search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும்.
    • பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, புதிய கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதுடெல்லி:

    மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. ராஜபாதை சீரமைப்பு மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் ஆகிய புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய பாராளுமன்றம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும். மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, புதிய கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்று இருக்கும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

    • 2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும்.
    • அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது.

    புதுடெல்லி:

    2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:-

    நானும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். எனவே, அவர்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எனக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய வரியையும் விதித்தது இல்லை. நடுத்தர மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அது இனியும் தொடரும் என்றார்.

    இதன் மூலம் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் பட்ஜெட்டில் இருக்காது என்பதை அவர் சூசகமாக தெரிவித்தார். எனினும், வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பது தொடர்பாக அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், '100 பொலிவுரு நகரங்களையும், 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவை திறம்பட செயல்பட முடியும். மேலும், அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.

    2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும். இதுவே அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது. கொரோனா தொற்று பிரச்சினைக்கு நடுவில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். வங்கிகளின் வாராக் கடன் அளவும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது' என்றார்.

    விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார்.

    பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், "17-வது மக்களவையின் 11-வது தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடையும். இதைத் தொடர்ந்து, மார்ச் 13-ந் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடும். பாராளுமன்றத்தின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், 'டெல்லியில் வரும் 31-ந் தேதி மாநிலங்களவை கூடுவதற்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலங்களவையின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதி நிறைவுபெறுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
    • மக்களவை கூட்டம் வரும் 29ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது.

    ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வந்தது. இதையடுத்து, பாராளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையே (இன்றுடன்) முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் தகவலை உறுதி செய்யும் வகையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    29ம் தேதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த அறிவுரை
    • முக கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்.

    சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டினார்.
    • கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன.

    இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரும்படி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மாநிலங்களவை இன்று கூடியதும், பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பினர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியது நமது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நிர்வாகம், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் அவைத்தலைவர் குறிப்பிட்டார்.

    இதேபோல் மக்களவையிலும் உறுப்பினர்கள் மாஸ்க் அணியவேண்டும் என அவைத்தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று பெரும்பாலான உறுப்பினர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். 

    • புதிய வகை கொரோனா பரவியதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    உலகளவில் புதிய வகை கொரோனா பரவியதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.

    எல்லையில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியான தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் கடந்த 9ந்தேதி ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன.

    அதேநேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இரு அவைத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    சீன எல்லை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இன்றும் ஒத்திவைப்பு நோட்டீசை கொடுத்தது. காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இதை அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு நிபந்தனை விதிக்கப்பட்ட பிரச்சினையும் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபா நாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • பாராளுமன்றத்தில் சிறப்பு சிறுதானிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, நேற்று முன்தினம் ராஜஸ்தானில் பா.ஜ.க. பற்றி கூறிய விமர்சனம், மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நேற்று புயலை கிளப்பின.

    இதனால் காரசார மோதல்களுக்கு பஞ்சம் இல்லை.

    ஆனால் மற்றொரு புறம் ஒரு சுவாரசிய சம்பவமும் பாராளுமன்றத்தில் நேற்று அரங்கேறியது. அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்றத்தில் சிறப்பு சிறுதானிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த விருந்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து சிரித்துப்பேசியவாறு நவதானிய உணவுகளை விரும்பி ருசித்து சாப்பிட்டனர்.

    இது ஒரு மாறுபட்ட காட்சியாக அமைந்தது.

    இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருந்ததாவது:-

    2023-ம் ஆண்டினை நாம் சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட தயாராகி வருகிறோம். இந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் ருசிமிக்க மதிய உணவினை சாப்பிட்டோம். இதில் சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. இதில் கட்சி வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    இதையொட்டிய படங்களையும் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு தினை உணவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்.
    • தினை உற்பத்தி செய்யும் விவசாயிகளில் 85% மேலானோர் சிறு விவசாயிகள்.

    இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அடுத்த ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.  அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தினை வகை உணவுகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் விளைவிக்கப்படும் சிறுதானிய பயிர்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தினை உள்ளிட்ட சிறுதானிய பயிர் உற்பத்தி செய்யும் விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் மேலானோர் சிறு விவசாயிகள் என்ற பிரிவில் உள்ளதால், இந்த தானியங்களின் நுகர்வு உலக அளவில் அதிகரிப்பதுடன் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உருவாகும் என்று மத்திய அரசு கருதுகிறது. 


    இந்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் விதவிதமான தினை வகை உணவுகள் இடம் பிடித்திருந்தன. பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் உள்பட பல்வேறு தரப்பினர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில், 2023-ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக நாம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தரமான தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் இதில் பங்கேற்றதைக் கண்டது சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ராஜஸ்தானின் அல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது, அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

    அவர் பேசும்போது, "காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? இருப்பினும், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம்" என்றார்.

    கார்கே, பாஜகவை தாக்கி பேசும்போது நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கார்கே கூறிய கருத்திற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    நாகரிமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், பாராளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார். இந்த விவகாரம் காரணமாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த கருத்து பாராளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டதாக கூறினார். நாட்டின் 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசியிருக்கலாம். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்றும் அவைத்தலைவர் கூறினார்.

    இதற்கிடையே தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 

    • சீன அத்துமீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
    • அவை நடவடிக்கையை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ்

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. 

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

    ×