search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95411"

    கரூரில் 2-வது புதித்தகத் திருவிழா பிரேம் மஹாலில் தொடங்கியது. இதில் சபாநாயர், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மைய நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகலாலயம் சார்பில் கரூரில் 2-வது புதித்தகத் திருவிழா கரூர் பிரேம் மஹாலில் தொடங்கியது. தொடக்க  விழாவுக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கவுரவதலைவர் பி.டி.கோச் தங்கராசு வரவேற்றார். 

    இதில் பாராளுமன்ற துணை சபாநாயர் மு.தம்பித்துரை,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர்  கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினர். விழாவில் நூலோர் தொகுத் தவற்றுள் எல்லாம் தலை என்கிற தலைப்பில் கவிஞர் தங்கம் ராமமூர்த்தி பேசினார். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன்,  நகராட்சி ஆணையர் அசோக்குமார், நூலக அலுவலர் தனலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஜான்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

    இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி வரை புத்தகத்திருவிழா நடக்கிறது. அனுமதி இலவசம். மாணவர்களுக்கு பல்வேறு குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு புத்தகங்கள் பரிசளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பதிப்பகங்களும் வந்துள்ளன.
    போலீஸ்காரரை தாக்கிய ரவுடியை அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறியது கடும் கண்டனத்துக்குரியது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘போலீசார் பணி சுமையினால், மன உளைச்சலுக்கு ஆளாகி, பலர் தற்கொலை செய்கின்றனர். எனவே, அவர்களது பணி நேரத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்தநிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆணையம் அமைக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர், ‘ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. கூறுவது சுத்தப்பொய். ஆயுதப்படை போலீசார் மட்டுமல்லாமல், போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாரையும் ஆர்டர்லியாக உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர். இதனால், அந்த ஆர்டர்லி போலீசாருக்கு வழங்கப்படும் கோடிக்கணக்கான சம்பளம் வீணாகிறது’ என்று அவர் வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, ‘போலீசாரை காவல் பணிக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும். ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தாலும், இன்னும் போலீசார் பல்வேறு மாற்றுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுத்தான் வருகின்றனர். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போலீசாரை தவறாகத்தான் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரத்தில் ஒரு போலீஸ்காரரை தாக்கிய ரவுடியை அமைச்சர் ஒருவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியிருக்கிறார். இவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது’ என்று கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ‘போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவல் பணிக்காக போலீசாரை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், துணி துவைப்பதற்கும், காய்கறி வாங்குவதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்துவதுதான் தவறு. ஆனால், வேலை செய்யாமல் இருப்பதற்காக ஆர்டர்லி வேலையை விரும்பும் போலீசாரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று நீதிபதி கூறினார். #tamilnews
    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji
    சென்னை:

    தமிழகத்தில் தற்போது பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு புகார் அளித்திருந்தார். அமைச்சர் ஆன பிறகு அதிக அளவில் அவர் சொத்து சேர்த்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

    அவரது மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில்  விசாரணை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji
    கவர்னர் உத்தரவிட்டாலும் அமைச்சர்களை கேட்காமல் பதில் அனுப்பக்கூடாது என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு துறைகளுக்கான இணை செயலாளரை நேரடியாக துறைகளுக்கு நியமிக்க நேற்றைய தினம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

    துறை இணை செயலாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றவர்கள், பதவி உயர்வு மூலம் பல கட்டங்களில் பணியாற்றிய பிறகு இணை செயலாளராவது வழக்கம்.

    ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 20 ஆண்டுக்கு பின்னரே இணை செயலாளர் பதவியை அடைய முடியும். ஆனால், மத்திய அரசு வெளிமார்க்கெட்டிலிருந்து நேரடியாக இணை செயலாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்திருப்பது நிர்வாகத்தை சீர்குலைக்க செய்யும். அதிகாரிகளின் பாரம்பரியத்தையும் அழிப்பதாக அமையும்.

