search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நேற்று மேல்சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து 13 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். அவர்கள் இந்த வாரம் முழுவதும் (29-ந்தேதி வரை) சபைக்கு வர தடை விதிக்கப்பட்டது.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 எம்.பி.க்கள், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த 2 பேரும், இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஒருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மேல்சபையில் இன்று மேலும் ஒரு எம்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார். இன்று காலை மேல்-சபை கூடியது. அப்போது மேல்-சபையின் நேற்றைய கூட்டத்தின்போது காகிதங்களை கிழித்து அதை அவைத்தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்சிங், இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.

    • ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
    • மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு ஃபேம் (FAME)இந்தியா என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

    தற்போது, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • செயல்திட்டத்தை உருவாக்கி, காலக்கெடுவுக்குள் செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
    • பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்ற தொழில்களில் ஈடுபட அரசு உதவி.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ திறம்பட செயல் படுத்துவதற்கு, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகி தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய அளவிலான பணிக்குழுவும் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி, அதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைக்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கூடுதலான உதவிகளை வழங்குகிறது. தூய்மை இந்தியா திட்டம் 2.௦ வின் கீழ், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிற பொருட்களை தயாரிப்பதற்கும், மற்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும் மத்திய அரசு உதவி செய்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
    • இந்த பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளதாவது:

    ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ.120 கோடி ஊக்கத் தொகை வழங்குகிறது

    இந்த ஊக்கத் தொகை பெறும் 23 பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த திட்டத்தின் பயன் பெறும் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும். ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாதவர்களுக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ரூ.1 கோடியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • சில ரெயில்களில் பயணிகளுக்கு உதவ அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:

    ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ரெயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சமூக ஊடகங்கள் மூலம் ரெயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் சில ரெயில்களில் அடிப்படை மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் மூலம்,பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு தரமான சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், ரெயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய மருத்துவ துறையில் அமெரிக்கா, பிரிட்டன் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
    • ரஷ்யா பல்கலைக் கழகங்களில் ஆயுர்வேத கல்விக்கு இருக்கைகள் அமைக்க ஒப்பந்தம்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளதாவது:

    மருத்துவத் துறையில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்காக நேபாளம், பங்களாதேஷ் ஹங்கேரி உள்பட 24 நாடுகளுடனும், உலக சுகாதார நிறுவனத்துடனும் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

    இதே போல் பாரம்பரிய மருத்துவ துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்காக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளுடன் 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ரஷியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் ஆயுதர்வேத கல்வி சார்ந்த படிப்புகளுக்கு இருக்கைகள் அமைக்க 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • சோனியா காந்தி என்ன ஒரு சூப்பர் மனிதரா?" என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அமளில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 4 மணிக்கு பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின. நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.பி.க்களின் போராட்டத்திற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "சட்டம் அனைவருக்கும் சமம்... சோனியா காந்தி என்ன ஒரு சூப்பர் மனிதரா?" என கேள்வி எழுப்பினார்.

    • காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேல்சபையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 3 தினங்களாக முடக்கி இருந்தனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 11.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேல்சபையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
    • பாராளுமன்ற மேல்சபையிலும் இதே பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

    இதேபோல விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய வற்றுக்கு எதிராகவும் இரு அவைகளை முடக்கினர். இதேபோல் பாராளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் நேற்றில் இருந்து விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு எதிராக இன்றும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.

    அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    இதை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மேல்சபையிலும் இதே பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக மேல்சபையும் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மேல் சபையில் முன்னாள் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா எம்.பி.யாக பதவி ஏற்றார்.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியின் அமளி காரணமாக 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இரு அவைகளிலும் தொடர்ந்து எம்.பி.க்கள் விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை வைத்து இருந்தனர்.

    பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு, பண வீக்கம், ஜி.எஸ்.டி. ஆகிய வற்றுக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை நேற்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார்.
    • அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    அதன் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். அவருக்கு பதிலாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ரவீந்திரநாத் குமாரின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

    அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விபரங்களையும் இணைத்து அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார். இது சபாநாயகர் ஓம் பிர்லா எடுக்கும் முடிவை பொறுத்தது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • இத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    ரஷியா-உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய முக்கியக் காரணம்.

    பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட பலவீனம் அடைந்துள்ளன. எனவே, 2022-ல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலிமையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
    • பாராளுமன்ற மக்களவை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மக்களவை இன்று காலை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் பாஜகவை சேர்ந்த 2 எம்பிக்கள் உள்பட 3 புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

    இதைத்தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஓம்பிர்லா அனுதாபம் தெரிவித்து வாசித்தார்.

    இதே போல மறைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா அதிபர்களுக்கும், மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் 8 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பிற்பகல் 2 மணி வரை சபையை சபாநாயகர் ஒம்பிர்லா ஒத்தி வைத்தார்.

    இன்றைய முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பிற்பகல் 2 மணிக்கு மக்களவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதும், இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆதிரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்போது சபாநாயகர் பொறுப்பை கவனித்த ராஜேந்திர அகர்வால் அனுமதி மறுத்தார்.

    இதையடுத்து சட்டத்துறை மந்திரி கிரண் ரஜூஜு குடும்ப நல நீதிமன்றங்கள் தொடர்பாக சட்மசோதாவை தாக்கல் செய்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்த நிலையில் மக்களவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

    மேல்சபை கூடியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்று கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த புதிய மேல்சபை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், தி.மு.க.வை சேர்ந்த கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த சி.வி. சண்முகம் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.தர்மர் ஏற்கனவே பதவியேற்று இருந்தார்.

    புதிய எம்.பி.க்கள் பதவியேற்ற பிறகு எதிர் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜி.எஸ்.டி. மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.

    இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டதை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

    இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். இதன் காரணமாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

    ஆகஸ்ட் 12-ந்தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    ×