search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்துள்ளனர்.
    • ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்துள்ளனர்.

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    • எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
    • நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2023-24ல் மொத்த செலவினம் ரூ.45,03,097 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த மூலதனச் செலவு ரூ.10,00,961 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளி, ராகுல் காந்திக்கு எதிராக ஆளும் பாஜக எம்.பி.க்களின் போர்க்கொடி என பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் பணிகள் முடங்கின. இதனால் பட்ஜெட் மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே, மக்களவையில் விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் அடுத்தடுத்த ஒத்திவைப்புகளுக்கு பிறகு மாலையில் மீண்டும் அவை கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா, அரசின் செலவின திட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2023-24க்கான மானிய கோரிக்கைகள் மற்றும் அதன் தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், விவாதமின்றி மசோதா நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி அவையில் இருந்தார்.

    பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்க தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடைமுறை 12 நிமிடங்களில் நிறைவடைந்தது. இனி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்த வரி திட்டங்களை கொண்ட நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

    பட்ஜெட் தொடர்பான மசோதாக்கள் அனைத்தும் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது எந்த மாற்றமும் செய்ய முடியாது. மக்களவையில் மட்டுமே ஒப்புதல் தேவைப்படும் 'பண மசோதாக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மசோதாக்கள் விவாதத்திற்குப் பிறகு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படும்.

    நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைய உள்ளது. பட்ஜெட் நடைமுறைகள் முடிந்த பிறகு கூட்டத் தொடரின் காலம் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
    • ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி சமீபத்தில் லண்டன் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு பா.ஜனதா குற்றம் சாட்டியது.

    எனவே ராகுல்காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை பாராளுமன்றத்தை செயல்பட விடமாட்டோம் என்று பா.ஜனதா தெரிவித்து உள்ளது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி உள்ளது.

    இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ந்தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன் வைக்கிறேன்.

    பாராளுமன்ற நடைமுறையின் கீழ் உள்ள சட்ட பிரிவு 357, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குகிறது. சபாநாயகரின் அனுமதியுடன் இந்த சட்ட பிரிவின் கீழ் உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க முடியும்.

    ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

    இதுபோன்ற சூழலில் சட்டபிரிவு 357-ன் கீழ் தன்னிலை விளக்கம் அளிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல்.

    கம்பாலா:

    உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

    அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

    ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

    அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.

    இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.

    மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, "உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது" என்றார்

    ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, "பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?" இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், "கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடியின் தலைமைக்கு உலகமே அங்கீகாரம் அளித்துள்ளது.
    • பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுட்டு வருவதால், சபைகள் முடங்கி வருகின்றன.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    ஆனால் இங்கிலாந்தில் ராகுல் காந்தி நாட்டுக்கு விரோதமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வும், அதானி நிறுவனங்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுட்டு வருவதால், சபைகள் முடங்கி வருகின்றன.

    இது தொடர்பாக மாநிலங்களவை அவை முன்னவரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் (பா.ஜ.க.) கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர், "பிரதமர் மோடியின் தலைமைக்கு உலகமே அங்கீகாரம் அளித்துள்ளது. அனால், பொறுப்பற்ற வகையில் கருத்துகளைக்கூறியும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தும் நாட்டை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தவறாக வழிநடத்தி, பாராளுமன்றத்தை வேண்டுமென்றே முடக்கி வருகிறது" என சாடினார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

    அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மாநிலங்களவை தலைவர் அழைப்பு விடுத்த கூட்டத்தை எதிர்க்கட்சி புறக்கணித்துள்ளதாக பியூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார். அவைத்தலைவர் இருமுறை அனுமதி கொடுத்தும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரை தனது கட்சி எம்.பி.க்களைக் கொண்டு பேச விடாமல் தடுத்த அவை முன்னவரிடம் இருந்து இந்த குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அதானி விவகாரத்தில் பாராளுமன்ற விசாரணை கோருவது ஒரு பிரச்சினை என்றால் எதிர்க்கட்சி தலைவரைப் பேசவிடாமல் வாய் அடைப்பது மற்றொரு பிரச்சினை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மற்றொரு பதிவில் ஜெய்ராம் ரமேஷ், "பிரதமருடன் தொடர்புடைய அதானி ஊழலில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி அதற்காக ராகுல் காந்தியின் மன்னிப்பை கோரும் பா.ஜ.க.வின் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அதானி ஊழலில் இருந்து இது கவனத்தை திசை திருப்புவதாகும்" என சாடி உள்ளார்.

    • இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றார் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி.
    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டால்தான் பாராளுமன்ற முடக்கம் முடிவடையும் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவை இழிவுபடுத்தியதற்காக, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. அதானி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

    இந்நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

    இந்திய குடிமகன் யாராவது வெளிநாட்டுக்குச் சென்றால், அங்கு பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தப் பேச்சு சுதந்திரத்துடன், பொறுப்புணர்வும் இருப்பது அவசியம்.

    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, மிகவும் பழமையான நாடு. அதில் சந்தேகம் இல்லை. ராகுல் காந்தி வெளிநாட்டுக்குச் சென்றால், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசுகிறார். அவர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பதைத்தான் கூறுவதாக சொல்வதை ஏற்கமுடியாது. அவர் ஏதேனும் செயல்திட்டத்துக்கு உடந்தையாக இருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

    இந்தப் பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி சந்தேகத்துக்கு இடமின்றி மன்னிப்பு கேட்டால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். ராகுல் காந்தி, தெளிவாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அதனால் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் கூறவேண்டும். அப்படி செய்தால் பாராளுமன்றம் செயல்பட வழி பிறக்கும் என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.
    • எதிர்க்கட்சிகள் முன் வந்தால் பாராளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல் 5 நாட்களும் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த 'இந்தியா டுடே' மாநாட்டில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    வெறும் ஆளுங்கட்சி அல்லது வெறும் எதிர்க்கட்சியால் மட்டும் பாராளுமன்ற அமைப்பு இயங்காது. ஏனெனில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பேசவேண்டும். எனவே பாராளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக அவர்கள் (எதிர்க்கட்சி) 2 அடி முன்வந்தால், நாங்களும் 2 அடி முன்னோக்கிச் செல்வோம். இதன்மூலம் பாராளுமன்றம் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் எதையும் செய்யாமல் வெறும் செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடத்தினால் எந்தப் பலனும் இருக்காது.

    இந்த விவகாரத்தில் எங்கள் முயற்சிகள் இருந்தபோதும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான எந்தப் பரிந்துரையும் வரவில்லை. அப்படியிருக்க, நாங்கள் யாரிடம் பேச முடியும்? அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் வேண்டும் என கோஷமிடுகிறார்கள். பாராளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் பாராளுமன்றத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதங்கள் நடத்தப்படும். நீங்கள் சாலையில் பேசுவது போல பாராளுமன்றத்தில் பேசமுடியாது. இந்த அடிப்படை புரிதலே அவர்களுக்கு இல்லையென்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்?

    சில பிரச்சினைகள் அரசியலுக்கு மேற்பட்டவை. இந்திரா காந்தி கூட உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதற்கு மறுத்தார். வெளிநாடுகளிலும், பிற நாடுகளின் பாராளுமன்றங்களிலும் இந்தியா குறித்து அவதூறு பேசுவதா? இதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும் என நான் நம்புகிறேன்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

    • சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பணிகளுக்கு டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.
    • வாணியம்பாடியில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

    வேலூர்:

    பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் பேசினார். அப்போது தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் 18 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி விவரம் எவ்வளவு?

    அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நிலையங்களைத் தவிர மேலும் பல நிலையங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலைய சந்திப்பு ஆகியவற்றின் நவீனமயமாக்கல் மற்றும் மறுவடிவமைப்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை மற்றும் முடிவடையக்கூடிய தோராயமாக எப்போது முடியும்?

    சென்னையில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம் ரெயில் நிலையங்களில் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர், காட்பாடி, தாம்பரம், டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல், ஆவடி, சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம் ஜே.என், செங்கல்பட்டு ஜே.என்., கிண்டி, பெரம்பூர், அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுண்ட், கூடுவாஞ்சேரி, திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை நிலையங்களின் நவீனமயமாக்கல் மேம்படுத்துதல் மேம்பாடு என்பது போக்குவரத்தின் அளவு, பணிகளுக்கு இடையேயான முன்னுரிமை மற்றும் நிதி இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும்

    சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பணிகளுக்கு டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையங்களின் மேம்பாடு மறுவளர்ச்சி மேம்படுத்துதல் என்பது பயணிகள் மற்றும் ரெயில்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான அம்சங்கள் கொண்டது.

    மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு சட்டரீதியான அனுமதிகள் தேவை எனவே பனிகள் முடிவடைவதில் காலக்கெடு எதுவும் குறிப்பிட முடியாது.

    சென்னையின் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்கள் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    சைதாப்பேட்டை புறநகர் கிரேடு 3 ரெயில் நிலையம் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கு ஏற்ப அனைத்து குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    வாணியம்பாடியில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
    • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

    அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருக்கிறது.