    ஏற்கனவே மத்திய அரசு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பெறும் காலத்தில் பெறும் மதிப்பெண்ணையும் கணக்கிட்டு பணிகளை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.

    இதற்கு நாடு முழுவதும் உள்ள முதல்-அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இணை செயலாளர் பதவியில் இருப்பவர்கள் முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கோப்புகளை அனுப்பும் நிலையில் இருப்பர். அரசின் கொள்கை முடிவுகள் எடுக்க துணையாக இருப்பர்.

     


    எனவே வெளி மார்க்கெட்டில் இருந்து நேரடியாக நியமனம் செய்வது ஏற்க முடியாதது. மத்திய பா.ஜனதா தொடர்ந்து அரசு அமைப்புகளை சீர்குலைவிற்கு ஆளாக்கும் செயலை செய்து வருகிறது. திட்ட கமி‌ஷனை கலைத்து நிதி அயோக் அமைப்பை ஏற்படுத்தினர்.

    அதேபோல மத்திய அரசின் திட்டங்களை முடக்கம் செய்தனர். சில திட்டங்களுக்கு பெயரை மாற்றி பயன்படுத்தினர். அரசு துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பாவையாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    சி.பி.ஐ., வங்கிகள், வருவாய்த்துறை ஆகியவற்றை தங்கள் கைக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்க நினைப்பது மத்திய அரசு விதிமுறைகளுக்கு மீறிய செயல்.

    ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் பயிற்சியின்போது எடுக்கும் மதிப்பெண்ணையும் கணக்கிடும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

    தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதவுள்ளேன். இத்தகைய நிலைப்பாடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். மகத்துவத்தை குறைத்துவிடும்.

    வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூகவலை தளங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அந்த உத்தரவுகளுக்கு அதிகாரிகள் செயல்படக்கூடாது என ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தோம்.

    தற்போது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. கவர்னர் எழுத்துப்பூர்வமாக உத்தரவு அளித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை செயலர்கள், தலைமை செயலர், அமைச்சர், முதல்- அமைச்சர் ஒப்புதல் பெற்றே கவர்னருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இதுதான் மாநில நிர்வாகத்தில் நடை முறையாக உள்ளது. வாட்ஸ்-அப் அங்கீகரிக்கப்பட்டதல்ல. வாட்ஸ்அப்பில் பல தவறான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருபுவனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்தததாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து விசாரித்த போது வங்கி லாக்கரை உடைக்க முடியாமல் திருடர்கள் தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. இத்தகைய தகவல்களை யார் அனுப்புகிறார் என கண்டுபிடிக்க முடிய வில்லை. என்னைப்பற்றியும் தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.

    இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டால் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே 19 முறை இதுதொடர்பாக கடிதம் மூலமாக கவர்னரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். கவர்னருக்கு எந்த விளக்கம் அளிக்கும் முன்பும் அமைச்சர்களிடம் ஆலோசனை பெற்றே அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. இந்த கடத்தலில் அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #Thirumavalavan
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. மணல் கடத்தலில் அமைச்சர்கள் வரை பங்குண்டு. இது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ராகுல்காந்தி கலந்து கொள்வார். அவருடைய தேதி கிடைத்த பிறகு மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
    போக்குவரத்து கழக ஊழியர்களின் நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவையினர் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    சென்னை:

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, தலைமைச்செயலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன், பேரவை தலைவர் தாடி ம.ராசு, முன்னாள் செயலாளர் கா.சங்கரதாஸ், பொருளாளர் அப்துல்அமீது, போக்குவரத்து பிரிவு செயலாளர் எஸ்.பழனி மற்றும் திருவொற்றியூர் ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.

