search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் 3 நாட்கள் நடந்தன. முதல் நாள் மற்றும் 2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம், வசந்த உற்சவ ஆஸ்தானம் நடந்தது.

    3-வது நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர் சமேத ஆஞ்சநேயர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து வெளியே வந்து நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு உற்சவர்களுக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவையால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நெய் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிறைவாக வசந்தோற்சவ ஆஸ்தானம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இத்துடன் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    வசந்தோற்சவத்தில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
    • பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    திருமலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலையில் தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது. தும்புரு தீர்த்தத்தின் மலையேற்றப் பாதையில் அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும், 6-ந்தேதி காலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையும் பக்தர்கள் தும்புரு தீர்த்தத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    உடல் பருமன், இருதயக் கோளாறுகள், பிற நாள் பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவிதமான சமையல் பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என வானொலி மற்றும் ஒலிபரப்பு சாதனங்கள் மூலமாக தொடர்ந்து அறிவிக்கப்படும்.

    பாபவிநாசனம் அணை பகுதியில் பக்தர்களுக்கு தேவஸ்தான அன்னப்பிரசாதத்துறையினர் உணவுப் பொட்டலங்களை வினியோகிப்பார்கள். மருத்துவப் பிரிவு சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பார்கள்.

    பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர அன்னப்பிரசாதம், சுகாதாரம், பறக்கும்படை ஆகிய துறைகளில் போதுமான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். மலையேறும் பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சில இடங்களில் பறக்கும் படையினர், வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை செப்புத்தேரோட்டம் நடக்கிறது.
    • மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள், ரெங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்தனர்.

    நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு செப்புத்தேரோட்டம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    மாலை 4 மணிக்கு பெரியாழ்வார் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தங்க பல்லக்கில் ஆண்டாள் அழைத்து வரப்படுகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதற்காக ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண மண்டபம் முன்பு பிரமாண்ட பந்தல் அமைந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதா சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆண்டாளுக்கு பட்டுப்புடவை மற்றும் வஸ்திரம் மங்கலப் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.

    கோவில் முன்பு மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பொருட்கள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

    • திருப்பதி கோவிலில் வசந்தோற்சவம் தொடங்கியது.
    • மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு ‘வசந்தோற்சவம்’ எனப் பெயர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு 'வசந்தோற்சவம்' எனப் பெயர். சூரியனின் உஷ்ணத்தில் இருந்து இறைவனை தணிக்கும் விழா என்பதால், இது உபசமானோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த விழாவில் மணம் வீசும் மலர்களுடன் பலவகை இனிப்பான பழங்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த விழாக்களுக்காக ஒரு கவர்ச்சியான மண்டபமும் வடிவமைக்கப்படும். அது வசந்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

    வசந்த மண்டபத்தில் 250 கிலோ வெட்டிவேர், 500 கிலோ பாரம்பரிய பூக்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் போன்றவற்றால் பக்தர்களை கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பல்வேறு வகையான மரம் மற்றும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு, நரி, மலைப்பாம்பு, நல்ல பாம்பு, மயில், அன்னப்பறவை, வாத்து, மைனா, கிளி போன்ற உருவப்பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த மண்டபம் சேஷாசலம் வனத்தை ஒத்ததாக இருந்தது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    முன்னதாக விஸ்வக்சேனாராதனா, புண்யாஹவச்சனம், நவ கலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. அதைத்தொடர்ந்து சத்ர சாமர வியாஜன், தர்பணாதி நைவேத்தியம், முக சுத்தி, தூப பிரசாதம் வழங்கப்பட்டது. சங்கதாராவுடன், சக்ரதாரா, சஹஸ்ரதாரா, மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    வசந்தோற்சவத்தில் பங்கேற்ற வேத பண்டிதர்கள் ஸ்நாபன திருமஞ்சனத்தின்போது தைத்தரிய உபநிடதம், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களை ஓதினர்.

    ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சாமிக்கும், தாயார்களுக்கும் பல்வேறு வகையான உத்தமஜாதி மலர் மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர். இறுதியில் சாமியும், தாயார்களும் வசந்த மண்டபத்தில் இருந்து மாலை புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

    வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    • ஆர்ஜித சேவைகள் நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தினமும் மாலை ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    2-வது நாளான 4-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு ெசல்கிறார்கள். அங்கு வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    3-வது நாளான 5-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, கிருஷ்ணர் வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை கோவிலுக்கு திரும்புவார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. வசந்தோற்சவம் நடக்கும் மண்டபம் காணிக்கையாளர்களின் உதவியோடு பல்வேறு பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்யேக பழங்கள், உலர் பழங்கள், மலர்கள் தருவிக்கப்பட உள்ளன.

    வசந்தோற்சவத்தையொட்டி கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • தினமும் மொத்தம் 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
    • ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்கள், சொந்த மற்றும் தனியார் வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் வந்து திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கொரோனா தொற்று பரவலால் 3 ஆண்டுகளாக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதி தேவஸ்தானம் சோதனை முறையில் நேற்று காலையில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளது.

