search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.
    • கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்கு தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன்.

    தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை, கழக நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகிறார்கள்.
    • பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி கோவை வருவதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, பதவியேற்புக்கு பின் முதன்முறையாக இன்று மாலை கோவை வருகிறார்.

    கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகிறார்.

    இதற்காக இன்று பிற்பகல் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். அவருக்கு கோவை அவினாசி ரோடு விமான நிலைய பகுதியில் இருந்து காளப்பட்டியில் விழா நடைபெறும் மண்டபம் வரை அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பு அளிக்கிறார்கள்.

    அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி விழா மண்டபத்துக்கு செல்கிறார்.

    விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி கோவை வருவதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் இன்றைய விழாவில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அந்த பகுதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    விழா முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 250 முதல் 300 பேர் வரை பங்கேற்பார்கள் என தெரிகிறது.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (மார்ச்) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒருவர் பெயரில் மட்டுமே அனைத்து மனுக்களும் தாக்கலாகி இருந்ததால், போட்டியின்றி அவர் தேர்வாகும் நிலை ஏற்பட்டது.

    ஆனால், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்ததால், தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி காலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அன்று மாலையே அவர் கட்சியின் 7-வது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, வரும் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

    தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 7-ந் தேதி நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த கூட்டத்தில் மொத்தம் 250 முதல் 300 பேர் வரை பங்கேற்பார்கள் என தெரிகிறது. கூட்டத்தில், அ.தி.மு.க.வை பலப்படுத்துவது குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், கூட்டணி குறித்தும் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக செயற்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • பாரதிய ஜனதா என்பது ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்.
    • எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த ஊரான சேலத்துக்கு நேற்று வந்தார். வரும் வழியில் சென்னையில் இருந்து சேலம் வரை வழி நெடுக அவருக்கு அ.தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சேலம் மாவட்டம் தலைவசலில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் திருவாகவுண்டனூரிலும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சேலம் நெடுஞ்சலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    இதையடுத்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி சேலம் அண்னா பூங்கா வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா பூங்கா வளாகத்தில் ஏராளமனா தொண்டர்கள் திரண்டு எடப்பாடி பழனிசாமியை மேள தாளம் முழங்க மலர்தூவி வரவேற்றனர்.

    இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா என்பது தேசிய கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறிவிட்டனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணையவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதன் அடிப்படையில் அழைப்பு விடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது என்பது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல சோதனைகளை சந்தித்தார். பொதுவாக தலைவர்களாக இருப்பவர்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
    • கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக நீடித்து வந்த சட்ட போராட்டங்களை கடந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து பின்னர் வழியனுப்பி வைத்தனர்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

    கத்திப்பாரா மேம்பாலத்தில் நின்றபடியே எடப்பாடி பழனிசாமியின் கார் மீது பூக்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கிண்டி கத்திப்பாராவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தார். அப்போது சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஏசுபாதம், குமார், ஜானகிராமன், பழனிவேல், பரணிபிரசாத், தேன்ராஜா, கவுன்சிலர் சதீஷ்குமார், பேரவை மாநில துணை செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, எடப்பாடி பழனிசாமிக்கு கத்திப்பாரா சந்திப்பில் வைத்து வீரவாள் வழங்கினார். இவரது தலைமையில் பாலத்தில் இருந்து பூக்கள் தூவப்பட்டன. பகுதி செயலாளர் ஷேக் அலி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி விண்ணதிர கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதே போன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எல்லை பகுதிகளிலும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடம் சால்வை, மலர் மாலைகள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தாம்பரம், மாமண்டூர், மதுராந்தகம், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் திரளான அ.தி.மு.க. வினர், நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    பூரண கும்ப மரியாதையுடன், பூங்கொத்து கொடுத்தும் அனைத்து இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், சித்ரா, ராஜமுத்து, மணி ஆகியோர் முன்னிலையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி காரில் சேலம் செல்கிறார். சேலம் திருவாகவுண்டனூர் ரவுண்டானாவில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    • அ.தி.மு.க.வை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது.
    • அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும்.

    சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.

    அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும்.

    அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அ.தி.மு.க. தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். ஆண்டவனால் படைக்கப்பட்ட தொண்டன் அதிமுக தொண்டன்.

    இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். அவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. நம்மைத்தான் வாரிசுகளாக பார்த்தார்கள்.

    அ.தி.மு.க.வை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும்.

    அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும். வருகிற பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல்.

    அ.தி.மு.க.விற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்.

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டம், அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜனநாயக மாண்புகளைக் காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
    • மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக என்னை, ஏகோபித்த ஆதரவோடு ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு கிளைக் கழகச் செயலாளராக, நான் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், எனது உழைப்பையும், நேர்மையையும் அங்கீகரித்து இன்று "கழகப் பொதுச்செயலாளர்" என்கிற உயர் உச்ச பொறுப்பிலே அமர்த்தி இருக்கிறது. இது, எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமல்ல; நம்முடைய கழகம் மக்களாட்சித் தத்துவத்திற்கு கொடுத்திருக்கின்ற அங்கீகாரம். நாட்டின் கடைசி மனிதனுக்கும் அதிகாரத்தில் பங்கு உண்டு என்பதை, நம்முடைய கழகம் செயல்படுத்திக் காட்டியிருக்கின்ற தருணம்.

    பிறப்பின் அடிப்படையில் தலைமையை தீர்மானிக்காமல், ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து, ஜனநாயக மாண்புகளைக் காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

    பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எனக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு சமூக இயக்கங்களின் தலைவர்களுக்கும், கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கும், எனது இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் புரட்சித் தலைவி அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.

    கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடர, தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
    • வரும் 7-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை கடந்த 28-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    மேலும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு, பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது.

    தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அ.தி.மு.கவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் வரும் பாராளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
    • தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடருகிறது என்று அறிவித்தார்.

    அவர் அறிவித்த மறுநாளே எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும். பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் தனக்கு ஒரு துணை தேவை என்பதில் கவனமாக உள்ளது. அதே நேரம் அ.தி.மு.க.விலோ நமக்கு ஏற்ற துணை பா.ஜ.க. இல்லை என்ற எண்ணம் ஒரு சில நிர்வாகிகளிடம் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்ற நம்பிக்கைதான். முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி பொன்னையன், சி.வி.சண்முகம் ஆகியோர் அந்த எண்ணத்தில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

    என்னண்ணே... கூட்டணி பற்றி கேட்டால் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே. இப்பவே பா.ஜனதாவோடு ஏன் கமிட் ஆக வேண்டும் என்று கேட்டார்களாம்! அதற்கு எடப்பாடி பழனிசாமி நான் பொதுச்செயலாளர் ஆகி விட்டேன். கட்சி இப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்திருக்கு. கட்சியை வளர்க்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவர் (ஓ.பி.எஸ்.) 2024 தேர்தல் வரைவிடாமல் தொல்லை கொடுக்கத்தான் செய்வார். கோர்ட்டில் நாம் வெற்றி பெற்றாலும் கடைசியில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் தேவை. அதற்கு பா.ஜனதா ஒத்துழைப்பு அவசியம்.

    எனவே இப்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி ஏன் அவர்களை பகைக்க வேண்டும்?

    தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம். இப்போதைக்கு இப்படித்தான் அறிவிக்க வேண்டும் என்றார்.

    உண்மையிலேயே அல்வா அமித்ஷாவுக்கா? எடப்பாடி பழனிசாமிக்கா?.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தபோது அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம் அது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மார்ச் 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தேர்தல் தொடர்பாக நீதிமன்ற தடை நீங்கியது. இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க. தலைமை வெளியிட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது, தமிழகத்தில் உள்ள இதர கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தெரியவந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தபோது அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தபிறகு அண்ணாமலை நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி எல்.முருகனும் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட புதிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் வரும் நாட்களில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் அ.தி.மு.க. தெரியப்படுத்தியுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் கடந்த 28-ந்தேதி அன்று நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்வு ஆனதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் அ.தி.மு.க. தெரியப்படுத்தியுள்ளது.

    • வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என்று நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.
    • ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு, "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும்" என்று தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் அப்பீல் செய்தனர்.

    இந்த அப்பீல் மனுக்கள் இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 'வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா?' என்று நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணைக்கு தயார் என்றனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கில் விஜய் நாராயணன், 'தற்போது ஒருங்கிணைப்பாளர் முறை இல்லை. பொதுச்செயலாளர் முறை மட்டுமே உள்ளது' என்றார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடுகையில் கூறியதாவது:-

    இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்? எங்கள் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக கூறிய தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை.

    ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார். கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கியபோது குறைந்தபட்ச விளக்கம் கோரி நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளின்படி அறிவிக்கவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட இயலும். வழக்கு விசாரணை முடியும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன் வாதாடுகையில், 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை. சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றம் செய்யக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

    அதற்கு ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல் எங்களது தரப்புக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என எப்படி கூறுவீர்கள்?" என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இறுதி விசாரணைக்கு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கில் இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு 3-ந்தேதி அறிவிக்க உள்ளது.

    ×