search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95466"

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கன்னியாகுமரி:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலும் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது.

    இன்று காலை கடல் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. அவை பாறைகளில் முட்டி மோதி சிதறியதை பார்க்க பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக இன்று காலை விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல இன்று இந்த பகுதியில் உள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் வள்ளங்கள், கட்டுமரங்கள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.



    தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்தார்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

    கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை நேற்றும்3-வதுநாளாக தொடர்ந்து பெய்தது. மழையின் காரணமாக கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சிஅளித்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் மழைமேகத்தை பொருட்படுத்தாமல் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் இருந்தே கடற்கரைக்கு திரண்டு வந்தனர். ஆனால் மழை காரணமாக இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. இதனால் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு சூரியன் உதயமாகும் காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த மழையினால் கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நடுக்கடலில் இருந்தது பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோ‌ஷமாக வந்து கடற்கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.

    சில நேரங்களில் கிளம்பி வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு விட்டுச் சென்றன. இந்த ராட்சத அலையை கண்டு கடலில் கால் நனைக்க சென்ற சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தக் கடல் சீற்றத்தினால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அச்சம் அடைந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு ஏற்கனவே வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வெளியே வர முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி குற்றாலம் சீசன் போல் “குளுகுளு” என்று மாறிவிட்டது.
    கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், மணக்குடி கடற்கரை பகுதி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகையை யொட்டி கன்னியாகுமரியில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை மீண்டும் களை கட்ட தொடங்கியது.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு திரும்பினர்.

    மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல மற்ற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கடற்கரையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சுனாமி நினைவு பூங்கா உட்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மழையினால் கடந்த 4 நாட்களாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி மற்றும் சூரியன் மறையும் காட்சி நேற்று வெயில் அடித்ததால் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதனை காண கன்னியாகுமரி கடற்கரை மற்றும் சன்செட்பாயிண்ட் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், மணக்குடி கடற்கரை பகுதி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலாத்தலங்களில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


    குமரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை - பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விவசாயிகள் அணை நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது.

    குமரி மாவட்ட விவசாயிகள் கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே ஈடுபடுவார்கள். இதற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீரை நம்பியே விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இது தவிர குமரி மாவட்டத்தில் குளங்களை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். குமரி மாவட்ட அணைகளுக்கு தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை மற்றும் கோடை மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் கிடைக்கும். இவற்றை சேமித்து வைத்தே விவசாயம் நடைபெறும்.

    விவசாயத்திற்காக குமரி மாவட்ட அணைகள் ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கு தண்ணீர் தேக்கப்படவில்லை.

    பெருஞ்சாணி அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.95அடி தண்ணீரே உள்ளது. இது போல சிற்றார் 1 அணையில்5.28 அடி தண்ணீரும், சிற்றார் 2 அணையில் 5.38அடி தண்ணீரும் உள்ளது.

    இவை தவிர மாம்பழத்துறையாறு அணையில் 42.24அடி தண்ணீரும், பொய்கை அணையில் 8.90 அடி தண்ணீரும் மட்டுமே உள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு தொடங்கிய பராமரிப்புபணி இன்னும் முடிவடையவில்லை. தற்போது அணையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அணையில் தண்ணீர் தேக்கப்படவில்லை. வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் போதுதான் இங்கு தண்ணீர் தேக்க இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதுபற்றி குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள் சேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட வேண்டும். அதற்கு குமரி மாவட்ட அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்க வேண்டும்.

    பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளின் மொத்த நீர் இருப்பு 500 மில்லியன் கன அடியே உள்ளது. இந்த அளவுக்கு நீர் இருந்தால் அணைகளை திறக்க முடியாது. எனவே வருகிற ஜூன் 1-ந் தேதி அணைகளை திறக்க வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    குமரி மாவட்டத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 5 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கஞ்சா கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். களியக்காவிளை பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பைங்குளம் சந்திப்பு பகுதியில் வரும்போது அங்கு 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பத்மநாபபுரத்தை சேர்ந்த அஜித் (23), அஜிமல் (19), நிசாந்த் (21), ராமபிரகாஷ் (19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் குன்றுவிளை சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியின் காரை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    கோடை விடுமுறை காலம் என்பதால் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காரில் கன்னியாகுமரி வருகிறார்கள். அதிகாலையில் கன்னியாகுமரி வந்து சேரும் அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே கார்களை நிறுத்தி விட்டு முக்கடல் சங்கம பகுதியில் சூரிய உதயம் பார்க்க செல்வது வழக்கம்.

    புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா நகரைச் சேர்ந்த சரவணன்(வயது36) என்பவரும் நேற்று அதிகாலை குடும்பத்துடன் காரில் கன்னியாகுமரி வந்தார்.

    சரவணன், அவரது காரை கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினார். பின்னர் கார் கதவுகளை பூட்டி விட்டு சூரிய உதயம் பார்க்க கடற்கரைக்கு சென்றார்.

    திரும்பி வந்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் காரின் சீட்டில் வைக்கப்பட்டிருந்த பேக்கும் மாயமாகி இருந்தது. அந்த பேக்கில் 4¼ பவுன் தங்க நகைகளும், ரூ.4500 ரொக்க பணமும் இருந்தது.

    காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது பற்றி சரவணன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அவர் காரை நிறுத்தி விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் கார் கண்ணாடியை உடைத்து நகை, பணத்தை திருடி இருக்க வேண்டும் என்று சரவணன் கூறினார்.

    இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணியிடம் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் பாம்பு புகுந்ததாக ஊழியர் அலறியதையடுத்து டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது.
    கன்னியாகுமரி:

    கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவு வருகை தருகிறார்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலோர் ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு வருவதால் ரெயில் நிலையத்தில் அதிக கூட்டம் காணப்படுகிறது. மேலும் டிக் கெட் எடுக்கவும் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கம்போல ஊழியர்கள் பணியில் இருந்தனர். டிக்கெட் எடுக்க பயணிகளும் வரிசையில் காத்திருந்தனர்.

    அப்போது சிறப்பு டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தனது காலை ஏதோ கடித்ததை உணர்ந்தார். பாம்புதான் தன்னை கடித்துவிட்டது என்று பீதி அடைந்த அவர் பாம்பு.... பாம்பு.... என்று அலறியபடி கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம்பிடித்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற ஊழியர்களும் பதட்டத்துடன் வெளியே ஓடினார்கள்.

    இதைப் பார்த்ததும் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது. மேலும் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் சென்று பாம்பை தேடினார்கள். நீண்ட நேரம் சோதனை நடத்திய பிறகும் பாம்பு எதுவும் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த பொந்து ஒன்றில் இருந்து எலி வெளியே வந்து ஓடியது. இதனால் ரெயில்வே ஊழியரை அந்த எலிதான் கடித்திருக்க வேண்டும். அவர் பயத்தில் தன்னை பாம்பு கடித்துவிட்டதாக பீதி அடைந்து உள்ளார் என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதி செய்தனர்.

    பாம்பு பீதி காரணமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
    கன்னியாகுமரி தொகுதியில் 50 இடங்களில் மின்னணு எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். #LokSabhaElections2019
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஆனால் பல வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மணிக்கணக்கில் காத்து நின்று வாக்களித்தனர். சில இடங்களில் பொறுமை இழந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பின்னர் எந்திரம் சரி செய்யப்பட்டதும் மீண்டும் வந்து வாக்களித்தனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமே எந்திரம் செயல்படவில்லை. அப்போது 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க காத்து நின்றனர். 8 மணி வரை அவர்கள் காத்து நின்றும் எந்திரத்தின் பழுது சரி செய்யப்படாததால் வாக்காளர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பழுது சரி செய்யப்பட்டதும் வந்து வாக்களிப்போம் என அவர்கள் கூறினர்.

    பொன்மனை 43-வது வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை. பெருஞ்சாணி 32-வது வாக்குச்சாவடியில் திடீரென எந்திரம் பழுதாகி நின்றது. இதேபோல அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வாக்குச்சாவடி, செறுகோல் ஊராட்சி 150-வது வாக்குச்சாவடி, அயக்கோடு ஊராட்சி கல்லடிமாமூடு 89-வது வாக்குச்சாவடி, கல்லங்குழி 118-வது வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது.

    நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாக்களித்த எஸ்.எல்.பி. உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    நாகர்கோவில் பகுதியில் மட்டும் 14 இடங்களில் எந்திரம் பழுதானது. இதில் இருளப்பபுரம், மாதவலாயம், கிருஷ்ணன் கோவில், இறச்சகுளம் பகுதியில் எந்திரங்களை பழுது பார்க்க முடியாததால் வேறு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    கிள்ளியூர் தொகுதியில் 16 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது. மொத்தம் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் எந்திரம் பழுது ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.  #LokSabhaElections2019
    திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவற்றை அதிகாரிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தின் பாறசாலை நெய்யாற்றின் கரை, கோவளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, விளவங்கோடு, ஈச்சவிளை, கோழிவிளை, பனச்சமூடு, ஊரம்பு, காக்க விளை பகுதிகளில் இது போன்ற இரட்டை பதிவுகள் இடம் பெறுகிறது.

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் சரி பார்க்கும்போது அவர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். அவர்கள் இதுபோல 2 தொகுதிகளில் பெயர் உள்ளவர்களை சரிபார்த்து அவர்களது முகவரி அடிப்படையில் ஒரு தொகுதியில் இருந்து பெயரை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

    நேற்றுடன் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலை சூரிய உதயத்தை பார்ப்பதற்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

    காலை 6 மணி முதல் பூம்புகார் படகுத்துறை முன்பு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் காத்து நின்று சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறைக்கு 3 படகுகள் இயக்கப்பட்டது. கடலில் நீர்மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓட்டல், விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்தவாறு சென்றனர். இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அரசுக்கு தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியது.

    இதையடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    முதற்கட்டமாக போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த 64 சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்டை மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரத் ஸ்ரீனிவாஸ், சேம் வேதமாணிக்கம் ஆகிய 5 பேர் மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    இதுபோல குலசேகரம் இன்ஸ்பெக்டர் தங்கம், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம், குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன், இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி,

    நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் ஆகியோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் பிறப்பித்து உள்ளார்.
    ×