search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • சந்திர கிரகணம் 8-ந்தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.
    • அன்னபிரசாத கூடம் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.

    சந்திர கிரகணம் வருகிற 8-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது.

    இதனால் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.

    இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • 5-ந்தேதி கைசிக துவாதசி துளசி-தாமோதர பூஜை நடக்கிறது.
    • 11-ந்தேதி கோபூஜை நடக்கிறது.

    தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் கார்த்திகை மாத மகாவிஷ்ணு பூஜைகளை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கடைப்பிடிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த மகா விஷ்ணு பூஜைகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடக்கிறது.

    அதில் நவம்பர் 4-ந்தேதி மாலை 3 மணியில் இருந்து மாலை 4:30 மணி வரை விஷ்ணு சாளக்ராம பூஜை, 5-ந்தேதி மாலை 3 மணியில் இருந்து மாலை 4:30 மணி வரை கைசிக துவாதசி துளசி-தாமோதர பூஜை, 11-ந்தேதி காலை 8:30 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோபூஜை ஆகியவை அடங்கும்.

    21-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை தன்வந்திரி ஜெயந்தி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.
    • சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடந்தது. சுவாமி, தாயார் உற்சவர்கள் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    14 வகையான நறுமண மலர்கள் மற்றும் 6 வகையான இலைகளுடன், மலையப்ப சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு புஷ்ப அர்ச்சனையும், வண்ண மலர்கள் மற்றும் இலைகளுக்கு நடுவே சுவாமி, தாயார்களுக்கு புஷ்ப யாகமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கலந்து கொண்டார்.

    வேத பண்டிதர்கள் ருக்வேதம், சுக்லயஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம், பாராயணம் செய்தனர். முன்னதாக பூக்களை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    15-ம் நூற்றாண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு நிறுத்தப்பட்டு 1980-ம் ஆண்டு முதல் மீண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.

    • ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது.
    • ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேண்டுதலாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் வருகிறது.

    அதன்படி கடந்த மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.100 கோடியைத் தாண்டியது. ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது. ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.122.8 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

    • 4-ந்தேதி சதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    • 5-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி புஷ்ப யாகம், வேதாந்த தேசிகர் குல சாத்துமுறை, 4-ந்தேதி சதுர் மாஸ்ய விரதம், 5-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், 7-ந்தேதி கார்த்திகை பூர்ணிமா, 8-ந்தேதி சந்திர கிரகணம், 20-ந்தேதி மாதத்ரய ஏகாதசி, 21-ந்தேதி தன்வந்திரி ஜெயந்தி, 28-ந்தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தையொட்டி பத்மாவதி தாயாருக்கு திருமலையில் இருந்து பட்டு வஸ்திரம், ஆபரணங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • திங்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரம் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நள்ளிரவு முதலே கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

    டைம் ஸ்லாட் முறை அமுல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதி அடையாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அதிக அளவில் டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற பக்தர்கள் குவிந்ததால் அவர்களுடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் டைம் ஸ்லாட் முறை ரத்து செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக தற்போது தினமும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருவதால் சுமார் 48 மணி நேரம் 5 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் டைம் ஸ்லாட் முறையை அமுல்படுத்துவது என முடிவு செய்தனர்.

    அதை தொடர்ந்து இன்று முதல் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது.

    திங்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரம் பக்தர்களும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டைம் ஸ்லாட் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டைம் ஸ்லாட் முறையில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ் சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் ஆகிய 3 இடங்களில் தலா 10 என 30 கவுண்டர்கள் திறக்கப்பட்டது.

    தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்

    இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் பெறுவதற்காக நள்ளிரவு முதலே கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.டைம் ஸ்லாட் டோக்கன் கிடைக்காதவர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுந்தம் 2-வது காம்ப்ளக்சில் காத்திருந்து தங்களுக்கு உண்டான நேரம் வரும்போது தரிசனம் செய்யலாம்.

    மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு பக்தர் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு முதல் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கடும் குளிர் வீசி வருகிறது. தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி கடும் குளிரால் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 70,560 பேர் தரிசனம் செய்தனர். 29,751 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
    • கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி தலைமை தாங்கி பேசியதாவது:-

    திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது. வருகிற (நவம்பர்) 7-ந்தேதி யாகந்தியிலும், 14-ந்தேதி விசாகப்பட்டினத்திலும், 18-ந்தேதி திருப்பதியிலும் கார்த்திகை தீபத்திரு விழாவை வெற்றிகரமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அந்தக் கோவில்களில் ஸ்ரீவாரி லட்டுகள் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் லட்டு பிரசாதங்களை தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

    தேவஸ்தான கோவில்களில் தேவஸ்தான வனத்துறை அதிகாரி துளசி செடிகளை நடவு செய்ய வேண்டும். ஸ்ரீவெங்கடேஸ்வரா இசை மற்றும் நடனக் கல்லூரியின் முதல்வர் கலாசார நிகழ்ச்சிகளையும், அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் சங்கீர்த்தன குழுக்களையும் அமைத்து பக்தி இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

    புனித கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த மாதத்தில் பக்தர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து, துண்டு பிரசுங்களில் அச்சடித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

    தீபத்திருவிழா அன்று கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகப் போதிய எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.

    பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய போதிய கவுண்ட்டர்கள், தடுப்புகள் போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களை நியமித்து, மருத்துவ முகாமை நடத்தலாம். தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் தீபத்திருவிழாவின்போது கோவிலை சுற்றிலும் குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    தீபத்திருவிழா அன்று பக்தர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக கூடுதலாக அரசு பஸ்களை இயக்கலாம். தேவஸ்தான இலவச வாகனங்களை இயக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஸ்ரீவாரி கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதலு, பக்தி சேனல் தலைமை அதிகாரி சண்முககுமார், என்ஜினீயர் நாகேஸ்வர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி திருப்பதியில் குழந்தைகள் மருத்துவமனை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கட்டுமானப் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    • டிசம்பர் 1-ந்தேதி முதல் வி.ஐ.பி. தரிசன நேரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருப்பதியில் 2022 ஏப்ரல் 12-ந்தேதி டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது.

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்) தரிசன டோக்கன் வழங்கும் முறையை நிறுத்தியது.

    எனினும், பக்தர்களின் வசதிக்காக கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் வழங்க முடிவு செய்தது. அதன்படி நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    அந்த டோக்கன்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்.

    மேற்கண்ட நாளில் பக்தர்களின் வருகையை பொருத்து டைம் ஸ்லாட் டோக்கன் வினியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் வழங்கப்படும். டைம் ஸ்லாட் டோக்கன்களின் ஒதுக்கீடு அன்றைய தினம் தீர்ந்து விட்டால், பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2-க்கு சென்று சாமி தரிசனத்துக்காக தங்கள் முறை வரும் வரை காத்திருக்கலாம்.

    மேலும் சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வி.ஐ.பி. தரிசன நேரத்தை வரும் டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் காலை 8 மணியாக மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இது மிகவும் பொதுவான பக்தர்களுக்கு தரிசன வசதிக்கு பயனளிக்கும் மற்றும் தங்குமிடத்தின் மீதான பிரச்சினையை குறைக்கும்.

    ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஸ்ரீவாணி டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் தங்குமிடம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தேவஸ்தான வரவேற்பு துணை அதிகாரி ஹரேந்திரநாத், கோவில் பேஷ்கர் ஸ்ரீஹரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு ஏகாந்தசேவை நடக்கிறது.
    • அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தரிசனம் தொடங்கும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும், காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் நடக்கிறது. வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு ஏகாந்தசேவை நடக்கிறது.

    பின்னர் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தரிசனம் தொடங்கும். வாராந்திர ஆர்ஜித சேவைகளுக்குப் பிறகு தோமால சேவை, அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும். இதையெல்லாம் முடிப்பதற்குள் காலை 10 மணி ஆகிறது. இதனால் நள்ளிரவுக்குமேல் வரிசையில் செல்லும் பக்தர்கள் காலை வரை இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்க வேண்டி உள்ளது.

    அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது, ஆர்ஜித சேவைகளின் நேரத்தை மாற்ற முடியாத சூழ்நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் காலை 6 மணியில் இருந்து பொதுப் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க முடியும் என்பது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கருத்து.

    ஆனால், அதில் சில பிரச்சினைகள் எழுகின்றன. கோவிலில் கல்யாண உற்சவத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களும் காலை 10 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அமல்படுத்துவதால், பிரச்சினை வருமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை இலவச தரிசனம் நடக்கும்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதினால் பிரச்சினை இருக்காது. இரவு வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும் வரை வரிசைகள் காலியாகவே இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இவை அனைத்தையும் ஆய்வு செய்யும் வகையில் நவம்பர் மாதம் 7, 8, 9-ந்தேதிகளில் காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 3 நாட்களுக்கு சோதனை ஓட்டம் அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு டிசம்பர் மாதம் முதல் புதிய முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், எனத் தெரிகிறது.

    டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடும் ஆன்லைனில் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் காலை 10 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அமல்படுத்தப்பட்டால், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்கள் அறைகள் கேட்கும் பிரச்சினை குறையும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது.

    வி.ஐ.பி. பக்தர்கள் திருப்பதியில் தங்கி திருமலைக்கு காலை 9 மணிக்கு சென்றால், காலை 10 மணிக்கு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து முடிந்ததும், மதியத்துக்கு மேல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்று விடலாம். இதனால், பொதுப் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திருப்பதி கோவிலில் நடக்கம் நாகுலசவிதி உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
    • பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம் நடக்கிறது. அதையொட்டி அன்று உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
    • இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
    • டிசம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம்.

    திருமலை

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டின்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.

    டிசம்பர் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் இருப்புக்கு ஏற்ப முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

    டிசம்பர் மாதத்துக்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மின்னணு டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கிடைக்கும். முன்பதிவு (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை நடைபெறும்.

    பக்தர்கள் இந்தத் தகவலை கவனத்தில் கொண்டு, அதன்படி தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ×