search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதன் காரணமாக கடந்த 3-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் பிரச்சாரத்தையும் தொடங்காமல் இருந்து வந்தனர். எனினும் முக்கிய அமைப்பினர், விசைத்தறியாளர்கள், வணிகர் சங்க பேரமைப்பினரை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.

    இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியது.

    பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தலைமை தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 2501 பேர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.

    அந்த கடிதத்தை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று டெல்லி தேர்தல் கமிஷனில் வழங்கினார். இந்நிலையில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினர். இதனால் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    இதையடுத்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.

    முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
    • நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும்.

    திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
    • இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவருக்கு தனது ஆதரவை அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் திடீரென அறிவித்தார்.

    சென்னை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்த நிலையில், அக்கட்சி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பை கையகப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளராக அறிவித்தனர்.

    இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாகவே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கூறியது.

    தற்போது, அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில், 2,662 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். மீதமுள்ள 148 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

    இதனால், அதிக அளவில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் சுறுசுறுப்பு அடைந்தனர். வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவை பெறுவதற்கான வேலையில் தீவிரம் காட்டினர்.

    இரு தரப்பை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவமும், உறுதிமொழி பத்திரமும் வழங்கப்பட்டது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிகிறது.

    இந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டு, தனது கட்சி உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் நேற்று இரவு 7 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் யாரும் கடிதம் வழங்கவில்லை.

    ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நேரத்தில், கூட்டணி கட்சியான பா.ஜ.க. தரப்பில், தி.மு.க. கூட்டணி வேட்பாளரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை களம் இறக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தது.

    ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவருக்கு தனது ஆதரவை அளிப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் திடீரென அறிவித்தார். இதனால், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. நேற்று சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி வரை 85 சதவீத உறுப்பினர்கள் கடிதத்தை கொடுத்து விட்டதாகவும், இன்று காலை வரை கடிதம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக, அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அவருடன் சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் செல்கிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுக்கொண்டால், அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து அவர் நாளை (செவ்வாய்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    • பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.
    • அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

    அதன்படி வேட்பாளர் தேர்வு தொடர்பான படிவங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் எடப்பாடி தரப்பினர் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டு பதில் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கருத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறியதாவது:-

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ் மகன் உசேன் அனுப்பியு கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது.

    பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேடப்ளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறையாகும்.

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டவிரோத செயலுக்கு தங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    • மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.

    நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசை வலியுறுத்துகிறேன்.

    நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த திமுக அரசு தான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தென்னரசுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
    • அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் நேரிலும் படிவங்களை வழங்குகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருவருமே வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கினார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது. இதில் ஓ.பி.எஸ். அணியினரும் பங்கேற்கவும் அறிவுறுத்தியது.

    இதையடுத்து இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழு முடிவில் தற்போது 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,662 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள சுமார் 148 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    இப்படி இருதரப்பை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி அ.தி.மு.க. தலைமை கழகம் மூலமாக விண்ணப்ப படிவமும், உறுதிமொழி பத்திரமும் கொண்டு சேர்க்கப்பட்டது.

    இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் ஜெராக்சை இணைத்து இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு அ.தி.மு.க. தலைமைக்கு நேற்று முதல் வழங்கி வருகிறார்கள்.

    பெரும்பாலான உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இன்று காலையிலும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை சந்தித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு படிவத்தை வழங்கினார்கள்.

    வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை கட்சி நிர்வாகிகள் சிலர் மொத்தமாக வாங்கி வந்தும் கொடுத்தனர். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதால் அவரது அணியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களும் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாக ஓ.பி.எஸ். இன்று தனது அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருப்பினும் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தென்னரசு வேட்பாளராக களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.

    இன்று இரவு 7 மணிக்குள் ஆதரவு ஒப்புதல் படிவங்களை பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அவற்றை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட படிவங்கள் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தென்னரசுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது. அதேநேரத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் நேரிலும் இந்த படிவங்களை வழங்குகிறார்.

    அவருடன் சி.வி.சண்முகம் எம்.பி., அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோரும் செல்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (7-ந்தேதி) தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு அன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முட்டி மோதி வரும் நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பா.ஜனதா ஆட்ட வியூகத்தை மாற்றியது.
    • ஒவ்வொரு முறையும் பா.ஜனதா வீசிய பந்துகளை லாவகமாக எதிர் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

    என்னதான் புகழ் பெற்ற அணியாக இருந்தாலும் தமிழக ஆட்ட களத்தில் பா.ஜனதா அணியினரின் ஆட்ட வியூகம் எடப்பாடி அணியின் நேர்த்தியான ஆட்டத்தின் முன்பு எடுபடாமல் போய் விட்டது.

    ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. அணி பற்றிய கணிப்பு தவறாகவே இருந்து வருகிறது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட விரிசலை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பா.ஜனதா திட்டமிட்டு களம் இறங்கியது.

    ஒன்று தி.மு.க.வுக்கு எதிரான வலுவான அணி. அல்லது வலுவாக காலை ஊன்றுவது என்பதே பா.ஜனதாவின் அரசியல் வியூகமாக இருந்தது.

    அதற்காகவே எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு என்ற திட்டத்தை அரங்கேற்றியது. அப்போது ஆட்சியில் இருந்ததால் பா.ஜனதா சொன்னதை கேட்பதை தவிர வழியில்லை என்ற கணக்கில் எடப்பாடி பழனிசாமியும் ஒத்துக்கொண்டார்.

    ஆனால் இருவரும் 'கட்சி' என்ற இலக்கை அடைய குறியாக இருந்ததால் ஆட்சி போனதும் காட்சியை மாற்றினார்கள்.

    தலைமைப் பதவி எனக்குத்தான் என்று மட்டையை கையில் எடுத்து பட்டையை கிளப்பினார் எடப்பாடி. கட்சிக்காரர்கள் என்ற ரசிகர்கள் ஆதரவும் அவருக்கே அதிகமானது.

    ஆனாலும் சமாளித்து ஆட ஓ.பன்னீர் செல்வத்தை தன் பக்கம் வைத்துக் கொண்டது பா.ஜனதா. அவர்களின் ஆட்ட வியூகத்தை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அடித்து ஆட தொடங்கினார்.

    கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வேண்டியது வரலாம். அல்லது கட்சியை கட்டிக் காப்பதும் முடியாது என்று நினைத்து துணிந்து ஆடினார்.

    ஒவ்வொரு முறையும் பா.ஜனதா வீசிய பந்துகளை லாவகமாக எதிர் கொண்டார். தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்த போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வரவேற்றார். அதே நேரம் அமித்ஷா வந்த போது வரவேற்க செல்லவில்லை.

    பிரதமர் என்ற அடிப்படையில் மோடியை வரவேற்க சென்றேன். கட்சி தலைவர்களை கட்டாயம் வரவேற்க வேண்டியதில்லை என்று பதிலடி கொடுத்தார்.

    இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முட்டி மோதி வரும் நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பா.ஜனதா ஆட்ட வியூகத்தை மாற்றியது.

    தான் சொல்வதை கேட்க ஓ.பி.எஸ். தயாராக இருந்ததால் அடுத்து எடப்பாடியை எதிர் கொள்வோம் என்ற ரீதியில் ஒட்டு மொத்த கவனத்தையும் எடப்பாடியை வழிக்கு கொண்டு வருவதில் திருப்பினார்கள்.

    இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்ததும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வியூகத்துடன் பா.ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்கள்.

