search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு"

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் பயணிகளுடன் அமர்ந்து குரங்கு பயணித்த சம்பவத்தால் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மூணாறு:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் இருந்து மூணாறுக்கு கேரள அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. வெள்ளதூவல் என்னுமிடத்தில் மலைப்பாதையில் பஸ் மெதுவாக சென்றது. அப்போது வனப்பகுதியில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று திடீரென்று பஸ்சுக்குள் தாவியது. 

    பின்னர் அந்த குரங்கு டிரைவர் இருக்கையின் பின்பகுதியில் உள்ள கம்பியில் உட்கார்ந்தபடி ஒய்யாரமாக எந்தவித பயம் இல்லாமல் பயணம் செய்தது. இதனை பார்த்த பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். சில பயணிகள் குரங்கு அமர்ந்து இருப்பதை டிரைவரிடம் தெரிவித்தனர். இதை கவனித்த அவர் பஸ்சை நிறுத்தினார். உடனே அந்த குரங்கு பயணிகள் இருக்கை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். 

    பின் இருக்கையில் இருந்த சிலர் கூச்சலிட்டதால் அந்த குரங்கு பஸ்சை விட்டு ஜன்னல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பஸ்சில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Monkey #Women #UP
    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது.

    இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்தவர் பூரான்தேவி(59). இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து குதறின.

    படுகாயம் அடைந்த அவரால் எழுந்து ஓட முடியவில்லை. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு பூரான் தேவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென்று பாய்ந்து தாக்குகின்றன. தற்போது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பீதி நிலவுகிறது. #Monkey #Women #UP
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த 12 நாள் குழந்தை குரங்கிடம் சிக்கி கடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Monkey #Kills #Baby
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டே நாளான தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு பாய்ந்தோடி வந்த ஒரு குரங்கு அந்தப் பெண்ணின் அரவணைப்பில் இருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறித்துச் சென்றது. இதனால் பதறிப்போன அந்த தாயின் கூக்குரலை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, குரங்கை விரட்டிச் சென்றனர்.

    அவர்களிடம் பிடிபடாமல் மரங்களின்மீதும் வீடுகளின்மீதும் குழந்தையுடன் தாவியேறிச் சென்ற குரங்கு மறைந்து விட்டது.



    இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அந்த குழந்தை கடிபட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட உறவினர்கள் அதை மீட்டெடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  #Monkey #Kills #Baby
    வந்தவாசியில் குரங்கு மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு நகராட்சியில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் 3 வது வார்டு 5 வது குறுக்கு தெரு பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு 5வது குறுக்கு தெருவில் நிரந்தரமாக வசித்துவருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. கடந்த 6 மாத காலமாக குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.

    இதனை நேரிடையாக பார்வையிட்டு எங்களுக்கு குரங்குகள், மற்றும் நாய்கள் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    கந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் அம்பேத்கர்நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு குரங்கு அங்குள்ள மரத்தில் அங்கும், இங்குமாக தாவி விளையாடி கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்ற மின்சார கம்பி மீது குரங்கு தாவியது.

    அந்த நேரம் குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அந்த குரங்கு பரிதாபமாக செத்தது. மேலும் அதன் உடல் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்தது. இறந்த குரங்கை பார்த்து அங்கிருந்த மற்ற குரங்குகள் கத்தியது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    அதன்பின்னர் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த குரங்கு உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த குரங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி குரங்கின் உடலுக்கு மஞ்சள், குங்குமம் தடவி, மாலை அணிவித்து, கற்பூரம் காண்பித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாடையில் குரங்கு உடலை வைத்து தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்தனர். 
    ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே நாய்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கூத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குட்டி போட்டு 5 நாட்களே ஆன கண் திறக்காத நாய்க்குட்டியை குரங்கு ஒன்று 3 நாட்களாக தூக்கி கொண்டு தனது குழந்தையை போல் பார்த்து கொள்கிறது. மேலும் அந்த குட்டியுடன் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அப்பகுதியில் உள்ள வீட்டு மாடி, ஓட்டு வீடுகளில் மேலே நாய்க்குட்டியை வைத்து கொண்டு, அந்த குரங்கு சுற்றி வருகிறது. மேலும் அந்த நாய் குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து, மடியில் போட்டு பேன் பார்க்கிறது. இதையடுத்து ஒரு குழந்தையை போல் நாய்க்குட்டியை தோளில் போட்டு தூங்க வைப்பதும், நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிவது, மரங்களில் தாவி கொண்டிருக்கின்றது. மேலும் அந்த குரங்கு, நாய்க்குட்டியை பார்த்து கொள்ளும் பாவனைகளை மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றார்கள்.

