search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.
    • அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாக இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

    ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாகவும், அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாகவும் இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    • 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுகின்றனர்.
    • வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாக கே.எஸ்.தென்னரசு குற்றம்சாட்டினார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கள்ளுப்பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்களித்தார்.

    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.தென்னரசு, தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது என்றார்.

    முன்னதாக, வாக்கை செலுத்தி விட்டு மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை கே.எஸ். தென்னரசு கண்காணித்தார். கிருஷ்ணாபாளையம் 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுவதாகவும் வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    • அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டிருப்பதை இரட்டை வெற்றியாகவே அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் கட்சிகள் டெல்லி அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரூ.8 கோடி செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து டெல்லி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது.

    இருப்பினும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அங்கீகாரம் அளித்துள்ளது.

    இதையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை விரைவில் திறந்து வைக்க உள்ளார். அதற்கான பணிகளை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் ஓ.பி.எஸ். தரப்பில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள்.
    • பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்வதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து ஓ.பி.எஸ். அணியினர் தாக்குதல் நடத்திய பின்னர் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு 24 மணிநேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள். பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்த சீலை அகற்றக் கோரி கோர்ட்டு உத்தரவிட்ட நேரத்தில் உரிய பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை கொடுத்த பின்னர் அ.தி.மு.க. கட்சி பணிகள் அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கோர்ட்டு உத்தரவு இருந்த போதிலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பாதுகாப்பு தொடர்ச்சியாக போடப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்கிற எதிர்பார்ப்பும் போலீசார் மத்தியில் நிலவுகிறது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரு தரப்புக்கும் இடையே மோதல் சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதுகாப்பை குறைக்கலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    • பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று பேசினார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள்.

    குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை, அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

    • சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டது.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள்.

    ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் விடவில்லை. தர்மம் வெல்லும் என்று மீண்டும் தர்மயுத்தம் நடத்துவேன் என்று அறிவித்துள்ளார்.

    பொதுக்குழு செல்லும் என்று கோர்ட்டு அறிவித்தாலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் கோர்ட்டில் முறையிடலாம். தேர்தல் ஆணையத்தையும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்புகின்றனர்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், "உரிமையியல் கோர்ட்டில் சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. எனது சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று தனது பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு தேர்தல் முடிந்ததும் அவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

    அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த சிறு நம்பிக்கையும் தகர்ந்து விடும்.

    எனவே என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி எல்லா தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

    • தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றும்படி வற்புறுத்த முடிவு செய்துள்ளார்கள்.
    • சிவில் வழக்கு முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது.

    சென்னை:

    கடந்த ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பாக தீர்ப்பு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளார்கள். அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திலும் முறையிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர் என்றே நீடிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டதால் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தது ஆகியவை உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது.

    இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றும்படி வற்புறுத்த முடிவு செய்துள்ளார்கள். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலுடன் கோரிக்கை மனுவையும் இணைத்து தேர்தல் ஆணைய அதிகாரியை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்துள்ளார்கள்.

    சி.வி.சண்முகம் எம்.பி. அடுத்த வாரம் திங்கட்கிழமை டெல்லியில் நேரில் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சிவில் வழக்கு முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது. தற்போது கடைபிடிக்கப்படும் நிலையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.
    • அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று அ.தி.மு.க.வினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். தி.மு.க.வின் 'பி' டீம் ஆக செயல்படும் அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? அவர் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் அ.தி.மு.க.வில் இல்லை.

    இந்த தகவல் பாராளுமன்றத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கிய தீர்ப்பு நகல் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கறிஞர் குழுவினருடன் தேர்தல் கமிஷனில் இன்று வழங்க உள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தேர்தல் கமிஷனில் உறுதியாகும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சட்ட விதியைத்தான் இன்று காப்பாற்ற நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
    • ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பொதுக்குழு சம்பந்தப்பட்டவை தவிர அதில் உள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஜூலை 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று தான் கூறப்பட்டுள்ளது. நியாயம், நீதி எங்கள் பக்கம் இருகிறது.

    இந்த வழக்கில் 5 நாட்கள் வாதங்கள் நடந்துள்ளன. எங்கள் தரப்பு விவாதங்கள் கேட்கப்பட்டுள்ளது. எதை தீர்மானிக்க வேண்டுமோ அதை தீர்மானிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை கோர்ட்டை அணுக உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் எந்த இடத்திலும் இடைக்கால பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்றதாக குறிப்பிடப்படவில்லை.

    பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்பதற்கு தான் பொதுக்குழு செல்லும் என்று கூறி இருக்கிறார்கள். இதுதவிர வேறு ஒன்றையும் குறிப்பிடவில்லை. தீர்மானங்கள் செல்லும் என்று வழக்கின் தீர்ப்பில் கூறப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சட்ட விதியைத்தான் இன்று காப்பாற்ற நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இன்று வரை தொண்டர்களை காப்பாற்றும் இயக்கமாகவே இந்த இயக்கம் இருக்கிறது.

