search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க. விதிப்படி கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்.
    • பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது.

    பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    அன்றைய கூட்டத்திலேயே அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

    அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

    அதே போல் கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தால் உரிமை கோர முடியாது என்றும் அறிவித்தது.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான தடைகள் விலகியது.

    இதையடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. விதிப்படி கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்.

    பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மேலும் 5 வருடம் தலைமை கழக நிர்வாகியாக இருந்திருக்க வேண்டும். 15 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

    இந்த காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

    எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்ததும் 15 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்டி அங்கீகாரம் பெறவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    இது தொடர்பாக மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டும் வேலைகள் தொடங்கிவிட்டன.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடன் ஆதரவு தருவதற்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • அ.தி.மு.க.வில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பு கூறினார்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தனிநீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடன் ஆதரவு தருவதற்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன்பு இந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளரை சுய விருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், அவரை பொதுச்செயலாளராக்க முழுமையான ஆதரவு தருவதாகவும் உறுதிமொழி பத்திரம் பெறப்படுகிறது.

    பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி பட்டியல் தயாரிக்கிறார்கள். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறும்.

    • அ.தி.மு.க.வில் மோதல் நீடித்து வந்த நிலையில் டெல்லி பா.ஜனதா தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்துக்கா? என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தது.
    • அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் விவாதம் முடிவுக்கு வந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அங்கீகரிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் 'ஒற்றை தலைமை நாயகன்' என்கிற அடைமொழியுடனேயே போஸ்டர்கள், பேனர்களை அச்சிட்டு வருகிறார்கள். இப்படி கட்சியின் தலைமை பதவியை எட்டிப்பிடித்துள்ள எடப்பாடி பழனிசாமி வசமே அ.தி.மு.க. தலைமை கழகமும் உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை முழுமையாக ஓங்கி இருக்கிறது.

    இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வில் மோதல் நீடித்து வந்த நிலையில் டெல்லி பா.ஜனதா தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்துக்கா? என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தது.

    அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் இந்த விவாதம் முடிவுக்கு வந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கே தங்கள் ஆதரவு என்பதை இந்த சந்திப்பின் மூலம் அமித்ஷா உணர்த்தி இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இப்படி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையை நிலைநாட்டி இருப்பதை தொடர்ந்தும் டெல்லி பா.ஜனதா தலைமையிடத்திலிருந்து அவருக்கே 'கிரீன் சிக்னல்' காட்டப்பட்டிருப்பதையடுத்தும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலர் தங்களது அரசியல் பயணத்தை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவதற்கு அவர்கள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாக மாவட்ட அளவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்தவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள் என்றும் விரைவில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலை எந்தவித பிரச்சினையுமின்றி எதிர் கொள்வதற்கு வசதியாகவே ஒற்றை தலைமை கோஷத்தை முன் கூட்டியே எழுப்பினோம். தற்போது அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதே கட்சிகள் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணத்துக்கும் தயாராகி வருகிறார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று பேசுவதற்கும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை முடிவுக்கு வந்து ஒற்றை தலைமையை ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி உற்சாகத்துடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். நிச்சயம் அவரது வேகமான செயல்பாடுகளால் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் தனது அரசியல் பயணத்தை எப்படி மேற்கொள்ள போகிறார்? என்பதும் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டெல்லி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலை 6.15 மணிக்கு டெல்லியில் இருந்து கோவைக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.
    • இரவு 9.10 மணிக்கு கோவை சென்றடையும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்படுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த கூட்டணி கட்சி என்ற ரீதியில் பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை.

    கூட்டுத் தலைமை என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக இருக்கிறார். ஒற்றை தலைமை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். எனவே இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட்டனர்.

    பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதை கோர்ட்டும் அங்கீகரித்து உள்ளது.

    அதேபோல் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதையும் சுப்ரீம் கோர்ட்டு சரி என்று அறிவித்துவிட்டது.

    கட்சி உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்று அவரது மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

    அமித்ஷாவை சந்தித்து பேசிய போது இந்த தகவல்களையும், கோர்ட்டு தீர்ப்பு நகல்களையும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.

    மொத்தம் உள்ள 1660 பொதுக்குழு உறுப்பினர்களில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தன்னை ஆதரித்து கையெழுத்து போட்டு கொடுத்த கடித நகல்களையும் அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.

    மேலும் கட்சியில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே பொதுக்குழு நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ளாமல் தலைமை அலுவலகத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டது, கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது ஆகியவற்றை எடுத்துக்கூறி அதற்கான கண்காணிப்பு கேமிரா பதிவு காட்சிகளையும் ஆதாரங்களாக வழங்கினார்.

    மேலும் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதை கட்சியினர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதையும் எடுத்து கூறியிருக்கிறார்.

    அதற்கு ஆதாரமாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாராட்டியது, ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியது பற்றியும் எடுத்துக் கூறினார்.

    ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சி விரோத செயல்பாடுகளால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தான் கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் பக்கம் யாரும் செல்லவும் இல்லை என்ற விபரங்களை எடுத்து கூறி இருக்கிறார்.

    எனவே கட்சியின் அதிகாரபூர்வமான பொதுச்செயலாளர் என்ற ரீதியில் கட்சி தொடர்பான அனைத்து தொடர்புகளையும் தங்களோடு மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு முடிந்த பிறகு பிற்பகலில் தேர்தல் ஆணையத்துக்கு செல்கிறார். அங்கும் கட்சியின் பொதுக்குழுவில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருப்பது, தனக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பும் வந்திருப்பது ஆகியவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறார்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

    டெல்லி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலை 6.15 மணிக்கு டெல்லியில் இருந்து கோவை செல்கிறார். இரவு 9.10 மணிக்கு கோவை சென்றடையும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்படுகிறார்.

    சேலத்தில் இருந்து வருகிற 23 அல்லது 24-ந் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அந்த நீக்கம் செல்லாது என கூறினார்.
    • மனுதாரர் தரப்பு வக்கீல், அ.தி.மு.க. உட்கட்சி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அந்த நீக்கம் செல்லாது என கூறினார்.

    இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், அ.தி.மு.க. உட்கட்சி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.

    இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

    • அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர்.
    • அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற வன்முறை மற்றும் மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார், மோதல் தொடர்பாக அ.தி.மு.க. அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்டது தொடர்பான தடயங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பல்வேறு ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

    இதனை தொடர்ந்து தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்தை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர். அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மோதல் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் உரிய விசாரணையை போலீசார் மேற்கொள்ளவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு கட்சியின் அனைத்து தரப்பிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
    • இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்குள் எழுந்துள்ள அதிகார போட்டியில் கட்சியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    பெருவாரியான நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்பக்கம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது. கோர்ட்டு தீர்ப்புகளும் அவருக்கு சாதகமாக அமைந்ததால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார்.

    அடுத்த கட்டமாக பொதுச்செயலாளர் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரையும் தன்பக்கம் இழுத்து கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். தங்கள் பலத்தை நிரூபிக்க மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்தார்.

    இந்த போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. எல்லா மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    அதேபோல் சென்னை வடபழனி உள்பட சில இடங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடந்தன. இந்த கூட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டார்கள்.

    இதன் மூலம் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தி ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது.

    ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஓ.பி.எஸ். வரவேற்றுள்ளார்.

    தமிழக அரசு தனது கடமையை செய்கிறது. எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இவரின் இந்த கருத்துக்கு கட்சியின் அனைத்து தரப்பிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்கள்.

    எதிரி கட்சியான தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசலாமா? என்று ஓ.பி.எஸ். அணியினரே பேசிக் கொள்கிறார்கள்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயன்று வருகிறார்கள்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவர் கொண்டு வந்த திட்டத்தையும் பாராட்டி பேசியது கோவை மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அவர் முதல்-அமைச்சரை பாராட்டியதால் தி.மு.க.வுக்கு செல்ல தயாராகி விட்டாரோ என்ற பரபரப்பும் எழுந்தது.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் முகாம் நடந்தது. இந்த முகாமில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமியும் கலந்து கொண்டார்.

    அப்போது விழாவில் வி.பி.கந்தசாமி பேசியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்திலும், கருணாநிதி காலத்திலும் மருத்துவத்துறைக்கு என்று தனி கவனம் செலுத்தினர். அதேபோன்று தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மருத்துவத்துறைக்கு தனியாக கவனம் செலுத்தி வருகிறார்.

    மக்களை காப்பாற்றுவதில் சீரிய சிந்தனையோடு தமிழக அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. மக்களின் இருப்பிடத்திற்கு நேரடியாக வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம்.

    பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் (தி.மு.க.) என்ன திட்டம் கொண்டு வந்தாலும், எம்.எல்.ஏ.வான நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.

    ஏனென்றால் நானும் மக்கள் பிரதிநிதி. அவரும் மக்கள் பிரதிநிதி. எங்களின் சின்னங்கள் வேறு, வேறாக இருந்தாலும் எண்ணங்கள் என்பது ஒன்று தான். எங்களின் எண்ணங்கள் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவே மட்டுமே இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவர் கொண்டு வந்த திட்டத்தையும் பாராட்டி பேசியது கோவை மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் முதல்-அமைச்சரை பாராட்டியதால் தி.மு.க.வுக்கு செல்ல தயாராகி விட்டாரோ என்ற பரபரப்பும் எழுந்தது.

    இதுதொடர்பாக வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பள்ளபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறைக்கு ஒவ்வொரு அரசும் அளித்து வரக்கூடிய முக்கியத்துவம் பற்றி மட்டுமே பேசினேன். மேலும் அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது குறித்து மட்டுமே பேசினேன்.

    தமிழகத்தில் மினி கிளினிக்கை மூடி வருகிறார்கள். அது குறித்து நான் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தால் அது அரசியலாகி விடும். அதன் காரணமாகவே அதனை பற்றி பேசாமல் மக்களுக்கு பயன்படும் திட்டத்தை பற்றி பேசினேன். ஆனால் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

    நான் 1972-ல் மாணவ பவருத்திலேயே அ.தி.மு.க.வில் இணைந்து விட்டேன். அன்றில் இருந்து இன்று வரை நான் அ.தி.மு.க தொண்டனாகவே நீடிக்கிறேன். தொண்டனாக இருந்த என்னை ஊராட்சி மன்ற தலைவராக்கியது அ.தி.மு.க. தான்.

    ஊராட்சி மன்ற தலைவராக அந்த பகுதியில் மட்டுமே தெரிந்த என்னை ஒரு எம்.எல்.ஏ.வாக உலகுக்கு காட்டியது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தான். குடத்தில் இட்ட விளக்காக இருந்த என்னை, குன்றின் மீது ஏற்றிய விளக்காக மாற்றியது எடப்பாடியும், எஸ்.பி.வேலுமணியும் தான்.

    நான் எப்போதுமே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாகவும், எடப்பாடியின் உண்மை விசுவாசியுமாகவே இருப்பேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்த எடப்பாடியாருக்கு சூலூர் பகுதியில் தொண்டர்களை திரட்டி வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தேன். அப்படி இருக்கும் போது நான் தி.மு.கவுக்கு தாவ இருப்பதாக வரும் தகவல் வெறும் வதந்தியே. அப்படி எதுவும் இல்லை.

    எனது உடம்பில் அ.தி.மு.க. ரத்தமே ஓடி கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தால் சந்ததியே விளங்காது. நான் எப்போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வார்த்தைகளை அளந்து பேச வேணடும் என ஆர்.எஸ்.பாரதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
    • மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:-

    வார்த்தைகளை அளந்து பேச வேணடும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நாங்கள் 100 வார்த்தை பேசுவோம். வார்த்தைகளை எப்படி பிரயோகிக்கவேண்டும், எந்த நேரத்தில் பிரயோகிக்க வேண்டும், யார் மீது பிரயோகிக்க வேண்டும் என அனைத்து வித்தைகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அரசியல் பண்பாடு கருதி அப்படி பேசவில்லை.

    அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் பதில் கொடுக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவுக்கும், அண்ணன் எடப்பாடியாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி அவ்வப்போது கொடுப்போம்.

    கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா கொடநாடு வழக்கை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டவேண்டாம். இதுபோல் எத்தனையோ பூச்சாண்டி வேலைகளையெல்லாம் திமுக காலத்தில் அப்போதே பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இதற்கு பயப்படும் கட்சி அதிமுக அல்ல.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வந்தார்.
    • பெரியார் உருவப்படம் இல்லாததது கண்டு ஓ.பன்னீர்செல்வம் திகைத்து போய் நின்றார்.

    சென்னை:

    பெரியார் பிறந்த நாளையொட்டி, இன்று சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த உருவ படத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் திரண்டு வந்து பெரியார் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வருவதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

    உடனே நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் பெரியார் படத்தை அங்கிருந்து கையோடு தூக்கி சென்றனர்.

    சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வந்தார். அங்கு பெரியார் உருவப்படம் இல்லாததது கண்டு அவர் திகைத்து போய் நின்றார். அவரது ஆதரவாளர்களும் என்ன செய்யலாம் என்பது தெரியாமல் விழித்தனர். அந்த சமயம் அ.ம.மு.க தொண்டர்கள் பெரியார் படத்துடன் அங்கு வந்தனர்.

    இதனால் வேறு வழியில்லாமல் அந்த படத்தை சிலைக்கு கீழ் வைத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த சம்பவம் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர்.
    • தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மோதல் வெடித்தது.

    இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அன்றைய தினம் ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ். சென்றபோதுதான் பெரிய கலவரம் ஏற்பட்டது.

    அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அறைகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை தூக்கிச் சென்றனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மோதல் சம்பவம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றினர். இதனை வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அடையாளமும் கண்டுள்ளனர்.

    இது தொடர்பாக புகார்தாரரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பல்வேறு தகவல்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்றனர்.

    அங்கு வைத்து மோதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார் அது தொடர்பான தகவல்களை முழுமையாக சேகரித்துள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்தும், அப்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாகவும் சி.வி.சண்முகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அறைகளில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தனர்.

    சி.வி.சண்முகம் அளித்த புகாரில் இதனை முழுமையாக தெரிவித்து இருந்தார். அதில் யார்-யார் சதி திட்டத்துடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்தனர் என்பது பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.வி.சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் விரிவான பதிலை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    இந்த வாக்குமூலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் மோதலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது குறித்தும், மோதலில் யார்-யாருக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது பற்றியும் சி.வி. சண்முகம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் மட்டுமே இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலக மோதல் சம்பவத்தில் சென்னையை சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இவரை போன்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குறி வைத்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்னும் சில தினங்களில் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர். விரைவில் விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது.
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×