search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    டெல்லியில் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசிய பின்னர் நேற்று இரவு சென்னை திரும்பிய கமல்ஹாசன் காங்கிரசுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் களத்தில் வேகம் காட்டி வருகிறார். மதுரையில் பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய கமல், பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

    கிராமப்புறங்களில் கட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள கமல் தேசிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது கட்சி பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், அப்பணிகளை முடித்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென சந்தித்து பேசினார். பின்னர் ஒருநாள் டெல்லியிலேயே தங்கி இருந்து நேற்று காலையில் சோனியா காந்தியையும் சந்தித்தார்.



    தமிழக அரசியல் நிலவரம் குறித்து சோனியா-ராகுல் இருவரிடமும் கமல் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது புதிய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் பற்றி கமல் எடுத்துக் கூறினார். அதனை சோனியா-ராகுல் இருவருமே கவனமுடன் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் விவாதித்தனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் சோனியா-ராகுல் இருவரையும் கமல் சந்தித்து பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து அக்கட்சி இப்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டதாகவும் அதன் எதிரொலியாகவே இந்த சந்திப்பு நடந்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்த்து செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்தார்.

    கே:- டெல்லியில் சோனியா-ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசி இருப்பது காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா?

    ப:- சோனியா, ராகுல் காந்தி இருவரையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். நீங்கள் நினைப்பது போல கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் நான் ஒருவழி பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். எனது பாதை எது? என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா?

    ப:- அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பேன்.

    கே:- காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

    ப:- காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் வித்தியாசமானதாகவே உள்ளது. அதனை ஒவ்வொரு முறையும் விமர்சித்து கொண்டேதான் இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம். காவிரி ஆணையத்தை முறையாக செயல்படுத்த நாம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். எல்லா விதமான அழுத்தங்களையும் தர வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் உண்மையிலேயே வெற்றி விழாவை கொண்டாட வேண்டியவர்கள் விவசாயிகள்தான். நாம் அதனை வழிமொழிய வேண்டும். அதற்கு முன்னாடியே அ.தி.மு.க. அரசு சாவிக்கு ஆசைப்படுவதையே காட்டுகிறது. டெல்லி சென்றிருந்த போது அரவிந்த் கெஜ்ரிவால் வெளியூர் சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.

    இவ்வாறு கமல் கூறினார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இப்போதைய சூழலில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை அந்த கூட் டணியில் உள்ளன.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு காங்கிரசுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்ததே காரணம் என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்தது.

    வரும் தேர்தலில் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியுடன் உள்ளது. இந்த மாதிரியான சிக்கலை தாண்டியே எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய கட்சிகளால் தமிழகத்தில் காட்சிகள் மாறி உள்ளன. அதனை தங்களுக்கு சாதகமாக்க முடியுமா? என்றும் காங்கிரஸ் கணக்கு போட தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே ராகுல்-கமல் சந்திப்பு நடந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    கமல்ஹாசனைச் சந்தித்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல், தங்களது சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் சூழல் உட்பட, இரு கட்சிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கடந்த மாதம் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பேட்டி அளித்த அவர் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று கூறி இருந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக்கையும் திருமாவளவன் சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே அனைத்து கட்சிகளும் காய் நகர்த்த தொடங்கி உள்ளன. திருமாவளவன், ராகுலை சந்தித்து பேசியதும் அந்த அடிப்படையில்தான். கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமலேயே தி.மு.க. தேர்தலை சந்தித்தது. பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலிலேயே 2 கட்சிகளும் கைகோர்த்தன. இந்த கூட்டணியே நீடித்து வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கட்சியே தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த எண்ணிக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுபோன்று போட்டியிடும் இடங்களை ஒதுக்கும் வி‌ஷயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் தமிழகத்தில் தனது தலைமையில் புதிய அணியை உருவாக்கவும் காங்கிரஸ் தயங்காது என்றே தெரிகிறது.

    இதன் ஆரம்ப புள்ளியே ராகுல்-கமல் சந்திப்பு என்கிற கருத்து பரவலாகி உள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கான பரபரப்பு தீயை காங்கிரஸ் முன் கூட்டியே பற்ற வைத்துள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட ராகுல், சோனியாவை சந்தித்ததால் கமல்ஹாசனுக்கு எந்த பலனும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #KamalHaasan #Congress
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நடந்த சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை கமல்ஹாசன் சந்தித்து உள்ளாரே?

    பதில்: மக்களால் புறந்தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவருக்கு எந்த பலனும், பயனும் இல்லை.

    கே: தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

    ப: இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதில் பாரதிய ஜனதா கட்சிக்கும், எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் பல்வேறு அணைகள், விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும். ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகிறார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலை பணிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதியையும் ஒதுக்கியது. ஆனால் இங்குள்ளவர்கள் மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.

    கே: தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்களே?

    ப: பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே நான் கூறினேன். ஆனால் அப்போது அரசும், தமிழக உளவுத்துறையும் அதனை மறுத்தது.

    இப்போது மத்திய உளவுத்துறை மூலம் இங்கு பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    கே: விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை உடைத்து கற்கள் கொண்டுச் செல்லப்படுகிறதே? இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படாதா?

    ப: குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைய வேண்டும். இங்கு துறைமுகம் அமைந்தால் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள். ராஜபக்சேயின் விசுவாசிகள். சீன அரசுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இங்குள்ள மக்கள் மீதும், அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை இல்லாதவர்கள்.

    விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு அப்போதே நான் ஆதரவு தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை எதிர்ப்பதற்கு 100 சதவீத வெளிநாட்டு சதி உள்ளது. குமரி மாவட்ட முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களால், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியுமா? குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலை வழங்க முடியுமா?

    மத்திய மந்திரி என்பதை தாண்டி நான் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் இங்கு முன்னேற்ற திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறேன்.


    கே: 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

    ப: தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதை விடுத்து உருப்படியான செயல்களை அவர் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் குட்டிசுவராக மாறியதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வுமே காரணம்.

    கே: காவிரி பிரச்சனையில் இப்போதும் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கிறதே?

    ப: கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைய காங்கிரசும், அவர்களின் தோழமை கட்சியான தி.மு.க.வும் முயற்சி செய்தது. எனவே மு.க.ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் சிறப்பு விமானத்தில் கர்நாடகம் சென்று குமாரசாமியுடன் பேசி காவிரி தண்ணீரை பெற்று தர வேண்டும். இல்லையேல் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ், நிர்வாகிகள் முத்துராமன், தேவ் ஆகியோர் உடன் இருந்தனர். #PonRadhakrishnan #KamalHaasan #Congress
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியது பதட்டத்தில் நடத்தியது மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறினார். #Thoothukudifiring #Kamalhaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    போராட்டங்களின் போது அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போராட்டம் ஒரு போதும் வன்முறையாக மாறிவிடக் கூடாது.



    தூத்துக்குடி போராட்டத்தின் போது எதைப் பற்றியும் யோசிக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது போல தெரிகிறது. இது பதட்டத்தில் நடத்திய துப்பாக்கி சூடு மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது.

    போராட்டங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. போராடாமல்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததா? வெள்ளைக்காரர்கள் இந்த விளையாட்டு போரடித்து விட்டது என்று நினைத்து சுதந்திரத்தை கொடுத்துவிட்டு போய் விட்டதாக நினைக்கிறார்களா? எனவே போராட்டமே கூடாது என்று சொல்லாதீர்கள். சுட்டுக் கொல்லாதீர்கள். நம்மிடம் உள்ள நிறைய போராட்டங்கள் பழைமை வாய்ந்தவை.

    அதனால்தான் மக்கள் நீதி மய்யத்தில் உண்ணாவிரத போராட்டம் கிடையாது என்று அறிவித்துள்ளோம். இன்னும் ஏராளமான புதிய போராட்ட வடிவங்கள் வரவேண்டும். ஆனால் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

    விஸ்வரூபம் படத்தின் எதிர்ப்பு அரசியலுக்கு பின்னால் இருந்தது யார்? என்று அனைவருக்கும் தெரியும். மரணம் ஒருவரை எல்லா வகையிலும் குற்றமற்றவராக்கி விடாது. தகாத வார்த்தைகளையெல்லாம் பேசினார்கள்.

    ஒரு படத்தின் டிரெயிலர் காட்சிகளை மட்டும் வைத்து முழுப்படத்தையும் விமர்சிக்கக் கூடாது. முஸ்லிம்களை தாக்கி படம் எடுக்க நான் பா.ஜனதா கட்சியிலா சேர்ந்திருக்கிறேன்.

