search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • சேலம் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.

    வேட்பு மனு தாக்கலின்போது தன்னுடைய தேர்தல் பிராமண பத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட தி.மு.க முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த 2016-ம்ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தனக்கு ரூ.3.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த பழனிசாமி, 2021 தேர்தலில் தனது சொத்து மதிப்பில் ரூ.1 கோடிக்கு மேல் குறைத்து காட்டியுள்ளார். எனவே சொத்து விவரங்களை மறைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

    இந்தப் புகார் மீதான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கை பொதுநல வழக்காக கருதி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை எதிர்த்து சேலம் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்றும், விசாரணைக்கு உகந்ததில்லை என்றும், இதனால் சேலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு கூடுதல் வக்கீல் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 125 ஏ தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது. 125 ஏ (1) பிரிவு 33 ஏ இன் துணைப் பிரிவு தொடர்பான தகவல்களை வழங்கத் தவறியது, 125 (2) தனக்குத் தெரிந்த அல்லது தவறானது என்று நம்புவதற்குக் காரணமுள்ள தவறான தகவலைத் கொடுப்பது. 125(3) பிரிவு 33-ன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அவரது வேட்புமனுத்தாளில் அல்லது 33 ஏ இன் துணைப்பிரிவு 2-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய அவரது வாக்குமூலத்தில், ஏதேனும் தகவலை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதனிடையே எடப்பாடி பழனிசாமி மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் வழக்குப்பதிவு செய்து தினமும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தினமும் ஒரே நாள் என்பதால் விவரங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படாததால் அடுத்த விசாரணை நாளான ஜூன் 6-ம் தேதி அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும், அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கட்சியில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.
    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஆரம்பத்தில் இருந்தே ஓங்கிகாணப்பட்டது.

    கட்சியில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களோ மீண்டும் கட்சியில் அவரை சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாநாடு நடத்தி தங்கள் பலத்தை காட்ட திட்டமிட்டனர். இதன்படி திருச்சியில் மாநாடு ஒன்றையும் ஓ.பி.எஸ் நடத்தினார்.

    ஆனால் அந்த மாநாடு அவருக்கு எந்த விதத்திலும் நன்மை பயத்தது போன்று தெரியவில்லை. இதையடுத்து ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு எடுபடாமல் போய் விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இதனைதொடர்ந்து அ.தி.மு.க.வில் எப்படியாவது மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் தூது விட்டனர். இந்த விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். நம்பினார். ஆனால் அவர்கள் தற்போது ஓ.பி.எஸ்.ஐ கண்டு கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது தங்களை சேர்த்துக்கொள்ள பா.ஜனதா டெல்லி மேலிடம் கவனம் செலுத்தும் என்றே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை. ஓ.பி.எஸ்.-ஐ எந்த சூழலிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் உறுதியாகவே இருந்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி பேசப்பட்டதாகவும், ஓ.பி.எஸ்.-ஐ இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக மீண்டும் நீங்கள் இணைந்து செயல்படுவதையே பா.ஜனதா கட்சி விரும்புகிறது என எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதனால் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரியும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா கருத்து தெரிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜனதா தலையிட விரும்பவில்லை எனவும் அது அவர்களது உள்கட்சி விவகாரம் எனவும் அவர் கூறி உள்ளார். இது தொடர்பாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது அமித்ஷா அளித்து உள்ள பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம்.

    அது அக்கட்சியின் விவகாரம் ஆகும். அவர்கள் இருவருமே தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம். அந்த வகையில் ஓ.பி.எஸ். விவகாரத்தில் அ.தி.மு.க.வினர்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேரும் விவகாரத்தில் ஓ.பி.எஸ்.ஐ பா.ஜனதா கைவிட்டு விட்டது உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமித்ஷாவின் பேட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் வக்கீலுமான சேலம் மணிகண்டன் கூறும்போது,

    ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த கருத்தைதான் தொடர்ந்து கூறி வந்தேன். பா.ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது பெரிய நம்பிக்கை வைத்து உள்ளனர். ஓ.பி.எஸ்.ஐ சேர்க்காமலேயே நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் எடுத்து கூறி இருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. முழுமையாக வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பேசப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகி இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

    • ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
    • தொண்டர்களை திரட்டி மோதி பார்க்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகளும் தோற்றுப்போனது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

    ஓமலூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருக்கு எதிராக போட்டியிட்ட நபருக்கு உதவியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் 3 முறை முதல்-அமைச்சர் என்று கூறிக்கொள்கிறார். கலெக்டர் விடுமுறையில் சென்று விட்டால் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு. அதுபோல் பொறுப்பாக இருந்தார்.

