search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. தேர்தல் நெருங்கும் போது தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அந்த கட்சிகளின் தலைவர்கள் பரபரப்பு கிளப்புவது வாடிக்கை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் அப்படி பரபரப்பு கிளப்பி உள்ளார்.

    கருப்பு முருகானந்தம் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல வி‌ஷயங்களுக்கு அவரிடம் பேசி இருக்கலாம். எனக்கு தெரிந்து இது ஒரு நாள் செய்திக்கு பயன்படலாம். மற்றபடி எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.


    குமரி மாவட்ட அரசியல் பற்றி தினகரனுக்கு தெரியாது. என்னிடம் கேட்டிருந்தால், கன்னியாகுமரி தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறி இருப்பேன்.

    தினகரனுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர் மத்திய மந்திரிகளை சந்திக்க முயற்சித்ததாகவும், அது நடக்காத விரக்தியில் இப்படி பேசி இருக்கலாம் என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

    தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பழகுவது உண்டு. சமீபத்தில் அவர் கட்சி தொடங்கிய பின்பு நான் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் டோக்கன் கொடுத்தார். நான் கடை வைக்கவில்லை. கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுப்பார்கள்.

    மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள மக்கள் என்னை வரவேற்றனர். நாங்கள் 1998 -க்கு பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்று இருக்கிறோம்.

    வடகிழக்கு மாகாணத்தில் 90 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு இப்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan #TTVDhinakaran
    ஊழல் செய்ய முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புவதாக பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
    பாட்னா:

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பகல்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனியும் சிலரால் ஊழல்செய்ய முடியாது. வாரிசு அரசியலுக்கு முடிவுக்கு வந்து விடும். இதனால் அச்சம் ஏற்பட்டுள்ள அவர்கள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காது. அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். இட ஒதுக்கீடு இனி இருக்காது என்றெல்லாம் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

    நான் மக்களின் காவலன். அம்பேத்கார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை நான் மேலும் வலுப்படுத்தி காப்பாற்றுவேன்.

    நமது பாதுகாப்பு படையினருக்குள்ள அதிகாரத்தை பறித்து விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால் பாரதிய ஜனதா அரசு நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளை ஒடுக்க அனைத்து அதிகாரங்களையும் பாதுகாப்பு படைக்கு வழங்கி உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ஸ்மிரிதி இரானி தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தனது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து பூஜை நடத்தினார்.



    அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.  அப்போது ஸ்மிர்தி இரானியுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.

    இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.

    இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.

    125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

    இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

    இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்.


    இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

    ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
    பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். #LoksabhaElections2019 #PMModi
    மதுரை:

    நாட்டின் 17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி கேரளா, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இரவு பிரசாரத்தை முடித்து விட்டு சிறப்பு விமானத்தில் மதுரை வரும் பிரதமர் மோடி பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் (13-ந்தேதி) காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட 5 தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்திற்கு மோடி செல்கிறார். அங்கு அம்மா பூங்கா அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பரமக்குடி தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பிரதமர் கலந்து கொள்ளும் ஆண்டிப்பட்டி, ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தையொட்டி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


    இந்த கூட்டங்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு கருதி பிரதமரின் பிரசார நேரம் மாற்றப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிரசாரத்திற்காக மதுரை வரும் பிரதமர் மோடி முதன் முறையாக பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதையொட்டி அந்த பகுதி முழுவதுமே மத்திய-மாநில போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றப்படுகிறது. #LoksabhaElections2019 #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாகிஸ்தானுக்கு விழும் ஓட்டாகும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #ImranKhan #LokSabhaElections2019 #BJP #Congress
    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை  நடத்த வாய்ப்புண்டு என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 



    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மோடியின் கூட்டணி அமைத்துள்ளது. மோடிக்கு போடும் ஒட்டு பாகிஸ்தானுக்கு அளிக்கும் ஓட்டு ஆகும்.

