search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.
    • அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து அமைதி பேரணியாக சென்றனர். அவர்கள், காந்தி ரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி. சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநேல்லிபாபு பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம்,ஜெகநாதன், சுப்புராயன் , நிர்வாகிகள் அப்துல் மாலிக், யுவராஜ் சிகாமணி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், , பகுதிச் செயலாளர்கள் எம்.பி. ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான பெர்ரி தலைமையில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சிவருத்ரையா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழ் கலாசாரத்தின் மீது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள்., மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.
    • கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை வகிப்பது யார்? என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக போட்டியாளர்களை அறிவித்துள்ளனர். அவர்கள் இருவரையும் பா.ஜ.க. தலைவர்கள் சமரசம் செய்ய மேற்கொண்ட முதல்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

    இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால் பொதுக்குழு வழக்கு விவகாரங்கள் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னம் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சர்ச்சைக்கு தீர்வு காண பா.ஜனதா தலைவர்கள் சி.டி.ரவி, அண்ணாமலை மற்றும் கரு.நாகராஜன் இன்று அதிரடியாக சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் அவர்கள் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு காலை 8.15 மணிக்கு சென்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்தனர். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். அவர்கள் சுமார் 1 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை உறுதிபட வெளியிட்டார். ஈரோடு இடைத்தேர்தல் களம் எங்களுக்கு முக்கியமானது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.

    எனவே எனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சந்திப்பை முடித்துக் கொண்டு பா.ஜ.க. தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி ஓ.பி.எஸ்.சிடம், ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பும் சுமார் 1 மணிநேரம் நீடித்தது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை முடிந்ததும் பா.ஜ.க. தலைவர்கள் தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு சி.டி.ரவி, அண்ணாமலை இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இன்று அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினோம். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக விரிவான கருத்துக்களை பரிமாறினோம்.

    1972-ல் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அப்போது தி.மு.க.வை தீயசக்தி என்று அவர் தெரிவித்தார். அதன்பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்திய ஜெயலலிதாவும் தீய சக்தி என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பயன்படுத்தினார்.

    இன்று வரை தி.மு.க.வும் அதேநிலையில் தான் உள்ளது. நாளுக்கு நாள் தி.மு.க. அரசின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர்கள் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே உழைக்கிறார்கள். தமிழக மக்களுக்காக அல்ல. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு சுமைகளை ஏற்றி தி.மு.க. அரசு வஞ்சித்து உள்ளது.

    தமிழ் கலாசாரத்தின் மீது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள்., மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இப்படி தி.மு.க. ஆட்சியின் அவலத்தை பார்த்து தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    அரசு எந்திரங்கள் அங்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன. பணப்பட்டுவாடாவும் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அவசியமாகும்.

    அதேபோல ஒன்றுபட்ட அ.தி.மு.க.வும் அவசியம். இதுதொடர்பாகவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று பேச்சு நடத்தினோம். எங்கள் சந்திப்பு மிகவும் நன்றாக அமைந்திருந்தது. இருவரும் இணைந்து செயல்படுவதைத் தான் டெல்லி மேலிடம் விரும்புகிறது.

    இதுதொடர்பாக எங்கள் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரிலேயே இருவரையும் சந்தித்து பேச உள்ளோம். ஜே.பி.நட்டா தெரிவித்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரிடமும் தெரிவித்து இருக்கிறோம்.

    இருவரும் தனித்தனியாக இருப்பது தமிழகத்துக்கும் நல்லதல்ல. இருவரும் இணைந்து செயல்பட்டால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும். இதுதொடர்பாக எங்கள் கருத்துக்களை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். இருவரையும் இணைப்பதற்காக முயற்சிக்கிறோம். இணைவார்கள் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கலுக்கு வருகிற 7-ந்தேதி வரை கால அவகாசம் உள்ளது. பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    உங்களது கோரிக்கைகளை இருவரும் ஏற்றுக்கொண்டார்களா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சி.டி.ரவி எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்தார்.

