என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • ‘சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது.
    • புயல் கரையை கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.

    'சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் 27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இந்த புயல் காரணமாக, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதில் சற்று தாமதம் ஆகியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலம், செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அது இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகும்வரையில் அந்த பருவமழைக் காலம் கணக்கில் கொள்ளப்படும். அந்தவகையில் நேற்று தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாக தெரிவித்த ஆய்வு மையம், இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 49 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    • மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    அணைக்கு வினாடிக்கு 134 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீடடரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.05 அடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463.89 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 81.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி குருப், குவளைவேலி கண்மாய்க்கு தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதையடுத்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், குவளைவேலி கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட இடங்களில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்களுடன் கலுங்கில் இருந்த அடைப்பை தண்ணீர் வெளியேறும் வகையில் கிராமத்தினர் உதவியுடன் சரி செய்யபட்டது.

    மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேற்கு புறத்தில் கருவக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவளைவேலி கண்மாய் கழுங்கை அடைக்கக்கூடாது என குவளைவேலி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவறுத்தப்பட்டு, குவளைவேலி கண்மாயின் நீர் நிலைமை, விளத்தூர் காலனி குடியிருப்பில் இருந்த வீடுகளைச் சுற்றி உள்ள தண்ணீர் ஆகியவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, அந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், பூமிநாதன், மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
    • டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.40 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    தஞ்சையில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.40 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் 85 சதவீதம் அளவுக்கு அறுவடை முடிந்து விட்டது. மீதமுள்ள பயிர்கள் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் அமைந்துள்ளன.

    இது தவிர ஈரப்பதம் காரணமாக சாலையில் காய வைக்கப்பட்டு இருந்த நெல்மணிகளும் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. தார்பாய் போட்டு மூடி வைத்திருந்தாலும் மழை நீர் ஊடுருவி ஈரப்பதத்தை அதிகரித்து விட்டது.

    தற்போது கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். ஈரப்பதம் தொடர்பாக அறிக்கை தயார் செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

    எனவே உடனடியாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் குறுவை அறுவடை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    இதேபோல் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி இளம் நெற்பயிர்களும் தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்படையும் எனவும் தெரிவித்தனர்.

    • மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர்.
    • குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.சி. நகரில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நேற்று மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தெருக்களில் புகுந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.

    மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.

    உடைந்த ராஜகால்வாய்க்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல வெள்ளம் குறைந்து வருகிறது. கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கே.சி.சி. நகரில் தண்ணீர் வடிந்தது.

    குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. வெள்ளம் வடிந்ததால் கே.சி.சி. நகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள காட்சி. * * * ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு கார் தலைகுப்புற கிடக்கும் காட்சி.

    • நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 21 மில்லிமீட்டரும், கயத்தாறில் 19 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், மணியாச்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், சங்கரன்கோவில், சிவகிரி பகுதியிலும், நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியிலும் மழை பெய்தது.

    எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்துவிட்டது. மெயினருவி, ஐந்தருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் சிறிதளவே காணப்பட்டது.

    • ராமேசுவரத்தில் 98 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.
    • கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    இதன் காரணமாக ராமநாதபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை வெ ள்ளம் சூழ்ந்தது. தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாய பணிகளை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளனர்.

    இந்த மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. உப்பள பாத்திகள் மழை நீரில் மூழ்கின. கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-35.40, மண்டபம்-12, ராமேசுவரம்-98.20, பாம்பன்-59.40, தங்கச்சிமடம்-50.30, பள்ளமோர்க்குளம்-7, திருவாடானை -15.20, தொண்டி-0.20, முதுகுளத்தூர்-20, கடலாடி-65,வாலி நோக்கம் -42.40.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் 3 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
    • திற்பரப்பில் 3-வது நாளாக குளிக்க தடை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்தகன மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவும் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் விட்டு விட்டு மழை பெய்தது. குளச்சல் பகுதி யில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர் கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி, கொட்டா ரம், மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இரவு சாரல் மழை நீடித்தது.இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை பேச்சிப் பாறை அணைக்கு வரக் கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இதை யடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் குறைக் கப்பட்டுள் ளது. நேற்று 4000 கனஅடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 3057 கனஅடி உபரி நீரும் 488 கன அடி தண்ணீர் மதகு கள் வழியாகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.94 அடியாக உள்ளது. அணைக்கு 2198 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 69.20 அடியாக உள்ளது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படு வதையடுத்து குழித்துறை, கோதை யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று 3-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-6, பெருஞ்சாணி-6.6, சிற்றாறு-1-3, சிற்றாறு-2-5.6, பூதப்பாண்டி- 2.2, கன்னிமார்-2.2, நாகர் கோவில்-2, குருந்தன் கோடு-3, சுருளோடு-2, தக்கலை- 3.2, குளச்சல்-84.6, இரணியல்-6.4, பாலமோர்- 2.6 மாம்பழத்துறையாறு- 3, கோழிபோர் விளை- 6.2, ஆணைக்கிடங்கு-2, அடையாமடை-2.4, முள்ளங்கினாவிளை-12.6.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு திருவட்டார் தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந் துள்ளது. கும்பப்பூ சாகுபடி பணி மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. சுசீந்திரம், தெரிசனங்கோப்பு, பூதப் பாண்டி பகுதிகளில் உழவு பணி நாற்று பாவுதல் பணி போன்ற பணிகளில் விவ சாயிகள் மும்மரம் காட்டி வருகிறார்கள்.

