search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது.
    • எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    அ.ம.மு.க.வில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை வரச் சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க முடியும்.

    அ.ம.மு.க. வீரர்களின் பட்டாளம். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    இதனால் விலகி செல்லும் சிலரால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. தர்மபுரியில் ஒருவர் சென்றார். என் கூடவே இருந்தவர் துணை பொதுச்செயலாளராகவும் அவர் இருந்தார். 5, 6 நிர்வாகிகளும் அவருடன் சென்றனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளோம்.

    விலகி செல்பவர்களின் இடத்தை நிரப்ப தகுதியான பலர் உள்ளனர். இப்படி தகுதியான நபர்கள் எங்கள் கட்சியில் இருப்பதால் தான் பழனிசாமி ஆட்களை பிடி என்கிறார். சொந்த பிரச்சினை, சுயநலத்தால் கட்சியை விட்டு சிலர் செல்வார்கள். இப்படி பதவி வெறியுடன் தடம் மாறுபவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அது பெரிய விஷயமே இல்லை. விலகிச் சென்றவர்கள் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிவதையும் நீங்கள் பார்க்கலாம்.

    கட்சி தொடங்கி 5 ஆண்டுகளாகிறது. 2 தேர்தல்கள் எங்களுக்கு பின்னடைவு தான். இருந்தாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்து பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கான பூத் கமிட்டியை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கழகம், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர், பகுதி செயலாளர் இவர்களையெல்லாம் அழைத்துள்ளேன். அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளை அழைத்து பேச உள்ளேன்.

    அ.ம.மு.க.வில் 27 அணி உள்ளது. அவர்களையும் சந்திக்க உள்ளேன். 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க.வை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.

    அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அ.தி.மு.க. இன்று தவறானவர்கள் கையில் உள்ளது.

    பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அ.தி.மு.க.வுடன் இணைவீர்களா? என்று அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்கிறீர்கள்.

    எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது. நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். வரும் காலத்தில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். ஓயமாட்டோம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

    • திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகில் 2ம் தேதி காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம்.
    • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்த முடிவு.

    பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகில் 2ம் தேதி காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • பந்த் போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
    • சொற்ப எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

    மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறும். சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அதிகாரம் இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    இதையடுத்து மாநில அந்தஸ்து பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அரசியல் கட்சிகள் மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்த தொடங்கினர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெறும் என அதன் மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

    இதற்கு தி.மு.க. மற்றும் வர்த்தக சபையினர், புத்தாண்டு காலம் என்பதால் வியாபாரம், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவர் என எதிர்ப்பு தெரிவித்தனர். வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளை திறக்க பாதுகாப்பு தர போலீசை வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொற்ப எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது.

    புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களில் சில பஸ்நிலையம் வந்து சென்றது. பிற தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றனர். புதுவையில் தனியார் பஸ்களே அதிகளவில் இயக்கப்படுகிறது. இன்று தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, நேருவீதி, காமராஜர் வீதி, அண்ணாசாலை, படேல் சாலை, மிஷன் வீதி, புஸ்சி வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. உட்புற பகுதிகளில் இருந்த ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

    புறநகரில் பிரதான வீதிகளில் இருந்த கடைகள் திறக்கப்படவில்லை. மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் இயங்கியது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. கல்லூரி மாணவர் பஸ்கள் இயக்கப்பட்டது.

    தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் இயங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் கூடும் சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    புதிய பஸ்நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரெண்டு மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வை பா.ஜ.க. கட்டுப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    • தி.மு.க.வின் பி டீமாக ஓ.பி.எஸ். செயல்படுகிறார் என்றார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த வேண்டும். ஓ.பி.எஸ். பணத்தைக் கொடுத்து கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தி.மு.க.வின் பி டீமாக ஓ.பி.எஸ். செயல்படுகிறார்.

    கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அ.தி.மு.க முடிவு செய்யும். அ.தி.மு.க தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம்.

