search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95214"

    பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் கிராம நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
    அவினாசி:

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவினாசி கிராமபுறங்களில் உள்ள சில குளம், குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் குளம், குட்டைகளில் இறங்கி நீச்சல் அடிப்பதும், விளையாடவும் செய்கின்றனர். 

    அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்வதால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது. எனவே குளம், குட்டைகளில் குளிக்க சிறுவர் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் கிராம நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர். 

    அதன்படி அவினாசி சின்னேரிபாளையம் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் யாரும் அங்கு செல்லக்கூடாது என ஊராட்சி நிர்வாகத்தினர் குளக்கரை மற்றும் குட்டை பகுதிகளில் அறிவிப்பு விளம்பர பலகை வைத்துள்ளனர்.
    சேவூர் வாலீஸ்வரர் கோவிலுக்கு வள்ளி தெய்வானை உடனுறை கல்யாண சுப்ரமணியர் சாமி சிலை செய்ததாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    அவினாசி:

    அவினாசி அருகே சேவூரில் அறம் வளர்த்த நாயகி உடனுறை  ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அனுமதியின்றி முருகர், வள்ளி தெய்வானை உள்ளிட்ட சாமி சிலை செய்ய பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

    இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மொண்டிபாளையம் செயல் அலுவலருக்கு சேவூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி என்பவர் அனுப்பிய மனுவில், சேவூர் வாலீஸ்வரர் கோவிலுக்கு வள்ளி தெய்வானை உடனுறை கல்யாண சுப்ரமணியர் சாமி சிலை செய்ததாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அர்ச்சகர் கும்பாபிஷேக பிரதிஷ்டை மற்றும் குரு பெயர்ச்சி ஹோமம் செய்துள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டபோது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.
    அவினாசி:

    அவினாசி, ஆட்டையாம்பாளையம், பழங்கரை, வேலாயுதம்பாளையம், கருவலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    இதனால் ரோட்டில் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. சிறிய குளம்,குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். வழக்கம்போல் நேற்று விவசாயிகள் தங்களது பருத்தி மூட்டைகளை ஏல மையத்திற்கு கொண்டு வந்தனர். பருத்தி ஏலம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் மாலையில் தொடர் மழை பிடித்ததால் பருத்தி ஏலம் பாதியில் தடைபட்டது.
    சம்பா நடவு பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சில பயிர்களுக்கு ஒட்டு மொத்த வருவாய் கிராமம் முழுக்க சேதமடைந்தால் தான் பயிர்க்காப்பீடு வழங்கப்படுகிறது.
    அவிநாசி:

    இலவச திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சம்பா நடவு பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சில பயிர்களுக்கு ஒட்டு மொத்த வருவாய் கிராமம் முழுக்க சேதமடைந்தால் தான் பயிர்க்காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை தனி நபர் காப்பீடு அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். 

    நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது இலவசம், மானியம், தள்ளுபடி போன்றவை தான். அதன் வாயிலாக லஞ்சம், முறைகேடு தான் அதிகரிக்கிறது.நீர்பாசன அரசாணை விதிமுறைப்படி பழைய பவானி ஆற்றுநீர் பாசனங்களில் இருந்து ஆண்டுக்கு 8.14 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட வேண்டும். 

    ஆனால் 24 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் வழித்தடத்தில் உள்ள சாய, தோல் ஆலைகள் தான் பெருமளவில் பயன்படுகின்றன. முறையற்ற நீர் நிர்வாகத்தால் சாகுபடி இழப்பு ஏற்படுகிறது. பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக தமிழகத்துக்கு 14 டி.எம்.சி.. தண்ணீரை பெற முடியும். அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணியில் வேகம் குறைந்துள்ளது.

    இதுபோன்ற புதிய திட்டங்களின் நீர் நிர்வாகத்தை முறைப்படி மேற்கொள்ள வேண்டும். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட ஆக்கிரமிப்புதான் காரணம். 1947க்கு முன் தமிழகத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன. 

