search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே! தாங்கள் நெற்றில் செந்தூரம் இடுவதற்கான காரணம் என்ன?” என்று வினவினார்.

    அதற்கு சீதாதேவி, “எனது கணவன் ராமன் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான், நெற்றியில் செந்தூரம் இடுகிறேன்” என்று பதிலளித்தார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.

    இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். அதை பக்தர்கள் இட்டுக் கொள்ள தருகின்றனர்.
    சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் திருவுருவத்திற்கு அனுமன் ஜெயந்தி அன்று 16 வகையான அபிஷேகம் நடத்தப்படும்.
    சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார்கள்.

    அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும்.

    பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.

    ராமாயண காவியத்தை படைத்தவர் வால்மீகி. கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக அனுமன் செதுக்கிய ராமாயணத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ராமாயண காவியத்தை படைத்த வால்மீகி, அதனை ராமபிரானின் இரண்டு புதல்வர் களாக லவ-குசர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அதனை ராமரின் அரண்மனையில் பாடிய அந்தச் சிறுவர்களை ராமபிரானே பாராட்டினார். வால்மீகியின் அந்த ராமாயணத்தையும் தான். லவ-குசன் இருவரும் ராமரிடம் சென்றடைந்த நிம்மதியோடு, ஒருநாள் இமய மலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தார் வால்மீகி முனிவர்.

    சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பது அவரது பார்வையில் தென்பட்டன. அவற்றைப் படிக்க ஆரம்பித்த வால்மீகி மெய்சிலிர்த்துப் போனார். அதில் செதுக்கியிருந்த வாசகங்கள் ராமபிரானின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரிப்பதாக அமைந்திருந்தன.

    அதில் இருந்து ஒவ்வொரு வரிகளும்.. தான் எழுதிய ராமாயண காவியத்தின் வரிகளை விட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி.

    இப்போது அவருக்கு ஒரு சந்தேகம் உருவானது. ‘இந்த பாறைகளில் ராமபிரானின் கதையை யார் செதுக்கியிருப்பார்கள்?’ என்று எண்ணினார். பாறைகளில் எழுதப்பட்டிருந்த ராம கதையைப் படித்தபடியே நடந்து சென்றவர் மலையின் சிகரத்தை அடைந்து விட்டார். அங்கே அவருக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது.

    ஆம்! அங்கே சிரஞ்சீவியான அனுமன் யோக நிஷ்டையில் அமர்ந்து, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது தியானத்தைக் கலைக்க விரும்பாத வால்மீகி முனிவர், தானும் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து ராம நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.

    தன்னுடைய ஒலியோடு, இரண்டாவதாக மற்றொரு ஒலி கேட்பதை அறிந்த அனுமன், சட்டென்று கண்விழித்துப் பார்த்தபோது, அங்கு வால்மீகி முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். பின் எழுந்து வந்து கண்மூடி தியானத்தில் இருந்த வால்மீகியின் முன்பாக வணங்கியபடி நின்றார்.

    திடீரென்று கண்விழித்த வால்மீகி தன் முன் அனுமன் நிற்பதைக் கண்டார். அவர் மனதில் ஓடிய எண்ணத்தை அனுமனிடமே கேட்டார். “அனுமன்.. நான் மலையேறி வரும் பாதையில் பாறைகளில் ராமரின் வரலாறு செதுக்கப்பட்டிருந்தது. அதனை யார் செதுக்கியது?” என்று கேட்டார்.

    உடனே அனுமன் “ராமரின் கல்யாண குணங்களையும், அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான் தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ராமரின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ராமபிரானை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது'' என்று அடக்கத்துடன் கூறினார்.

    வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கசிந்தது. அதைக் கவனித்த அனுமன், அதற்கான காரணத்தைக் கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. ‘எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார்’ என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.

    “அனுமன்! நீ ராமபிரானின் பிரதான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. அதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர் இது. நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என்றார்.

    வால்மீகியின் வார்த்தையைக் கேட்ட அனுமனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் சுரந்தது. பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்தார்.

    பதறிப்போனார் வால்மீகி. “அனுமன் எதற்காக இப்படிச் செய்தாய்?” என்றார்.

    வால்மீகி முனிவரை வணங்கிய அனுமன், “தாங்கள் எழுதிய ராம காவியமே மிகச் சிறப்பானது. காலத்தால் அழியாதது. அதுதான் சிறந்தது என்று என்னுடைய ராமபிரானே பாராட்டியிருக்கிறார். அதற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. இருக்கவும் கூடாது என்பதாலேயே அவ்வாறு செய்தேன்” என்றார்.

    அனுமனின் பக்தியைப் பற்றி தெரிந்திருந்த வால்மீகி முனிவருக்கு, அவரது தியாகமும் கூட இப்போது புரிந்து போனது. அனுமனை மனதார வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
    அனுமனுக்கு வெற்றிலை, வடை, துளசி மாலை சாற்றப்படுகிறது. அனுமனுக்கு என்ன மாலை அணிவித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின் தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.

    வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

    ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.

    போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.
    பெரும்பாலும் கண்விழித்ததும் தெய்வப் படங்களை பார்த்தால், இறைவனின் திருவருள் நமக்குக் கிடைக்கும். சங்கு வைத்திருப்பவர்கள், சங்கின் முகத்தில் விழித்தால் சங்கடங்கள் யாவும் தீரும்.
    பொதுவாக காலையில் கண் விழித்து எழுந்ததும், எதன் முகத்தில் முழிப்பது என்பது பலரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று. பெரும்பாலும் கண்விழித்ததும் தெய்வப் படங்களை பார்த்தால், இறைவனின் திருவருள் நமக்குக் கிடைக்கும்.

    அதைத் தொடர்ந்து நிலைக் கண்ணாடியைப் பார்ப்பதும் நல்லது. பிறகு முன்னோர் படங்களின் முன் நின்று அவர்களது ஆசியைக்கேட்டு வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

    சங்கு வைத்திருப்பவர்கள், சங்கின் முகத்தில் விழித்தால் சங்கடங்கள் யாவும் தீரும்; வாழ்வில் சந்தோஷம் சேரும். வலம்புரிச் சங்கு வைத்திருப்பவர்கள், அதில் நாணயங்களைப் பரப்பி, அருகில் கனி வகைகளை வைத்து, நடுநாயகமாக கற்பக விநாயகர் படத்தையும் வைத்து, தினமும் அதில் கண் விழித்து வந்தால் கற்பக விருட்சமாக வாழ்க்கை மாறும்.

    பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்கள் மனம் குளிர்ந்து வரம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
    அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக் கடனாகப் பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக் கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

    பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.

    மேலும் இந்தப் பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தரும் என்பது நம்பிக்கை.
    புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீட்சி பெற ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான். சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.  நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே  சனிக்கு அதிபதியாக இருப்பவர்.

    ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார்.அப்போது எதிர்பட்ட நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா...

    நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில்      தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

    என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.

    பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்தி தான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும்  சங்கடத்திலிருந்து காக்கும் வேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் வேங்கடவன் இருக்கிறாரே... 
    மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.
    மதுராவை தலைநகராக கொண்ட விருசினி ராஜ்ஜியத்தின் மன்னன் உக்கிரசேனர். இவருக்கும் பத்மாவதிக்கும் பிறந்தவன் கம்சன் என்ற கொடுங்கோலன். இவன் தனது தந்தையை சிறையில் அடைத்து விட்டு ஆட்சியை கைப்பற்றியவன்.

    கம்சனின் தங்கை தேவகி. இவளுக்கு பிறக்கப்போகும் 8-வது குழந்தையால் கம்சனுக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டது. இதனால் தங்கையையும், அவளது கணவனையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த 6 குழந்தை களைக் கொன்றான்.

    அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளை கம்சனால் கொல்ல முடியவில்லை. அவர்கள் கோகுலத்தில் யசோதாவிடம் வளர்ந்தனர். குழந்தையாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் பல அரக்கர்களை அனுப்பினான். ஆனால் கிருஷ்ணனை எதுவும் செய்ய முடியவில்லை.

    முடிவில் மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.
    இந்து சமய மக்கள் வழிபாடு செய்யும் சில முக்கியமான ஆன்மிக தகவல்களை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கற்பக விருட்சம்

    அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது, வெளிப்பட்ட பொருட்களில் இந்த கற்பக விருட்சம் என்ற மரமும் ஒன்று. இதனை கற்பகத் தரு, கல்ப தரு என்றும் அழைப்பார்கள். பாற்கடலில் இருந்து வெளிவந்த இதனை, தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய இருப்பிடத்தில் கொண்டு போய் வைத்தான். இந்த மரத்தின் அடியில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ, நாம் எந்த ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தாலும் அது நமக்கு கிடைக்கும். அதே போல் கற்பக விருட்சத்தின் கீழ் நின்று நாம் நினைக்கும் அனைத்தும் நடந்தேறும். இது தேவலோகத்தில் இருப்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

    காசியபர்

    காசியபர் என்ற முனிவர் பிரம்ம தேவனின் சந்ததியில் வந்தவராவார். இவர் வேத காலத்து முனிவர் என்றும், அனைத்து உயிர்களையும் படைப்பதற்கு இவர் உதவியாக இருந்தார் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு 21 மனைவிகள் இருந்தார்கள். அவர்களுள் அதிதி முக்கியமானவர். காசியப முனிவரால் தான், தேவர்கள், கருடர்கள், நாகர்கள், அசுரர்கள் தோன்றினர் என்பதாகவும் புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

    ராம பாணத்தால் ஆசி

    கோயம்புத்தூர் காரமடையில் அரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவரின் சன்னிதியில் உள்ள ராம பாணத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் சன்னிதியில் பக்தர்களுக்கு சடாரியை தலையில் வைத்து ஆசி வழங்கு வார்கள். ஆனால் இந்த அரங்கநாதர் ஆலயத்தில் ராமரின் பாணத்தை தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள். இந்த பாணத்தில் ஆதிசேஷன் மற்றும் சுதர்சன சக்கரம் ஆகியோரது உருவங்கள் உள்ளன.

    சப்தஸ்வர ஆஞ்சநேயர்

    மயிலாடுதுறையில்உ ள்ள கோழிகுத்தி என்னும் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான வானமுட்டிப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்த அனுமன் விக்கிரகத்தில் ஏழு இடங்களில் தட்டினால் சப்தஸ்வர ஓசை எழும்புகிறது. இதனால் இந்த ஆஞ்சநேயரை ‘சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள்.

    மும்மூர்த்தி தரிசனம்


    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவர் வைகாசி பிரம்மோற்ச வத்தின் போது அதிகாலையில் சிவபெருமானாகவும், மாலையில் பிரம்மனாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சி தருகின்றார். மற்ற தலங்களில் அபய கரத்துடன் திகழும் பெருமாள், இங்கே தானம் வாங்கிக்கொள்ளும் நிலையில் காணப்படுகிறார். அதாவது நமது கஷ்டங்களை எல்லாம் பெருமாளே ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    32 கரங்களுடன் வீரபத்திரர்

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே குட்டஹள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு பிரளய கால வீரபத்திரர் ஆலயம் இருக்கிறது. இந்த வீரபத்திரர் 32 கரங்களுடன் காணப்படுகிறார். இவர் சிவபெருமானுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம், விஷ்ணுவுக்குரிய சங்கு, சக்கரம் போன்றவற்றையும் தாங்கி, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரைப் போலவே, உற்சவ மூர்த்தியும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார்.

    தயிர் அன்னம்

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருமங்கலக்குடி திருத்தலம். இந்த ஆலயத்தில் பிராணநாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் தங்கள் சாபம் விலக, எருக்கம் இலையில் தயிர் அன்னம் படைத்து இத்தல இறைவனை வழிபாடு செய்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவே இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் அன்னத்தை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.
    சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
    சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது. குருமங்கள யோகத்தோடும், புத ஆதித்ய யோகத்தோடும். தைரியகாரகன் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க்கிழமையில் புத்தாண்டு பிறப்பதால் எண்ணங்களை நிறைவேற்றி வைத்து இனிய வாழ்வை நமக்கு வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

    புத்தாண்டின் கூட்டுத் தொகை (2+0+1+9=12, (1+2)=3 என்ற) குருவிற்குரிய எண் ஆதிக்கத்தில் வருவதால் குருவருளும், திருவருளும் நமக்குக் கிடைக்க குரு பகவான் வழிபாட்டையும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், அறுபத்துமூவர் வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.

    யோகம்பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள்

    இந்தப் புத்தாண்டு குருவின் ஆதிக்கத்தில் பிறப்பதால் குருவிற்குரிய நட்சத்திரங்களாக விளங்கும் விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கும், 3 எண் ஆதிக்கத்தில் பிறப்பதால் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.

    மற்ற ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும், தங்கள் சுய ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாளில் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் யோக வாய்ப்புகள் அனைத்தும் அடுக்கடுக்காக வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

    கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்

    இந்தப் புத்தாண்டில் 13.2.2019-ல் ராகு-கேது பெயர்ச்சியும், 28.10.2019-ல் குருப்பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. முரண்பாடான கிரக சேர்க்கை காலத்திலும், கிரகப்பெயர்ச்சி காலங்களிலும் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

    வெற்றி தரும் வழிபாடு

    ஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமானை வழிபட்டு அதன்பிறகு சிவாலயம், விஷ்ணு ஆலயம், குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களையும் வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது.
    ஆங்கில புத்தாண்டையொட்டி நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது.

    தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மழை பொய்க்காமல் சீராக பெய்யவும், உலக நன்மை மற்றும் பக்தர்கள் குடும்ப நலன் வேண்டியும் இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. 
    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானின் அடியையும், முடியையும் காணும் போட்டி விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் நடந்தது. இதில் ஈசனின் முடியைக் கண்டு விட்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு ஆதரவாக, தாழம்பூ சாட்சி சொன்னது.

    இதனால் சிவவழிபாட்டில் தாழம்பூ இருக்காது என்று ஈசன் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற தாழம்பூ, உத்தரகோசமங்கை மங்களநாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றது. இதையடுத்து அந்த திருத்தலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
    ×