    அதானி குழும முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதை தொடர்ந்து நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பராளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பங்கேற்றனர்.

    பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள். அதானி குழும விவகாரத்தில் பராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை வைத்தி ருந்தனர்.

    அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன்.
    • நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பினார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்தேன். என் மீது 4 மந்திரிகள் குற்றம் சாட்டி இருப்பதாகவும், அவற்றுக்கு பதில் அளிக்க எனக்கு உரிமை இருப்பதாகவும் அவரிடம் கூறினேன்.

    எனவே, வெள்ளிக்கிழமை (இன்று) பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

    அங்கு பேச அனுமதி கிடைக்குமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு எம்.பி. என்ற முறையில், முதலில் பாராளுமன்றத்தில் பதில் சொல்வதுதான் எனது கடமை. அதன்பிறகு ஊடகங்களிடம் பேசுகிறேன்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், அதானி விவகாரம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, நேற்று பிற்பகலில் சபாநாயகர் ஓம்பிர்லாவை ராகுல்காந்தி சந்தித்தார். சபையில் பேச அனுமதி கோரினார். பாராளுமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    சபை ஒத்திவைப்புக்கு பிறகு வெளியே வந்த அவரிடம், 'மன்னிப்பு கேட்பீர்களா?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி புன்னகையையே பதிலாக தந்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    நான் நாட்டுக்கு எதிராகவோ, பாராளுமன்றத்துக்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன். அனுமதிக்காவிட்டால், வெளியே பேசுவேன். நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின.

    இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

    அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    பொது மக்களின் பணம் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    கடந்த ஜனவரி 31-ல் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வில் அதானி விவகாரம் வலுவாக எதிரொலித்தது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய 2-வது கட்ட அமர்விலும் இந்த விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகார் கொடுக்க எதிர்கட்சியினர் நேற்று முடிவு செய்தனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி விஜய் சவுக் பகுதியில் எதிர்கட்சி எம்.பி.க்களான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில் எதிர்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேல்சபை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா கட்சி, பாரத் ராஷ்டீரிய சமிதி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ம.தி.மு.க., ஆம். ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 15 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சுற்றி எதிர்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்ற செய்தியை முன் வைத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும் போது 'அதானி விவகாரத்தை தடுக்கவே மத்திய அரசு பாராளுமன்றத்தை நடத்த விடவில்லை. நாங்கள் அமைதியாக நேற்று போராட்டம் நடத்தினோம் எங்களை தடுத்துவிட்டனர் என்றார்.

    • அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் பாராளுமன்ற மேல்சபையிலும் எதிரொலித்தது.
    • இரு அவைகளும் இன்று 2-வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 3 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.

    விவாதம் எதுவும் நடைபெறாமல் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பிரச்சினை இன்றும் நீடித்தது. இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பதாகையுடன் அவையின் மையப்பகுதிக்கு சென்று அதானி குழும முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்திய ஜனநாயகம் குறித்து இழிவாக பேசியதாக கூறி அதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

    உடனே சபாநாயகர் ஓம்பிர்லா நான் சபையை நடத்த விரும்புகிறேன். உறுப்பினர்களுக்கு போதுமான அளவு பேச அனுமதி அளிக்கப்படும். இதனால் அனைவரும் அமைதியாக இருக்கையில் அமருங்கள். சபை அமைதியாக நடைபெற ஒத்துழையுங்கள் என்று கூறினார்.

    ஆனால் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் அவரது பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூச்சலிட்டவாறு இருந்தனர். தங்கள் முடிவில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் கூச்சலும், அமளியும் நிலவியது. விவாதங்கள் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா சபையை 2 மணி வரை ஒத்திவைத்தார். உறுப்பினர்களின் அமளியால் சபை தொடங்கிய 5 நிமிடங்களில் விவாதம் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கபட்டது. இதனால் இன்று 4-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது.

    அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் பாராளுமன்ற மேல்சபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சபை கூடியதும் கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் தங்களை பேச அனுமதிப்பது இல்லை எனக்கோரி கோஷமிட்டனர். அவர்கள் முகத்தில் கறுப்பு துணி கட்டி வந்திருந்தனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை சபை தலைவர் ஜெகதீப்தன்கர் அவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்லியும் அவர்கள் அதை கேட்கவில்லை.

    இதனால் மேல்-சபையும் தொடங்கிய சில நிமிடங்களில் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இரு அவைகளும் இன்று 2-வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.

    முன்னதாக பிரதமர் மோடி மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், அனுராக் தாக்கூர் உள்ளிட்ட மூத்த மந்திரிகளுடன் பாராளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பாராளுமன்றத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.

    ×