    பின்னர் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையின் சீரிய திட்டங்களால், தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தலைசிறந்த முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து துறை இந்தியாவில் பல்வேறு சாதனைகளை படைத்து, முதன்மை இடத்தில் உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், அகில இந்திய அளவில் பல்வேறு செயல் திறன்களுக்காக 11 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

    சமீப காலங்களில் டீசல் விலை மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டபோதிலும், வரலாறு காணாத வகையில் ஊழியர்களுக்கு அரசு ஊதிய உயர்வு கொடுத்துள்ளது. போக்குவரத்து துறை சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது.

    பொதுமக்களுக்கு சேவை அளித்து வரும் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்துடன் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.

    ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 4 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைத்தலுக்கு பணம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார்.
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

    ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்டும் வகையில் அந்த பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற 30 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த ஊக்கத்தொகையை வழங்கினார்.

    இந்த ஊக்கத்தொகையில் தளவாடப்பொருட்கள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரமும், ஆசிரியர்கள் சுற்றுலா செல்வதற்கு ரூ.20 ஆயிரமும், ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரமும், மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரமும் பயன்படுத்தப்படுகிறது. #tamilnews
    விருகம்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரி அமைச்சருக்கு வி.என்.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விருகம்பாக்கம் தொகுதி 3 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி. விருகம்பாக்கம் தொகுதியிலே அரசு மேல்நிலைப்பள்ளி, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என சுமார் 40 பள்ளிகளுக்கு மேலாக உள்ளன.

    வசதி இல்லாத ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளை நம்பி இருக்கின்றார்கள். அந்த வகையிலே, விருகம்பாக்கம் தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தர வேண்டும் என்று அமைச்சரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியானது சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியிலேயே அமைந்து இருக்கிறது.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 14 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும், 18 சுயநிதி கலைக்கல்லூரிகளும் என்று 39 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கடந்த கல்வி ஆண்டில் 7 அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் ஒப்பளிக்கப்பட்டதில், 1,485 இடங்கள் காலியாக இருக்கின்றன. ஆகவே தான், மேற்கண்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலே புதியதாக ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவை எழவில்லை.

    ஒரு கல்லூரி புதியதாக தொடங்குவதற்கு ரூ. 12 கோடியே 77 லட்சம் தேவைப்படுகின்ற சூழ்நிலையில் உறுப்பினர் விருகம்பாக்கம் தொகுதியிலே ஒரு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவது குறித்து கோரிக்கை வைத்திருப்பதால் விருகம்பாக்கம் தொகுதியிலே ஒரு புதிய கலைக்கல்லூரி தொடங்குவது குறித்து தேவைக்கேற்ப ஆராய்ந்து, இந்த அரசு பரிசீலிக்கும் என்றார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைடுக்கு எதிராக 100 நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் முதல் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.#SterliteProtest #kanimozhi
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெட்டாற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கமுகக்குடி - அபிவிருத்தீஸ்வரம் இணைப்பு பாலத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மூலம் இந்த பாலம் திறக்கப்படாதது மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தமிழக அரசுடன் நடைபெற்ற 7 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் இந்த பாலம் தற்போது திறக்கப்பட்டது வெற்றி தான்.

    மேலும் தமிழகத்திற்கு பிரதமர் மோடி முதல்வராக கிடைத்திருப்பது பெருமை. மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பிளவு படுத்தப்பட்டு போராட்டங்களுக்கு தூண்டி விடும் அரசாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் தாங்கள் இந்தியர் என்ற உணர்வில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலித் மக்கள் அதிகமான தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.

    இது மட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியும், தொழில்கள் நசுக்கப்பட்டும் விட்டது. தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வரோ அல்லது அமைச்சர்களோ ஏன் பார்க்க செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு 144 தடை உத்தரவு உள்ளதால் செல்லவில்லை என்று முதல்வர் கூறுகிறார்.