    மோடி அவர்களே உங்களுக்கு முதலில் நவாஸ்செரீப் நண்பராக இருந்தார். தற்போது இம்ரான் கான் உங்களுக்கு சிறந்த நண்பராகி விட்டார். உண்மை இப்போது வெளிவந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.  #ImranKhan #LokSabhaElections2019 #BJP #Congress
    ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Loksabhaelections2019 #BJP #PMModi
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகே பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது:-

    வருகிற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வரும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    10.45 மணிக்கு பிரதமர் பிரசார மேடைக்கு வருகை தருகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP
    கராச்சி:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாட்டைச்  சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் அடுத்து அமையவுள்ள இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம். பா.ஜ.க. ஒரு வலதுசாரிக் கட்சி - வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும்.



    இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்று நான் பார்க்க நினைத்தேன், முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த இந்திய முஸ்லிம்களை அவர் அறிந்திருந்தார், தீவிர ஹிந்து தேசியவாதத்தால் இப்போது கவலைப்படுகிறார்.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு நில உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 35-வது பிரிவு அகற்றுவதற்கான பா.ஜ.க. வாக்குறுதி, ஒரு முக்கிய கவலையாக இருந்தது என்று கூறினார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP
    பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து பேசியது அது பா.ஜனதாவுக்கு மறைமுக ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. #KamalHaasan #bjp #rajinikanth

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார்.

    புதிய கட்சி ஆரம்பிக்கும் போது, அதில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை, “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்.

    ஆனால் ரஜினி எதிர் பார்த்தது போல உறுப்பினர்கள் சேர்க்கை திருப்திகரமான அளவுக்கு அமைய வில்லை. இதனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தாமதம் ஆனபடி உள்ளது.

    இதற்கிடையே ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு அவர் நடிப்பில் காலா, 2-0, பேட்ட ஆகிய 3 படங்கள் வெளியானது. அந்த மூன்று படங்களும் சுமாராக ஓடிய நிலையில் அடுத்து “தர்பார்” என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்று கூறி வரும் ரஜினி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து இருக்கிறார். அதோடு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருக்கிறார்.

    இதற்கிடையே ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய கேள்வி எழுந்தபோது, பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வர வேற்று இருக்கிறார்.

    இது தொடர்பாக ரஜினி கூறுகையில், “நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறி வருகிறேன். நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய திட்டமாகும். எனவே இந்த திட்டத்துக்கு, “பகீரத யோஜனா” என பெயர் சூட்டும்படி ஒருமுறை வாஜ்பாயை சந்திக்கும்போது கூறினேன்.

    இப்போது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க புதிய ஆணையம் அமைப்போம் என்று கூறியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் முதலில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். இதனால் வறுமை பாதியாக குறைந்து விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்து மூலம் அவர் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்தப்படுகிறது.

    ரஜினி நேற்று பேட்டி அளித்த போது, “கமல்ஹாசன் உங்களிடம் ஆதரவு கேட்டாரே... உங்கள் முடிவு என்ன?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, “எனது முடிவை நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.

    இதையடுத்து, “உங்கள் ஆதரவை கமல்ஹாசன் கட்சியினர் எதிர்பார்க்கிறார்களே...?” என்று நிருபர்கள் விடாமல் ரஜினியிடம் கருத்து கேட்டனர். அதற்கு ரஜினி, “இதுபற்றி பேசி வி‌ஷயத்தை பெரிதாக்கி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்” என்று கூறியபடி புறப்பட்டு சென்று விட்டார்.


    ரஜினியின் இந்த பதில் மூலம், அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் 19 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நடிகர் கமல்ஹாசன் தனக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தார். இதுபற்றி சமீபத்தில் கமல்ஹாசன் கூறுகையில், “ரஜினி எங்களை ஆதரிப்பதாக கூறினார். இதுபற்றி அவர் தான் அறிவிப்பு வெளியிட வேண்டும். நாங்கள் தொடர்ந்து அவரிடம் இது பற்றி கேட்க முடியாது” என்று கூறியிருந்தார்.

