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணிகள் நிறைவுற்றுத் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    8,436 கோவில்களில் 18,841 திருப்பணிகள் ரூ.3,776 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    2021-2022-ம் நிதியாண்டில் 1,250 கோவில்களுக்குத் திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி வழங்கப்பட்டது. கிராமப்புற மற்றும் ஆதி திராவிடர் கோவில் திருப்பணிக்கான நிதி உதவி ரூ.2 லட்சம் வீதம் மேலும், 1250 கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோவில்களில் புதிய திருக்குளங்கள் ரூ.2.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

    சமயபுரம், திருவெண்ணெய் நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோவில்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பிஷேகம் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    15 கோவில்களில் ராஜகோபுரங்கள் ரூ.25.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. பட்டுக்கோட்டை, வரகுணநாத சுவாமி கோவில், 3 நிலை ராஜகோபுரம் இறையன்பரின் நிதியுதவி ரூ.50 லட்சத்தில் கட்டப்படுகிறது.

    அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 82,000 பேர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாண்டு மேலும் 7 கோவில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டிடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் 1,59,507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன. நில அளவைப் பணியில் 172 உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4,189.88 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.

    ரூ.257.28 கோடியில் மொத்தம் 73 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 48 குடியிருப்புகள் ரூ. 83.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. 6 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கி.கி தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடி மதிப்பீட்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வரப்பெறுகிறது. மேலும், 11 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டுத் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் ஒன்றுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 2,000 கோவில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17,000 கோவில்கள் பயனடைந்து வருகின்றன.

    ஒரு கோவிலுக்கு ஓர் அர்ச்சகர் வீதம் பதிவு செய்து, மாத ஊக்கத் தொகை ரூ.1.000 வீதம் வழங்கப்பட்டு ஜனவரி 2024 வரை 15,753 அர்ச்சகர்கள் பயனடைந்துள்ளனர். அர்ச்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக தலா ரூ.10,000 வீதம் நடப்பாண்டில் 400 மாணவர்களுக்குக் கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில் கம்பிவட ஊர்தி இயக்கப்பட்டு வருகிறது.

    80 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைத்திட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்த 1,278 பணியாளர்கள் பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கும் திட்டத்தின்கீழ், ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 1,100 இணைகளுக்கும், 128 மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

    500 பக்தர்கள் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி, விசுவநாத சுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.125 லட்சம் செலவிலும், 1,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.1.50 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். 2022-2023-ம் ஆண்டில் முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்தவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் பயண செலவாக வழங்கப்படுகிறது.

    கோவில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தற்போது 212 மாணவர்கள் முழுநேரமாகவும், 80 மாணவர்கள் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர்.

    11 பெண் ஓதுவார்கள் உட்பட 42 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தகைய பல்வேறு பணிகளில் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் திராவிட மாடல் அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

    மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வரும். இந்த கால கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் மேட்டூர் அணையை நம்பியே உள்ளது.

    அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலவியது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு, கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 65ஆயிரத்து 867 கனஅடி தண்ணீர் இன்று வந்து கொண்டிருக்கிறது.

    இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் இன்று முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காணொளி காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். கடைமடை பகுதி வரை நீர் ஆதாரங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை பொதுப்பணிதுறை, நீர்வளத்துறை சார்பாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்து இருக்கிறது. நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பாசனத்திற்கு எப்போது தண்ணீர் திறக்க லாம் என கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி னார்.

    மேட்டூர் அணைக்கு 1.14 லட்சம் கன அடிக்கு அதிகமாக வருவதால் அணையை இன்று மாலை 3 மணிக்கு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி 13 மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    13 மாவட்டங்களை சேர்ந்த 5339 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    மேட்டூர் அணைக்கு நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.

    மேட்டூர் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

    தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மேட்டூர் அணை நீர் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    • உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான்.
    • திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

    உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மு.க ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும்போது எனது குடும்பத்தில் யாரும் அதாவது மகனோ, மருமகனோ வேறுயாரும் திமுகவிற்கு எந்த பதவியிலும் வரமாட்டார்கள் என்று கூறினார். நான் மட்டும் தான் அரசியலில் இருப்பேன் என்றும் கூறினார்.

    இப்போது உதயநிதிக்கு முதலில் இளைஞர் அணி, பின்னர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இனி துணை முதலமைச்சர் என்று பதவிகள் வழங்கப்படுகிறது.

    அ.தி.மு.க. மட்டும் தான் ஜனநாயக இயக்கம். அடுத்து தொண்டர்களும் மேலே தலைவர்களாகளாம், பொது செயளாளராகளாம், முதலமைச்சராகளாம்.

    திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

    பொதுவாக திமுக கட்சியில்லை அது ஒரு கம்பெனி. தி.மு.க. என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி.

    முதலில் கருணாநிதி. அதன் பிறகு மு.க.ஸ்டாலின். பின்னர் உதயநிதி. இன்று மூத்த தலைவர் துரைமுருகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் தோலில் துக்கிட்டுப் போவோம் என்று சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×