search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
    • அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுலஇந்திரா, வளர்மதி, பொன்னையன் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் சதாசிவம், பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, ஈஸ்வரன், சைதை கடும்பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் பணிபுரிந்து மரணம் அடைந்த சந்திரசேகரன், குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. கொடியை கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் செல்லாது என்று வாதிடப்பட்டது.

    பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை தொடர்ந்தது.

    அப்போது வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள், அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காரணத்தினாலேயே பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் என்றும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் 16-ந்தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக தங்கள் தரப்பு பதில் மனுக்களை எழுத்துப்பூர்வ பதிலாக நேற்று தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 18 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பதில் மனுவில் தெள்ளத்தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனேயே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் பொதுக்குழுவே உச்சபட்ச அங்கீகாரம் படைத்த அமைப்பாகும். இதனை கூட்டியே கட்சியின் அனைத்து முடிவுகளும் இதற்கு முன்பு எடுக்கப்பட்டு உள்ளன. கட்சியில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகாரம் செய்துள்ளனர்.

    ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்க முடியாது என்பதாலேயே பொதுக்குழு அதிகாரம் மிக்க அமைப்பாக அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விஷயங்களையும் கேட்பதற்கு தொண்டர்களிடம் செல்வது சிரமமான காரியமாகும். இதற்காகவே பொதுக்குழு உள்ளது.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் அப்போது பொதுக்குழு உறுப்பினர்களின் அதிகாரத்தாலேயே உருவாக்கப்பட்டன. அப்படி இருக்கும் போது அந்த பதவிகளை நீக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உண்டு.

    பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தனி நீதிபதியின் தீர்ப்பு அமைந்துள்ளது. தனி நபர் ஒருவர் பயன் அடையும் வகையிலும் அந்த தீர்ப்பு உள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றே பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். எனவே பொதுக்குழுவை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றியதில் எந்தவிதமான விதி மீறல்களும் இல்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இது போன்ற விரிவான அறிக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர்களும் 18 பக்க பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபர் பயன் அடையும் வகையில் ஜூலை 11-தேதி நடைபெற்ற பொதுக்குழு அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. அந்த பதவிக்கு இனி யாரும் வரக்கூடாது என்பதற்காகவே 2017-ம் ஆண்டில் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிகளே நிர்வாக பதவிகளாகும். இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் காலாவதியாகாமல் இருக்கும் நிலையில் கட்சியின் விதிகளில் தன்னிச்சையாக திருத்தம் செய்து எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்துள்ளார்.

    எனவே பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல தகவல்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து எழுத்துப்பூர்வ பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அரசியல் களத்திலும் பலத்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட 15-வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய கழக இணைச் செயலாளருமான எம்.அம்மினி மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில், பாசறை மாவட்ட தலைவர் ஜி.ராஜீவ் காந்தி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.ராஜா, ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் கே.புஷ்பராஜ், கிளைச் செயலாளர் சி.கே.சீனிவாசன், தமிழ்மன்னன், சரவணன், முருகன், நாகப்பன், ஜெகதீஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
    • ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி “இறைவனுக்கே தெரியும்” என கூறிவிட்டு சென்றார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம், "உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்?" என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி "இறைவனுக்கே தெரியும்" என கூறிவிட்டு சென்றார்.

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    அமைப்பு செயலாளர் பொன்னையன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர், நல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் ஒரு விவசாயி. விவசாயி பெருமக்களோடு இந்த மாட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைக்கு வேளாண் பெருமக்கள் தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர். விவசாய பணி என்பது கடுமையான பணி. நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.

    விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தது அம்மாவுடைய அரசு தான். 2 முறை தள்ளுபடி செய்தோம். பல தடுப்பணைகள், பல பாலங்கள் கட்டி கொடுத்தோம். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியமாக வழங்கப்பட்டது.

    சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களில் மக்கா சோளம் பயிரில் அமெரிக்கன் படை பழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் கேட்காமலே ரூ.150 கோடி நிவாரணம் நான் வழங்கினேன். மேலும் ரூ.48 கோடி வழங்கி எங்கெல்லாம் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோ அங்கு அரசாங்கமே பூச்சிக்கொல்லி மருந்து அடித்து விவசாயிகளை காப்பாற்றிய அரசாங்கம் அம்மா அரசாங்கம்.

    ஆனால் தி.மு.க. அரசு, மரவள்ளி கிழங்கு பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உதவவில்லை. விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.

    ஏழை, எளிய மக்கள் அதிகம் பேர் தான் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு எப்படி கொடுத்தார்கள் என உங்களுக்கு தெரியும். ஒழுகிற வெல்லம் என அப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பை தான் தி.மு.க. ஆட்சியில் கொடுத்தார்கள்.

    அம்மா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினாலே தை பொங்கல் பண்டிகையை கிராமபுறங்கள் மகிழ்ச்சியோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2500 ரூபாய் பொங்கல் தொகுப்போடு வாரி வழங்கினேன். பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, முழுகரும்பு என பொங்கல் தொகுப்போடு கொடுத்தேன்.

    ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொடுக்க மறுத்தார்கள். ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நானு அறிக்கை விட்டேன். தி.மு.க.வுடைய கவனத்துக் கொண்டு சென்ற பிறகு தான் இந்த ஆண்டு உங்களுக்கு முழு செங்கரும்பு கிடைக்க பெற்றது. இல்லையென்றால் பொங்கலுக்கு உங்களுக்கு செங்கரும்பு கிடைத்திருக்காது. ஆகவே விவசாயிகளை புறக்கணிக்கின்ற அரசு தி.மு.க.,

    ஆகவே போராடி, போராடி தான் மக்களுக்கு நன்மை பெற வேண்டும். அப்படிபட்ட ஆட்சி தான் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்ன? நன்மை பெற்றார்கள். சிந்தித்து பாருங்கள். எந்த நன்மையும் கிடையாது. திராவிட மாடல் ஆட்சி விளம்பரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.

    வீட்டுக்கு பயன்படுத்துகின்ற மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். 18 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி விட்டார்கள். கடை, வீடுகளுக்கு வரி, குடிநீர் வரி ஆகியவற்றையும் உயர்த்தி விட்டார்கள். உயர்த்தாத வரி கிடையாது. இவ்வளவு வரியை உயர்த்தியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அம்மா அரசு இருந்தபோது கிராமத்தில் கால்நடை வளர்ப்பு முகாம் நடத்தினோம். கோமாரி நோய் பாதிக்கப்படுகின்ற இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பு மருந்து வழங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த அரசு செய்ய தவறிவிட்டது.

    கிராமபுற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுககு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை படைத்தது, மு.க.ஸ்டாலினும், அவரது மகனும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாம் அனைவருக்கும் பொன்னாள், எம்.ஜி.ஆர். பிறந்ததும் வரலாறு, அவர் மறைந்ததும் வரலாறு, அத்தகைய வரலாற்றை யாரும் படைக்கவில்லை. அண்ணாவின் புகழை பரப்பியவர் எம்.ஜி.ஆர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதே போல அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.
    • மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. என்ற மாபெரும் பேரியியக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை பெற்று 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சியை வழங்கினார்.

    சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர். தான் உழைத்து சேகரித்த செல்வத்தை, ஏழை, எளியோர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் வழங்கிய வள்ளல் பெருந்தகை.

    தனது திரைப்படப் பாடல்கள், வசனங்கள், கதைகள் மூலமாக இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்றடையச் செய்து அடித்தட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று, அவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர்.

    1972-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

    இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.