    ஒருவர் எம்.எல்.ஏ. வாகவோ அல்லது எம்.பி.யாகவோ பதவியேற்கும் போது அவர்களின் உரிமைகள் என்ன என்பது குறித்து பயிற்சி அளிப்பார்கள். எனவே அந்த பயிற்சிகளுக்கு முதல்வர் செல்லவில்லை என்பதை தான் காட்டுகிறது. மேலும் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்றும் கூறுகின்றனர்.நாங்களும் அதை தான் கூறுகின்றோம். தமிழகத்தில் சமூக விரோதிகளாக உள்ளவர்கள் ஆட்சி நடத்துவதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்க கூட தமிழக அரசு முன்வரவில்லை.

    பொதுமக்கள் தொடர்ந்து 100 நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அல்லது முதல் அமைச்சரோ பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.#SterliteProtest #kanimozhi
    ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிடும் வகையில் ரூ. 31 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் கிழக்கு கோபுரவாசல் அருகே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேளா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவது குறித்து உணவு வணிகர்களுக்கும், உணவு விடுதிகள் மற்றும் குளிர்பான கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்ளும் போது விழிப்புடன் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பாக 94440 42322 என்ற “வாட்ஸ்அப்” எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புகார் எண் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செயல்முறை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்குகளை அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமேசுவரம் பழைமை வாய்ந்த புனித தலமாகவும், சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்திடும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், அருகே உள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடும்பத்தினருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுது போக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    அதன் அடிப்படையில் ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்திடும் வகையில் மத்திய அரசின் சுவதேஷ் தர்‌ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15.86 கோடி மதிப்பில் ராமேசுவரம் நகராட்சியின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

    குறிப்பாக ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரூ. 1.51 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடம், சங்கு அணி கலன்கள் கடை அமைத்தல் போன்ற பணிகளும், வாகன நிறுத்துமிட வளாகத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறைகளும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் ரூ. 37.15 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. பல்புகளுடன் தெரு மின் கம்பங்கள் மற்றும் ரூ. 35.45 லட்சம் மதிப்பில் நவீன ஒளிரும் தகவல் பலகைகள் அமைத்தல், ரூ. 20.90 லட்சம் மதிப்பில் உடை மாற்றும் அறைகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதேபோல் தனுஷ்கோடி பகுதிகளில் உள்ள புராதன கட்டிடங்களை அதன் பழைமை மாறாமல் புனரமைத்திட ரூ.1.37கோடி மதிப்பிலும், இ-சைக்கிள், இ-ரிக்ஷா, மினி பஸ் என வாகன வசதிகளுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலும், எம்.ஆர்.சத்திரம் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் மொபைல் டாய்லெட் மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பில் பொருட்கள் வைப்பு அறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4.37 கோடி மதிப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.4.52 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சிகள் அமைத்திடவும், ரூ.6.18 கோடி மதிப்பில் ராமாயண சுற்றுத்தொடர் பணிகள் என மொத்தம் ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெற்று, ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக ஏற்படுத்திடும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
    கரூர்:

    கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதன்முதலாக ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுடன் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த ஓடுதளத்தில் தான் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சி.சி.டி.வி. கேமரா மூலமாக சாலை விதிகளை பின்பற்றி அந்த ஓடுதளத்தில் வாகனம் ஓட்டுகின்றனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அந்த வகையில் கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    தமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சென்று கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை அமைச்சர் பார்வையிட்டு அது செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார். மேலும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் வாகனம் ஓட்டும் திறனை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சோதித்து பார்த்து தேர்வு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்திலுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களால் மென்பொருள் மூலம் இந்த ஓட்டுனர் தேர்வுதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். இந்தியாவிலேயே ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் விபத்து சம்பவங்களில் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    இதை வைத்து பார்க்கையில் நாம் பல்வேறு வகையில் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சாலை விதிகளை கடைபிடிப்பதில் மோசமான நிலையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாகன உற்பத்தி அதிகம் இருப்பதால் 2½ கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதனால் விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழக்கின்றனர்.

    எனவே நாம் இதனை சிந்தித்து பார்த்து சாலை விதிகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.

