search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    தருமபுரி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 11-ந்தேதி தருமபுரி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் பார்வதி ஆகியோர் அந்த பள்ளியில் போதுமான இடம் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கவுதம், பிளாஸ்டிக் செல்வம், நவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக நின்று, தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று காலை 6.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்
    • மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    யூஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.

    இந்த முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோர்ப்போம்.

    இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    கோவை:

    கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.

    மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.

    ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

    கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.

    இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..

    தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.

    தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
    • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

    ஊட்டி:

    மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
    • மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் துரையூர் நெசக்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து உளவுத்துறைக்கு அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை.
    • கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை 4.30 மணியளவில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

    மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    ஆலோசனையின்போது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    அப்போது, காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

    • சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
    • எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன் என்றார்.

    தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று காலை கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார்.

    அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.

    இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் காணொளியுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

    சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.

    முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு.. எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

    அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
    • சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    * கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    * அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.

    * சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    * கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அறிந்து அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

    * கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காக ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தமிழகம் முழுவதும் விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    * கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    * கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

    * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்.

    * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

    * பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது.
    • பிரதான எதிர்க்கட்சி தனது கருத்துகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    சென்னை :

    தமிழக சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்திய பின்னும் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் உட்பட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில், அவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கள்ளச்சாராயத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் நாடகத்தை அரங்கேற்றி சென்றுள்ளனர். மானிய கோரிக்கை மீதான விவாதம் காலை, மாலை என நடைபெற உள்ள நிலையில் வெளியேற்றப்பட்டவர்கள் வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பின்னரே வெளியேற்றப்பட்டவர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் பிரதான எதிர்க்கட்சி தனது கருத்துகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் பெருந்தன்மையோடு, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட தண்டனையை ரத்து செய்து மீண்டும் அவைக்கு வரவழைத்து கள்ளக்குறிச்சி தொடர்பாக கொண்டு வரப்பட உள்ள சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசலாம் என கூறினார்.

    • கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையத்துக்கு பின்பகுதியில் அமைந்துள்ள கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அதன்படி, சம்பவ இடத்தில் கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.

    • மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இக்கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    கள்ளக்குறிச்சியில் 'மெத்தனால்' என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140- க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

    மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது.

    மீளமுடியாத போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் தாம் அந்த வகையான கள்ளமதுவுக்கு வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர்.

    இத்தகைய கள்ளவணிகம் கள்ளக்குறிச்சிப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அதன்விளைவாக தற்போது 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை நாடறியும். அந்த நேரத்தில் 'மெத்தனாலின் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம்; இந்த கள்ளச்சந்தையில் ஈடுபட்டுவரும் மஃபியா கும்பலின் சட்டவிரோத கட்டுப்படுத்துவோம்' என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கள்ளச் சந்தையில் மெத்தனால் கட்டற்றமுறையில் புழக்கத்திலிருப்பது உறுதியாகியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    அவ்வாறு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தால்

    இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாமே என்னும் கவலை மேலோங்குகிறது.

    எனவே, இனியாவது மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    உயிரிழந்த ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் தலா 10 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சற்று ஆறுதலை அளிக்கிறது. இந்நடவடிக்கைகளை வரவேற்கிற அதேவேளையில், மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

    கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன.

    அரசின் மதுபானம் தாரளமாகப் புழக்கத்திலிருந்தும் கள்ளச்சாரய வணிகம் வெளிப்படையாக நடக்கிறது. சில பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக ஊரறிய ஏலம் விடப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்து 'பாதுகாப்பான' அரசு சாராயத்தின் மூலம் கள்ளச்சாராய வணிகத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது.

    அரசின் ' டாஸ்மாக் ' மதுக்கடைகளில் தொடர்ந்து மது அருந்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகி மீளமுடியாத அடிமைகளாக மாறியவர்கள்தாம், அரசின் மதுவிலுள்ள போதை பற்றாத நிலையில் இத்தகைய நச்சு கலந்த கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். எனவே, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தாம் மதுபோதை அடிமைகளை உருவாக்குகிறது என்பதுவும் அதன் காரணமாகவே கூடுதல் போதைக்கான கள்ளச்சாராயத்துக்கு வழி வகுக்கிறது என்பதுவும் நாம் உணரவேண்டிய உண்மைகளாக உள்ளன.

    மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு மாநில அரசுக்கான வருவாய் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், குடி நோயாளிகளால் மாநிலத்துக்கு ஏற்படும் மனிதவள இழப்பு, அவர்களால் மாநில அரசுக்கு ஏற்படும் சுகாதார செலவினச் சுமை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயை விட இந்த இழப்பு அதிகம் என்பதை உணரலாம். எனவே, மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவது ஏற்புடையதாக இல்லை.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றிய அரசுக்கும் உள்ளது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ( Directive Principles) அதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படியே, 1954 இல் இந்திய அரசின் திட்டக்குழுவின் சார்பில் "மதுவிலக்கு விசாரணைக் குழு" என ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1955 செப்டம்பர் 10 ஆம் நாளன்று அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில் சில பரிந்துரைகளை முன்வைத்தது.

    " *மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தெளிவான ஒரு கால வரையறையை அறிவித்து அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்;

    *ஒன்றிய அரசின் மதுவிலக்குத் திட்டங்களுக்கு முழுமையாக மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிய அரசானது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலமாக மதுவிலக்கை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்;

    * 1958 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் இதற்கென சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். "

    இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் உள்ளன. அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்திருந்தால் மனிதவள இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டிருக்கும். எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும்.

    எனவே, இப்போதாவது அக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

    அத்துடன், நச்சு சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மதுவிலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    ×