    • குளச்சல் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது
    • கரை மடி வலை முலம் நெத்திலி மீன் பிடிப்பு

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப் படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.பைபர் வள்ளங்கள் மாலை கடலுக்கு சென்று விட்டு மறுநாள் காலை கரை திரும்பும்.சில வள்ளங்கள் காலையில் சென்று அன்று மதியமே கரை திரும்பும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதி யில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது.காற்று வீசவில்லை.இத னால் வழக்கம்போல் நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற வள்ளங்கள் நேற்று காலை கரை திரும்பின.

    இதில் நெத்திலி, அயரை, சாளை, ஊளா போன்ற மீன்கள் கிடைத்தன. நேற்று காலையிலும் தூறல் மழையில் கரைமடி மரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன.இவற்றுள் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத் தன. அவற்றுகளை மீனவர் கள் ஏலம் போட்டு விற் பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1300 வரை விலை போனது.இதனை உள்ளூர் மீன் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கடந்த வாரத்திற்கு முன்பு ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.700 முதல் ரூ.1000 வரைதான் விலைக்கு போனது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கரைமடி வலைகள் மூலம் அருகில் மீன்பிடித்து கரை திரும்பும்போது மழையால் தொழில் பாதிக்காது. காற்று வீசினால்தான் கட்டுமரங்கள் கடலுக்கு செல்ல முடியாது.நேற்று மழை மட்டும் பெய்தது.காற்று வீசவில்லை.அதனால்தான் கரைமடி மரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றன என்றார்.

    கடலில் கவரமடி வலையை கட்டுமரம் முலம் அதிகாலையில் கடலுக்குள் வீசி வருவார்கள். பின்பு வீசிய வலையை சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இழுப்பார்கள் அதில் பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். இன்று கரைமடி வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்ததில் நெத்திலி மற்றும் சாலை மீன்கள் ஏராளமாய் கிடைத் தன மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வைகை வடகரை ஆற்றங்கரை பகுதியில் பெண் பிணம் மிதந்து வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வைகை அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் வைகை வடகரை ஆற்றங்கரை பகுதியில் பெண் பிணம் மிதந்து வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டனர். அது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் என்பது தெரிய வந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது. அவரது உடலை தெப்பக்குளம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சேடப்பட்டியையடுத்த அழகு ரெட்டியா பட்டியை சேர்ந்த வீரணன் மனைவி சக்கரைத்தாய் (80). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது கனமழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி, வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
    • பருவமழை பெய்து வருவதால் தக்காளியின் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, வெண்டைக்காய்,அவரைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பருவமழைகளின் போது தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்புக்குள்ளாவது வழக்கம். இதனால் மகசூல் குறைந்து அவற்றின் விலை அதிகரிக்கின்றன. கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகின்றது.

    இது குறித்து அல்லாளபுரத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:-

    பல்லடம் வட்டார பகுதிகளில் தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருவதால் தக்காளியின் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன. மேலும் தக்காளி அழுக தொடங்கி உள்ளன. ஒரு புறம் மயில்கள் - கோழிகள் மற்றும் பறவைகளின் தாக்குதல் மறுபுறம் மழைபாதிப்பு என இருபுறமும் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பரவலாக மழை பெய்து வரும் சூழலிலும் திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. 15கிலோ கொண்ட டிப்பர் ஒன்று 400ரூபாய்க்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. வெளி மாநிலங்களிலும் மழை பெய்துள்ளதால் திருப்பூருக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் வரும் தக்காளி மிக மிக குறைவாகவே வருகிறது.

    மழையால் அழுகல் அதிகம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது. மழை தொடர்வதால் வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊருக்குசெல்லாயிருப்பதாலும் அதிக அளவில் காய்கறிகள் வாங்கவில்லை. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அல்லாளபுரம் பகுதியில் மழை காரணமாக அழுகல் ஏற்பட்டுள்ள தக்காளி செடி.

    ×