    என்னிடம் கட்சிக்கு வந்துவிடுகிறேன் என்று தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

    கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு அவரது மகனை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்தார். மற்ற இடங்களுக்கு சென்று கட்சிப்பணிகளை அவர் ஆற்றவில்லை.

    அவர் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க. பகடைக்காயாக வைத்து கொண்டுள்ளது. இதனை கட்சி நிர்வாகிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். தொண்டர்களை திரட்டி மோதி பார்க்க அவர் எடுத்த முயற்சிகளும் தோற்றுப்போனது.

    சட்ட ரீதியாக அவர் தொடுத்த அத்தனை கணைகளையும் எடப்பாடி பழனிசாமியும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வீழ்த்தினார். கட்சி முற்றிலுமாக எடப்பாடி பழனிசாமி வசமாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஒன்று மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது ஆகிய 3 வழிகள் தான் உள்ளன.

    இதில் தனிக்கட்சி தொடங்குவதும், வேறு கட்சிகளில் இணைவதும் சரிபட்டு வராது என்று ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் அ.தி.மு.க.வுக்குள் திரும்பி செல்லும் முயற்சியை அவர் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு அ.தி.மு.க.வுக்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேல்மட்ட தலைவர்களை பொறுத்தவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது சரியாக இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள் வருமாறு:-

    தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கட்சிக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பல்வேறு சட்ட நெருக்கடிகளை கொடுத்து வந்தார். மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தியே கட்சியை ஒன்றுபடுத்தி இருக்கிறோம்.

    மீண்டும் கட்சிக்குள் வந்தால் தனது தலைமையில் தனித்தே செயல்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல அவரது ஆதரவு வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு பதவிகள் பெற்றுத்தர முயற்சிப்பார். அது கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

    சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்திக்கவும் தயங்காதவர். வருங்காலத்தில் அவரது கையை பலப்படுத்த தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினால் சமாளிக்க வேண்டியது வரும்.

    முக்கியமான முடிவுகளை தலைமை எடுக்கும் போது அவரும் அதை ஒருமனதாக ஆதரிப்பாரா? இப்படி பல்வேறு காரணங்களை அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரம் தொண்டர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களையும் கூறுகிறார்கள். தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் தான் பிரச்சினை ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வமும் கட்சி விசுவாசிதான். அவருக்கென்றும் குறிப்பிட்ட ஆதரவை வைத்துள்ளார். கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு கூடுதல் பலம் தான் தேவை.

    பொதுச்செயலாளர் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியும் முன்பு போல் இருக்கமாட்டார். ஓ.பி.எஸ்.சால் கட்சிக்குள் பிரச்சினை என்றால் அதை அவரால் நிச்சயம் எதிர்கொள்ள முடியும். அந்த வகையில் ஓ.பி.எஸ்.சை சேர்ப்பதும் பலமாகத்தான் இருக்கும்.

    பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏதாவது ஒரு பதவியை கொடுத்து அமர வைக்கலாம்.

    நாம் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜனதாவும், ஓ.பன்னீர்செல்வம் இணைவதை விரும்புகிறது. அதனால் தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களை தவிர்க்க முடியாது என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்தார்.

    ஒன்று பா.ஜனதாவுடன் இணைந்து தி.மு.க. எதிர்ப்பில் தீவிரம்காட்ட வேண்டும். அல்லது தைரியமாக முடிவெடுக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. செய்ய வேண்டியதை இப்போது பா.ஜனதா செய்கிறது.

    தி.மு.க. அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தவில்லை. இதற்கெல்லாம் கட்சி பிரச்சினைதான் காரணம்.

    எனவே எல்லா வழிகளிலும் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும். ஓ.பி.எஸ்.சை நிபந்தனைகளின் பேரில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். தேர்தல் வருவதற்குள் கட்சி முழு பலம்பெற வேண்டும் என்கிறார்கள்.

    • ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ரா. துரைக் கண்ணுவின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும்; அதனைத் தொடர்ந்து ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. தலைமை பற்றி பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும் என்று டி.ஜெயக்குமார் கேட்டு இருந்தார்.
    • பா.ஜனதா வினையாற்றினால் எதிர்வினையாற்ற அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித் ஷாவை அண்மையில் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையிலான மோதல் தொடர் கதையாகி வந்த நிலையில், டெல்லியில் அமித் ஷா இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

    எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று வந்ததும் எங்களுக்குள் பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

    அதேபோல அண்ணாமலையும், எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்றார்.