    • நெல் பயிரிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
    • மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்களும், ஊடு பயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து போன்ற பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. மேலும், அறுவடை செய்து, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

    மழை நீரில் அழுகிய, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்களை கணக்கெடுக்க உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். நெல் பயிரிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

    மேலும், வேளாண் பெருமக்களுடன், கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்ல இயலாத நிலையில், வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். மேலும், உப்பளங்களில் நீர் புகுந்து உப்பளத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவங்களை அச்சடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை மின்னல் வேகத்தில் சென்னையில் நடந்தது.
    • படிவத்தில், “அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது. அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகவும் அ.தி.மு.க. பொதுக்குழு தேர்வு செய்தது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை அணுகினார்.

    ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை அதை ஏற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் 5 தடவை முயற்சி செய்தும் தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று அறிவித்தது.

    இதனால் தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பழைய பதிவே இருக்கிறது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனர். அவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீது தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடம் பதில் பெற்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நேற்று சில அதிரடி உத்தரவுகளை வெளியிட்டது. அதன்படி "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு வெளியானதும் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று, பின்னர்அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வில்லரசம் பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார்.

    அங்கு அவர் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செம்மலை, எம்.சி. சம்பத், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, கே.சி.கருப்பணன், கே.வி. ராமலிங்கம், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு பெற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் நோட்டரி பப்ளிக் சான்று, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்ற இடத்தில் டிக் போடும் படி அச்சடிக்க முடிவு செய்யப்பட்டது.

    அந்த படிவங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்து வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவு கடிதம் பெற முடிவு செய்யப்பட்டது. இதே போல் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் இந்த படிவம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவங்களை அச்சடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை மின்னல் வேகத்தில் சென்னையில் நடந்தது. அந்த படிவத்தில், "அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்" என்று அச்சிடப்பட்டிருந்தது.

    கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தங்கள் புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஒப்புதல் படிவங்கள் தயாரானதும் இரவோடு இரவாக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது. கார், விமானங்களில் அந்த படிவங்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் எடுத்து சென்றனர்.

    இன்று காலை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடந்தன. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் 98 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமுடன் அந்த படிவங்களை பெற்று புகைப்படங்களை ஒட்டி கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

    இந்த பணிகள் அனைத்தையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தங்கள் பகுதி மாவட்டங்களில் சரியாக நடக்கிறதா? என்று காலையில் இருந்தே தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். போனில் தொடர்பு கொண்டு பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பும், விறுவிறுப்பும் காணப்பட்டது. ஒப்புதல் கடிதம் வழங்கும் விஷயத்தில் எந்த குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மிகவும் கவனமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒவ்வொரு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும் போட்டோ ஒட்டி கையெழுத்திட்டனர். பிறகு அந்த ஒப்புதல் படிவத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றையும் இணைத்து நோட்டரி பப்ளிக்கின் உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்து கொடுத்தார்கள்.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2,539 பேர் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்து தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே 2,500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் உள்ள 8 மாவட்ட செயலாளர்களுக்கும் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை 10 மணிக்கு ஒப்புதல் படிவங்களை வழங்கினார். சான்றிதழ்களுடன் தயாராக வந்தவர்கள் அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    அனைத்து படிவங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலைக்குள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நாளை மறுநாள் (6-ந்தேதி) டெல்லி செல்லும் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அந்த படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் காலை 11 மணிக்கு ஒப்படைக்கிறார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தனது முடிவை அறிவிக்கும்.

    • கடலுக்குள் போய் பேனா நினைவு சின்னம் அமைப்பது நல்லது அல்ல.
    • தனித்தனியாக இருந்தால் அது அ.தி.மு.க.விற்கு நல்லது இல்லை

    சென்னை :

    பேரறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வினர் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். இப்போதும் சொல்கிறேன். இப்போது மிகவும் பக்கத்தில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அது அ.தி.மு.க.விற்கு நல்லது இல்லை தற்போது, அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அ.தி.மு.க. என்பது என்ன? என்பதை நாம் முழுமையாக புரிந்து கொண்டால், நாம் பிற கட்சிகளை நாடும் செயல்பாடுகள் நடக்காது.