    நான் எதை செய்தாலும் அதை தவறு என்று முழக்கமிடுவது ஒரு அரசியல் தான். எல்லா மதத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். பகுத்தறிவாதிகளிலும் கூட அதுபோல உள்ளனர். அரசியலில் சினிமாவும், சினிமாவில் அரசியலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    அனைத்து திட்டங்களையும் மக்கள் எதிர்ப்பது தவறு. தூத்துக்குடியை போல சென்னை காமராஜர் துறைமுகத்துக்காக ஒரு ஆற்றையே ஆக்கிரமித்துள்ளனர். முன்னேற்றத்தால் நகரத்துக்கு பாதிப்பு வருவதை அனுமதிக்க முடியாது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நான் இழக்க விரும்பவில்லை. அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஓரளவுக்கு அரசியல் உரையாடலை நிகழ்த்த முடியும் என்று எண்ணுகிறேன்.

    தனிமனித உரிமைகள் எப்போதும் காக்கப்பட வேண்டும். ஆதார் கார்டே வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அதனை வரையறுக்க வேண்டும். சந்தேகங்களை கேள்விகளாக முன் வைக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படுகிறது.

    இவ்வாறு கமல் கூறியுள்ளார். #Thoothukudifiring #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தினகரன் மீது கடுமையான விமர்சனம் செய்து நமது அம்மா நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. #ADMK #TTVDhinakaran #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    நமது அம்மா அ.தி.மு.க. நாளேட்டில் ஏக்கத்தில் தமிழகம் என்ற தலைப்பில் எழுதப்பட்டு இருக்கும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

    ‘‘ஜெ ஜெயலலிதா என்னும் நான்’’ இந்த ஒற்றைக் குரல் எழுந்து வந்து மீண்டும் ஒலிக்காது என்பதால்...

    நாட்டை விட்டே வெளியேறுவேன் என ஊளையிட்ட கோழைக்கும் மையம் தொடங்கும் மனத்தைரியம் வருகிறது.

    உச்ச நட்சத்திர நடிகருக்கும் கட்சி தொடங்கும் உத்வேகம் பிறக்கிறது.

    அமீர், பாலா, கரு.பழனியப்பன், கவுதமன் என்றெல்லாம் பட வாய்ப்பு இல்லாத இயக்குநர் எல்லாம் தாடி விட்டுக் கொண்டு தமிழினப் போராளி வே‌ஷம் கட்டும் வேடிக்கை பிறக்கிறது.

    பாரதிராஜா, பார்த்திபன் இப்படி பழங்கால இயக்குநர்களும் பத்து நாளுக்கு ஒரு முறை பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி பயாஸ் கோப் காட்டும் பரிதாபம் நடக்கிறது.

    எட்டு வழிச்சாலை போட்டால் எட்டு பேரை வெட்டுவேன் என்றெல்லாம் எகத்தாளம் பேசி மிரட்டுகிற மமதை மன்சூர் அலிகானுக்கும் மண்டையில் உதிக்கிறது.

    ஒரு சேலை இல்லாத தைரியத்தில் ஆலையை மூடு, சாலையை மூடு என்றெல்லாம் சமூக ஆர்வலர்கள் என்னும் போர்வையில் சவடால் பேசும் சங்கதியும் தொடர்கிறது.

    பெண்ணினத்தை இழிவாய் பேசும் துணிச்சல் எஸ்.வி.சேகருக்கு.

    டிராபிக் ராமசாமி என்னும் பேரில் சினிமா எடுக்கும் ஆசை எஸ்.ஏ.சந்திர சேகருக்கு.

    இப்படி தாயே நீங்கள் இல்லாத தமிழகத்தில் தங்கப்பல் கட்டிக் கொண்டவன் உதிர்ப்பதெல்லாம் பொன் மொழி என்னும் போக்கில்.

    அதுமட்டுமா தமிழ்நாட்டு எல்லைக்குள் தலைகாட்டவும் அஞ்சி நடுங்கி பாண்டிச்சேரி, பக்கமா பதுங்கிக் கிடந்தவருக்கும் ஈரிலைச் சின்னத்தை எதிர்த்து நிற்கிற இறுமாப்பு ஏகத்துக்கும் எனும் போது.

    வங்கத்து கடலோரம் துயில் கொண்ட எங்கள் தங்கத்து தாரகையே. இந்த கோமாளிக் கொட்டங்கள் அடக்கவே ஓர் நாள் கோட்டைக்கு வந்து போகக் கூடாதா... ஏக்கத்தில் தமிழகம். #ADMK #TTVDhinakaran #Rajinikanth #KamalHaasan
    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். தமிழக அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi #Kamalhaasan
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் மாநில கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார்.

    தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விரைவில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalParty #MakkalNeedhiMaiam
    புதுடெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை.


    இந்நிலையில் தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி  நிர்வாகிகளுடன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.

    பின்னர் வெளியே வந்த அவரிடம் கட்சியின் சின்னம், எதிர்கால செயல்பாடு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அவர்களுக்கு பதிலளித்த கமல், தற்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மட்டுமே அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கட்சியின் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    சேலத்தில் அமைய உள்ள பசுமை வழித்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். #KamalPolitics #KamalParty #MakkalNeedhiMaiam
    நடிகர் கமல்ஹாசன் தனக்கு ஒரு கட்சி ரூ.100 கோடி தர பேரம் பேசியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனக்கு ஒரு கட்சி ரூ.100 கோடி தர பேரம் பேசியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டது. நாங்கள் உண்மையான சாதனைகளை, இலக்குகளை நிகழ்த்தவே விரும்புகிறோம். கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம்.

    அதிகத்தூர் கிராமத்தை நான் தேர்வு செய்ததாக சொல்கிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். அந்த கிராமத்தில் 1996-ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சுமதி என்னை சந்தித்து, அந்த கிராமம் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி கூறினார்.

    கடும் ஊழல் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கிராமத்தை மேம்படுத்த அவர் போராடுவதை தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு உதவும் வகையில் அதிகத்தூர் கிராமத்தை நாங்கள் தத்து எடுத்தோம்.

    கிராம பஞ்சாயத்துக்களை நாம் நடத்தி வருகிறோம். அந்த பஞ்சாயத்து முறையை 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் திறம்பட செயல்படுத்தி இருந்தால், இன்று அவை சட்டசபையை விட வலிமையானதாக இருந்திருக்கும். மக்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை உணர வேண்டும்.

    ஊரில் நீங்கள் தபால் நிலையத்தை தேடிப் பாருங்கள், கண்டுபிடிக்க முடியாது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடை எங்கு இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

    நம்மிடம் நிறைய டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. கேட்டால் அரசுக்கு வருவாய் வருவதாக சொல்கிறார்கள். அப்படியானால் அடுத்து போதை பொருட்களை விற்பனை செய்வார்களா?

    டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூடி விடுவதால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும் நாம் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தலைமை செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு பேச விரும்பவில்லை. நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.


    ரஜினியுடன் நான் கூட்டணி சேர்வேனா என்று அடிக்கடி கேட்கிறார்கள். அதுபற்றி இப்போதே சொல்ல முடியாது.

    தமிழ்நாட்டில் நிறைய சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள் அரசியல் சார்பின்றி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்தும், தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நான் நிறைய வி‌ஷயங்களை கற்று வருகிறேன்.

    எல்லா கட்சிகளுடனும் எனக்கு கொள்கை ரீதியாக மாறுபடுவது உண்டு. ஆனால் தமிழக அரசியலில் நான் முக்கியமாக நினைப்பது ஊழலைத்தான். இந்த ஊழலை முழுமையாக வேரறுக்க வேண்டும்.

    ஜெயிலில் இருப்பவர் சுதந்திரமாக வெளியில் வந்து ஷாப்பிங் செல்கிறார். 2 நாட்களுக்கு தலைப்பு செய்தியாக அதைப் படிக்கிறோம். பிறகு மறந்து விடுகிறோம்.

    எனக்கு கூட ஒரு கட்சி லஞ்சம் தர பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் அந்த கட்சியில் சேர மறுத்து விட்டேன்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில், கோர்ட்டில் சபாநாயகர் தீர்ப்பு ஏற்கப்பட்டால் தேர்தல் வரும். அந்த 18 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுவது பற்றி இப்போதே சொல்ல முடியாது. ஏனெனில் கட்சியில் நான் மட்டுமே முடிவு எடுப்பது இல்லை. அனைவரும் கலந்து பேசி கூட்டு முடிவை எடுப்போம்.

    என்னைப் பொறுத்தவரை அரசியல் இளைஞர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அவர்கள் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்க தெரிந்து இருக்க வேண்டும். நான் சிறு வயதில் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டேன்.

    மாணவனாக இருக்கும் போது அரசியல் பற்றி தெரிந்தால்தான் செயல்பட முடியும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் மாணவர்களை தேடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றேன். ஆனால் நான் அவ்வாறு செல்வதை இந்த அரசு தடுத்து நிறுத்துகிறது.