    ஆனால் ரஜினியோ நேற்று திட்டவட்டமாக கமல் ஹாசனின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இது கமல்ஹாசனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து வரவேற்றதற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகை குஷ்பு மற்றும் இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #KamalHaasan #bjp #rajinikanth

    டெல்லியில் குர்ஜார் இனத்தின் தலைவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். #Gurjarleader #BJP
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில்   ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் தேசிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில் குர்ஜார் இன அமைப்பின் தலைவரான கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது மகன் விஜய் பைன்ஸ்லாவும் உடன் இணைந்தார்.



    இது குறித்து கிரோரி சிங் கூறுகையில், ‘காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் முதல் மந்திரிகளுடனும் பழகியுள்ளேன். இரு கட்சிகளின் கொள்கைகள் குறித்து நன்கு தெரிய வந்தது. அதன் பின்னர், பாஜக தலைவர்களிடமும், பிரதமர் மோடியிடம் அரிதான நல்ல குணங்கள் இருப்பதை உணர்ந்தேன். எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்’ என கூறினார்.

    இந்நிலையில் கிரோரி சிங் பைன்ஸ்லா இன்று  காலை பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பின்னரே தற்போது தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளார் எனவும், ராஜஸ்தானில் 25 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்லுவது உறுதி எனவும் ஜவடேகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Gurjarleader #BJP
    தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற அ.தி.மு.க.- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #LokSabhaElections2019 #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று அவர் பாளை, சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு இரவில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை அவர் தூத்துக்குடி வந்தார்.

    அவர் தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

    வருகிற 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அதையொட்டி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஓடிவந்துள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றென கருதி உழைக்கும் உன்னதமான இயக்கம் தி.மு.க.

    கலைஞர் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் வந்து வாக்கு கேட்டிருப்பார். இன்று அவரது மகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து மூச்சுவிட்டாலே போதும் ஓடிவிடுவார்கள் என்றுகூறிய வ.உ.சி. பிறந்த மண் இது.

    அனைத்து தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களை கலைஞரின் பிள்ளையாக கருதி வாக்களிக்க கேட்டு வந்துள்ளேன். இங்கு கலைஞரின் மகள், எனது தங்கைக்காக வாக்கு கேட்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கனிமொழி கவிஞர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர் என ஒவ்வொரு துறையிலும் தனிமுத்திரை பதித்தவர். சமூக போராளி, பாராளுமன்ற டைகர் என பட்டம் பெற்றவர். தூத்துக்குடியில் உங்களுடைய டைகராக அவர் போட்டியிடுகிறார்.

    மாநிலங்களவையில் அவர் ஸ்டெர்லைட் பிரச்சனை, நீட்தேர்வு விவகாரம், மரண தண்டனை ஒழிப்பு, மகளிர் இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட பல பிரச்சனைகளை வாதாடி, போராடி வெற்றி பெற்றுள்ளார். இவரை விட சிறந்த வேட்பாளர் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

    மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரே நிமிடம் ஏன்? ஒரு நொடியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்கு மற்ற தொகுதி மக்களை விட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முக்கிய கடமை உள்ளது.



    ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை துள்ளதுடிக்க சுட்டுக்கொன்ற அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தர வேண்டும். 100 நாட்களை கடந்து போராடிய மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் போது கலெக்டர் அழைத்து பேசியிருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது. மக்களை பழிவாங்கவே துப்பாக்கி சூடு நடத்தியது எடப்பாடி அரசு.

    ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எனவே இந்த கொலைகார எடப்பாடி அரசை மக்கள் தூக்கிஎறிய வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? எடப்பாடியா? தலைமை செயலாளரா? பிரதமர் மோடியா?. தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது பெண் ஸ்னோலினை சுட்டுக்கொன்றுள்ளார்கள். அவர் எழுதிய கவிதை புத்தகமாக வந்துள்ளது. காளியப்பன் என்பவரை சுட்டுக்கொல்லும்போது கடைசியில் சினிமாவில் நடிப்பது போல் நடிக்கிறாயா? என கேட்ட கொடுமை இணையத்தில் வந்துள்ளது.

    துப்பாக்கி சூடு நடந்ததும், தூத்துக்குடிக்கு வந்து காயம்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினேன். என் வாழ்நாளில் இப்படிப்பட்ட காட்சிகளை நான் பார்த்ததில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் இங்கு வந்தாரா? ஒரு அறிக்கையாவது விட்டாரா? பிரதமர் மோடி இரங்கல் செய்தியாவது கூறினாரா? வடமாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் அறிக்கைவிடுகிறார்.