    கடலுக்குள் போய் பேனா நினைவு சின்னம் அமைப்பது நல்லது அல்ல. இது மீனவர்களை பாதிக்கும், காவல்துறைக்கும் சவாலாக இருக்கும். அவர்களுக்கு (தி.மு.க.வினருக்கு) ஆசை இருந்தால் கருணாநிதி சமாதி அருகேயே நினைவு சின்னம் அமைக்கலாம். அதற்கு இத்தனை அடிகளில்தான் வைக்க வேண்டும் என்று இல்லை. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு நிதி இல்லை என்று கூறும்போது, பேனா வைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் என் கேள்வி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46) திடீர் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது. இந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி விட்டது.

    இந்தத் தொகுதி கடந்த முறையைப்போலவே இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.

    இதற்கு மத்தியில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந் தேதி மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். தொடர்ந்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அந்த மனுவில், "நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் " என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

    இதில் தேர்தல் கமிஷனும், ஓ.பன்னீர் செல்வமும் 3 நாளில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு முடிவை ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதுபற்றி தற்போது எந்த முடிவும் எடுக்க இயலாது" என கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வழக்குசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருப்போம். அதை ஏற்று நடப்போம்" என கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "தேர்தல் கமிஷன் பதில் மனுவை நாங்கள் படித்து பார்த்து விட்டோம். குறிப்பிட்ட அரசியல் கட்சி போட்டியிட அனுமதிப்பதா, இல்லையா என்பதையும், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்திலும் தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்க வேண்டும் " என கூறினர்.

    தொடர்ந்து தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல், "வழக்கு கோர்ட்டில் உள்ளதால், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு தீர்மானத்தை பதிவேற்றம் செய்ய இயலவில்லை" என கூறவே, நீதிபதிகள், "பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறீர்களா? பதிவேற்ற முடியாது என்றால் அதற்கு மாற்று என்ன? " என கேள்வி எழுப்பினர். அத்துடன், " இந்த விவகாரத்தில் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது" எனவும் கூறினர்.

    அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் பதில் அளிக்கையில், "கோர்ட்டை நிர்ப்பந்திக்கவில்லை, இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, 7-ந் தேதிக்குள் பதில் அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள் கூறும்போது, " ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய 7-ந் தேதி கடைசி நாள் என்கிறபோது, என்ன முடிவு எடுப்பது? அங்கு அ.தி.மு.க. போட்டியிடாத நிலை வந்து விடக்கூடாது " என கூறினர்.

    "இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா?" என்ற நீதிபதிகளின் கேள்விக்கு , "முடக்கப்படவில்லை. இந்த சின்னத்தை பயன்படுத்தி வேட்பாளர் போட்டியிடலாம்" என தேர்தல் கமிஷன் தரப்பு பதில் அளித்தது.

    ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட தயார். இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். இந்த விவகாரத்தில் ஈகோ இல்லை " என்றார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருத்தைக் கேட்டு விட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. இருவரும் இணைந்து தீர்வு காணும்போது என்ன பிரச்சினை? அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். எங்களது பரிந்துரையை ஏற்காவிட்டால், நாங்கள் உத்தரவு போட நேரிடும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும்3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது.

    பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

    இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

    எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படுகின்றன. பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று சி.டி.ரவி கூறியிருந்தார்
    • கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

    ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜக சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் தனித்தனியே சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:-

    1972-ல் அதிமுக உருவானபோது எம்.ஜி.ஆர். திமுகவை தீய சக்தி என்று அழைத்தார். அவரது கருத்து 2023-ம் ஆண்டும் மாறவில்லை. தான் உயிருடன் இருந்தவரை 'அம்மாவும்' திமுகவை தீயசக்தி என்று அழைத்தார். மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக மந்திரிகள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது. ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று கூறிய சி.டி.ரவியின் கருத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கடுமையாக சாடி உள்ளார். சி,டி.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா? இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×