search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாய ஆலைகளில் ஆய்வு.
    • 25 ஆலைகளில் முறையான கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:

    தமிழகத்தில் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 


    இந்தக் குழுவினர் இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 44 சாய ஆலைகளில் கூட்டு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்போது 25 ஆலைகளில் முறையான கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    சில ஆலைகளில் எதிர்மறை சவ்வூடுபரவல் முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆலைகளில் சூரிய சக்தி ஆவியாதல் அமைப்பு முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. விதிமுறைகளின் படி செயல்படாத சாய ஆலைகள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரிக்கு டிசம்பர் வரை ரூ.17.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஊரக பகுதியிலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய ஜல்சக்தித் துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல், ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் நடப்பு டிசம்பர் மாதம் வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது மொத்தமுள்ள 19.36 கோடி ஊரக பகுதி வீடுகளில் 3.23 கோடி வீடுகள் குடிநீர்க் குழாய் இணைப்புகள் பெற்றிருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் 7.44 கோடி ஊரக பகுதி வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8.69 கோடி வீடுகளுக்கு 2024 ஆம் ஆண்டிற்குள் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தர திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி 2022-23 ஆண்டிற்காக தமிழ்நாட்டிற்கு ரூ.4,015 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையில் செலவிட்டதுபோக ரூ.262.66 கோடி ரூபாய் மீதமுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு ரூ.17.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் நடை பெறுகின்றன.
    • ரூ.46.24 கோடியில் தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டுப் பணி நடைபெறுகிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி கே சிங் கூறியுள்ளதாவது:

    விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    கடந்த 7 வருடங்களில் குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய பகுதிகளில் பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

    திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மெய்ன் புரி எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் நடந்தது.
    • முலாயம் சிங்கின் மருமகள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் மறைவையொட்டி மெய்ன் புரி எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங்கின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் 6,17,625 வாக்குகளை பெற்று பா.ஜனதா வேட்பாளர் ரகுராஜ் சிங்கை 2,88,136 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது இன்று டிம்பிள் யாதவ் எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.
    • இணைய தளத்தை பயன்படுத்துபவர், சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயமாகும்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே வேளையில், பொறுப்பற்ற முறையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    இதனை உறுதிசெய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான நம்பத்தகுந்த சமூக ஊடகக் கணக்குகள் இருக்க வேண்டும் என்பதில் அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது.

    அதன்படி, பகிரப்படும் தகவல்கள் அறிந்தோ, அறியாமலோ, தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோக் கூடாது. பொய்யான, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

    மேற்கூறியவற்றை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அல்லது அதன் அமைப்பு ரீதியிலான புகார் அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது நோட்டீஸ் பெறப்பட்டதன் பேரில், தானாக முன்வந்து, தகவல்களை பகிரவோ, சேமிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது. அவதூறு, பொது மக்கள் நலன், கண்ணியம், ஒழுக்கம், மீறப்படும் போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை அனுமதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

    இந்நிலையில், நேற்று இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால், இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டது.

    மேலும், மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    நைஜீரிய கடல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு வர்த்தக கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கினியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மீது சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களை மீட்க நைஜீரியா மற்றும் கினியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். கொேரானா பரவல் காரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் விசா பெறுவதில் சவால்களை சந்தித்து வருவது மத்திய அரசுக்கு தெரியும். விசா வழங்குவதை எளிமைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்பாக வளரும்.

    இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூண் மற்றொன்றின் வரம்புக்குள் ஊடுருவினால் அது ஆட்சி முறையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊடுருவல் அவ்வப்போது நடப்பதைப் பார்க்க முடிகிறது.

    மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தேசிய நீதி துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை உச்சநீதிமன்றத்தின் போக்கு கேள்விக்கு உள்ளாக்குகிறது.

    ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டபூர்வமாகப்பட்ட அரசமைப்பு பரிந்துரையை நீதித்துறை ரத்து செய்த இந்த சம்பவத்துக்கு நிகராக வேறு எந்த சம்பவமும் இல்லை.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த மசோதா உறக்கத்தில் உள்ளது. இது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடிக்கு நியமன எம்.பி., பி.டி.உஷா நன்றி தெரிவித்தார்.
    • ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரதமர் அக்கறை காட்டுவதாக பேச்சு.

    பாராளுமன்ற மாநிலங்களையில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது: நாட்டில் தற்போது ஒ புதிய பாரம்பரியம் நிறுவப்படுகிறது, சாதாரண பின்னணியில் பிறந்து, சாதாரண வாழ்க்கை நடத்துவோர் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு ஆசிரியர், ஒடிசாவின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிய அவர் இப்போது குடியரசுத் தலைவர்.

    மாநிலங்களவைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன், தற்போது எங்களது குடியரசு துணைத் தலைவர். நமது பிரதமர் டீ விற்பவர் வீட்டில் பிறந்தவர், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றார், அதைச் செய்து கொண்டே படித்தார். அவர் தனது வாழ்நாளின் 5 தசாப்தங்களுக்கும் மேலாக சமூகம் மற்றும் இந்த தேசத்தின் சேவைக்காக பாடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக நியமன எம்.பி. பி.டி.உஷா மாநிலங்களவையில் பேசுகையில் கூறியுள்ளதாவது: ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த பெருமை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். ஒரு விவசாயியின் மகன் இப்போது துணை ஜனாதிபதி, இது ஒரு புதிய இந்தியா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குளிர்கால கூட்டத்தொடரை பயனுள்ளதாக மாற்ற, எம்.பி.க்கள் உதவ வேண்டும்.
    • இந்த அமர்வில் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நான் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தபோது, அவர்கள் சொன்னார்கள், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு ஒத்தி வைக்கப்படும் போது அது புதிய எம்.பி.க்களை பாதிக்கிறது.

    அவை நடவடிக்கைகள் தொடராத போதும், விவாதங்கள் நடைபெறாத போதும் கற்றுக் கொள்வதும், புரிந்து கொள்வதும் இயலாமல் போய் விடுகிறது. அதனால்தான் அவை செயல்படுவது மிகவும் முக்கியமானது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட தங்களை விவாதத்தில் பேச விடுவதில்லை என்று புதிய எம்.பி.க்கள் சொல்கிறார்கள்.

    அவர்களது வலியை புரிந்து கொள்ளுங்கள். அனைத்துத் கட்சித் தலைவர்களும் இதை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இந்த அமர்வில் ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
    • மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

    இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.

    இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

    இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
    • மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

    இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்.

    தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அத்துடன், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, இன்று மாலை, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை நடத்துகிறார். எந்தெந்த பிரச்சினைகள் மீது விவாதம் நடத்துவது என்று இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    • தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
    • சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது.

    புதுடெல்லி :

    வருகிற 7-ந் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    இந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று காலை உயர்மட்டக்கூட்டம் ஒன்றைக்கூட்டினார்.

    கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் உத்திகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

    இதையொட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 முக்கிய பிரச்சினைகளை எழுப்புவோம்.

    இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுதல் ஆகிய பிரச்சினைகளை எழுப்புவோம்.

    சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் 2 நீதிபதிகள் இட ஒதுக்கீடக்கு எதிராக கேள்விகள் எழுப்பினர். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×