    1967-ம் ஆண்டு திராவிட இயக்கத்தால் புது யுகம் ஏற்பட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பிறந்து இருக்காவிட்டாலும் திராவிட இயக்கம் தோன்றி இருக்கும். அது காலத்தின் தேவையாக இருந்தது.

    ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதியும் குறிப்பிட்ட கால அளவே நீடிக்க முடியும். அதுதான் உண்மை. திறமையான அரசியல்வாதிகளுக்கு பதில் புதியவர்கள் வர வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் நீண்ட நாட்களுக்கு ஒருவரே தலைமை பதவியில் இருக்க மாட்டார். என்னை இந்த வி‌ஷயத்தில் எதிர்பார்க்காதீர்கள். எனது இடம், நேரத்தை நான் தியாகம் செய்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் எனக்கு வேண்டும்.

    மக்கள் என்னைப் போன்றவர்களை நம்ப வேண்டும். நான் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன் என்று கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiam
    ரஜினியும், கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். இருவருக்கிடையேயும் நேரடியாக போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. திரைத்துறையில் நண்பர்களாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரிகளாக மாறியது போல, வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது.

    அதே நேரம் அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை வி‌ஷயத்தில் என் அண்ணனை கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்க தயார்’ என்று கூறினார்.



    கமலின் அண்ணன் சாருஹாசன், கமலால் முதல்வர் ஆக முடியாது என்று காட்டமாக விமர்சிப்பதை பற்றி கேட்டதற்கு, நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? என்று கேட்டார். இப்போது நன்றாக சாப்பிடும் வசதியை ரசிகர்கள் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தலில், அரசியல் செயல்பாடுகளில் மக்கள் நீதி மய்யம் பெறும் வெற்றி தான் அவருக்கு பதிலாக அமையும்’ என்றார். #KamalHaasan #MakkalNeethiMaiam #KamalHaasan

    காவிரியில் தண்ணீர் திறந்ததற்காக குமாரசாமிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று கமல் கூறி வருகிறார்.

    காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, புதுவை ஆகிய 3 மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன. இந்த வி‌ஷயத்தில் கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பை வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்துக்கு சென்று அம்மாநில முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அப்போது காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக இருவரும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டாக பேட்டியும் அளித்தனர்.

    இந்த பேச்சின் மூலமாக குமாரசாமி என் மனதை நிரப்பிவிட்டார் என்று கமல் கூறினார். குமாரசாமி கூறும்போது, தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கமலின் இந்த நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. காவிரி விவகாரத்தில், விவசாயிகளை வைத்து கமல் படம் காட்டுவதாக, விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அவர் மேலும் கூறும்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார். இயற்கையின் கருணையால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்ததற்காக குமாரசாமிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தானாக வந்த தண்ணீருக்கு குமாரசாமியை பாராட்டுவதில் என்ன நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். #Tamilnews
    கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். #Karnataka #KarnatakaRain #Kumarasami #CauveryWater #KamalHaasan
    சென்னை:

    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று குடும்பத்துடன் வருகை வந்தார். அங்கு சாமி கும்பிட்டபின் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. இதையடுத்து கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டேன். நேற்றிரவு முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.



    இந்நிலையில், கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கமல்ஹாசன் டுவிட்டரில் கூறுகையில், கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு நன்றி.

    காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு இரு மாநில நட்பால் அடைபட்டிருக்கும் பல கதவுகள் திறக்கும் என நம்பிக்கை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Karnataka #KarnatakaRain #Kumarasami #CauveryWater #KamalHaasan
    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தன்னுடைய 3 மந்திரிகளுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். #KamalHaasan #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்து டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தன்னுடைய 3 மந்திரிகளுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது அல்ல. டெல்லியிலும், புதுச்சேரியிலும் நடக்கும் விஷயங்களில் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பான மாற்றத்தை விரும்பும் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

    இதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதாதள அதிருப்தி தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  #KamalHaasan #ArvindKejriwal #tamilnews 
    கமலின் விஸ்வரூபம் 2 டிரைலரில் எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை, தேச துரோகியாக இருப்பது தப்பு என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் -2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரை தமிழில் ஸ்ருதிஹாசனும், இந்தியில் அமீர்கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். 

    இந்த டிரைலரில் எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை, தேச துரோகியாக இருப்பது தப்பு என்று கமல் பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    இந்த படத்தில் கமலுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 



    கமல்ஹாசன் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளதுடன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார். ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தியில் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர். #Vishwaroopam2 #KamalHaasan
    ×