    ஒருவேளை உங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பாரதிய ஜனதா நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த சி.டி.ரவி 7-ந்தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள்.

    பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் வி.பி. துரைசாமி, கரு.நாகராஜன், செயலாளர் சுமதி வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஜான் பீட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது.
    • நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    சென்னை :

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 பூத் உள்ளது. இந்த 238 பூத்களிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தபோது 30 ஆயிரம் பேரில் இருந்து 40 ஆயிரம் பேர் வரை ஆளே கிடையாது. அங்கு போலி அட்டைகளைத் தயாரித்து அந்த 40 ஆயிரம் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு விடியா தி.மு.க. அரசு இன்றைக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு வாக்களிக்க உள்ளது. இந்த நிலையை தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

    இது மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது. விதிகள் அனைத்தும் காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை தி.மு.க. அரசு செய்துகொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளோம். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துள்ளார். 'இரட்டை இலை' சின்னம் முடக்கக்கூடிய நிலை உள்ளதாக கூறப்படுகிறதே...

    பதில்:- சொல்பவர்களுக்குத்தான் முடக்குவாதம். நாங்கள்தான் அ.தி.மு.க., சரியான வழிமுறையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் போட்டி என்பது அவரை சார்ந்தவர்களுக்கு அது ஒரு மண் குதிரை என்று தெரியும். இதனை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். மண் குதிரை கரை சேராது.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி பெயர் வேறாக இருந்து, பின்பு திருத்தப்பட்டுள்ளதே...

    பதில்:- 'டைப்' செய்யும்போது சிறிய பிழை வரும். 'பிரிண்ட்' செய்யும்போது முற்போக்கு என்று வந்துவிட்டது. பின்னர் சரியான பேனர் வைக்கப்பட்டது. இது ஒரு பிரச்சினையே இல்லை.

    கேள்வி:- அண்ணாமலை டெல்லி சென்ற பின்னர்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே?

    பதில்:- இது காரணம் இல்லை. எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் பெயரில் சிறிய பிழை இருந்தது. பின்னர் சரி செய்யப்பட்டது.

    கேள்வி:- இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சி தலைவர்களுடைய படங்கள் இடம்பெறுவது வழக்கம். தற்போது பா.ஜ.க. தலைவர்கள் படம் இல்லை. அதனால் பா.ஜ.க. உங்கள் கூட்டணியில் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தற்போது இடைத்தேர்தலில் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இறுதி செய்யப்படும்போது கூட்டணியில் இருக்கும் அனைவரின் படமும் இடம்பெறும்.

    கேள்வி:- தேர்தல் நெருங்கிய நிலையிலும் பா.ஜ.க. எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளதே?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணி தர்மத்தின்படி தான் இன்றைக்கு சென்று கொண்டுள்ளோம் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நாங்கள் ஆதரவைக் கேட்டுள்ளோம். அவர்கள் தேசிய கட்சி. உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள். உடனே சொல்லுங்கள் என்று வற்புறுத்த முடியுமா...

    கேள்வி:- 'ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் வாங்கிவிடுவோம்' என்று சொல்லி இருக்கிறாரே...

    பதில்:- நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    கேள்வி:- கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் வைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் சின்னத்தை உடைப்பேன் என்று பேசியுள்ளார். இதில் அ.தி.மு.க.வின் கருத்து என்ன?

    பதில்:- கடலில் பேனா சின்னம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவது மீனவர்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை சரி.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுபடும்போது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கடுமையாக எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னதடாகம் ஊராட்சியில் மொத்தம் பதிவான வாக்குகள் 5,375.
    • அதிமுக ஆதரவாளரான சவுந்திரவடிவு 2,553 வாக்குகளும், தி.மு.க ஆதரவு பெற்ற சுதா 2,551 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    கோவை:

    தமிழகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு பெற்ற சுதா, அ.தி.முக ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர்.

    திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அதிமுக ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு என்பவர் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.

    இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து 24-ந்தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.

    மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 4 பென்டிரைவர்கள், சீலிடப்பட்ட கவரில் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முன்பு மாவட்ட நிர்வாகத்தால் சமர்பிக்கப்பட்டது.

    இன்று நீதிபதி ராஜசேகர் ஆய்வு செய்தார். சின்னதடாகம் ஊராட்சியில் மொத்தம் பதிவான வாக்குகள் 5,375. இதில் அதிமுக ஆதரவாளரான சவுந்திரவடிவு 2,553 வாக்குகளும், தி.மு.க ஆதரவு பெற்ற சுதா 2,551 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர் 65 வாக்குகள், செல்லாத வாக்கு-206.

    தேர்தல் முடிவில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றி பெற்றார். இது செல்லும் என நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு அளித்தார்.

    • பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
    • அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று காலையில் அவரது இல்லத்தில் சந்தித்து அண்ணாமலை பேசினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது.

    அதற்கு முக்கிய காரணம் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக கை கழுவி விட்டு தங்கள் பக்கம் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார்.

    ஆனால் பா.ஜனதாவோ இந்த இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை விட அடுத்து வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான யோசனையில் இருக்கிறது.

    இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலையில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. அடுத்ததாக அமித்ஷா, சந்தோஷ் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    அப்போது பா.ஜனதா எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி விவாதிக்கிறார்கள். அதில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து பா.ஜனதா நிலைப்பாட்டை அண்ணாமலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் தம்பிதுரை பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சிறந்த பட்ஜெட்டை வழங்கிய மோடிக்கு வாழ்த்து சொல்லவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கருத்துக்களை தம்பி துரை மூலமாக மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

    மத்திய மந்திரி ஜெய் சங்கரை அண்ணாமலை சந்திக்கிறார். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குதல், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.

    இலங்கையில் நிலவும் பிரச்சினைகளை அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார். அதேபோல் சமீபத்தில் ஜெய்சங்கரும் இலங்கை சென்று வந்தார். எனவே இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் சில மந்திரிகளை சந்தித்து தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பற்றிய கோரிக்கைகளையும் வழங்க உள்ளார்.

    • ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார்.
    • தேர்தலில் எங்களுடைய நிலையை ஜனநாயக பண்பை ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்வோம்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் தீவிர உறுப்பினர். தீவிர விசுவாசி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அவரை ஆதரித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி ஆகியோர் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகிறார்கள். நாளை முதல் நானும் (ஓ.பன்னீர் செல்வம்) கழக நிர்வாகிகளும் செந்தில்முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

    இந்த தேர்தலில் எங்களுடைய நிலையை ஜனநாயக பண்பை ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்வோம். தீர்ப்பளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் வாக்காளர்களிடம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வேட்பாளர் தென்னரசு வாழ்த்து பெற்றார்.
    • தேர்தல் குறித்து வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.ம.மு.க சார்பில் சிவபிரசாத் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தென்னரசு அறிவிக்கப்பட்டார்.

    இதை அடுத்து நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக அவர் சேலம் வந்தார். அப்போது ஈரோடு தொகுதி அ.தி.மு.க தேர்தல் பணி பொறுப்பாளரான செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுச்செயலாளர் விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வேட்பாளர் தென்னரசு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து 30 நிமிட நேரம் தேர்தல் குறித்து வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

    அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்தும், தேர்தல் களப்பணி குறித்தும் விரிவாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. செங்கோட்டையன் கூறிய கருத்துக்களை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வேலைகளை தீவிரபடுத்தும்படி அறிவுரை வழங்கினார். மேலும் அ.தி.மு.க வெற்றியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

    தொடர்ந்து வேட்பாளர் தென்னரசு நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இதனால் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க, ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 10-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வினோதமான முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். இதில் முதல் நாளில் 4 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 6 பேர் மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்றும் சுயேச்சைகள், சில அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். 2-வது நாளில் 6 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 நாட்களில் மட்டும் 10 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இதைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாளை முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இதனால் நாளை ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 3 பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இதனையடுத்து தேர்தல் பிரசார களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    • இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல.
    • 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எப்படி வரும் என்று நேற்றைய தினம் வெளியான பொருளாதார சர்வே ஆவணம் ஒரு அளவீடாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.

    இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.

    ஐ.எம்.எப். கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். நகர்ப்புற வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் கோவிட் காலத்தின் பாதிப்பை இந்தியா தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    முக்கியமாக ஆளுங்கட்சியின் பண பலம், அரசியல் பலம், அரசு எந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள், தெளிவுபடுத்துகிறோம்.

    மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். தமிழக அரசு நடத்தியது கருத்து கேட்பு கூட்டமா அல்லது மாவட்ட செயலாளர்களில் யார் அதிகம் சத்தம் எழுப்புகிறார்கள் என்பதை காட்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டமா என்று தெரியவில்லை.

    இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், என்.ஜி.ஓ.க்களும் சிலை வைக்க வேண்டாம் என்றே கூறியிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவாலய பணத்தில் எந்த இடத்திலும் பேனா சிலையை வைக்க ஜனநாயகத்தில் இடம் உள்ளது. ஆனால் பொது இடம் என்று வரும்போது மக்களின் கருத்தை மதிக்க வேண்டும்.

    2022 ஆகஸ்டு மாதம் இந்தியா டுடே நடத்திய ஸ்டேட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு 60 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே பத்திரிகை ஜனவரி 26 அன்று நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினின் இமேஜ் 44 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் 16 சதவீதம் எந்த முதல்வரும் சரிவை சந்திக்கவில்லை.

    அவர்களின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, வருகிற 2024-ல் கணக்கெடுத்தால் நிச்சயமாக செல்வாக்கு 20 சதவீதத்திற்கும் கீழ் வந்துவிடும். தி.மு.க. தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.

    பேனா சிலை விவகாரத்தில் தமிழக மீனவர்களோடு, என்.ஜி.ஓ.க்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கிறோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

    இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல. 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    • அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு (வயது 65) 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார்.

    * 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராகவும், 1995-ம் ஆண்டு நகர செயலாளராகவும், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் இருந்தார்.

    * மீண்டும் 2000-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் ஆனார். 2010-ம் ஆண்டு முதல் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    * அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    * கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை.

    இவர் ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், கலையரசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

    • ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • 65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 7-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். விஜயகாந்தின் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளர்களை அறிவிக்கப் போவதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் யாரை வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று காலை போட்டியிடும் வேட்பாளரை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 27.2.2023 அன்று நடைபெற உள்ள (98) ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு (ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் யாரை வேட்பாளராக அறிவிப்பார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து நிற்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதால் அந்த கட்சி போட்டியிடாமல் ஒதுங்கி கொள்ள முடிவு செய்துள்ளது. இதை சூசகமாக அறிவித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தங்களது ஆதரவை யாருக்கு கொடுப்பது என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு தமிழக பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் தென்னரசுக்கு கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளன. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் களப் பணிகளை தொடங்கி விட்டனர். இன்று முதல் அவர்கள் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இதற்கிடையே தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் இன்று மாலை ஈரோட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் முதல் அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஈரோட்டில் முற்றுகையிட உள்ளனர். அதன் பிறகு ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. போலீசார் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாளில் தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது முதல் நாள்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 8 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 2-வது நாள் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது வீடு வீடாக சென்று தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அ.தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். பகுதி வாரியாக இந்த பணிகளை தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

    3 நாட்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி முடிவடைந்ததையடுத்து வார்டு வாரியாக ஆலோசனை செய்ய எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்துக்கு வந்து களம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், உதயகுமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. கருப்பணன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இரட்டை இலை சின்னம், வேட்பாளர் அறிவிப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

    இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாளில் தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம்.

    மேலும் இந்த கூட்டத்தில் தொகுதியின் களநிலவரம், மக்களின் மன நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பூத் கமிட்டியினர் செயல்பாடு, பிரசார யுக்திகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு, மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர் நந்தகோபால் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ×