search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95466"

    ‘அந்த்யோதயா’ ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். #ponradhakrishnan
    சென்னை:

    ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    பயணிகள் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் முன்பதிவு இல்லாதவையாக, யார் வேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என்று இயக்கப்படும் ‘அந்த்யோதயா’ ரெயில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தனையின் செயல்பாடு ஆகும்.

    தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த 2009-14-ம் காலத்தில் ஆண்டுதோறும் ரூ.879 கோடி மட்டும் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு தமிழக ரெயில்வே துறைக்கு ரூ.2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கி உள்ளது.

    ரூ.20 ஆயிரத்து 64 கோடியில் 27 ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்காக பிரதமர் நரேந்திரமோடி ரூ.4 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். இதில் பாதி நிதியை மாநில அரசு வழங்க வேண்டும். எனினும் மாநில அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முழுத்தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் தெற்கையும், வடக்கையும் இணைக்கக் கூடிய வகையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. நிச்சயம் இன்னொரு ரெயில் தேவை. எனவே அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை ஏன் நீட்டிக்க கூடாது? என்று ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்னிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன்.

    அவர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, ‘போக்குவரத்து நெரிசலால் (சிக்னல் பிரச்சினை) தற்போது முடியாது என்று தெரிவித்தார். இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்தவுடன் அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.



    சாலை போக்குவரத்தை பொறுத்தமட்டில் 4 வழிச்சாலைகள் அல்ல; 8 வழிச்சாலைகளுக்கும் மேல் அமைக்க வேண்டும். தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வரையில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் பேசும்போது, ‘தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதை, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி, ரெயில்வே கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கிறது. செங்கோட்டை-புனலூர் இடையே ரூ.390 கோடியில் தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. நாளை(இன்று) அது நாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும்.

    பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. ரெயில்களில் வேகத்தை மணிக்கு 25 கி.மீ அதிகரிப்பது குறித்து டெல்லியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது’ என்றார். #ponradhakrishnan 
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 750 பாசன குளங்கள் நிரம்பி விட்டன.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    திற்பரப்பு, அடையாமடை, பூதப்பாண்டி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குளச்சல், குருந்தன்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்குகேற்ப தண்ணீரை திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    புத்தேரி, பொற்றையடி, பூதப்பாண்டி பகுதிகளில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட் டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 750 குளங்கள் நிரம்பி விட்டன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இறச்சகுளம் பகுதியில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கமாக மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டும் அதே அளவு பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6.10 அடியாக உள்ளது. அணைக்கு 1,018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 654 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது. அணைக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.25 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.90 அடியாக உள்ளது.
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கன்னியாகுமரியில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை கிராமங்களிலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இதில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராஜ் மற்றும் ஆல்பின், ஜான்மில்டன், சேவியர், சிலுவை தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராஜாக்கமங்கலம்துறை பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், மணக்குடி பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.#SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரியில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. #Thoothukudipolicefiring #internetresumes
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதளச் சேவைகளை முடக்கிவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணையச்சேவைக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. #Thoothukudipolicefiring #internetresumes
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து குமரியில் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 247 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 81 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி கொட்டாரம் சந்திப்பில் நடந்த தி.மு.க. மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ., தாமரை பாரதி உள்பட 41 பேர் மீதும், சுசீந்திரம், பறக்கை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ராஜாக்கமங்கலத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 12 பேர் மீதும், தக்கலை அழகிய மண்டபத்தில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 20 பேர் மீதும், ஆரல்வாய்மொழியில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 26 பேர் மீதும், மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக 12 பேர் மீதும். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூடு கண்டித்து களியக்காவிளையில் காங்கிரஸ் சார்பில் சவபெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த தொடர் போராட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 247 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.#SterliteProtest
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது மீன் பிடித் தடைகாலம் உள்ளதால் ஏற்கனவே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் சென்று மீன்பிடிப்பவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர்.

    அவர்கள் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர் பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.


    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் போராட்டங்கள் நடந்தது.

    நாகர்கோவிலில் இருந்து இடிந்தகரை வழியாக சென்ற அரசு பஸ்சை அந்த பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ்சின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இருக்கைகளும் கிழிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சில் இருந்து தப்பித்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துள்ள பஸ்சை இதுவரை மீட்க முடியவில்லை.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இடிந்தகரை, கூடங்குளம், உவரி வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 50 மேற்பட்ட பஸ்கள் உவரி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் இன்று அந்த பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விடிய, விடிய ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல்படை போலீசார் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் உருவாகி உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்தது. நேற்றிரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    குளச்சல் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளச்சலில் அதிகபட்சமாக7 செ.மீ. மழை பதிவானது.

    கொட்டாரம், குருந்தன் கோடு, கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை, புத்தன்அணை, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு இடி-மின்னலுடன் மழை பெய்தது. கொட்டாரம் அருகே மந்தாரம்புதூர் பகுதியில் மின்கம்பம் ஒன்று சரிந்தது.

    இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சாமித்தோப்பு, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம் உள்பட கிராமங்களில் பகுதியிலும் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டிருந்தது.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பாசன குளங்கள் நிரம்ப தொடங்கி உள்ளன.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.90 அடியாக இருந்தது. அணைக்கு 550 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 474 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. அணைக்கு 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-16, பெருஞ்சாணி-9, சிற்றாறு-1-28, சிற்றாறு-2-12, இரணியல்- 14.6, குளச்சல்-70, குருந்தன் கோடு-14.6, கோழிப்போர் விளை-10, முள்ளாங்கினாவிளை-12, புத்தன் அணை- 14.8, நாகர்கோவில்- 3.8, பூதப்பாண்டி-1.2, கொட்டாரம்-52.4.



    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை போன்றவை நடந்தது.

    தொடர்ந்து மலர்கள் மற்றும் மா இலை தோரணங்களால் திருக்கால் அலங்கரிக்கப்பட்டு கிழக்கு வாசலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் வடக்கு வாசலில் உள்ள நுழைவு பகுதியில் கால்நாட்டப்பட்டது.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மேல்சாந்தி மணிகண்டன் ஆகியோர் கால் நாட்டினர். தொடர்ந்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகாசி விசாக திருவிழா நாட்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. மாலையில் பக்தி சொற்பொழிவு, வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    27-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி இரவு 9.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும். 
    ×