    எனவே தான் அவரை பாசிச மனப்பான்மை கொண்ட பிரதமர் என கூறுகிறோம். இந்த வார்த்தையை தொடங்க காரணமாக இருந்தது தூத்துக்குடி. இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தபோது பாசிச மோடி ஆட்சி ஒழிக என கோ‌ஷமிட்ட மாணவி சோபியாவை அவதூறாக திட்டி, அவரை கைது செய்ய செய்தார். பாசிச மோடி ஆட்சி என்று மாணவி சோபியா சொன்னதை இன்று நாங்கள் பலமுறை சொல்கிறோம். மோடிக்கு எதிரான முழக்கத்தை முன்வைக்க காரணமாக இருந்த தமிழிசைக்கு நன்றி கூறுகிறோம்.



    தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடவில்லை, வசமாக மாட்டிக்கொண்டார். இங்குதான் ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, உப்பள பிரச்சனை, தீப்பெட்டி தொழில் பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளது. எதற்கும் குரல் கொடுக்காத தமிழிசை, என்ன தைரியத்தில் வந்தார். தோற்பதற்காக வந்தாரா? ஒருவேளை அவரது கட்சியினரே சதி செய்து இங்கு அனுப்பிவைத்தார்களா? ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று கூடங்குளம் போராட்டத்திலும் அடக்குமுறையை கையாண்டது இந்த அரசு.

    இந்திய பாதுகாப்புக்கு அனைத்தையும் செய்கிறோம் என்கிறார் மோடி. புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டார்களே, இதுதான் பாதுகாக்கும் லட்சணமா? உள்ளூர் பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் எப்படி கிடைத்தது? பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அளித்த புள்ளிவிபரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான மதக்கலவரங்கள், அதனால் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.

    இதில் நிறைய சம்பவங்கள் நடந்தது பா.ஜனதா செல்வாக்கு மிகுந்த உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆகும். அதைப்போன்று தமிழகத்திலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தி.மு.க. இருக்கும்வரை அது நடக்காது.

    கடந்த 20-ந்தேதியில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்கியது முதல் 3 கேள்விகளை கேட்டுள்ளேன். ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது? அது மர்மமரணம் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளார். அப்போது மர்ம மரணம் என்று கூறியவர் அதுதொடர்பாக விசாரணை கமி‌ஷனில் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். எனவே அவரது மரணம் குறித்து பேச எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு தகுதி உண்டு. இந்த கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை.

    கொடநாட்டில் கொள்ளை முயற்சியில் நடந்த கொலைகளுக்கு யார் பின்னணி? 3-வதாக பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்த கொடுமையை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவர்கள் யார்? உளவுத்துறை இதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? இதற்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனது இந்த 3 கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.

    இந்த ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமை மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா? தெரியும். அதனால் தான் அவரை பாசிச பிரதமர் என்கிறோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி தூக்கிஎறியப்படும். தமிழக சட்டமன்றத்தில் இப்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லீம் லீக் 1 என தி.மு.க. அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் அவை 119 ஆக உயரும். 117 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த மோடி எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் கனவுகள், கற்பனைகள் காகிதங்களில் கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. முதலில் மக்களின் தேவையை நிறைவேற்றியதாகவும், தற்போது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளீர்கள். இப்போது மக்களின் விருப்பம் நீங்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்பதுதான். தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.

    தி.மு.க. வெற்றி பெற்றதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூடுவோம். துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். தூத்துக்குடியின் விமான நிலையம் மேம்படுத்தப்படும். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். மழைக்காலங்களில் உப்பள தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்படும். மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். கடலோர பகுதிகள் புயல் பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சில பிரிவுகளை தேவேந்திரர் என அழைக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூலம் தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். கலைஞர் கூறியது போல நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK #MKStalin
    மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சிதைக்க பார்க்கின்றது என்று சீதராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். #sitaramyechury #bjp

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.

    மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.

    பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.

    ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×