search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலி"

    புலி அணையில் குளித்த காட்சியை படகில் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பைக்காரா அணை. வனப்பகுதிக்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையை சுற்றி பார்க்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    வனப்பகுதிக்குள் இருப்பதால் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அப்படி கரையின் ஓரமாக நின்று தண்ணீர் குடிக்கும் வனவிலங்குகளை அங்கு படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் பிடித்து மகிழ்வார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்காரா அணைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அணையின் நடுவே புலி ஒன்று உற்சாகமாக தண்ணீரில் மூழ்கி குளித்து, ஆனந்தமாக விளையாடி கொண்டிருந்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக புலி அணையில் உற்சாக குளியல் போட்டது.

    படகு தான் இருக்கும் இடம் நோக்கி வருவதை உணர்ந்ததும் புலி உடனடியாக அணையில் இருந்து வெளியேறி வனத்திற்குள் சென்று மறைந்து விட்டது. புலி அணையில் குளித்த காட்சியை படகில் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர். உடனடியாக தங்கள் செல்போனை எடுத்து அதில் புலி உற்சாக குளியல் போட்டதை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து கொண்டனர். பின்னர் அதனை தங்களது சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் பரப்பினர். தற்போது இந்த வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது.


    மசினகுடியில் பிடிபட்ட ஆட்கொல்லி புலிக்கு மைசூரு மறுவாழ்வு மையத்தில் 27 நாட்களாக தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் பூரண குணமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் கூடலூர் வனச்சரகத்தில் தேவன்- 1 பகுதியில் 1 ஆண்டுக்குள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 4 பேரை புலி தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என கூடலூர், மசினகுடி பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 3 வாரங்களுக்கும் மேலாக ஆட்கொல்லி புலியை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பிடிக்க முடியவில்லை. பின்னர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் இரும்புக் கூண்டில் அடைத்தனர். அப்போது புலியின் உடலில் காயங்கள் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆண் புலிகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக ஆட்கொல்லி புலி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று 27- வது நாளாக ஆட்கொல்லி புலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை காலத்தில் உயிருடன் கோழிகள் மற்றும் மாட்டு இறைச்சிகள் புலிக்கு உணவாக வழங்கப்பட்டன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள புலி இரையை நன்கு சாப்பிட்டு வருகிறது. மேலும் அதன் உடலிலுள்ள காயங்களுக்கு கர்நாடக வன கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் புலியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மசினகுடி வனத்தில் பிடிபட்ட புலி தொடர் சிகிச்சையால் பூரண குணம் அடைந்து உள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றனர்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் பெண் புலியை ஆண் புலி அடித்து சாப்பிட்ட விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. #MP #TigerDeath
    போபால்:

    மிருகங்கள் தனது இனத்தை அடித்து கொன்று சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் புலிகள் இனத்தில் அத்தகைய நடைமுறை இல்லை. ஆனால் அபூர்வமாக புலி தனது இனத்தை சேர்ந்த மற்றொரு புலியை அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் முந்திதாதர் என்ற இடத்தில் காங்கா தேசிய பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி யானைகள் உள்ளிட்ட பல வகையான மிருகங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அங்கு இனப் பெருக்கத்திற்காக ஒரு பெண் புலியை ஆண் புலியுடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் புலியை அந்த ஆண் புலி அடித்துக் கொன்றது.

    மேலும் அதன் இறைச்சியை சாப்பிட்டது. பூங்கா ஊழியர்கள் பார்த்தபோது பெண் புலியின் மண்டை ஓடும், அதன் கால்களின் பாதங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது.

    இந்த தகவலை தேசிய பூங்காவின் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    ஒரு புலி மற்றொரு புலியை அடித்துக்கொன்று சாப்பிடுவது அபூர்வ சம்பவமாகும். இத்தகைய சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. சில சமயங்களில் தனது குட்டியை புலிகள் தின்ற சம்பவம் நடந்தது உண்டு.

    ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு புலி அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்தது இல்லை என்றும் அவர் கூறினார்.

    கொல்லப்பட்ட பெண் புலியின் எஞ்சிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே கொடூரமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும்போது பசியின் காரணமாக மற்றொன்றை அடித்துக் கொன்று சாப்பிடும் சம்பவம் நடந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    மத்தியபிரதேசத்தில் அதிக புலிகள் வாழ்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு இது புலிகள் மாநிலம் என அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் 20 சதவீதம் புலிகள் இங்கு உள்ளன. உலக அளவில் 10 சதவீதம் புலிகள் இருக்கின்றன. #MP #TigerDeath
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலிகள் காப்பகத்தில் நுழைந்த கிராம மக்கள், கொடூரமாக தாக்கி புலி ஒன்றை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UP
    லக்னோ:

    இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேவேளை மனிதர்களை கொன்று உண்ணும் புலிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவற்றை வனத்துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதும் வழக்கம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சால்டவ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை தடுக்க வந்த காப்பகத்தின் பாதுகாவலரை தாக்கிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 10 வயது பெண் புலியை அங்கு இருந்த ஒரு ட்ராக்டரை கொண்டு ஏற்றியுள்ளனர். அதோடு விட்டுவிடாமல், அதனை கட்டையால் சாகும்வரை தாக்கி கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட பெண் புலி இதுவரை எந்த மனிதரையும் தாக்கியது இல்லை என்றும், கிராம மக்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு புலியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். புலியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். #UP
    விஷம் வைத்து புலியை கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி வனச்சரகம் தெங்குமரஹாடா பிரிவு வனப்பகுதியில் இறந்து கிடந்த எருமையின் உடலில் விஷம் தடவப்பட்டு இருந்தது. அதை சாப்பிட்ட புலி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்த எருமையின் உடலில் விஷம் வைத்து புலியை கொன்றது தெங்குமரஹாடா சித்தி ராம்பட்டியை சேர்ந்த திம்மையன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி திம்மையனை வனத்துறையினர் கைது செய்தனர்.

    இது சம்பந்தமான வழக்கு கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வனச்சரகர்கள் செல்வம், சக்திவேல், வனவர் நாகேஷ், வனக்காப்பாளர் கண்ணன், ஆகியோர் அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோத்தகிரி நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், குற்றம் சாட்டப்பட்ட திம்மையனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராத தொகையை கட்டதவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார். 
    பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் பிற விலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி கடந்த 24-ந்தேதி பழனி, கொடைக்கானல் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து பழனி வனத்துறையினரிடம் கேட்ட போது, பாலசமுத்திரம் காப்புக்காடு, கோணவாய்க்கால் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களிலும் அவற்றின் நகக்கீரல்கள் பதிவாகி இருந்தன. அவற்றின் மூலம் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    அதே போல் புலிகளின் கால்தடங்களும் வனப்பகுதியில் பதிவாகி உள்ளது. பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்டவைகளையும் நேரில் பார்த்து கணக்கெடுத்துள்ளோம்.

    கணக்கெடுப்பின் முழு விவரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் பழனி, கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றனர். #tamilnews
    குன்னூரில் ஊருக்குள் உலா வந்த புலியை பிடிக்க வன துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வன பகுதிகளாகும். இங்கு காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி, காட்டுபன்றி, யானை, புலி போன்ற மிருகங்கள் வசித்து வருகின்றன.

    இவைகள் அடிக்கடி குன்னூர் நகருக்குள் வந்து பொது மக்களை அவ்வபோது தாக்கி செல்கின்றன. தற்போது குன்னூர் நகர பகுதியான ஆரஞ்ச் குரோவ், ஹவுசிங் யூனிட், வண்ணாரபேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் வாழும் அதிக குடியிருப்புகள் உள்ளன. மேலும் தனியார் பள்ளியும் மகளிர்கான தனியார் பெண்கள் விடுதியும் உள்ளது.

    இந்த பகுதியில் இரவு நேரங்களில் தினந்தோறும் புலி ஒன்று உலா வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சி.சி.டி கண்காணிப்பு கேமிராவில் புலி நடமாடுவது பதிவாகி இருந்தன. மேலும் அங்குள்ள ஒரு நாயை அடித்து கொன்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை பற்றிபல முறை வனதுறைக்கு தகவல் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆரஞ்சு குரோவ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பங்களாவில் இரவு நாய் குரைத்து கொண்டு இருப்பதை என்னவென்று இரவு நேர காவலாளி டார்ச் லைட் வெளிசத்தில் பார்துள்ளார். நாயின் கூண்டின் முன்பு பெரிய புலி ஒன்று நாயை பார்த்துகொண்டே படுத்து இருப்பதை பார்த்த

    அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் வனதுறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. வன துறையினர் அந்த பகுதியில் புலியை பிடிக்க கூண்டில் கோழியை வைத்துள்ளனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் பந்தவ்கர் புலிகள் காப்பக வனச்சரகத்தில், கிராமவாசி ஒருவர் தன்னை தாக்கிய புலியின் வாயில் கோடாரியின் கைப்பிடியை நுழைத்து சாமர்த்தியமாக தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் பர்பஸ்பூர் பகுதியில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பக வனச்சரகத்தில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை சேகரிப்பதற்காக கிராமவாசிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது, ராகேஷ் பாய்கா என்பவரை புலி ஒன்று தாக்கியது.

    புலியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தன் கையிலிருந்த கோடாரியின் கைப்பிடி பகுதியை புலியின் வாயில் வைத்து, புலி தன்னை கடித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டுள்ளார். ராகேஷின் அலறலை கேட்ட இதர கிராமவாசிகள் அங்கு வந்து புலியை விரட்டியுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து வனச்சரக அதிகாரி விஜய் சங்கர் கூறுகையில், புலியின் தாக்குதலினால் தாடையில் முறிவு ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் ராகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
    ×