    இந்த மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மண்டல கூட்டத்தில் தி.மு.க.வினர் கடந்த அ. தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என கூறுகின்றனர்.
    • அ. தி.மு.க. அரசு செய்த சாதனைகளை தாங்களே செய்ததாக தி.மு.க. வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மாநகராட்சி மன்ற குழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மண்டல கூட்டத்தில் தி.மு.க.வினர் கடந்த அ. தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என கூறுகின்றனர்.

    திருவொற்றியூரில் 65 அடி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. மிகப் பிரமாண்டமான நூலகம் கட்டப்பட்டது. தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது. அரசு கலைக் கல்லூரி உருவானது. விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது. மெட்ரோ ரயில் திட்டம் வந்தது என பல திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

    மாட்டு மந்தை மேம்பாலம் அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது சட்டமன்ற உறுப்பினரான குப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் மாண்புமிகு அம்மாவால் அறிவிக்கப்பட்டு அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எங்களது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    பாலம் பணிகள் முடிந்த பின் முதல்வராக எங்களது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த பாலத்தை தாங்களே கட்டியதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். திருவொற்றியூர் கிராம தெரு ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நடைபாதை வாசிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    ஆனால் இன்று வரை அங்கு எந்த பணிகளும் தொடங்கவில்லை. இம்மாதம் 30 - ம் தேதிக்குள் பணி தொடங்காவிட்டால் எங்களது கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம். ஏழாவது வார்டில் கடந்த 10 மாதங்களாக தெருவிளக்கு கம்பங்கள் மழைநீர் கால்வாய்க்காக அகற்றப்பட்டது. அதை மீண்டும் பொருத்துவதாக கூறிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இன்று வரை பொருத்தவில்லை .

    மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மேல் கட்டப்பட்டு வரும் பாலம் இன்னும் சிறிய அளவிலே பணி உள்ளது அதை விரைந்து முடிக்க வேண்டும். அந்த பணி தடைபட என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும். சிபிசிஎல் தொழிற்சாலை பைப்புகள் இருப்பதாக கூறப்பட்டது . அந்த தொழிற்சாலையும் தனது பங்களிப்பு பணத்தை தமிழக அரசுக்கு செலுத்தியுள்ளது அதற்கு நானும் முயற்சி செய்தேன்

    விரைவில் மேம்பாலம் திறக்கப்பட வேண்டும். நாய் குவாட்டர்ஸ் அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுபவர்களுக்கு மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்க மறுக்கிறது.

    இது கண்டிக்கத்தக்கது. அதில் உள்ள நடைமுறையை சரி செய்து இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். அ. தி.மு.க. அரசு செய்த சாதனைகளை தாங்களே செய்ததாக தி.மு.க. வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இது நியாயம் தானா என பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு ஆன்லைன் வழியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
    • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

    இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

    அதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியது.

    ஜனவரி 16-ந்தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் தெரிவித்து இருந்தது.

    சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி எடப்பாடி பழனிசாமிக்கு என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தார். ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு ஆன்லைன் வழியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் அடிக்கடி தேர்தல் நடப்பதால் அதிக செலவினம் ஏற்படுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதாகவும் ஆகையால் பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒரு சேர நடத்துவது தொடர்பாக சட்டக்குழு ஆலோசனை செய்வதாக மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாராளுமன்ற குழு ஆய்வு மேற்கொண்ட சில பரிந்துரைகளையும் அளித்துள்ளது. இதுகுறித்து சட்ட ஆணையம் தான் முடிவு செய்யும்.

    • அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு என பல பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. இதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்றார்.

    இதில் பகுதிச்செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கல் மாவட்ட இணை செயலாளர் மாதையன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்.
    • வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.

    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள்.

    போற்றுதலுக்குரிய உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது ஆட்சியிலும், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன என்பதை, இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

    அறுவடைத் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; இப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்; வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்; இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 மகளிரை பணியில் இருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும், மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வருவதாகவும், மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

    இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, அம்மா உணவகம் இயங்கும் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டிட பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, தி.மு.கவினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×