search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கம்.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.

    இதில் பல்வேறு விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக, இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

    மேலும், அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

    இதனால் அங்கு கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் மக்களவை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    • பாராளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
    • மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய பாராளுமன்றத்தை பற்றி பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரகலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பேசினர்.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

    • பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது.
    • இந்தக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்தக் காலகட்டத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் மற்றும் அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறும்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விற்கு முன்னதாக, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சபையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார்.

    • தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது.
    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார்.

    புதுடெல்லி:

    தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பியபோது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்தில், ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது. இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.

    இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நிறைவரங்க நிகழ்ச்சிக்கு சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • பா.ஜனதா எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி திராவிட நட்புகழகம் சார்பில் மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நிறைவரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார். பாபு, எட்வின், மாறன், முத்தையா, குமரன், இளங்கோவன், கருப்பையா, மணிவண்ணன், ஜெகநாதன், கணேசன், சரவணன், ஆனந்த், விஷ்னு, செல்லப்பா, மாரியப்பன், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திராவிட நட்புக்கழக தென்மண்டல அமைப்பாளர் தனிஸ்லாஸ் வரவேற்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வருவதில்லை. எதிர்கட்சிகளின் கருத்துக்களை கேட்பதும் இல்லை. நாம் மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்று பல மசோதாக்களை அறிமு கப்படுத்தும் போது அது சம்பந்தமாக பேசுவதற்குள் தீர்மானத்தை நிறைவேற்றி முடித்து விடுகின்றனர்.

    முத்தலாக் சட்டம் கொண்டு வந்து இஸ்ஸாமியர் உரிமையை பறிக்கின்றனர். இப்படி கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அவர்களது உரிமைகளையும் பல வகையில் பறித்து, தான் சொல்லுவதைதான் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    பா.ஜனதா எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கின்றனர். நாம் ஏதாவது கேள்வியை கேட்டால் வேறு பதில்களை கூறி திசைதிருப்புகின்றனர். இந்த நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும்.

    இதே ஆட்சி மறுபடியும் திரும்பி வந்தால் நம்முடைய எதிர்காலம் சமூகநீதி, மதநல்லிணக்கம் பறி போகிவிடும். தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்கள் சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். அதை மீண்டும் மீண்டும் உறக்க சொல்ல வேண்டும். வரும் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் நமக்கு முக்கியம்.

    மற்ற மாநிலங்களில் இல்லாத பல பண்பாடுகள், வளர்ச்சிகள் என அனைத்திலும் முன்னேற்றமடைந்த தமிழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நம்முடைய பணிகள் அமைய வேண்டும்.

    இவ்வறு அவர் பேசினார்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், வடமாநிலங்களில் இன்று வரை பெண்கள் எல்லா இடத்திலும் சமமாக அமர்ந்து இருக்க முடியாத நிலை உள்ளது. அதே போல் ஜாதி வேறுபாடு உள்ளன.

    தமிழகத்தில் பெரியார் சொத்தில் சம உரிமை கொண்டுவந்து பல உரிமைகளை பெற்றுக்கொடுத்து உள்ளார். அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை தி.மு.க. கொடுத்துள்ளது. இதுபோன்று எல்லா துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் 10 ஆண்டுக்குள் அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கு தி.மு.க.வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனர் என்றார்.

    மாநாட்டில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகிகள் உமா, சிங்கராயர், உமாபதி, செல்வராசு, ரவீசந்திரன், தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.

    மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ் சாமுவேல், மாநகர அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜெயசீலி, மரியகீதா, ரெக்ஸின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் சந்தானம் நன்றி கூறினார்.

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
    • நீங்கள் சேற்றை அள்ளி வீசினாலும் தாமரை அதிகமாக மலரும் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கடந்த 31-ம் தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடந்தது.

    மக்களவையில் விவாதம் முடிந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். மாநிலங்களவையில் நேற்று விவாதம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி பதிலளித்து பேச எழுந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, பிரதமருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன், அதானி மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகள் அவ்வப்போது கோஷங்கள் போட்டு, அமளியில் ஈடுபட்டபோதும், அதற்கு மத்தியில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    600 திட்டங்களுக்கு நேரு-காந்தி குடும்ப பெயரை சூட்டி உள்ளனர். முதல் பிரதமர் நேரு மாபெரும் தலைவர் என்றால், அவரது வாரிசுகள் ஏன் அவரது பெயரை தங்களது பெயர்களின் பின்னால் சேர்ப்பதில்லை?

    காங்கிரஸ் கட்சி தனது அரசியல் அபிலாஷைகளைப் பற்றியே கவலைப்பட்டது. நாட்டின் நலன் குறித்து அல்ல. ஆனால் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். நாங்கள் நாட்டை முன்னோக்கி அழைத்துச்செல்வதில் கடினமாக உழைக்கிற பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இந்த பணியில் தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.

    அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்து, மாநிலங்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி மிதித்துப்போட்டது. யார் அதைச் செய்தது? இந்திரா காந்தி மட்டுமே அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி, மாநில அரசுகளை 50 முறை கலைத்தார். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் காங்கிரசுடன் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களை அம்பலப்படுத்த விரும்புகிறேன். (காங்கிரசால் கேரளாவில் இடதுசாரிஅரசு, ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அரசு, மராட்டியத்தில் சரத் பவார் அரசு, தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் அரசு, கருணாநிதி அரசு கலைக்கப்பட்டதாக பட்டியலிட்டார்.)

    கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி குழி பறித்தது. அது அதன் நோக்கமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் குழி பறித்திருக்கிறது. அவர்கள் 60 ஆண்டு காலத்தை வீணாக்கி விட்டனர்.

    மாநிலங்களில் உள்ள பல கட்சிகள் இலவசங்களைத் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. தேர்தல்களுக்காக பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற பெரும் பணப்புழக்கத் திட்டத்துக்கு திரும்புகின்றன. இப்படி நிதி ஆரோக்கியத்துடன், பொருளாதாரக் கொள்கைகளுடன் விளையாடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு சுமையாக அமையத்தக்க விதத்தில் எந்த பாவமும் செய்யாதீர்கள்.

    எனது அரசு எல்லா நலத்திட்டங்களின் பலன்களும் எல்லா மக்களையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. 100 சதவீதம் நிறைவைக் காண விரும்புகிறது. சாதி, மதத்தின் பெயரால் திருப்திப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் முடிவு கட்ட விரும்புகிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேறியது.

    • நீங்கள் எவ்வளவு சேற்றை நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும்.
    • முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது, பிரதமர் மோடியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். விவாதம் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். பதிலுரையின்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.

    இந்த அமளிக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். பிரதமர் மோடி பேசியதாவது:-

    விமர்சனம் செய்யும் உறுப்பினர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சேறு அவரிடத்தில் இருந்தது, என்னிடத்தில் நன்னீர் இருந்தது. யாரிடம் என்ன இருந்ததோ, அதுதான் மேலெழும்பி வந்தது. நீங்கள் எவ்வளவு சேற்றை அந்த நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும். தாமரை மலர்வதற்கு தாங்கள் செய்யும் இந்த சேவைக்காக நான் உங்களுக்கும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.

    நேற்று எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது, 60 ஆண்டுகளாக நாங்கள் வலுவான அடித்தளம் அமைத்து வைத்திருந்தோம் என்று சொன்னார். 2014ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை என்ன? என்பதை அறிய முயற்சி செய்தேன். காங்கிரஸ் குடும்பத்தின் எண்ணம் வலுவான அடித்தளம் அமைப்பதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்கு பார்த்தாலும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் சிறிய சிறிய நாடுகள்கூட முன்னேறி வந்துகொண்டிருந்தன.

    அவர்களின் காலம் நன்றாக இருந்தது. பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை எல்லாம் அவர்களின் ஆட்சிதான். ஆனால் அவர்கள் செய்த பணிகள் எல்லாம், எப்படி இருந்தது என்றால், நாடு ஒரு பிரச்சனையைக்கூட தீர்த்து வைக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. பிரச்சனையை தீர்க்கவேண்டியது அவர்களின் கடமை. பிரச்சனைகளில் உழன்று நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் வேறு, அவர்களின் திட்டம் வேறு. இதனால் அவர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜனநாயகம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
    • ராகுல் காந்தியின் குடும்பம்தான் ஊழலில் தொடர்புடையது

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

    அப்போது அவர் அதானி பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக "2014-ம் ஆண்டில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், கவுதம் அதானியின் சொத்துக்கள் உயர்ந்தது எப்படி? உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்த அதானி 2-வது இடத்துக்கு வந்தது எப்படி? " என கேட்டார்.

    அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான தொடர்புகள் பற்றியும் அவர் சில கருத்துக்களை தெரிவித்தார்.

    இதை அப்போதே சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கண்டித்ததுடன், " ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைத் தர வேண்டும்" என்று கூறினார்.

    இந்த நிலையில் மக்களவை நேற்று கூடியதும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ராகுல் காந்தியின் மக்களவை பேச்சு விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற விதிகள்படி, ஒருவர் மற்றொருவர் மீது குற்றச்சாட்டு கூற விரும்பினால் அது குறித்து முன்கூட்டியே சபைக்கு நோட்டீஸ் தர வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சில கருத்துகளை கூறினார். அவை மிகவும் ஆட்சேபத்துக்கு உரியவை, அடிப்படையற்றவை. அவற்றை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், அவர்மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

    அவருடைய கருத்துக்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவோம். இதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவையில் முன்னாள் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தும் ராகுல் காந்தி பிரச்சினையை எழுப்பினார். "ராகுல் காந்தியின் குடும்பம்தான் ஊழலில் தொடர்புடையது, அவர்கள்தான் ஜாமீனில் வெளியே உள்ளனர், ஆனால் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்" என சாடினார்.

