search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    அவினாசியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் உள்ள உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். 3 பேர் பலத்த காயங்களுடன் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை நித்திகா உயிர் தப்பியது. மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    உப்புக்கோட்டை:

    வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர், தேனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். உப்புக்கோட்டை விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அசோக்குமாரின் தாயார் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் சடையால்பட்டி சாவடித்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேற்படிப்பை தொடர முடியாத வேதனையில் பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    விழுப்புரம்:

    வானூர் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோதெய்வம் மகள் ராணி (வயது 19). இவர் பி.ஏ. படித்து முடித்துள்ளார்.

    இவருடைய தந்தை ஆரோதெய்வம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு இவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த ராணியால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.

    இதனால் ராணி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராணி, விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவைகுண்டம் அருகே வேன் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை முந்தி செல்ல முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த சிலர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று ஒரு வேனில் சென்றனர்.

    வேனை கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்த சுடலை (வயது42) என்பவர் ஓட்டி சென்றார். அந்த வேன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான வாலிபர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொழும்பு:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

    இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்(வயது 53). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆடுதுறை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் அத்தியூருக்கு சவாரி சென்று விட்டு ஆடுதுறை அருகே முகமது இப்ராகிம் ஆட்டோவில் வந்தார். அப்போது திடீரென சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே முகமது இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகமது இப்ராகிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    காஞ்சீபுரம் அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). மணியாச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (21) இவர்கள் 3 பேரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தனர்.

    நேற்று காலை ஒரே மொபட்டில், இவர்கள் 3 பேரும் படுநெல்லி கிராமத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு, வந்து கொண்டிருந்தனர். மொபட்டை ரவிக்குமார் ஓட்டி சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது மொபட்டும், அந்த வழியாக வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில், ரவிக்குமார் வெங்கடேசன் ஆகியோர் அதே இடத் தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், பலியான கல்லூரி மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே இரண்டு லாரிகளுக்கு இடையே வேன் சிக்கி நசுங்கியதில், 7 பேர் உயிரிழந்தனர்.
    குவாலியர்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு வேனில் சென்றனர். ஆக்ரா-ஜான்சி சாலையில்  குவாலியர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது,  ஒரு லாரியின் பின்னால் வேன் நின்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி, வேன் மீது மோதியது.

    இதனால் இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிய வேன் நசுங்கியது. இதில், வேனுக்குள் இருந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் வெங்கடேசன் (21), பாஸ்கர்.

    இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார்.

    காஞ்சீபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து காளஹஸ்தி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்தில் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொணலை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சமையல்காரார் பலியானார்.
    சமயபுரம்:

    சிறுகனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொணலை அருகே உள்ள கல்பாளையம் காந்தி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் முருகேசன் (வயது 38). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். திருமணமான இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். செங்கல்பட்டில் இருந்து மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு செல்வார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் தச்சங்குறிச்சியில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு புறப்பட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிறிதுதூரம் வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் சக்தி (வயது 15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த சக்தி, ஆண்டு இறுதித்தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்தார். சம்பவத்தன்று சக்தி, வீட்டில் இருந்து தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் தொண்டமாந்துறை நோக்கி சென்றார்.

    பிள்ளையார்பாளையத்தை தாண்டி சிறிது தூரம் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சக்தி படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்தி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த தொண்டமாந்துறையை சேர்ந்த மைக்கேல்ராஜை(34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சூபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் போலீசார் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். #PakistanBlast
    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் 2-வது பெரிய நகரமான லாகூர் நகர் கிழக்கு பகுதியில் உலகப்புகழ் பெற்ற டேட்டா தர்பார் மசூதி அமைந்துள்ளது.

    இந்த மசூதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தொழுகை செய்வதற்கு வசதி உள்ளது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த மசூதியில் பெண்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் காலம் நேற்று தொடங்கியது. இன்று அதிகாலை 2-வது நாளாக ரம்ஜான் நோன்பு தொழுகைகள் அந்த டேட்டா தர்பார் மசூதியில் நடந்தது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருக்கும் அந்த மசூதி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அதையும் மீறி இன்று காலை 8.45 மணிக்கு அந்த மசூதி முன்பு 2-ம் எண் கேட் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த அந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி போலீஸ் டி.ஐ.ஜி. அஸ்பக் அகமதுகான் கூறுகையில், “பெண்கள் நுழைவு வாயில் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. போலீஸ் வாகனங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்” என்றனர்.


    இதற்கிடையே குண்டு வெடிப்பை நடத்தியது தற்கொலை படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது. அவன் எந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு இந்த மசூதியில் தற்கொலை தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினார்கள். அப்போது 40 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து அந்த மசூதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் பாதுகாப்பை மீறி பயங்கரவாதிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள பழமையான சுபி வழிபாட்டு தலங்களில் இந்த வழிபாட்டு தலம் மிக மிக புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டு தலத்தை சீல் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தர அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆனால் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
    ×