    இந்நிலையில் அந்த குரங்கிற்கும், கிராம மக்கள் தினமும் ரொட்டி மற்றும் சாதம் கொடுத்து ஆச்சரியமாக பார்த்து ரசித்து வருகின்றனர். விலங்குகளுக்குள் இருக்கும் நேயம் மனிதர்களிடத்தில் இருப்பதில்லை. தாயை பிரிந்து தவிக்கும் கண் திறக்காத நாய்க்குட்டியை அனைத்தபடி தாய்பால் மற்றும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கும் குரங்கு ஒன்று தா.பழூர் பகுதியில் சுற்றி வருவதை பொதுமக்கள் பார்த்து அதிசயித்து வருகின்றனர். குரங்கும், நாயும் எதிரிகளாக இருந்த காலம் மாறி தற்போது மனிதனுக்கு மாறாக மனித நேயத்துடன் இனக்கமாகவும் இருக்கின்றன. இதனை பார்த்த பின் மனிதர்கள் மத்தியில் சாதி, மதம், இனம் கடந்த மனித நேயம் காணப்படுமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வியந்து பார்க்கின்றனர். 
    மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, உடல் நலம் தேறிய பின் குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். #Yashodha #Monkey #SaviourMother
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள எல்லம்மா கோவில் அருகே உள்ள மைதானத்துக்கு சென்றார். அப்போது, அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.



    இதனால், அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய யசோதா அங்கு சென்றார். அப்போது, குரங்கு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்தப்பகுதியில் உள்ள மின்வயரில் சென்றபோது அந்த குரங்கை மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குரங்கை மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். உடல் நலம் தேறிய குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். குரங்கு அவருடன் நன்றாக பழகி, அவர் கூறுவதை கேட்டு நடந்து கொள்கிறது. தனது குழந்தையை இடுப்பில் சுமந்து செல்வது போல் குரங்கையும் அவர் தூக்கி செல்வது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.



    இதுகுறித்து யசோதா கூறுகையில், ‘மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. காப்பாற்ற முயன்றால் குரங்கு கடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உதவி செய்யவில்லை. நான் குரங்கை மீட்டு சிகிச்சை அளித்தேன். தற்போது குரங்கு நன்றாக உள்ளது. குழந்தை போல் பாசமாக என்னிடம் குரங்கு உள்ளது’ என்றார்.  #Yashodha #Monkey #SaviourMother
    கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி பெண் போலீஸ் யசோதா உணவளித்து பாதுகாத்து வரும் சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் யசோதா. இவர் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு குரங்கு மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து உயிருக்காக போராடி கொண்டிருந்தது. அதனை கண்ட யசோதா குரங்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் யசோதா குரங்கை தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு குரங்கை பராமரித்து வந்தனர். தற்போது குரங்கு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    குரங்கு தற்போது தன்னுடைய வீட்டில் ஒரு செல்ல குழந்தையாக மாறி விட்டதாக யசோதா தெரிவித்தார். யசோதாவின் இந்த கருணை குணம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.
    உத்தர பிரதேசத்தில் வங்கி நுழைவு வாயிலில் நடந்து சென்றவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் பணப்பையை குரங்கு பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஆக்ரா:

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘நை மண்டி’ பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். அங்கு கடை வைத்திருக்கும் அவர் தனது மகள் நான்சியுடன் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார். வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு தனது மகளிடம் கொடுத்துள்ளார் விஜய் பன்ஸால்.

    பின்னர் இருவரும் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பையை பறித்துக் கொண்டு ஓடியது.

    அந்த குரங்கை விரட்டியபடி விஜய் பன்சால் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர்.

    சற்று நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி ஏறிந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீண்டும் பணத்துடன் அங்கிருந்து ஓடியது.

    அனைவரும் குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து குரங்கு ஓடி மறைந்தது. 60 ஆயிரம் ரூபாயை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீதமுள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். பின்னர் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார்.

    ஆனால் போலீசாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பிபோயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.
    ×