    மேலும், "இந்திய தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் ராகுல் காந்திக்கு பிரச்சினை இருக்கிறது. மோடி அரசில் விஷயங்கள் மாறி விட்டன. தொழில் அதிபர்கள் நேர்மையாக வளர்கிறார்கள். கமிஷன்கள், பேரங்கள் இல்லை. எனவே காங்கிரசுக்கு பிரச்சினை இருக்கிறது" எனவும் குறிப்பிட்டார்.

    ஆனால் ராகுல் காந்தியின் பேச்சில் ஆட்சேபத்துக்குரிய குறிப்பிட்ட சில பகுதிகள் சபைக்குறிப்பில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    அதானியின் மாபெரும் ஊழல் தொடர்பான பிரதமர் குறித்த சில கருத்துக்களை (சபைக்குறிப்பில் இருந்து) நீக்கி உள்ளனர். இதன் மூலம் மக்களவையில் ஜனநாயகம் தகனம் செய்யப்பட்டு விட்டது. ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது அனைவருக்கும் பெருமையான விஷயம்.
    • சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு இப்போது உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    கொரோனா மற்றும் போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். 2004 முதல் 2014 வரை இந்தியாவில் ஊழல் அதிக அளவில் இருந்தது. 2010 காமன்வெல்த் போட்டியில் ஊழல் இருந்ததால் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த இயலவில்லை. இப்போது ஊழலில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது.

    அண்டை நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் உள்ள நிலையில் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த அரசின் சாதனை இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது. ஒருசில நபர்களால் இந்தியாவின் வெற்றியை ஜிரணிக்க முடியவில்லை.

    ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது அனைவருக்கும் பெருமையான விஷயம். நிர்பந்தத்திற்கு பணிந்து சீர்திருத்தங்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அரசு அல்ல இந்த அரசு. சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு இப்போது உள்ளது. இந்தியா இன்று மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

    விலைவாசி உயர்வு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது நிலைமை சிறப்பாக உள்ளதால் சிலரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நேற்று ராகுல் பேசும்போது ஒருவித கொதிநிலை காணப்பட்டது என மோடி பேசினார்.
    • பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தொரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    குடியரசு தலைவர் உரைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசு தலைவர் உரையில் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. தொலைநோக்கான உரை மூலம் மக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார் குடியரசு தலைவர்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. நேற்று ராகுல் பேசும்போது ஒருவித கொதிநிலை காணப்பட்டது.

    பாராளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் புரிதலுக்கு ஏற்ப உரையாற்றினர். ஒவ்வொருவரும் தங்களின் குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தொரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் அறிவுறுத்தினார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மோடியின் உரையை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர்.

    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் நேற்று பேசினார்.
    • அப்போது பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பேசி சர்ச்சையை கிளப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினார்.

    மக்களவையில் கவுதம் அதானியின் நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை அவர் சாடினார்.

    அனைத்து விஷயங்களிலும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள். நமது நாட்டின் நற்பெயர் மற்றும் நமது சந்தைகளின் அமைப்பு ஸ்திரத்தன்மை ஆபத்தில் உள்ளன. இவை அனைத்தையும் முழுமையாக அனைத்து அம்சங்களிலும் விசாரிக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது அவர் பேசுகையில், சில பாஜகவினர் சில கருத்துக்களை கூறியுள்ளனர். மஹுவா மொய்த்ரா தனது உரைக்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினரை வாயை மூடுமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். மேலும், அவர் சில கடுமையான வார்த்தைகளை உபயோகித்ததால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறித்து மஹுவா மொய்த்ரா சில நாடாளுமன்றத்திற்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய தனது பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

    • அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும்.
    • அதானி குழும மோசடி விவகாரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே 2 நாட்கள் முடங்கி இருந்தன. இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    2-வது நாளான கடந்த 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதானி குழும விவகாரத்தால் 2-ந்தேதியும், 3-ந்தேதியும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இரு அவைகளும் முடங்கியது.

    அமெரிக்காவை. சேர்ந்த ஹிண்டன் பார்க் நிறுவனம் கடந்த 24-ந்தேதி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பங்கு சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை முடக்கி இருந்தனர்.

    இந்த நிலையில் அதானி குழும விவகாரத்தால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

    அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் மற்றும் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மகுவா மைத்ரா உள்ளிட்ட எம்.பி.க்கள், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் கலந்து கொண்ட னர்.

    அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுடமை வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது பற்றியும், கடன் வழங்கி இருப்பது குறித்தும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி குழும விவகாரத்தை கிளப்பினார்கள்.

    அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 2 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.

    மேல்சபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

    எதிர்க்கட்சிகள் கோரிக்கையை துணை ஜனாதிபதியும், அவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஏற்க மறுத்தார். இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    அதானி குழும மோசடி விவகாரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே 2 நாட்கள் முடங்கி இருந்தன. இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

    ×