    அ.தி.மு.க.வை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என எப்போதும் பா.ஜ.க. வற்புறுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என தெரிவித்தார்.

    • கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே புளுகு மூட்டையின் மறு வடிவமாக காட்சி அளிக்கிறது.
    • தங்களுடைய பணி நிரந்தக் கோரிக்கை உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்ற வாக்குறுதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பக்கம்-57-ல் 181-வது வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது.

    ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வாக்குறுதி குறித்து முதல்-அமைச்சர் மவுனம் சாதிப்பது 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே' என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது.

    கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே புளுகு மூட்டையின் மறு வடிவமாக காட்சி அளிக்கிறது.

    தங்களுடைய பணி நிரந்தக் கோரிக்கை உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யவும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.
    • ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று நடந்தது.

    இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என 120 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி அமைப்பது, முகவர்களை தேர்வு செய்வது போன்றவை குறித்து இதில் விவாதித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதால், இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, "அரசியலில் போலி என்றால் அது ஓ.பன்னீர் செல்வம்தான். வழக்கமாக நாம் பொருட்களில் தான் போலியை பார்த்திருப்போம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போலி அரசியல்வாதி" என்று கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.

    ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் தன்னை தென் மண்டல தலைவராக முன்னிலைப்படுத்தி வந்தார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அவரை பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தோம்.

    ஆனால் அவர் போடி தொகுதியிலேயே வெற்றி பெறுவது போராட்டமாக இருக்கிறது. நான் எப்படி அங்கே பிரசாரத்துக்கு வர முடியும் என்றார். அவரை தென்மண்டல தலைவராக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் கூட்டத்தில் பேசிய பலரும் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையே பிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
    • சிலர் வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணியில் பதவிகள் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஏற்பட்ட விரிசலில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    கட்சியின் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆனால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று தொடர்ந்து கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி நடைபெறுகிறது. தீர்ப்பு சாதகமாக வருகிறதா? இல்லையா? என்பதை பொறுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

    அதன்படி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.50 மணியளவில் தொடங்கியது.

    கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வழிநெடுக அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். அவர் தலைமை கழகத்தை வந்து அடைந்ததும் மூத்த நிர்வாகிகள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை கழக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, கே.பி.கந்தன், விருகை வி.என்.ரவி, ஆதி ராஜாராம், ராஜேஷ், வெங்கடேஷ்பாபு உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி கூட்டத்தில் விவாதித்தனர்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தியதை கண்டித்து பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பதில் அளித்தார்.

    இதன் அடிப்படையில் சட்ட ரீதியாக அணுகி ஓ.பன்னீர் செல்வத்தை முற்றிலுமாக ஓரம் கட்டி விட முடிவு செய்தனர்.

    சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையே பிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனாலேயே சிலர் வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணியில் பதவிகள் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    எனவே மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அனுசரித்து செல்ல கேட்டுக்கொண்டனர்.

    அடுத்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையில் மாற்றம் கிடையாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார்.

    இந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ.க்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் காரில் சென்ற வேட்பாளரை வழிமறித்து கடத்தி சென்ற விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜயபாஸ்கர் மீது வழக்கு போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    2024 பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வரும் என்று சமீபத்தில் சி.வி.சண்முகம் கூறிய கருத்து கட்சிக்குள் சர்ச்சையானது.

    மேலும் அ.தி.மு.க. ஒன்று பட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிடிக்கவில்லை. எனவே தேர்தல் கூட்டணியில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசே சட்டவிரோதமானது.
    • கட்சியின் அலுவலகம் முகவரி முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று தடை எதுவும் இல்லை.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சென்னை வேப்பேரியில் நடந்தது.

    இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இதுபோல கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்று கூறி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதில், ''கட்சியின் பெயரையும், முத்திரையையும் பயன்படுத்த எந்த உரிமையும் உங்களுக்கு கிடையாது. அதனால், சட்டவிரோத இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வக்கீல்கள் ராஜலட்சுமி, கவுதம் சிவசங்கர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். அடிப்படை உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.

    கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கவும் தங்களுக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) அதிகாரம் இல்லை.

    எனவே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசே சட்டவிரோதமானது. அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைப்பது தொடர்பாக, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட கருத்துகளை கீழ் கோர்ட்டு கருத்தில் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    மேலும், கட்சி அலுவலகம் மீதான சட்டப்பூர்வமான உரிமைகளை இன்னும் கோர்ட்டு தீர்மானிக்காதபோது, முகவரியை பயன்படுத்தியது குறித்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டும் தவறானது.

    கட்சியின் அலுவலகம் முகவரி முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று தடை எதுவும் இல்லை.

    தற்போது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது செல்லாது. அதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரிசீலனையில் உள்ளது.

    நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) தான் கட்சியின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகவும், கட்சி நிறுவனர் எண்ணங்களுக்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். எனவே, கட்சி பொறுப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக இனிமேலும் இதுபோல தேவையற்ற கருத்துகளை தெரிவித்தால் தங்கள் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சசிகலா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.
    • ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. அணிகளை ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன். அது நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒன்றிணையும் என்று சசிகலா தெரிவித்து இருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படுகிறது. கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

    இணைப்பு பேச்சு நடப்பதாக சசிகலா கூறியிருப்பது வடிகட்டிய பொய். அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.

    அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்வதில் இருந்தே அவர்தான் தி.மு.க.வின் பி.அணியாக செயல்படுகிறார். தி.மு.க.வுக்காக வேலை செய்கிறார் என்பது தெளிவாகி விட்டது.

    நீங்கள் ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அனைத்து கார்டுகளுக்கும் வழங்கினோம். ஆனால் இப்போது கொடுப்பது ரூ.1000. கரும்பு கிடையாது. அதுவும் கார்டிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்க உள்ளார்கள்.
    • கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிறுவையில் உள்ளது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும்தான் தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு புது நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 88 மாவட்ட செயலாளர்களையும் புதிதாக நியமித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். அடுத்ததாக பொதுக்குழு கூட்டப்படும் என்று கூறி உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடிவு செய்து இருந்த நிலையில் கோர்ட்டு விசாரணை காரணமாக தள்ளி வைத்தனர்.

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று கூட்டணி கட்சியான பா.ஜனதாவும் நெருக்கடி கொடுத்து வருகிறது. அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை.

    புத்தாண்டு தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாம் என்று தெரிகிறது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆலோசிக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க உள்ளார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க.வில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இடமில்லை.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது.

    அ.தி.மு.க.வில் இன்று எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்று எழுச்சியாக போய்க் கொண்டிருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அது எள்ளி நகையாடக் கூடிய கருத்தாகத்தான் இருக்க முடியும்.

    அ.தி.மு.க.வில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களைத்தான் மற்றவர்கள் பெற முடியும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும், ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறோம்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம் என்றனர். இப்போது ஏன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் வருவதால் ரூ.1000 கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் சட்ட விதிகளின்படி கவர்னரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்த சமயங்களில் மாநில வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

    ஆனால் வேறு, வேறு கட்சிகள் ஆட்சி செய்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்படுகிறது. கவர்னர், முதல்-அமைச்சர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. ஜனநாயகமே கேள்விக்குறியாகிறது.

    இதை கருத்தில் கொண்டே 1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மாநில அந்தஸ்தை வலியுறுத்தினார். மத்திய அமைச்சரவையிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து கிடைப்பது முடக்கப்பட்டது.

    மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர். மக்கள் நலன், அதிகாரம், ஜனநாயகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை அவசியமாக உள்ளது.

    இதை வலியுறுத்தி மீண்டும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) புதுவை மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் பந்த் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க. சார்பில் கட்சிகளுக்கு போராட்டத்தை ஆதரிக்கக்கோரி அழைப்பு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×