    இந்நிலையில் பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ். ஆர்.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழ்நாட்டில் எந்த முடிவையும் அண்ணாமலையே எடுப்பார் என்றும் அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அ.தி.மு.க.வுக்கு அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் உணர்த்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    பா.ஜ.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. குறித்து விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பா.ஜனதா வினையாற்றினால் எதிர்வினையாற்ற அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்தே இல்லை, எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும் என்று தெரிவித்தார்.

    அ.தி.மு.க. தலைமை பற்றி பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும் என்று டி.ஜெயக்குமார் கேட்டு இருந்தார். ஆனால் பா.ஜனதா தரப்பில் இருந்து பதில் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை ஜெயக்குமார் மீண்டும் கிளப்பி உள்ளார்.

    அ.தி.மு.க. தலைமை குறித்து பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "பா.ஜ.க.வினரின் விமர்சனங்களுக்கு அ.தி.மு.க.வினருக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும். வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம்.

    இதுபோன்ற விமர்சனங்கள் பா.ஜ.க. வினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லாததையே காட்டுகிறது.

    இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா இல்லையா என்பதை அண்ணாமலை ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். அப்படிச் சொன்னால் தான் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்காது. இல்லையென்றால் அண்ணாமலை சொல்லித்தான் அவரது கட்சியினர் செய்கிறார்கள் என நினைக்க வேண்டி வரும்" என்றார்.

    • ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?
    • ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் இன்றைக்கு முடங்கி கிடக்கிறது. முதியோர் உதவி தொகை கூட பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள். தி.மு.க.பொறுப்பேற்ற பிறகு நம்முடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிறு பணிகளை கூட செயல்படுத்தப்படவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு புறக்கணிக்கிறது.

    திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளித்த உத்தரவை கடும் கண்டனம் தெரிவித்தபின் அரசு வாபஸ் பெற்றது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆளுகிறார்.

    தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும்.

    ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?,

    அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் 41 சதவீதம் ஆகும். நான் ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு பள்ளியில் படித்த 9 பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை சிந்தித்து நான் நீட் தேர்வு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.

    ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த 564 பேர் இன்றைக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்கிறார்கள். மருத்துவ கல்வி கட்டணம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கமே கல்வி கட்டணம் செலுத்தும் என்று அறிவித்தேன் அதன்படி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

    எடப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. என்னை முதலமைச்சராக உருவாக்கியதும் எடப்பாடி சட்டமன்ற மக்களாகிய நீங்கள் தான். பொதுச் செயலாளரானதும் உங்களுடைய ஆதரவால் தான். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார்.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முதன் முதலாக டெல்லி சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்ற கட்சிகளும் ஆவலுடன் உற்று நோக்கின.

    மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு என்று எல்லா விஷயங்களையும் அவர்கள் அலசி ஆராய்ந்தனர்.

    இதுபற்றி டெல்லி வட்டாரம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதலில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

    ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வந்தபோது தான் சற்று நெருடல்கள் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு பாதி தொகுதியும், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாதி தொகுதியும் என்று தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் என்று அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்கு சம்மதம் தெரிவிக்கப் படவில்லை. தேர்தல் சமயத்தில் இதுபற்றி விரிவாக பேசலாம் என்று அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் திட்டத்தை கைவிடவில்லை.

    அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தாருங்கள். அதை நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையெல்லாம் நாங்கள் தீர்மானித்து கொள்கிறோம்' என்று கூறி இருக்கிறார்.

    இதைக் கேட்டதும் அ.தி.மு.க. தலைவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனினும் அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'கூட்டணி உறுதியாகிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதை விரைந்து முடிக்க வேண்டும். அதில் கவனம் செலுத்துங் கள்' என்று அறிவித்து இருக்கிறார்.