    இது ஓ.பி.எஸ். தாத்தாவோ, எடப்பாடி பழனிசாமியின் தாத்தாவோ ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் நாங்கள் இன்று தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

    அதற்கு விடிவு வரும் வரை, நல்ல தீர்ப்பு வரும் வரை நாங்கள் போராடுவோம். இதற்காக மக்கள் மன்றத்தை நாடி செல்வதற்கு எங்களது படை தயாராகி விட்டது. மக்களிடம் உறுதியாக நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

    இந்த தீர்ப்பு வந்ததற்கு பின்னர்தான் எங்களுடைய தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் இருக்கிறார்கள். எந்த தேர்தல் வந்தாலும் எம்.ஜி.ஆர். வகுத்த சட்ட விதிகளை காப்பாற்றுபவர்கள் பக்கம்தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள்.

    தி.மு.க.வின் பி டீம் என்று யாராவது சொன்னால் அதுபற்றி எங்களிடம் கேள்வி கேட்பதா? எடப்பாடி பழனிசாமி அணிதான் தி.மு.க.வின் பி டீம். அதுமட்டுமல்ல ஏ டூ இசட் டீமும் அவர்கள்தான்.

    எங்களை பார்த்து ஏதாவது குறை சொல்ல முடியுமா? ஆனால் அவர்களை பற்றி குறை சொல்ல ஆயிரம் இருக்கிறது. அவை ஒவ்வொன்றாக வெளிவரும். கட்சி உடையக்கூடாது என்று இதுவரை நாங்கள் பொறுமை காத்திருந்தோம்.

    இன்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது அவரது தாத்தா ஆரம்பித்த கட்சியா? ஆணவத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது.

    நான் எந்த காரணத்தை கொண்டும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். முடிவு கிடைக்கும் வரை போராடுவேன். நாங்கள் தர்மத்தின் வழிநின்று நீதி கேட்போம். தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும்.
    • சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்.

    மதுரை:

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரைக்கு இன்று வந்தார். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனை நிரப்புவதற்காக சசிகலாவால் கொண்டு வரப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தவிர ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குப்பனோ, சுப்பனோ கூட 4, 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியும்.

    இதில் பழனிசாமிக்கு எந்த பெருமையும் இல்லை. அவர் மத்திய அரசின் உதவியுடன் தான் அந்த ஆட்சியையும் நடத்தினார். ஆனால் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமியின் ஆணவம், பண திமிர்தான் காரணம். அவரால் ஜெயலலிதா ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. வன்னியர் சமுதாய மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதனால் தான் அவரால் தென் மாவட்டங்களில் ஜெயிக்க முடியவில்லை. பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு வர இயலவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம். அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவருக்கு மரியாதை செலுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்த போதே, அ.ம.மு.க லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது. எடப்பாடியுடன் ஒரு சிலர் வியாபார லாப நோக்கத்துடன் உள்ளனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. வளர்ந்துவரும் இயக்கமாக மாறி உள்ளது.

    இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கையில் இருந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் காரணமாக கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வை பழனிசாமி பிராந்திய கட்சியாக மாற்றி விட்டார். அ.தி.மு.க.வில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல, டெண்டர்கள். எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம். எனவே தான் பழனிசாமி சேர்க்க மாட்டேன் என்கிறார். எனக்கு தகுதி இல்லை. நான் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை.

    ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது. பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால் தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகள் வெளியேறி விட்டது.

    வன்னியர் உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் அறிவித்தும், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பழனிசாமியிடம் இருந்து பா.ம.க. நல்ல வேளையாக தப்பித்து விட்டது. ஒரு கண்ணில் வெண்ணைய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம் தான் பழனிசாமியின் மூலதனம். உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இந்த சுற்றில் பழனிசாமி தற்காலிக வெற்றி பெற்று உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறி உள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை .

    அம்மா, எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால், அது பின்னடவை சந்தித்து உள்ளது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால், தி.மு.க என்ற தீய சக்தியை வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வரவேண்டும். பழனிசாமி தன்னை அம்மாவின் தொண்டராக உணரவில்லை. அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்காக, நாங்கள் 40 சீட் கேட்டோம். ஆனால் பழனிசாமியின் தவறான முடிவால், ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை. பழனிசாமி எப்போது திருந்துவார்? என்று தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம்.

    கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு என்பது தற்காலிகமானதுதான். பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று அறிவித்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. கூட்டணி பலத்தோடு இருக்கும் தி.மு.க.வை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி உள்ளார். பணபலம், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும். பாராளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி அமைக்கவில்லை. அ.ம.மு.க தான் அம்மாவின் இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஜூலை மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுக அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. தலைவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எந்த சட்ட சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    இதன் காரணமாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2-ந்தேதி நடைபெற உள்ளது. அதன் பிறகு மார்ச் 2-வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் எதிர் பார்க்கப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் எப்போது நடத்தலாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அநேகமாக அடுத்த மாதம் 2-வது வாரம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுக அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தலைவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எந்த சட்ட சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை.

    அதற்கேற்ப அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளனர்.

    • பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
    • முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

    பொன்னேரி:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரி தொகுதி அதிமுக மாவட்ட செயலாளர் பலராமன், நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆலோசனைபடி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் தலைமையில் பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    இதில் நாகராஜ், சம்பத்மதி, மெதுர் ரமேஷ், வாசுகி, திருக்குமரன், ரவி, வெங்கடேச ரங்கராவ், சங்கர், சீனு, ஆனந்தன் மணிமாறன், சுதாகர், பிரகாஷ் மற்றும், பேரூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×