    அவற்றில் 7,000-ம் நீர்நிலைகள், தற்போது ஆக்கிரமிப்பால் மாயமாகியுள்ளன.
    நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். வரும் ஜனவரி 21-ந்தேதி மாநிலத்தில் கள் இறக்கி வர்த்தகம் செய்ய உள்ளோம். காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் கள், தடை செய்யப்பட்ட பொருள் என்பதை அரசியலமைப்பு சட்டப்படி நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    ஆத்திரமடைந்த வினித், அபிலே-சை தகாத வார்த்தையால் திட்டியதுடன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அபிலேஷ் - மற்றும் சாந்தியை குத்தியுள்ளார்.
    அவினாசி:

    அவினாசி கச்சேரி வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி சாந்தி (வயது 45) . இவர்களது உறவினர் தருமபுரி பகுதியை சேர்ந்த மார்கண்டன் மகன் அபிலேஷ் (25). இவர் கோவிந்தசாமி வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். 

    இந்தநிலையில் சாந்தியின் உறவினர் மகன் தருமபுரியை சேர்ந்த வினித் (23) என்பவர் சாந்தியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது 3 பேரும் குடும்ப பிரச்சனை பற்றி பேசியுள்ளனர். 

    இதில் ஆத்திரமடைந்த வினித், அபிலேசை தகாத வார்த்தையால் திட்டியதுடன்,  வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அபிலேஷ் மற்றும் சாந்தியை குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து வினித்தை கைது செய்தனர்.  
    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பாடு அடைய மகாயாகம், 1008 தீர்த்த கலச அபிஷேகம், யாக வேள்விகள், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன.
    அவினாசி:

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கோளறுபதி நவக்கிரக கோட்டையில் பிலவ வருட குருபெயர்ச்சி மற்றும் லட்சார்ச்சனை திருவிழா நடைபெற்றது. 

    மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 6.20 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை, வேள்வி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பாடு அடைய மகாயாகம், 1008 தீர்த்த கலச அபிஷேகம், யாக வேள்விகள், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன. 

    விழாவை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங் கேஸ்வரசுவாமிகள் யாகவேள்வி பூஜை களை நடத்தி அருளுரை யாற்றினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டனர்.

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவில்களில் குரு பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு மங்கல இசை, காயத்ரி மந்திர ஹோமத்துடன் தொடங்கி 108 வகையான மூலிகை திரவிய ஹோமம், விசேஷ அபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். 

    கொங்கு ஏழு சிவால யங்களில் முதன்மை பெற்றதும் முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டெடுத்து பிரசித்தி பெற்ற தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனுறை அவிநாசி லிங்கேசுவரர் கோவில் விளங்குகிறது. குருபெயர்ச்சியை யொட்டி அவிநாசிலிங்கேசுவரர் கோவில் மண்டபத்தில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் யாகத்துடன் நடைபெற்றது. 

    பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களில் அபிஷேகம் செய்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடை பெற்றது. 

    இதையடுத்து சாமி பிரகார உலா நடை பெற்றது. இதேபோல திருமுருகன்பூண்டி திரு முருகநாதசுவாமி கோவில் மற்றும் சேயூர் வாலீஸ்வரர் கோவில்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.
    விழாவையொட்டி ஹோமம், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், சம்பந்தர் பிபி. சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் உடுமலை தளி சாலையில் கொட்டி தலை அருகிலுள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலிலும் குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் உடுமலை தில்லைநகர் ரத்தின லிங்கேஸ்வரர், போடிபட்டி சூர்யா கார்டன் காரிய சித்தி விநாயகர் கோவிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்தது .
    வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.15.40 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், மங்கலம் சாலை பிரிவில் இருந்து அம்மாபாளையம் எம்.ஜி.ஆர் நகர் வரை குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.  

    இச்சாலை அவிநாசி ஊராட்சி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவில் இருந்து முக்கால் கிலோ மீட்டரும்,  திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இரண்டு கிலோமீட்டர் அளவும் இணைப்பு சாலையாக உள்ளது.

    இந்நிலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தார் சாலை தோண்டப்பட்டதால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக உள்ளதால் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வந்தனர். 

    இதையடுத்து தார்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவிநாசி ஒன்றிய நிர்வாகம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் என இருதரப்பினரிடம் தொடர்ந்து மனு
    கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உமையசெட்டிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    இதில் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.15.40 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

    அப்போது அங்கு வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் இரு இடங்களில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்றவுடன் விரைவில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை வகித்தார். 

    மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன், முன்னாள் கிளைச் செயலாளர் வெங்கடாசலம், கிளைச் செயலாளர் வையாபுரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 
    கருவலூர் குளம், கானூர், முறியாண்டம்பாளையம், கிளாகுளம், சேவூர், சங்கமாங்குளம், தாமரைக்குளம் உட்பட 14 குளங்கள் உள்ளன.
    அவிநாசி:

    அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம ஊராட்சிகளில் 249 சிறிய, பெரிய குட்டை, குளங்கள் உள்ளன. அந்தந்த கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள அவற்றில் பெரும்பாலான இடங்களில் உள்ள குளம், குட்டைகள், முந்தைய ஆண்டுகளில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன.

    அதன் விளைவாக தற்போது பெய்து வரும் மழையில், அதிக கொள்ளளவுடன் நிரம்பி வருகின்றன. மொத்தமுள்ள 249 குளம், குட்டைகளில் 117 குட்டைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன  என  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி அளவில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் கருவலூர் குளம், கானூர், முறியாண்டம்பாளையம், கிளாகுளம், சேவூர், சங்கமாங்குளம், தாமரைக்குளம் உட்பட 14 குளங்கள் உள்ளன. மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பிய அளவிற்கு பொதுப்பணித்துறை குளங்கள் நிரம்பவில்லை.

    பொதுப்பணித்துறையினர் கூறுகையில்:

    கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை கடந்துதான் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரும். முந்தைய ஆண்டுகளில் ஒரு மழை பெய்தாலே குளங்கள் நிரம்பிவிடும்.

    ஆனால் இம்முறை அதிகளவு மழை பெய்தும், பொதுப்பணித்துறை குளங்கள் மொத்த கொள்ளளவில், 10 முதல் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிரம்பியுள்ளன.

    இதற்கு காரணம் பிரதான குளத்துக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களில் ஆங்காங்கே உள்ள ஊராட்சி நிர்வாகத்தினர், ‘செக்டேம்‘ அமைத்து  வழிந்தோடி வரும் தண்ணீரை தேக்கி வைத்தனர். பல இடங்களில் புதர்மண்டிக் கிடந்த குட்டைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளன. 

    இதனால் மழைநீர் அவற்றில் தேங்கி விடுகிறது. அவை நிரம்பி வெளியேறும் உபரிநீர் தான் பொதுப்பணித்துறை குளத்துக்கு வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் பொதுப்பணித்துறை குளங்கள் நிரம்பும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
    உடுமலைபிரசன்ன விநாயகர் மற்றும் விசாலாட்சிஅம்மன் சன்னதிகளில் சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கி வரும் நிகழ்ச்சி நடந்தது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதில் சண்முகநாதர் சுவாமி அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன் ஆகியோரை வதம் செய்த பிறகு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சுவாமி வெற்றி வாகை மாலை சூடுதல், சேவல்கொடி சாற்றுதல் மற்றும் சுவாமியை சாந்தப்படுத்தும் விதமாக உற்சவருக்கும், மூலவருக்கும் மகா அலங்காரம், மகா அபிஷேகம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இன்று காலை சண்முகநாதர்- தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உடுமலைபிரசன்ன விநாயகர் மற்றும் விசாலாட்சிஅம்மன் சன்னதிகளில்  சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கி வரும் நிகழ்ச்சி நடந்தது. 

    இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கஜமுகாசூரன், பத்மாசூரன், பானுசூரன், சிங்கமுகசூரன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார்.

    உடுமலையில் சூரசம்ஹாரம் விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நகர முக்கிய வீதிகளில் நடைபெறும். ஆனால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கடந்த ஆண்டைப்போன்று சூரசம்ஹார விழா, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடந்தது. பக்தர்கள் தரிசிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில் உட்பட பல்வேறு முருகன் கோவில்களில் இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

    கந்தசஷ்டி - சூரசம்ஹார நிகழ்ச்சி, திருக்கல்யாண நிகழ்ச்சியை காண இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் சற்று கவலையடைந்தனர். 
    மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம்.
    அவினாசி:

    அவினாசியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. 

    இதுகுறித்து அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 10-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. 

    கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். 

    எனவே மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×