search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பாராளுமன்ற தேர்தலில் பாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி என்று வன்னியர் சங்க தலைவர் விஜிகே மணிகண்டன் கூறியுள்ளார். #pmk #parliamentelection #vanniyarsangamleader

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க.வுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதன் மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்தியுள்ளார்.


    கடல் இருக்கும் வரை, உலகம் இருக்கும் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக, தற்போது எதற்காக கூட்டணி அமைத்துள்ளது?. அ.தி.மு.க ஆட்சியில் 22 துறைகளில், ரூ.70ஆயிரம் கோடி ஊழல் என்று புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், இப்போது எப்படி ஊழலை ஏற்றுக் கொண்டார்?

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுவித்தால் மட்டுமே கூட்டணி என்று பா.ஜனதாவிடம் தற்போது ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மது ஒழிப்பு போராட்டம் செய்த அன்புமணி, தற்போது படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கோருவது ஏன்?

    இனியும் ராமதாசையும், அன்புமணியையும் வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் பா.ம.க தோற்கும்.

    அன்புமணி எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார். இனி வன்னியர்கள் பெயரைச்சொல்லி ராமதாசும், அன்புமணியும் வாக்கு சேகரிக்கக்கூடாது .

    இவ்வாறு அவர் கூறினார். #pmk #parliamentelection #vanniyarsangamleader 

    தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். மிகப்பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அ.தி. மு.க., பா.ஜ.க., பா.ம.க. இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    இது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. பக்கம் எல்லாம் வெட்டு குத்து என்று சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.

    தி.மு.க. கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. மதிமு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது.

    எங்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய தே.மு.தி.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் சுமுகமாக இணைப்பு நடந்திருக்கிறது. இது கட்டாய திருமணம் போல இந்த கூட்டணி என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

    தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறுகிறார். உண்மையிலேயே இயல்பான அன்பான நட்புறவுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டணி. இதை பார்த்தவர்கள் அனைவரும் பதட்டப்படுகிறார்கள். அந்தப் பதட்டத்தின் விளைவாக அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.

    28-ந் தேதி அனைத்து மண்டல தலைவர்களுடனும் மோடி காணொளிக்காட்சி மூலம் பேசுகிறார். தமிழ் நாட்டில் மட்டும் 600 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection

    மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். #BJP #Amitshah #ADMK #OPS
    அவனியாபுரம்:

    மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.

    பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார்.

    அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் காத்திருந்து சந்தித்து பேசினார்.



    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என இதுவரை தெரியவில்லை.

    பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திடம், அமித்ஷா கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. #BJP #Amitshah #ADMK #OPS
    அ.தி.மு.க., பா.ம.க. அமைத்துள்ளது மக்கள் நல கூட்டணி அல்ல, பண நல கூட்டணி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். #DMK #MKStalin #ADMK #PMK
    சென்னை:

    சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த பா.ம.க. இன்று தேர்தலுக்காக அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

    அ.தி.மு.க., பா.ம.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் துரோக கூட்டணியாகும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிர்வாகம் நடத்த தெரியுமா? என்று கேட்டவர் டாக்டர் ராமதாஸ், ஊழல் ஆட்சி என்று அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி பட்டவர்த்தனமாக பேசிவிட்டு இப்போது கூட்டணி அமைத்துள்ளார்.



    எனவே இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி அல்ல பண நல கூட்டணி.

    தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கடல் தாண்டி புகழ் கொடி நாட்டினார்கள். ஆனால் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் கடல் தாண்டி ஊழல் செய்துள்ளதை பார்க்கிறோம்.

    அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் சிறுசேரியில் ஒரு கட்டிடம் கட்ட இந்த ஆட்சியில் அனுமதி கேட்டனர். இதற்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது.

    இப்படி பணம் கொடுத்தது தவறு என்று அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

    எனவே இதுபற்றி முறையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்துள்ளோம். 1 வாரம் பொறுத்திருப்போம். இதில் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, வி.பி.துரைசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி, துர்கா ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, பல்லாவரம் இ.கருணாநிதி, கும்மிடிப்பூண்டி வேணு, ஏ.டி.மணி, மருதுகணேஷ், மணல் ரவி, ஜி.ஏழுமலை, யூ.நேதாஜி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    மண விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் வரவேற்றார். #DMK #MKStalin #ADMK #PMK
    தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #DMDK #Vijayakanth #ADMK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் பெரிய கூட்டணிகள் உருவாகி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பிடித்துள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய இருகட்சிகளும் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் தொகுதிகள் எண்ணிக்கை ஒதுக்கீட்டில் சுமூக முடிவு எட்டப்படாததால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகள், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் மீதம் 27 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த 27 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடத்தை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த 4 கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு அ.தி.மு.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    சிறிய கட்சிகளுக்கு 4 இடங்கள் ஒதுக்கியது போக மீதம் 23 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் களம் இறங்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் எஞ்சி இருப்பது 3 தொகுதிகள்தான்.

    எனவே அந்த 3 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க. தலைவர்களிடம் அ.தி.மு.க. தலைவர்கள் கூறியுள்ளனர். இது தே.மு.தி.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது. தே.மு.தி.க.வினர் முதலில் 14 தொகுதி வேண்டும் என்றனர். பிறகு 9 தொகுதி கேட்டனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா தரப்பில் அவை ஏற்கப்படாததால் நேற்று தே.மு.தி.க. தலைவர்கள் சற்று இறங்கி வந்தனர். பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டிருப்பது போல 7 தொகுதிகளாவது தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் இதையும் அ.தி.மு.க. ஏற்கவில்லை.

    மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று அ.தி.மு.க. சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை நேற்று மதியம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் திட்டம் இல்லை என்று தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. 3 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    1. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை தவிர்த்து விட்டு டி.டி.வி.தினகரன் அல்லது கமல்ஹாசனுடன் கூட்டணி சேருவது.

    2. யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடுவது.

    3. அ.தி.மு.க. தரும் தொகுதிகளைப் பெற்று கொண்டு, அந்த கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவது.

    மேற்கண்ட மூன்று விதமான முடிவுகளில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதையே பெரும்பாலான தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே அ.தி.மு.க. தலைவர்களிடம் பேசி, அதிகபட்சம் எவ்வளவு தொகுதிகளை கேட்டுப் பெற முடியுமோ அவ்வளவு தொகுதிகளை வாங்கலாம் என்ற மன நிலைக்கு தே.மு.தி.க.வினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்களும் சற்று இறங்கி வந்திருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது பற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. மூத்த மந்திரி ஒருவரும் இதை உறுதிப்படுத்தினார்.

    இதை அடிப்படையாக கொண்டு தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்றும் அந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

    அ.தி.மு.க. ஒதுக்கி கொடுக்கும் 5 தொகுதிகளை தே.மு.தி.க. ஏற்குமா, என்று பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அந்த 5 தொகுதிகளும் நாங்கள் விரும்பும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

    தே.மு.தி.க.வின் இந்த நிபந்தனையை அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டால் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை இதில் இறுதி கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது.  #DMDK #Vijayakanth #ADMK

    மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    சேலம்:

    சேலம் மாவட்டம் கருமந்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் புரட்சி பயணத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடவா போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட, அவரது படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி வைக்கின்றனர்.

    ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக தனித்து நின்று தான் 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 80 சதவீத இளைஞர்கள் நம்மோடு இருக்கிறார்கள். மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மகத்தான வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் நிறைய கட்சிகள் காணாமல் போகும்.

    தொடர்ந்து வாழப்பாடியில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் எந்த தேசிய கட்சியுடனும் அ.ம.மு.க. கூட்டணி இல்லை. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எப்படி எங்களது கவனம் உள்ளதோ? அதே போல தான் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் எங்களது கவனம் இருக்கும். 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க பார்க்கிறார்கள் என்றார். #TTVDhinakaran

    அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இழுபறி முடிவுக்கு வருமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் அல்லது ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் இன்னும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #ADMK #NRCongress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, சென்னையிலுள்ள அதிமுக அலுவலகத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை வந்தார். கூட்டணி பற்றி அதிமுக நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேறி தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுதொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், அதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். #LSpoll #ADMK #NRCongress
    அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #bjp #admk #dmdk #parliamentelection

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதீய ஜனதா இடையே ஏற்பட்ட கூட்டணி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சியினரும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் உள்ளனர்.

    அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன். நாட்டின் நலன் கருதி விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்.


    அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை நான் கூட்டணியாகவே பார்க்கிறேன்.

    தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். இது பற்றி கட்சியின் தலைமை பேசி முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி வர இருக்கிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைக்கவுள்ளார்.

    இதையடுத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வதிபுரம் மேம்பாலத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். #ponradhakrishnan #bjp #admk #dmdk #parliamentelection

    அதிமுக அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார். #kanimozhimp #admk #centralgovernment

    உடன்குடி:

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. பொருளாதார வளர்ச்சி, சிறு-குறு தொழில் பாதிப்பு, சிவகாசியில் பல லட்சம் பேர் வேலை இழப்பு என பல வழிகளில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் பின்தங்கியதற்கு காரணமான பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. இதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு உறுப்பினருக்கு 10 ஓட்டுகள் வீதம் சேகரிக்கவேண்டும். தமிழகத்தில் வாக்காளர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். அவர்களை வாக்குச் சாவடியில் சேர்ப்பது உங்கள் கடமை. ஆளும் கட்சியினரின் உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் களப்பணியாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhimp #admk #centralgovernment

    பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. கதை முடிந்துவிடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #admk #parliamentelection #dmk

    மதுரை:

    மதுரை மாநகர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆனால் இப்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் பொய்யை மக்களிடம் விதைத்து வருகிறார். இதனை மக்கள் நகைப்பாக பார்க்கிறார்கள்.

    அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. அணியில் சேர்ந்துள்ளன. இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

    இந்த தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. கதை முடிந்துவிடும். அதனை அ.தி.மு.க. தொண்டர்கள் முடித்து வைத்தார்கள் என்ற பெருமை நமக்கு உருவாகும் வகையில் நாம் உழைக்க வேண்டும்.

    புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவை வருகிற 24-ந்தேதி சிறப்பாக அனைத்து வார்டுகளிலும் ஒலிபெருக்கி அமைத்து சாதனை பாடல்களை ஒலிபரப்பி கொண்டாட வேண்டும். கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    வருகிற 27-ந்தேதி பழங்காநத்தத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 50 ஆயிரம் பேர் திரண்டு தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அணி செயலாளர்கள் இந்திராணி, தமிழ்செல்வன், ராஜீவ்காந்தி, அரவிந்தன், மாணிக்கம்.

    பகுதி செயலாளர்கள் பிரிட்டோ, அண்ணா நகர் முருகன், ஜெயவேல், மாரியப்பன், வட்ட செயலாளர்கள் கே.வி.கே. கண்ணன், பஜார் துரைப்பாண்டி, தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன், தாஸ், முத்துவேல், ரவி, நல்லுச்சாமி, கணேசன், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்பட்டத்தால் 7 தமிழர்களை விடுவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்து உத்தரவு பிறப்பிக்காமல், ஆளுநர் தொடர்ந்து கெட்டியான அமைதி காப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 161-வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ், மாநில அரசு இந்த 7 பேரையும் முன்விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால், அதை தமிழக ஆளுநர் எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.

    ஆனால் ஒரு அமைச்சரவை தீர்மானத்தை இத்தனை மாதங்களாக ஆளுநர் நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டு இருப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை; மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநருக்கு அறிவுறுத்தவும் கோரவில்லை.

    தற்போது பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர், 7 தமிழர்களின் விடுதலை, நீட் தேர்வு மசோதாக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடுவது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிபந்தனை வைத்திருக்கலாம்.

    ஆனால் அப்படியெல்லாம் நிபந்தனை வைத்திருக்கிறாரா என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வோருடன் கூட்டணி என்று தொடக்கத்திலிருந்து அறிவித்து, மாநில உரிமைகளை நசுக்கி, தமிழக மக்களை நாசப்படுத்தும் திட்டங்களை வேண்டுமென்றே திணித்த பா.ஜ.க.வுடன் இப்போது தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் முதல்-அமைச்சர், ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தாவது முதலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர் பார்க்கிறார்கள்.

    எனவே, இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சரவை தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு, பல்லாண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin
    ×