    அவர் மேலும் கூறுகையில், 'எந்தெந்த தொகுதிகளை தருவீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதிபடுத்தினால்தான் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணி செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடவை குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, வேலூர், ராமநாதபுரம் உள்பட 9 தொகுதிகளை பா.ஜனதா இப்போதே தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் தான் அமித்ஷா அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 இடங்கள் வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. தலைவர்கள் இதில் பதில் சொல்ல ஆர்வம் காட்டாத நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி செயல்படும் என்று அமித்ஷாவும், நட்டாவும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அ.தி.மு.க. தலைவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தி.மு.க. கூட்டணியின் பலம்-பலவீனம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அடுத்து ஓ.பன்னீர் செல்வம் பிரிவதால் பாதிப்பு ஏற்படுமா? என்றும் விவாதித்து இருக்கிறார்கள். மேலும் பிரசாரம் பற்றியும் ஆய்வு செய்து இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதை பிரசாரத்திற்கு கையில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவாதம் நடந்த போது மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்துள்ளார். இதுவரை டெல்லி மேலிட தலைவர்களை பார்க்கும் போது மாநில தலைவர் உடன் இருந்ததில்லை.

    முதல் முறையாக அண்ணாமலையையும் அருகில் வைத்துக்கொண்டே அமித்ஷா பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வினருடன் சுமூகமான நிலையில் கட்சி பணியாற்ற வேண்டும் என்று அண்ணாமலையிடம் தெரிவித்து அமித்ஷா சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சலசலப்பு ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த அணி பக்கமும் சாயாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக எடப்பாடி பழனிசாமியை அழைத்து அங்கீகரித்துள்ளனர்.

    இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் அண்ணாமலையும் உடன் இருந்ததால் தமிழக பா.ஜ.க.வுக்கும் சம வெற்றியாக பேசப்படுகிறது.

    • ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை.
    • அ.தி.மு.க.வை எப்படியாவது உடைக்க வேண்டும்? எப்படியாவது முடக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நான் நேருக்கு நேர் பதில் சொன்னேன். கொட நாடு சம்பவம் நடந்தது அ.தி.மு.க. ஆட்சியில். நான் முதலமைச்சராக இருந்தேன். அதை கண்டுபிடித்தது அ.தி.மு.க. அரசாங்கம். அதில் குற்றவாளிகளை கைது செய்தது அ.தி.மு.க. அரசாங்கம். அவர்களை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசாங்கம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அ.தி.மு.க. அரசாங்கம். நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது அ.தி.மு.க. அரசாங்கம். அப்போது கொரோனா காலம். ஒரு வருடம் கோர்ட்டு விடுமுறையால் செயல்படவில்லை.

    அதன்பிறகு அந்த சாட்சிகள் வெளி மாநிலத்துக்கு சென்று விடுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. அடுத்தது வாதம், அதன் பிறகு தீர்ப்பு என்ற நிலையில் இருந்தது.

    அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் வந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கை எடுத்து விசாரிக்க சொல்கிறார்கள். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முதன் முதலில் ஆரம்பித்தார். வழக்கு நாங்கள் போட்டு குற்றவாளிகளை கைது செய்தோம். அவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. குற்றவாளியை அவர்கள் ஜாமீனில் எடுக்கிறார்கள். அவர் தி.மு.க.வை சேர்ந்தவர். மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்தவர்தான் ஜாமீனில் எடுக்கிறார்.

    அதுமட்டுமின்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாடுகிறார். ஜாமீன் பெற்று கொடுக்கிறார். இவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. கேரளாவில் பல கொடும் குற்றங்களை புரிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    அப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் ஏன் ஜாமீன் கேட்கிறார்கள்? தி.மு.க. வக்கீல் எதற்காக ஆஜராகிறார்கள்? இந்த வழக்கில் உண்மையை அறிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை முழுமையாக கண்டுபிடித்தது நாங்கள். குற்றவாளிகளுக்கு அவர்கள் உடந்தையாக இருந்தால் உண்மை எப்படி வெளிவரும். கொடும் குற்றம் புரிந்தவருக்கும் ஜாமீன் தருபவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இவர்கள் தி.மு.க.வுக்குள் இருக்கின்றவர்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்ற காரணத்தினால்தான், 2 மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினையால்தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

    என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த உடனேயே ஒரு சிலரை தவிர்த்து அ.தி.மு.க. மீது நன்மதிப்பு வைத்து இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விசுவாசமிக்கவர்கள் யார் யார் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். இந்த கட்சிக்கு துரோகம் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த கட்சியில் இடம் இல்லை. எனவே யார் யார் இடம் பெற மாட்டார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

    ஆடியோவில் மிகப்பெரிய செய்தி வந்திருக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி என்று யாராவது என்னிடம் கேள்வி கேட்பீர்களா?