    அலிபிரி நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு காளிகோபுரத்தில் 10 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு 1,250-வது படியில் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.

    ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திவ்ய தரிசன டோக்கன்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே சோதனை முறையில் வழங்கப்படுகின்றன. இதைப் பக்தர்கள் கவனித்து திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
    • 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

    கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    உண்டியலில் காணிக்கையாக ரூ.833.41 கோடி செலுத்தினர். 2022-23 நிதி யாண்டின் படிகடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி முடிந்து 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    • 16-ந்தேதி பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம்.
    • 23-ந்தேதி அட்சய திருதியை உற்சவம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஏப்ரல் 1-ந்தேதி சர்வ ஏகாதசி, 15-வது பாலகாண்ட அகண்ட பாராயணம் தொடக்கம், 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம், 6-ந்தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம், பவுர்ணமி கருடசேவை, 16-ந்தேதி பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம், 23-ந்தேதி அட்சய திருதியை, 25-ந்தேதி பாஷ்யங்கார் சாத்துமுறை, ராமானுஜர் ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, அனந்தாழ்வார் உற்சவம் தொடக்கம், 29-ந்தேதியில் இருந்து மே மாதம் 1-ந்தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.

    • இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும்.
    • நாளை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் நடக்கிறது.

    திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது.

    இதை யொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும். நாளை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் கோவில் தங்க வாசல் அருகே நடைபெற உள்ளது.

    • கோடை வெயிலில் பக்தர்கள் கால்கள் சுடாத வகையில் தரையில் கூல் பெயிண்ட் அடிக்கப்படும்.
    • பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் சேவை செய்யப்படும்.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 15-ந்தேதி வரை கோடை விடுமுறை வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி, சுற்றுலா தரிசன ஒதுக்கீடு, உற்சவள் சேவைகள், ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை குறைக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வி.ஐ.பி.கள் இந்த மூன்று மாதங்களில் பரிந்துரை கடிதங்களை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் சாதாரணப் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவான தரிசனம் பெறலாம்.

    அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் திவ்ய தரிசன டோக்கன்கள் வினியோகம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் தொடங்கப்படும்.

    அதில், அலிபிரி நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்களும் வழங்கப்படும்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் தங்கக்கூடிய 7 ஆயிரத்து 500 விடுதி அறைகள் உள்ளன. அவற்றில் 85 சதவீத அறைகள் பொதுப் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறைகள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளது.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2, 4 (பி.ஏ.சி), வைகுண்டம் காம்ப்ளக்ஸ், தரிசன கவுண்ட்டர்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

    அனைத்து முக்கிய பகுதிகளிலும் ஜலப்பிரசாத கேந்திரங்கள் மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். திருமலை முழுவதும் தூய்மையாக வைக்கப்படும்.

    கல்யாணக் கட்டாக்கள் மற்றும் மினி கல்யாணக் கட்டாக்கள் 24 மணி நேரமும் செயல்படும். கோடை வெயிலில் பக்தர்கள் கால்கள் சுடாத வகையில் தரையில் கூல் பெயிண்ட் அடிக்கப்படும்.

    பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டுகள் கூடுதலாக தயாரித்து இருப்பு வைக்கப்படும். கோடைக் காலத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு சீராக தரிசன நடைமுறையை உறுதி செய்ய மேற்பார்வைப் பணிகளுக்காக மூத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

    திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி, போக்குவரத்துப் பிரச்சினை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வார்கள். பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் சேவை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது கோவில் துணை அதிகாரிகள் ரமேஷ்பாபு, ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஒவ்வொரு மாதமும் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.
    • ஒரே நேரத்தில் பலர் முன்பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி வரும் ஏப்ரல் மாதத்திற்க்கான ரூ 300 டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 6 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    ஒரே நேரத்தில் பலர் முன்பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது. தொடர்ந்து முன்பதிவு செய்துகொண்டே இருந்தனர்.

    தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்திற்குள் 6 லட்சம் டிக்கட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

    • ஏப்ரல் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.
    • 297 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் பகுதி சேதமடைந்த ஆடைகள் உள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் தொடர்புடைய கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டு வஸ்திரங்கள் முதல் ஏராளமான பொருட்கள் வழங்குகின்றனர்.

    இந்த வஸ்திரங்கள் வரும் ஏப்ரல் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.297 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் பகுதி சேதமடைந்த ஆடைகள் உள்ளன.

    இதில் ஆர்ட் சில்க், பாலியஸ்டர், வேட்டிகள், நைலான், நைலக்ஸ் புடவைகள், ஆப் புடவைகள், துணி பிட்டுகள், ஜாக்கெட் துண்டுகள், லுங்கிகள், சால்வை, பெட் ஷீட்கள், தலையணை கவர்கள், பஞ்சாபி ஆடை பொருட்கள், கம்பளங்கள், போர்வைகள், திரைச்சீலைகள், கர்ப்பக்கிரஹ துணிகள், ஸ்ரீவாரி குடைகள் ஏலம் விட பட உள்ளது.

    இது குறித்த விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான மார்கெட்டிங் அலுவலகத்தை 0877-2264429 அல்லது திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×