    தொழில்துறை, கல்விதுறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைந்து வரும் தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே விபத்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, கடந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழப்பு 6 சதவிதம் குறைந்தது. தமிழகத்தில் விபத்துகளால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானோர் 15 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆண்கள் தான் அதிகம். எனவே ஹெல்மெட் அணிவது, காரில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துகளை தடுக்கலாம். சாலை விபத்தினை குறைக்க அரசாங்கம் சட்டம் இயற்றலாம்.

    ஆனால் தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் செயல்பட்டு விதிகளை பின்பற்றினால் தான் சாலை விபத்தினை குறைக்க முடியும். மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டத்தில் கூட அதை சேர்க்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான சமயமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் அதிகப்படியாக வாகனங்கள் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 7,000 வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. அதிக வாகனம் உற்பத்தியும், பதிவும் உள்ளதால் சாலை விதிகளை குறைப்பதற்காக உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகிறது. சாலை விபத்தினை குறைப்பதற்காக மிக துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுனர்களின் திறமை நன்கு அறியப்பட்ட பிறகே உரிமம் வழங்கப்படும்.

    படிப்படியாக 14 நகரங்களில் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுதளம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தில் திறமையை நிரூபித்து ஓட்டுனர் உரிமம் பெற எளிதில் தேர்வாகி விடுவோமா? என்கிற சந்தேக கண்ணோட்டத்தில் பலர் அது தொடங்கப்படுவதற்கு முன்பாகவே உரிமம் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், போக்குவரத்து இணை ஆணையர்கள் சிவக்குமரன், வேலுச்சாமி, துணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #gutkhascam
    சென்னை:

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள ஊழியர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிக மூத்த வழக்கறிஞரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

    ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருக்கும் அரசு ஊழியர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய முதுநிலை வழக்கறிஞரை நியமிக்க எங்கிருந்து பணம் வந்தது என்ற நியாயமான கேள்வியும் அய்யப்பாடும் இயல்பாகவே எழுகிறது.

    இந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே “குட்கா டைரியில்” குற்றம் சாட்டப்பட்டிருப்பவர். அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    குட்கா வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குச் சென்றால் சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் குட்கா வழக்கில் வசமாகச் சிக்கிக் கொள்ளநேரிடும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையைத் தடுக்கவும், காலம்தாழ்த்தவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக”, பினாமிமுறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

    ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் அவர்களது பதவியில் எல்லா எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்வரை, குட்கா வழக்கு விசாரணைக்கு அனைத்துவகையான முட்டுக்கட்டைகளையும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் வரிசையாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

    எனவே இவர்கள் இருவரும் தங்கள் பதவியிலிருந்து தாமே முன்வந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது முதலமைச்சர் இந்த இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்பது அவசர அவசியமாகிறது.

    குறிப்பாக குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்ட உடன், “வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், மேல்முறையீடு செய்யமாட்டோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அமைச்சர் ஜெயக்குமாரின் அந்தக் கருத்துக்கு மாறாக, இப்போது சுகாதாரத்துறையில் உள்ள ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார் என்றால், வளமானதும் வலிமையானதுமான பெரிய இடத்துப் பின்னணி இல்லாமல், அரசின் முடிவை எதிர்த்து அப்படியொரு நடவடிக்கை எடுக்க ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு எப்படி துணிச்சல் வரும்?

    ஆகவே இந்த மேல்முறையீட்டின் திரைமறைவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் முக்காடு போட்டு ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பார்ப்போர் அனைவருக்கும் தெள்ளித் தெளிவாகத் தெரிகிறது.



    ஆகவே இந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது “மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவினைத் தெரிவித்து, குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    அது மட்டுமின்றி முகுல் ரோகத்கி போன்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து தனக்காக வாதிட வைக்கும் அளவிற்கு, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மடியில் கனம் இருப்போர்க்கு வழியில் நிச்சயம் பயம் இருக்கும் என்றுதானே மக்கள் எண்ணிப்பார்ப்பார்கள்!

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #gutkhascam
    ×