    இந்த ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை. அந்த குடும்பத்தில் இருக்கின்றவர்கள்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் ஆட்பட்டவர்கள்.

    இதை நான் சொல்லவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் நிதி அமைச்சர் சொல்கிறார். நிதி அமைச்சர் சொன்னதற்கு ஏன் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. எது எதற்கோ முதலமைச்சர் பதில் சொல்கிறார். ஏன் இதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இதனால்தான் சந்தேகம் ஏற்படுகிறது.

    இந்த விவகாரத்தை மத்திய மந்திரி அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். அது அவரது கவனத்துக்கு ஏற்கனவே வந்ததாக கூறினார். அவரிடம் இது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாட்டின் பிரச்சினை. ரூ.30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல. இந்த விவகாரத்தை நீங்கள் ஆழமாக எடுத்துக்கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

    ஒரு சாதாரண விவசாயி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அளவு உயர்ந்திருக்கிறேனே என்று பாராட்ட மனதில்லாமல் கேள்வி கேட்கிறீர்களே. உங்களின் உள்நோக்கம் புரிகிறது. நான் இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். நல்ல ஆட்சியையும் கொடுத்து இருக்கிறேன். இந்த பெரிய கட்சியை எல்லா பகுதியில் இருந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடைத்துக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.வை எப்படியாவது உடைக்க வேண்டும்? எப்படியாவது முடக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம். இதையெல்லாம் அவர் செய்து பார்த்தார். ஒன்றும் முடியவில்லை.

    நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும்போது தி.மு.க.வினர் சபாநாயகரை பிடித்து கீழே இழுத்துவிட்டு, எனது மேஜையில் நடனம் ஆடி மைக்கை உடைத்தனர்.

    சபாநாயகரை மிகவும் தரக்குறைவாக பேசினார்கள். அவருடைய இருக்கையில் போய் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவர்தான் இன்றைய முதலமைச்சர்.

    இப்படியெல்லாம் நடந்தும் கூட நாட்டு மக்களுக்கு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். எந்த இடத்துக்கு போனாலும் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றுதான் சொல்கிறார்கள்.

    ஆனால் இந்த 2 ஆண்டு காலத்தில் தி.மு.க. ஆட்சியில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது போகும் என்று தான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    தி.மு.க.வின் 'பி' அணியாக ஓ.பி.எஸ். செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

    அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட முடிவு எல்லாமே பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு தான் பதவி கொடுத்தது. எனக்கும் பொதுக்குழுதான் பதவி கொடுத்தது. அவருக்கு பதவி கொடுத்தால் சிறந்த பொதுக்குழு என்கிறார். பொதுக்குழு வேறு முடிவு எடுத்தால் சரியில்லை என்கிறார். எங்களின் கட்சியை பொறுத்தவரை இறுதி அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் இருக்கிறது. பொதுக்குழு எடுக்கும் முடிவுக்குத்தான் அனைவரும் கட்டுப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதாவுடன் உள்ள உறவை உறுதிப்படுத்தும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.
    • நாளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து இருப்பதால் தடைகள் நீங்கி உள்ள நிலையில் கட்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களுடன் அவர் தயாராகி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதாவுடன் உள்ள உறவை உறுதிப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.

    டெல்லியில் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. தலைவர்களும் இன்று இரவு டெல்லியில் தங்க உள்ளனர். நாளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 

    • நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது.

    60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது.

    5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது.

    தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது.
    • ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்து விட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3வது முறை சின்னம்மா தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள். திரும்ப கேட்டார்கள், கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு யார் பதவியை தந்தது? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி நீங்கள்? வரலாறு உங்களை மன்னிக்குமா?

    உங்களில் ஒருவராக தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கட்சியின் நிதியை ஒரு பைசாகூட நீங்கள் செலவு செய்யக்கூடாது. அதை எப்படி நீங்கள் கையாள்கிறீர்கள்? என்பது தொடர்பாக உறுதியாக விசாரணை நடத்தப்பட்டு, தவறாக பயன்படுத்தியவர்களுக்கு தண்டனை உறுதியாக வழங்கப்படும்.

    அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். ஜனநாயக முறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும். தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது.
    • மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    திருச்சி:

    அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இந்த அதிகாரப்போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையகத்தை கைப்பற்றினார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

    அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால் தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன், தொண்டர்களின் ஆதரவு இருப்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர்.

    அதன்படி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.

    அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் மாநாட்டு நிகழ்வுகளை எளிதில் பார்வையிடுவதற்காக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

    ×