search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • சத்யாவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.
    • மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    தூத்துக்குடி:

    கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க. 12 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சத்யா தலைவராகவும், துணைத்தலைவராக செல்வகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில் துணைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

    தலைவராக உள்ள சத்யா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யா தலைவர் பதவியை இழந்தார். ஆனால் இதை எதிர்த்து சத்யா தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சத்யாவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சத்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு 15 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை சத்யா இழந்தார்.

    • சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் தொடர்ந்த வழக்கில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு.
    • விசாரணையை செப்டம்பர் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    அன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தார். அப்போது, அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.

    கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பின், அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தனர்.

    நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிமுக ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள தெருவோர விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.


    • ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம்.
    • ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தனக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவரது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உள்ளது.

    ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    அதே நேரத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்ல ராஜேந்திர பாலாஜி அனுமதி கேட்டதற்கு சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    • ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.
    • சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இதனையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று தமிழக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார்.

    எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றால் வன்முறையை ஊக்குவிப்பதாகி விடும். வன்முறை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவில்லை. அதன் பக்கத்தில் உள்ள பகுதியில்தான் நடைபெற்றது. எனவே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியே என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியின் அலவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்க முடியும், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

    • அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.
    • ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெய்யனூர் மாரியம்மன் கோவில் அருகில் அம்மா இலவச பெண்கள் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதை கடந்த மே மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தற்போது இந்த மையத்தில் 4 மாதம் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.

    அப்போது ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரு பதவிகளுக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ள அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
    • இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் உறுப்பினர்கள் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் முழு அதிகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    இந்த இரு பதவிகளுக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ள அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

    இந்த வழக்கிற்கு அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லை. எனவே இந்த வழக்கை தொடருவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை' என்று கூறி இருந்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்தார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன், ராம் குமார் ஆதித்தனும், சுரேன் பழனிசாமியும் அ.தி.மு.க.வில் தற்போது அடிப்படை உறுப்பினர்களாக இல்லை.

    ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள உறுப்பினர் அட்டை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதமே காலாவதியாகிவிட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

    இதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.

    • அ.தி.மு.க. அலுவலக சாவி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    புதுடெல்லி :

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இதனையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.

    இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்தனர்.

    இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், 'பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏற்று தமிழக அரசு செயல்பட்டுள்ளது.

    எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வக்கீல் பாலாஜி சீனிவாசன் என்பவர் மூலமாக தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார்.

    எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றால் வன்முறையை ஊக்குவிப்பதாகி விடும். தனது பக்கம் பெரும்பான்மை இல்லை என தெரிந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் ஜனநாயகபூர்வமான தலைமை மாற்றத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளை விதித்தார்.

    இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வம் மறைத்துள்ளார். வன்முறை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவில்லை. அதன் பக்கத்தில் உள்ள பகுதியில்தான் நடைபெற்றது. எனவே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு சரியே'

    இவ்வாறு பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

    • அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது.
    • கடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து இரு தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க  உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த ஜூலை 20-ந் தேதி உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து அ.தி.மு.க. அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற போது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பண விவகாரங்களில் ஓ.பன்னீர் செல்வம் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது. என குறிப்பிட்டுள்ளார். நாளைய Case filed by OPS seeking handover of DMK office keys- Edappadi Palaniswami's reply in Supreme Courtவிசாரணையின்போது வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
    • வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு, அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
    • அ.தி.மு.க. அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

    இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது.

    இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ந்தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது.

    ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது.

    கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது.

    இதைத் தொடர்ந்து நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.

    இதனால் நாளை சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக ஜூலை 20-ந்தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஒரு மாதம் வரையில் தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நீங்கி அ.தி.மு.க. அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.

    இது போன்ற சூழலில் தான் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை வருகிற 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சேலத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க.வில் ஏற்கனவே கட்சி தலைமைக்கான போட்டியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

    இதுதொடர்பாக கோர்ட்டில் தற்போது மாறி மாறி வழக்குகளும் தீர்ப்புகளும் வந்த நிலையில் அ.தி.மு.க தலைமையை கைப்பற்ற சசிகலா அதிரடியாக வியூகம் அமைத்து தமிழக முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (12-ந் தேதி) காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். அங்கிருந்து தலைவாசல் வரும் அவர் மதியம் 2.30 மணியளவில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

    தலைவாசலில் அவருக்கு தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் சேலம் 4 ரோடு பகுதிக்கு வரும் அவர் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

    தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    13-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் வெப்படை, பள்ளிப்பாளையம் பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    பின்பு அவர் ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறார்.

    முன்னதாக சென்னையில் இருந்து கார் மூலம் ஆத்தூர் வழியாக சேலம் வரும் சசிகலாவுக்கு ஆங்காங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்படுவதால் ஜெயலலிதா விசுவாசிகள் தன்னை சந்திப்பார்கள் என்று சசிகலா நம்புகிறார்.

    இதனிடையே எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கிய பிரமுகர் சுரேஷ் தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வரவேற்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிகிறது.

    சேலத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் ஏற்கனவே கட்சி தலைமைக்கான போட்டியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதே வேளையில் அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை, எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தொண்டர்கள் நிற்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்களும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர்.

    மேலும் சேலம் மாவட்டத்துக்கு வரும் சசிகலாவை அ.தி.மு.க.வினர் சந்திக்காமல் இருக்கவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உற்று நோக்கும் வகையில் எடப்பாடி ஆதரவாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் அவருக்கு எந்த பகுதியில் அதிக அளவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து ரகசியமாக கண்காணிக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ×