search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரஜ்வல் ரேவண்ணா"

    • ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
    • நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) தற்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.

    ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதன் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை உள்ளிளட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. நோட்டீஸ் அனுப்பியும் ஜெர்மனியில் இருந்து அவர் திரும்பி வரவில்லை.

    இதனால் அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்ைட ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெர்மனி முனிச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, குடியேற்ற அதிகாரிகள் உதவியுடன் பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    இதையடுத்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பிறகு பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

    மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பிரஜ்வல் ரேவண்ணா பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் 4-வது மாடியில் உள்ள 42-வது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு (ஏசிஎம்எம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதி கே.என்சிவகுமாரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.க்கு வருகிற 6-ந்தேதி வரை 6 நாட்கள் எஸ்ஐடி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

    இதையடுத்து அவரை சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யிடம் பாலியல் வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசு அனுப்பியும் நீங்கள் ஏன் கண்டுகொள்ள வில்லை?, விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என யாராவது சொன்னார்கள்? பெண்களை கடத்தி பாலியல் பலத்காரம் செய்தீர்களா?, ஆபாச வீடியோ எடுத்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார்? பாலியல் பலாத்காரம் பென்டிரைவில் பதிவேற்றம் செய்தது யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

    ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தெரிவக்க பிரஜ்வல் ரேவண்ணா நேரத்தை கடத்தி வருகிறார். அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களை மதிக்காமல் மிரட்டி பலாத்காரம் செய்த பிரஜ்வலுக்கு பெண் சக்தியையும், அதிகாரத்தையும், உணர்த்தும் விதத்தில் பெண் அதிகாரிகளை வைத்தே அவரை கைது செய்துள்ளோம்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சொல்லும் பதிலை பொறுத்து ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாரணை முடிந்ததும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. கடந்த 4-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகா மற்றும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விசாரணைக்கு ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்திருந்தார்.
    • இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்தடைந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றார்.
    • ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்தது. இதற்கிடையே ஜெர்மனியில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அவரை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.

    இதற்கிடையே கடந்த 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அங்குள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான மகளிர் போலீஸ் குழுவினர் அழைத்துச் சென்றனர். 35 நாட்களாக வெளிநாட்டில் இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு போலீசார் காரில் சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன் பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரஜ்வல் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

    இவ்விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தாவான முன்னாள் பிரதமர் தேவகவுடா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

    தனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம். நாடு திரும்பி விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    • ஆபாச வீடியோ வெளியானதால் ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.
    • பிர்ஜவலுக்கு எதிராக மத்திய அரசு ஷோகாஸ் நோட்டிஸ் அனுப்பியது.

    கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தொடர்பான வீடியோ ஒன்று கடந்த மாதம் வெளியானது. அந்த ஆபாச வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இதனால் கர்நாடகா அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டதாக தகவல் பரவியது.

    அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா இரண்டு முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இதனால் கடந்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறப்பு விசாரணைக் குழு முன் வருகிற 31-ந்தேதி ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.வி. சேனல் மூலமாக பிரஜ்வல் தெரிவித்த தகவலில் "நான் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பேன். நான் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். பொய் வழக்குகள் என்பது நீதிமன்றம் மூலம் வெளியே வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது." என்றார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்கள் தனது பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் குறித்து பேசினர்.  இதனால் தான் மன அழுத்தம் அடைந்தேன். மற்றும் தனிமைப்படுத்தப்பட்டேன். இது அரசியல் சதி எனக் குற்றம்சாட்டினார்.

    ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. ஹசன் தொகுதி தேர்தல் முடிவடைந்து மே 27-ந்தேதி தனது சிறப்பு தூதர பாஸ்போர்ட் மூலமாக ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.

    • வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்.
    • அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவகவுடா, எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்.

    பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது:-

    நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கர்நாடக அரசின் வேண்டுகோளை செயல்படுத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர்.
    • எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர். மேலும் அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பித்தது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் உள்ளார் என்று தெரியாமல் விசாரணை அதிகாரிகள் உள்ளனர்.

    இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, பிரஜ்வலுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:-

    எனது சகோதரர் ரேவண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் தொழில் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொடர்பான புகாரில் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எனவே அவர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி வந்து சிறப்பு புலனாய்வு குழு முன்பு நேரில் ஆஜர்ஆகி குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு விசாரணை குழுவினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ஆபாச வீடியோக்களை வெளியிட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.
    • ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் பேரம் பேசினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படங்களை வெளியிட்டதாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மற்றும் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ்கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நேற்று போலீசார் கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்தபடி வக்கீல் தேவராஜ்கவுடா பரபரப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆபாச வீடியோ வெளியானதில் மூளையாக செயல்பட்டதே கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தான். ஆபாச வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, செலுவராயசாமி, பிரியங்க் கார்கே உள்பட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.

    ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியிட ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமேகவுடா பேரம் பேசினார். மேலும் பவுரிங் கிளப்பில் ரூ.5 கோடி முன் பணமாக கொடுக்க வந்தனர். இதில் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

    ஆபாச வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் என்னை அழைத்து பேசினார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் குமாரசாமியை குற்றம் சாட்டும் திட்டத்துடன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் நான் குமாரசாமி மீது இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

    பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கிடம் பென் டிரைவ் பெறுவதற்கு டி.கே.சிவக்குமார்தான் காரணம். மேலும் பிரதமர் மோடிக்கு கெட்ட பெயர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக டி.கே.சிவக்குமார் சார்பில் என்னை அணுகி ரூ.100 கோடி பேரம் பேசினார்.

    டி.கே.சிவக்குமார் என்னிடம் பேசிய ஆடியோ உரையாடல் உள்ளது. நான் வெளியே வந்தால் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். நான் வெளியே வந்தால் காங்கிரஸ் ஆட்சியே இருக்காது. இதனால் தான் என் மீது பொய்யான வழக்கை போட்டு சிறையில் வைத்துள்ளனர்.

    ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை கலங்கப்படுத்த வேண்டும், குமாரசாமிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் டி.கே.சிவக்குமாரின் நோக்கம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். காங்கிரஸ் ஆட்சி கண்டிப்பாக கூடிய விரைவில் கவிழும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பா.ஜ.க. மாநில பொதுசெயலாளர் பிரீதம் கவுடா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 7 பென் டிரைவ்கள், 6 ஹார்ட்டு டிஸ்க்குகள், 4 லேப் டாப்கள், 3 டெஸ்க் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ் மற்றும் லேப் டாப்புகள் பிரஜ்வல் வழக்குடன் தொடர்புடையதா? இல்லையா? என்ற அறிக்கை வந்தபின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புளு கார்னர் நோட்டீசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை, முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் என்பவர் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடாவிடம் கொடுத்ததாகவும், அவர் இந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதை தேவரா ஜகவுடா திட்டவட்டமாக நிராகரித்தார். இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கார் டிரைவர் கார்த்திக், பா.ஜ.க. வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பினர். அதில் 24 மணி நேரத்தில் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவித்து இருந்தனர். இதற்கிடையே தேவராஜ கவுடா மீது ஒரு பெண் ஹோலேநரசீப் நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தேவராஜ கவுடா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், வீடியோ கால் செய்து மனரீதியாக சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஹாசன் இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தேவராஜ கவுடா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதே போல் தன் மீது புகார் செய்த பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் பிரஜ்வல்வால் ரேவண்ணா வீடியோ வெளியானது தொடர்பாக தேவராஜ கவுடாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூர் போலீசார் குலிஹால் கேட் என்ற பகுதியில் நேற்றிரவு வேதராஜகவுடாவை கைது செய்தனர். போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட தேவராஜ கவுடா கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஹோலேநரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், பென் டிரைவ் வெளியானது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 2 பெண் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தி போலீஸ் பெயரில் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

    இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பொய் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். செல்போனில் போலீசார் எனக்கூறி புகார் அளிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதுபற்றி 3 பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர், என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களை பொய் புகார் செய்ய கட்டாயப்ப டுத்துகிறார்கள். கடத்தி செல்லப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள். ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு புகார் செய்ய மறுக்கும் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் போடுவதாக மிரட்டப்படுகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு பயந்து பெண்கள் போலீசில் பொய் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×